Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27

27

நாகலாந்தில் உள்ள ஒரு உணவு வகையை சேர்க்கலாம் என்று யோசனை சொன்னான் மாதவன்.

“இல்ல மாதவன் எந்த அளவு மக்களுக்கு பிடிக்கும்னு எனக்குத் தெரியல”.

“ஏன்?”

“நாகலாந்து, அஸ்ஸாம் இந்த பக்கம் எல்லாம் மசாலாவே சேர்க்கமாட்டாங்க. விதவிதமான பச்சை மிளகா தான். அதுவும் நாகலாந்துல என்ன சமைச்சாலும் அது கூட பேம்பூ ஷூட் சேர்த்து சமைப்பாங்க. பேம்பூ ஷூட்டை எடுத்து வத்தல் மாதிரி போட்டுப்பாங்க. இது நமக்கு எந்த அளவு பிடிக்கும்னு தெரியல. நம்ம மக்கள் வேற காரசாரமா சாப்பிட்டு பழக்கப் பட்டவங்க.”

சற்று நேர விவாதத்துக்கு பின் அஸ்ஸாமின் மீன் கறி ஒன்று சற்று மாற்றங்களுடன் முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக சில கேள்விகள் கேட்டான் மாதவன். ஒரு நண்பனாக சுஜியின் மனது அவனை ஏற்றுக் கொள்ள தொடங்கி இருந்ததால் அவளும் தயங்காமல் பதில் சொன்னாள்.       

“சுஜி குக்கிங்ல உன்னோட ஸ்பெஷல் என்ன?”

“எனக்கு pastry தான் ஆர்வம் “.

“உனக்கு எதிர்காலத்துல என்ன பண்ண ஆசை?”

“பாஸ்ட்ரில மேல படிக்கணும் மாதவன். பாஸ்ட்ரி செஃப் ஆகணும். கொஞ்ச நாள் கழிச்சு சொந்த பிராண்டல பேக்ரி ஆரம்பிக்கணும். Mr. ரென்னட் மாதிரி ஒரு பாஸ்ட்ரி அண்ட் கேக் ஷாப் ஆரம்பிக்கணும். அதுக்கு என்னை நான் தயார் படுத்திக்கணும்.”

டெசெர்ட்க்குத் தேவையான கேக், ஐஸ்கிரீம், ஆப்பிள் பை, புட்டிங் முதலியவற்றை சுஜி மற்றும் குழுவினர் முதல் நாளே செய்வதாக முடிவாயிற்று. டெசெர்ட் செய்வது தான் சமையலிலே கஷ்டமான விஷயம். எப்படி பாகு முறிந்துவிட்டால் மைசூர் பாகு சரியாக வராதோ, அது போல டெசெர்ட் செய்வதற்கு பேஸ் செய்வதில் இருந்து அலங்கரிக்கும் வரை பெர்பெக்ஷன் தேவை.

சுஜி டெசெர்ட் செய்யும் அன்று காலை ஆறு மணிக்கே வந்து விட்டான் மாதவன். சுஜி மூன்று மணிக்கே போய் விட்டாளே என்று மற்றவர்கள் சொல்லவும் நேராக பேக்கரி செக்சன்னுக்கே சென்று விட்டான்.

மாதவன் சென்றபோது அனைவரும் வேலையில் மும்முரமாக இருந்தனர். கேக் அலங்கரிப்புக்கு தேவையான தேங்காய் துருவலைச் செய்து கொண்டு இருந்தாள் சுஜி. தேங்காய் பத்தாததால் பிரீசரில் இருந்த முழு தேங்காயைக் கொண்டு வந்தான் பிரசன்னா.

“என்ன சுஜி பிரீசர்ல போய் தேங்காய வச்சு இருக்கீங்க?”

“பிரீசர்ல அரைமணி நேரம் வச்சா தேங்காய் ஓட்டை விட்டு ஈசியா பிரிஞ்சு வந்துடும். நம்மளும் உடைச்சுடலாம் இந்த மாதிரி” என்று கத்தியின் பின்னே வைத்து தட்ட தட்ட ஓடு தனியாக நொறுங்கி விழுந்தது. ஒரு பழுப்பு நிற முட்டையைப் போன்று உள்ளே இருந்து தேங்காய் தனியே வந்தது.

“இத என்ன செய்ய போறீங்க?”

உருளை கிழங்கு பீலெர் போன்ற ஒன்றை வைத்து அதன் மேல் இருந்த பிரவுன் தோலைச் சீவி எடுத்தாள் சுஜி. இப்போது அந்தத் தேங்காய் ஒரு பெரிய வெண்ணிற முட்டையைப் போன்று இருந்தது. அதனை நறுக்கி தண்ணியை ஒரு கிண்ணத்தில் ஊற்றிவிட்டு, சற்றே பெரிய துண்டுகளாக்கிப் பின் காரட் துருவியில் இருந்த சிறிய துளைகளில் சீவ ஆரம்பித்தாள்.

“தேங்காய் துருவ இவ்வளவு கஷ்டப்படனுமா? பேசாம கிரைண்டேர்ல வச்சு துருவிடலாம்ல.” சுஜிக்குத் தெரியாத ஒரு ஐடியாவை சொல்லிவிட்ட மகிழ்ச்சியோடு சொன்னான் மாதவன்.

“அது சட்னி செய்ய யூஸ் பண்ணலாம். இது கேக் டெகரேஷன் பண்ண. கொஞ்சம்கூட பிரவுன் தோல் வரக்கூடாது. அப்பறம் காரட் துருவில நிறைய சைஸ் துளைகள் இருக்குறது ரொம்ப வசதியா இருக்கும்” என்றாள்.

மணிக்கு ஒருதரம் அவளுக்கு ஜூஸ் மற்றும் ஏதாவது சாப்பிட என்று தந்து மாதவன் கவனித்த விதத்தைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர் சுஜியின் வகுப்புத் தோழர்கள்.

பிற்பகல் அவசர வேலையாக வெளியே சென்ற மாதவன் மறுபடியும் அதிதிக்கு வந்த போது இரவு மணி பத்தாகி இருந்தது. சுஜி அப்போதும் அறைக்கு வரவில்லை என்று ரோசி சொன்னதும், மாதவன் பதட்டத்துடன் பேக்கிரி அறைக்குச் சென்றான். அங்கே அயர்ச்சியுடன் சுஜி அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு கோழித் தூக்கம் போட்டுக் கொண்டு இருந்தாள். சிறு குழந்தையைப் போல் கள்ளம் கபடம் இல்லாமல் இருந்த அந்த முகத்தை காதலோடு பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க பார்க்க திகட்டவே இல்லை அவனுக்கு. ஏதோ ஒரு உள்ளுணர்வு தாக்க விழித்த சுஜி, மாதவனைப் பார்த்ததும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள்.

“பரவாயில்ல சுஜி. நீ தூங்கு”

“இல்ல இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. முடிச்சுட்டு போய் தூங்குறேன்”.

“காலைல மூணு மணிக்கு வேலைய ஆரம்பிச்ச இல்ல? இப்ப மணி பதினொன்னு ஆச்சு. ரூமுக்கு போய் தூங்கு. ரொம்ப உடம்பை வருத்திக்காதே சுஜி”

“நாங்க சாதாரண நாளுல வேலைய முடிக்கவே ராத்திரி பன்னண்டு ஆயிடும். அதுக்கப்பறம் மறுநாளுக்கு மெனு தயார் பண்ணிட்டு, தூங்கப் போக ஒன்னற மணி ஆயிடும். அதனால என்னப் பத்தி கவலை படாதிங்க. இது எனக்கு பழக்கம் தான்”.

“காலைலேயே எல்லா வேலையும் செஞ்சுட்டியே இப்ப என்ன புதுசா?”

முகத்தைக் கழுவி விட்டு டிஷு பேப்பரில் துடைத்தபடியே வந்தவள், “உங்களுக்கு ஒரு surprise. கண்ண மூடிக்கணும். நான் சொல்லுற வரைக்கும் திறக்கக் கூடாது”

சரி என்று சொல்லிய மாதவன், ஓரக் கண்ணால் பார்க்க முயற்சி செய்ய, அதனை எதிர்பார்த்து இருந்த சுஜி, கையில் இருந்த டவலால் அவனது கண்ணைக் கட்டினாள். மெதுவாக பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்ற சுஜி அவனது கண்ணைத் திறக்க, மாதவன் அசந்து போய் நின்று விட்டான்.

அவன் கண் முன்னே, அந்த அறையின் பாதியை மறைத்துக் கொண்டு இருந்த ஒரு பெரிய கேக்கில், திருமலை நாயக்கர் மகாலை தனது கை வண்ணத்தில் கொண்டு வந்து இருந்தாள் சுஜி. திருமலை நாயக்கர், அவரது தர்பார் மண்டபத்திலே மந்திரிப் பிரதானிகள் புடை சூழ அமர்ந்திருந்தார். அவரது மீசையும், கங்கணமும் காதில் அணிந்திருந்த குண்டலமும் கூட தத்ரூபமாக இருந்தது. மன்னரின் இருக்கை, அதன்மேல் இருந்த வேலைபாடு, படிகள், சுற்றி இருக்கும் வெள்ளை தூண்கள், தூண்களின் மேல் இருக்கும் யாழியின் உருவம் என்று ஒவ்வொன்றையும் ஒரு தேர்ந்த சிற்பியின் நேர்த்தியுடன் செதுக்கி இருந்தாள். கேக் செய்து, கிரீமில் விதவிதமான நிறத்தைக் கலந்து அந்தச் சர்க்கரை பொம்மைகளைச் செய்து இருந்தாள். ஒவ்வொரு பொம்மையும் அரையடி உயரம் இருந்தது.

“இது செட் ஆகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நல்லா இருக்கா?”

அவளது கைகளை இறுக்கப் பற்றிக் கொண்ட மாதவன் பேச வார்த்தைகள் இல்லாமல் தவித்தான்.

“தாங்க் யூ சுஜி. இந்த கைகளுக்குள் இவ்வளவு திறமையா?” என்று வியந்தவன், “இந்த அன்புக்கும், உழைப்புக்கும் நான் பதிலுக்கு என்ன தரமுடியும் சுஜி. இப்போதைக்கு என்கிட்ட இருக்குறத தரேன். ப்ளீஸ் மறுக்காம வாங்கிக்கோ”என்றபடி அவனது கழுத்தில் போட்டிருந்த செயினை கழட்டி சுஜிக்குப் போட்டு விட்டான்.

“இது உன் திறமைக்கு நான் தந்த சின்ன பரிசுதான். காலைல கடை திறக்குற வரைக்கும் என்னால வெயிட் பண்ணி கிப்ட் வாங்க முடியாது. இத நீ எப்போதும் போட்டு இருந்தா சந்தோஷப் படுவேன். போட்டுகுறியா சுஜி?”.

மாதவன் உணர்ச்சி வசப்பட்டு இருப்பது சுஜிக்கு தெரிந்தது. திருப்பிக் கொடுத்தால் அவனது மனம் மிகவும் வருந்தும் என்று நினைத்தாள். மறுநாள் உணவுத் திருவிழா நடக்க இருக்கும் போது அவன் மனம் கவலை கொள்வது எல்லாவற்றையும் பாதிக்கும். இவற்றை நினைத்துப் பார்த்தவள், தயக்கத்தோடு தலையாட்டினாள். “ஆனா இது தான் லாஸ்ட். இனிமே இப்படி நடந்துக்காதிங்க”.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: