Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 03

கனவு – 03

 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் சிறிது நேரத்தோடே எழுந்து நீராடி விட்டுக் கோயிலுக்குச் செல்லத் தயாராகினாள் வைஷாலி. காலையில் விரதம் என்பதால் வெறும் தேநீரை அருந்தி விட்டு, அவள் வீட்டின் அருகிலிருந்த ஸ்ரீ கதிரேசன் கோயிலை அடைந்தாள்.

 

சிறு முகப்போடு ஆலயத்துக்குரிய அனைத்து அம்சங்களோடும் முருகப்பெருமான் வீற்றிருக்க, அவர் அன்னை அம்பாள், அண்ணன் விநாயகர் முதலானோரும் தத்தமது அறைகளில் வீற்றிருந்து தம்மைத் தேடி வரும் அடியவர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தனர்.

 

ஆலயத்தைச் சுற்றி வழிபட்டுத் தனது குடும்பத்தாரின் பெயரில் அர்ச்சனையும் செய்து கொண்டவளிடம் பூசகர்,

 

“ஞாயிற்றுக்கிழமை தைப் பூசம் வைஷாலிம்மா… மூணு தேரும் இழுக்கிறோம். வேலையும் இல்லைத்தானே உங்களுக்கு. கண்டிப்பா வந்து அப்பன் முருகனிட அருள் வாங்கிக் கொண்டு போக வேணும். இந்த வருசம் நிச்சயமாக அவன் உங்களுக்கு ஒரு விடிவைத் தருவானம்மா…”

 

கூறிக் கொண்டே வைஷாலியிடம் பிரசாதத்தைக் கொடுத்தார் அர்ச்சகர். தலவாக்கலைக்கு வந்ததிலிருந்தே தவிர்க்க முடியாத காரணங்கள் ஏதுமில்லாது விட்டால் தவறாது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க் கிழமையும் ஆலயத்துக்கு வருபவளிடம் அந்த வயதான அர்ச்சகருக்குத் தனிப் பரிவு.

 

சில நேரங்களில் வார இறுதி நாட்களில் கூட கோயிலுக்கு வந்து சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வதற்கு உதவி செய்வாள். இந்தக் காலத்தில் இளைய தலைமுறையினர் கோயிலுக்குச் செல்வதையே பட்டிக்காட்டுத் தனமாயும் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் செயலாயும் பார்க்கும் நேரத்தில் இத்தனை ஈடுபாட்டுடன் ஆலயப்பணி செய்பவளிடம் மிகுந்த அன்பு அவருக்கு.

 

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆலயத்திலிருந்து அழுது கொண்டிருந்தவளின் கதையைக் கேட்டதிலிருந்து அந்த அர்ச்சகர் தினமும் மனதார அந்த முருகனிடமும் அம்பாளிடமும், ‘இவளுக்கொரு நல்ல வழியைக் காட்டி விடு தெய்வமே’ என்று வேண்டாத நாளில்லை.

 

அர்ச்சகரிடம் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக வருவதாகக் கூறியவள் மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள். வேலைக்குச் செல்ல இன்னும் நேரம் இருந்தது.

 

விபூதி, சந்தன வாசமும், ஆண்டவனுக்குச் சாத்தப்பட்டிருக்கும் பூக்களின் நறுமணமும், ஊதுவத்தி, சாம்பிராணிப் புகையும் தீபாராதனையின் கற்பூர வாசமும் சேர்ந்து எழும் கோயில்களுக்கே உரித்தான பிரத்யேக நறுமணத்தைச் சுவாசித்த படி, தூணொன்றில் கண்கள் மூடிச் சாய்ந்திருப்பது என்றுமே வைஷாலிக்குப் பிடித்தமான விடயம்.

 

பூசைக்குப் பிறகு கோயிலில் நிலவும் நிசப்தத்தில் கண்கள் மூடி எந்த வித சிந்தனைகளுமில்லாது ஒரு மோன நிலையில் நிச்சலனமாய் ஒரு பத்து நிமிடங்களாவது அமர்ந்து விட்டுப் போனால் அது அவளுக்குப் பெரியதொரு பலத்தைக் கொடுப்பது போல் உணர்வாள்.

 

இவ்வாறு தவறாது கோயிலுக்கு வருவதனால் அவளைத் தீவிர பக்தையாக நினைத்து விடக் கூடாது. காலம் காலமாக சிறு வயதிலிருந்தே போதிக்கப்பட்ட பழக்கவழக்கமாக ஆலயங்களுக்குச் சென்று வணங்கினாலும் அவள் அப்படியொன்றும் தீவிர மதவாதி கிடையாது. அவளுக்குக் கோயிலுக்குச் செல்லும் போது ஒரு நேர்மறை எண்ணம் மனதில் எழுந்து ஒரு புத்துணர்வு தருவதாய் ஒரு உணர்வு. ஞாயிற்றுக்கிழமையில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கும் பௌர்ணமி தினங்களில் புத்தக விகாரைக்கும் போகக் கூடத் தவறுவதில்லை அவள்.

 

தலவாக்கலை வந்த புதிதில் தனிமையைப் போக்கவென அனைத்து மதக் கடவுள்களையும் துணைக்குச் சேர்த்தவளுக்கு, இப்போது இதுவே வாடிக்கையாகி அவள் வாழ்க்கை நடைமுறையாகி விட்டது.

 

இப்போதும் வேலைக்கு நேரமிருக்கவே பத்து நிமிடங்கள் உட்கார்ந்து விட்டுச் செல்வோம் என்று எண்ணி, அமர்வதற்கு இடம் தேடியவள் கண்ணில் அவன் பட்டான். கோயிலுக்கு உள்ளே வருவதற்காக கழட்டிய சேர்ட்டை அணிந்து கொண்டு வெளியே சென்றவன், வெளிப்புறப் படியில் ஒதுக்குப் புறமாக அமர்ந்து கொண்டான்.

 

பின்புறமாகப் பார்த்தாலும் அது அவன் தான் என்பதைப் புரிந்து கொண்டவள், ஏதோ உந்துதலில் அவன் அருகே சென்று அமர்ந்தாள். திரும்பிப் பார்த்தவன் சிறு அதிர்ச்சியை முகத்தில் காட்டினான். அதிலேயே அவன் தன்னை அங்கு எதிர்பார்க்கவில்லை என்று புரிந்து கொண்டவள்,

 

“ஏன்டா… என்னைத் தெரியாத போலவே நடிக்கிறாய்? பாரன் ஆளை… பெரிய லெவல்தான் உனக்கு என்ன?”

 

இப்போதும் சிறு பிள்ளை போல் கதைப்பவளை  ஆச்சரியத்துடன் பார்த்துப் புன்னகைத்தான்.

 

“இப்ப என்ன இளிப்பு வேண்டியிருக்கு…? கேட்டதுக்கு முதல்ல பதிலைச் சொல்லு… அன்றைக்கு ஏன் ஃபாங்கில கண்டிட்டுக் காணாதது போல போனனி…?”

 

“அப்ப நீ வைஷூவே தானா? நீதானோ என்று சந்தேகமாக இருந்துச்சு. அரிசி மூட்டை ஒன்று இப்படி பயித்தங்காயா மாறினால் எப்பிடி அடையாளம் கண்டு பிடிக்கிறதாம்?”

 

“ஓ…! ஏன் நீ என்னட்டயே கேட்டிருக்கலாமே…”

 

“ஏன்…? நான் வேற யாரிட்டயும் மாறிக் கேட்க, அவள் நான் கடலை போட ட்ரை பண்ணுறன் என்று நினைச்சு எனக்கு நல்லா நாலு சாத்தவோ?”

 

“ஹா… ஹா… ஓகே… ஓகே… உன்னை மட்டும் என்ன அடையாளம் கண்டுபிடிக்க முடியுதா என்ன? நான் நீ போன பிறகு உன்ர டீடெய்ல்ஸ் பார்த்துத் தானே கண்டு பிடிச்சன். தலையையும் தாடியையும் பாரன்… தலைக்கு எண்ணெய் வைச்சு எவ்வளவு நாளடா?”

 

‘ஹி ஹி ஹி’ என்று அதற்கொரு அசட்டு நகையைப் பதிலாக வழங்கினான் சஞ்சயன்.

 

“இங்கயா இருக்கிறாய் இப்ப? எங்க வேலை செய்யிறாய்?”

 

“இங்க வந்து மூணு மாசங்கள் தான் ஆகுது. ஆனா கம்பஸ் முடிஞ்சதில இருந்து மலையகத்தில தான் வேலை. முந்தியொரு எஸ்டேட்டில வேலை செய்தனான். அது வேற ஆட்கள் கைக்கு மாறவும் எனக்கு அங்க வேலை செய்யப் பிடிக்கேல்ல. அப்பத்தான் இந்த டீ பக்டரில வேலை கிடைச்சுது. மாறி வந்திட்டன்.”

 

“ஓ… ஓகேடா. அப்ப அம்மா, அப்பா, அக்கா எல்லாம் எப்பிடியிருக்கினம்? அக்காக்கு எத்தினை பிள்ளையள்?”

 

“அப்பா போய்ச் சேர்ந்து நாலு வருசமாச்சு. அக்காக்கு மூணு பிள்ளையள். அம்மாவும் அக்காவோட ஜேர்மனியில் செட்டில் ஆகிட்டா.”

 

“ஓ… சொரிடா… அப்பாட விசயம் எனக்குத் தெரியாது…”

 

“பரவாயில்லைடி… எல்லாரும் ஒரு நாளைக்குப் போறது தானே… ஹார்ட் அட்டாக்கில பெருசா கஸ்டப்படாமல் உடன போய்ட்டார்…”

 

“ஹூம்… முடிஞ்சதை விடுடா. அப்ப உன்ர மனுசி, பிள்ளையள் எங்க இருக்கினம்? இங்க உன்னோட தானோ…? இல்லை ஊரிலயோ…?”

 

“இனித்தான் கண்டு பிடிக்க வேணும்…”

 

சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள் வைஷாலி.

 

“இன்னும் கலியாணம் கட்டலடி…”

 

அவளின் குழம்பிய பார்வையைப் பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே சொன்னான் சஞ்சயன்.

 

“ஏன்டா…? எங்கட பட்ச்சில எல்லாம் கட்டிட்டுதுகளே… என்ன உனக்கென்று பிறந்தவளை இன்னும் மீட் பண்ணலையோ… அல்லது மீட் பண்ணிச் சரி வராததில தான் இந்தத் தாடி மீசை தேவதாஸ் கோலமோ…?”

 

“சீச்சி… அப்படியெதுவும் இல்லையடி… ஒவ்வொரு நாளும் ஷேவ் பண்ணப் பஞ்சி. அதுதான்… இப்ப இது தானே ஃபஷன்… விஜய் சேதுபதியைப் பார்… தாடி மீசை வடிவாய் தானே இருக்கு…”

 

“அது அவருக்கு நல்லா இருக்கு. உன்னைப் பாக்கவே சகிக்கல. நீ உன்ர மூஞ்சியைக் கண்ணாடில பாக்கிறாய் தானே… நீ இப்பிடி இருந்தால் எவள் உன்னைப் பார்த்து கட்டுறதுக்கு ஓமெண்டுவாள்…”

 

சொல்லிக் கொண்டே நேரத்தைப் பார்த்தவள்,

 

“எனக்கு வேலைக்கு நேரம் போகுதுடா சஞ்சு… பிறகு பாப்பம் என்ன… சரி… போய்ட்டு வாறன்…”

 

அவனின் பதிலுக்குக் காத்திராமல் வெளியே கழட்டி வைத்திருந்த செருப்பைப் போட்டுக் கொண்டு விரைந்தவள் வழியில் சென்ற முச்சக்கர வண்டியை மறித்து ஏறிச் சென்று விட்டாள்.

 

அவள் செல்வதையே ஏக்கப் பெருமூச்சொன்றோடு பார்த்தவன், தனது கைப்பேசியை எடுத்து அதில் கமெராவை உயிர்ப்பித்து ஷெல்பி மோடில் விட்டுத் தனது முகத்தையே அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான்.

 

‘வைஷூ சொன்னது போல நம்ம மூஞ்சி ரொம்பக் கண்றாவியாகத் தான் இருக்கு என்ன’ என்று எண்ணமிட்டவன் கோயிலை விட்டுப் புறப்பட்டுச் சென்று நின்ற இடம் ஒரு ஆண்களுக்கான சிகை அலங்கரிப்பு நிலையம்.

 

தலை முடியையும் கொஞ்சம் குறைத்து வெட்டச் சொல்லி விட்டுத் தாடி மீசையை முற்றாக ஷேவ் செய்யச் சொன்னான். இப்போது கண்ணாடியில் பார்க்க அவனுக்கே தன் தோற்றப் பொலிவு மனதில் ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

 

பிடித்த ஒரு சினிமாப் பாடலை சீட்டியடித்தபடி மோட்டார் சைக்கிளை எடுத்தவன் நேராக வைஷாலி வேலை செய்யும் இலங்கை வங்கிக்குச் சென்றான். பணத்தைக் கொடுத்து நகையைத் திருப்பியவன், அங்கிருந்த உத்தியோகத்தரிடம் வைஷாலியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவும் அவர், அவள் அறையைக் காட்டினார்.

 

அறைக் கதவில் ‘உதவி வங்கி முகாமையாளர்’ என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் இவனுக்கு ரொம்பவே பெருமையாகத் தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே கூடப் படித்தவள் இந்த இளம் வயதிலேயே அரச வங்கி ஒன்றில், இவ்வளவு பெரிய பதவி வகிக்கும் போது அதில் பெருமிதம் வருவது இயல்பு தானே.

 

கதவை மெதுவாய் தட்டவும், பைல்களுக்குள் புதையல் எடுத்துக் கொண்டிருந்த வைஷாலி தலையை நிமிர்த்தாமலே உட்காரும் படி பணித்து விட்டு, இரு நிமிடங்களில் தன் வேலையை முடித்து நிமிர்ந்து பார்த்தவள் அவன் கோலம் கண்டு பேச்சற்றுப் போயிருந்தாள்.  

 

சஞ்சயன், அவள் முன்னே கையை நீட்டி விரல்களால் சொடக்குப் போடவும் தன் நிலைக்கு வந்தவள்,

 

“அப்படியே ஏஎல் படிக்கேக்க பார்த்த போலவே இருக்கிறாயடா. என்ன கொஞ்சம் உடம்பு தான் அப்ப இருந்ததை விடக் கூடியிருக்கு. சத்தியமா என்னால நம்பவே முடியலைடா சஞ்சு…”

 

முகத்திலே உண்மையான மலர்ச்சியும் சந்தோசமுமாகச் சொன்னவளையே இவனும் மகிழ்ச்சியாகப் பார்த்தான்.

 

“ரொம்ப ஓட்டாதடி… வெட்கமா இருக்கு…”

 

என்றவனை அடிக்கக் கை ஓங்கினாள் இவள்.

 

“அடச்சீ… பாரன் ஆளை… எனக்கு வருது வாயில நல்லா… இப்பிடி தாடி மீசையில்லாம மனுசர் மாதிரி இரு இனியாவது…”

 

என்றவளின் முன்னால் இருந்த கைத் தொலைபேசியை எடுத்துத் தனது இலக்கத்தைப் பதிந்தவன், அதில் அவனது இலக்கம் பதியப்பட்டு இருக்கவே தனது கைப்பேசிக்கு அழைப்பை எடுத்து அவளது கைப்பேசி இலக்கத்தைத் தன்னுடையதில் பதிந்து கொண்டான்.

 

“என்ர நம்பர் ஆல்ரெடி சேவ் பண்ணிட்டாய் போல. ஓகே டி… நீ வேலையைப் பாரு. நான் பிறகு கதைக்கிறன். நீ முரளிட நம்பரை அனுப்பு… நான் அவனோடயும் எடுத்துக் கதைக்கிறேன். என்னை அன்றைக்குக் கண்டதைச் சொன்னியா அவனுக்கு?

 

சரிடி… நானும் ஒபிஸ்க்குப் போக வேணும். லேட்டாகுது. நாளைக்கு உனக்கு வேலையில்லை தானே. முரளியும் வீட்ட தானே நிப்பான். நான் டின்னருக்கு வீட்டுக்கு வாறன். நல்ல மரக்கறியாய் சமைச்சு வை… கடைச் சாப்பாடு சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சுடி… சரிடி… நேரம் போகுது… நான் போய்ட்டு வாறன்…”

 

சொல்லி விட்டு எழுந்து போனவனை திக் பிரமை பிடித்தவளாய் பார்த்திருந்தாள் வைஷாலி.

 

‘அப்போ இவனுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியாதா?’

 

சிந்தித்தவளின் மனதில் சஞ்சயன் எந்தவித சமூக வலைத் தளங்களிலும் இல்லாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. இவளும் பெரிதாக யாரோடும் பேசுவதில்லை.

 

ஒதுங்கி இருந்து விட்டால் தேவையற்ற பேச்சுக்களிலிருந்து விடுதலை என்று எண்ணி, இவள் இப்போது பழைய நண்பர்கள் யாரோடும் பெரிதாக நட்புப் பாராட்டுவதில்லை. அதனால் பழைய பள்ளித் தோழர்களிடம் சஞ்சயனைப் பற்றிய பேச்சுக்கும் இடமற்றுப் போயிருக்கவே, உண்மையில் இவள் இவனை நேரில் காணும் வரை மறந்தே போயிருந்தாள் என்றே தான் சொல்ல வேண்டும்.

 

தனிமையின் உச்ச நிலையில் இருந்தவளுக்கு சஞ்சயனை நேரில் கண்டதும், தனது சூழ்நிலை எல்லாம் மறந்து அந்தப் பள்ளிப் பருவத்திற்கே மனம் சென்றிருக்க அதே ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசியிருந்தாள். ஆனால் அவன் முரளி பற்றிக் கேட்கவும் தான் இவள் இப்போது சுயநிலைக்கு வந்தாள்.

 

எப்படி மறந்தாள் இதை? முரளி பற்றி அறியும் சஞ்சயன் என்ன சொல்வான்? இவன் என்ன புதுசாகப் சொல்லி விடப் போகிறான்? மற்றவர்கள் போல தானே இவனும் இருப்பான். தலவாக்கலை வந்ததிலிருந்து தனிமையின் கொடுமையையும் வேண்டாத சிந்தனைகளின் வலியையும் மட்டுமே இவள் அனுபவித்தாளே தவிர,, வேறு மனக் கசப்புகளோ, வேண்டாத பேச்சுக்களோ அற்று மிகவும் நிம்மதியாகவே இருந்தாள் எனலாம்.

 

ஆனால் இப்போது அதற்குத் தானாகவே வலியச் சென்று ஆப்படித்துக் கொண்டோமே என்று தன் மீதே ஆத்திரப்பட்டாள் வைஷாலி.

 

‘சே… சஞ்சு கண்டும் காணாமலும் தன்ரபாட்டில தானே இருந்தான். நான் தானே தேவையில்லாமல் வலியப் போய் கதைச்சது. அப்படிப் போய்க் கதைச்சாலும் சும்மா சுகம் விசாரிச்சிட்டு விட்டிருக்கலாம்.

 

இப்படி நான் ஓவராய் வளவளக்கவும் தானே அவனும் வீட்டுக்கு வாறன் என்று சொல்லிட்டுப் போறான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. நான் இப்பிடி அந்தக் காலம் போலவே உரிமையோட கதைச்சால் அவனும் கதைப்பான் தானே. குரங்கு ஆப்புக்கு மேலே தானே போய் இருந்துச்சாம் என்றது இதுதான் போல”

 

என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள் செய்த முதல் காரியம், சஞ்சயனிடமிருந்து இனி முற்றாக விலகியிருப்பது என முடிவெடுத்துத் தனது கைப்பேசியை அணைத்து வைத்தது. வேலை தலைக்கு மேல் குவிந்து கிடக்கவே அப்போதைக்கு சஞ்சயனின் நினைவுகளுக்கு ஓய்வு கொடுத்துத் தனது வேலைகளைக் கவனிக்கலானாள்.

 

இவள் விலகல் புரிந்து அவன் விலகுவானா? இல்லை மேலும் நெருங்குவானா?  

 

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: