Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33

33

விருந்தினர்கள் செல்லும் வரை தனது அழுகையை அடக்கிக் கொண்ட சுஜி, அவர்கள் காலை வீட்டை விட்டு வெளியே வைத்ததும் கத்த ஆரம்பித்தாள்.

“ஏன் சித்தி யாரைக் கேட்டு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணுறிங்க?”

“யாரடி கேட்கணும்? இது என் வீடு. இதுல நா என் இஷ்டப்படிதான் செய்வேன்.”

“அது உங்க பொண்ணுக்கு. எனக்கு இல்ல. என்னைப் பாக்க எங்க அப்பா இருக்கார். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“அந்த மனுஷனுக்கு வீட்ட விட்டா கட தானே தெரியும். உன்ன வெளிய விட்டா எவனயாவது இழுத்துட்டு வந்து நிப்ப. அதுனாலதா இந்த கால்கட்டு. இந்தா பாருடி ராகேசா… ராஜேசா… அவன் வந்து காப்பாத்துவான்னு கனவு கண்டுட்டு திரியாதே.”

“இங்க பாருங்க, நான் யாரையும் நெனச்சு கனவு காணல. எனக்கு என் படிப்புதான் கனவு. அதையேன் கெடுக்க நெனைகுறிங்க?”

“ஏண்டி எனக்கும் என் புள்ளைங்களுக்கும் சமையல் பண்ணிப் போடவே உனக்கு வலிச்சதே, பலகாரம் செஞ்சு தர சொன்னதுக்கு என்ன சொன்ன, நாளைக்கு பரீட்சைக்கு படிக்கணும் மாட்டேன்னு புஸ்தகத்த கட்டிக்கிட்டு திரிஞ்சேல்ல. இப்ப நீ புஸ்தகத்த தொட்ட, உன் கைலயே சூடு வைப்பான் உன் புருசன்.”

“ஏன் சித்தி பன்னண்டாவது பப்ளிக் எக்ஸாம் நடந்துட்டு இருக்குறப்ப, பால்கோவா கிண்டித் தர சொன்னிங்க. அதுக்கு மாட்டேன்னு சொன்னதுக்கா இப்ப பழி வாங்குறீங்க? இல்ல என்ன வித்து பணம் கிணம் வாங்கிட்டிங்களா?”

இவள் புத்திசாலி, கொஞ்சம் வாய் விட்டால் காரணத்தைக் கண்டு கொள்வாள், பேச்சைக் கொஞ்சம் மாற்ற வேண்டும் என்று எண்ணிய நாகம், “உங்க சமையல் காரியா நான்னு கேட்ட இல்ல. இப்ப உன் தலை எழுத்தைப் பார்த்தியா? எங்க அண்ணன் வீட்டுக்கு வேலைக்காரியா, சமையல்காரியா போகப் போற. ஏண்டி உன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க? இருக்குற ஒரே ஓட்ட வீட்டையும் வித்து, உனக்கு கல்யாணத்தப் பண்ணி வச்சுட்டு நாங்க தெருவுல நிப்போம்னா?”

“உங்கள இதுவரைக்கும் ஏதாவது தொந்திரவு பண்ணி இருக்கேனா? உங்க வம்புக்கே நாங்க யாரும் வரது இல்ல. அந்த ஆளோட பொண்ணு பத்தாவது படிக்குதாம். எப்படி இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளைய பார்க்க உங்களுக்கு மனசு வந்தது? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?”

“ஏண்டி உங்க அப்பா மட்டும் என்ன யோக்கியமா? அவரும் ரெண்டு புள்ளைங்க பொறந்தப்பரமா தானே என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டார். கல்யாணத்தப்ப எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும். அதெல்லாம் போய் ரெண்டு வருஷத்துல சரி ஆயிடும்”

“அப்பா வந்தவுடனே அவர்கிட்டே கேட்கலாம். என்னைய அப்பாவும், அண்ணனும் இந்த தடியனுக்குக் கல்யாணம் பண்ணித் தந்திடுவாங்கன்னு நினைக்குறிங்களா? அவங்க வந்ததும் பாருங்க என்ன நடக்கப் போகுத்துன்னு?” என்று மிரட்டினாள் சுஜி. எவ்வளவுதான் அடங்கிப் போவது என்ற எண்ணம் அவளுக்கு.

ஆங்காரிகளுக்கு எல்லாம் அதிகாரியான நாகரத்தினத்தையா சுஜி என்னும் உலகம் அறியா சின்னப் பெண் அசைத்து விட முடியும்?

“என்ன நடக்குதுன்னு பார்க்கலாண்டி. இன்னைக்கு எப்படி என் அண்ணன் வந்தான்னு நினைக்குற? நீ அந்த ராகேஷோட ஊர விட்டுட்டு ஓடிடப் போறியோன்னு பயம்மா இருக்கு. அவன்கூட இவளுக்கு பழக்கம் இருக்குறத, நம்ம மாதுவே நேர்ல பார்த்துட்டு வந்து பதறிபோய் என்கிட்ட சொல்லி இருக்கான். என் மானத்தைக் காப்பாத்துங்க. எங்கேயாவது கல்யாணம் பண்ணி வைக்கலேன்ன எங்க மானமே போய்டும்னு சொல்லி இருந்தேன். இதையே உன் அப்பா கிட்டயும் கொஞ்சம் மாத்தி, நீயும் அந்த ராகேஷும் ஊர விட்டு ஓடிப் போக முயற்சி செஞ்சப்ப, உங்கள கையும் களவுமா என் அண்ணன் பிடிச்சுட்டு வந்ததா சொல்லுவேன். மானம் போய்டும்னு சொன்னா உங்க அப்பா என்ன வேணும்னாலும் செய்வார்”

சுஜியின் திகைப்பைப் பார்த்து சந்தோஷத்துடன் மேலும் தொடர்ந்தாள் நாகரத்தினம்.

“இங்கப் பாரு உன் அப்பா வந்து கிளிச்சுடுவாருன்னு நெனைக்காதே. இப்ப பூ வச்சுட்டுப் போன துரைக்கு, வருசத்துல பாதி நாள் ஜெயுலுல தான் விடியும். எப்ப பரிசம் போட்டானோ, அப்பவே நீ பாதி பொண்டாட்டி ஆயிட்ட. உங்கப்பா தகராறு பண்ணாரு, மண்டயப் பொளந்துட்டு உன்ன இழுத்துட்டுப் போய்ட்டே இருப்பான். உன் வாய்க்கு சரியான தண்டன அனுபவிக்கப் போற பாரு”.

“கண்டிப்பா மாட்டேன். இந்த கல்யாணத்துக்கு நா ஒத்துக்க மாட்டேன். ரொம்ப தொந்திரவு கொடுத்திங்க போலிசுக்கு போவேன்.”

போலிஸ் என்ற வார்த்தையில் சற்று மிரண்ட நாகரத்தினம் பின்பு சுதாரித்துக் கொண்டாள்.

“போலிசுக்கு போவியா போடி போ. இந்த கல்யாணம் மட்டும் நடக்கல, நான் பூச்சி மருந்து குடிச்சிடுவேன். நீ, உங்கப்பா, பெரிய படிப்பு படிச்சுட்டதா மெதப்போட இருக்குற உன் அண்ணன் யாரையும் நிம்மதியா விட்டுட்டு போக மாட்டேன். என் சாவுக்கு நீங்க தான் காரணம்னு எல்லார் பேரையும் எழுதி வச்… வாங்கண்ணா, எப்போ வந்திங்க?”

மாதவன் குடும்பத்தை வாசலில் பார்த்த நாகரத்தினம் சொல்ல வந்ததை இடையில் நிறுத்தினாள்.

“பை ஒண்ணு இங்க வச்சுட்டுப் போய்ட்டோம். அதான் வந்தோம்”

அனல் கக்கும் பார்வையுடன் கண்ணகியைப் போல நல்லசிவத்தை நோக்கி வந்த சுஜி அவரிடம், “மாமா நீங்க பெரியவங்க. உங்ககிட்ட இப்படி பேசுறதுக்கு மன்னிச்சுடுங்க. இவ்வளவு நேரம் நாங்க பேசுறதுல கொஞ்சமாவது கேட்டுட்டு இருந்திருப்பிங்கன்னு நினைக்கிறன். ஏன் உங்க தங்கச்சி ஒரு தப்பும் செய்யாத என்னை இப்படி படுத்துறாங்கன்னு தெரியல. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு. அது என்னதான் தப்பு செஞ்சு இருந்தாலும், துரப்பாண்டி மாதிரி ஒரு மாப்பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சு வைப்பிங்களா? அத்தையும், உங்க பசங்களும் சும்மா விட்ருவாங்களா? நீங்க கட்டாயப் படுத்தினாலும் உங்க பொண்ணு தான் கல்யாணம் செஞ்சுக்குமா?”

சங்கத்துடன் இல்லை எனும் பொருள் வரும்படி தலையை ஆட்டினார் நல்ல சிவம்.

“உங்க வீட்டுலையே நீங்க சொன்னா கேட்க மாட்டாங்க. நான் உங்க சொந்த தங்கச்சி பொண்ணு கூட இல்ல. உங்களுக்குக் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாத எனக்கு எப்படி இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்க்கலாம்?… நான் எப்படி இந்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க நினைக்கலாம்? முக்கியமா எங்க அப்பா இல்லாம நீங்க எப்படி இந்த முடிவுக்கு வரலாம்?”

சாட்டையால் விளாசுவது போல சுஜி கேட்க கேட்க வாயை மூடி நிற்பதைத் தவிர வேறு வழி இல்லை மாதவனின் தகப்பனார்க்கு. அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று உணர்ந்தவர்களுக்கு மறுத்து பேச நா எழவில்லை.

மேலும் தொடர்ந்தாள் சுஜி, “இதை ஏன் முன்னாடியே சொல்லலன்னு நீங்க நினைக்கலாம். ஊருக்குள்ள உங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. உங்க சொந்தக்காரங்க முன்னாடி ஏதாவது கேள்வி கேட்டு, உங்கள அசிங்கப்படுத்த வேண்டாம்னு நெனச்சேன். ஆனா உங்க தங்கச்சியும், நீங்களும், உங்க குடும்பமும் சேர்ந்து என்னையும், எங்க அப்பாவையும் அசிங்கப்படுத்திட்டிங்க. எங்க மேல பாம்பு மாதிரி விஷத்தைக் கக்கிட்டிங்க. இதுக்கு என்கிட்ட இல்லாட்டியும் அந்த தெய்வத்துக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்”

சற்று திரும்பிய சுஜியின் கண்களில் இப்போது மாட்டிக்கொண்டது மாதவன். அவனருகே வந்தவள், “உன் கிட்ட நான் சரியா பேசுனது கூட இல்ல. ஏன்னா சின்ன வயசுல இருந்தே உனக்கு என்னப் பிடிக்காதுன்னு நல்லா தெரியும். உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்னு எனக்கே தெரியல. எனக்கு தெரிஞ்சு நான் செஞ்ச ஒரே தப்பு, உன் பிரெண்ட் கேட்டுகிட்டதுக்காக நான் கடைக்கு வந்ததுதான். உன் ஃபிரெண்ட் கூட கடைக்குப் போன ஒரே காரணத்துக்காக என்ன இப்படி பழி வாங்குற இல்ல. இனிமே என் மொகத்திலேயே முழிக்காதே” என்றாள் மனது முழுக்க தகிக்கும் வெறுப்போடு.

1 Comment »

  1. Hi akka… Nice Update… Please continue ” Un Idhayam Pesugiren” Story… Interesting to read… eagerly waiting for next updates…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: