Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2

பாகம் இரண்டு

“என்னாச்சு லலிதா, நீ கூப்பிட்டதும் கையும் ஓடலே காலும் ஓடலே!”, என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த கீதா, தோழியின் முகத்தில் தொடங்கி பாதாதி கேசம் அளந்து பிரச்சினையாக ஒன்றும் தென்படாமல், ரமேஷை கேள்வியாக பார்க்க,

ரமேஷோ ஆடித் தள்ளுபடியில் அவசர அவசரமாக வாங்கின அழுக்குத் துணியை கமுக்கமாக மறைப்பது போல, லல்லு பார்காதவண்ணம் கீதாவிடம் “சண்டை” என்பது போல சைகை செய்தான். நல்லா சொன்னாலே நம்ம கீதாவுக்கு நாலு நாள் ஆகும் புரிய, சைகை மொழி எல்லாம் எங்கேருந்து புரியப் போகுது.

“என்னாச்சு? ரெண்டு பேருல யாராவது விவரமா சொல்லுங்களேன்”

“நீ அவரோட எதுக்கு பேசுற? உள்ள வா! நான் உனக்கு டீ போட்டு வெச்சிருக்கேன்”, தோழியை விடாப்பிடியாக உள்ளே இழுத்து சென்றாள்.

சுட சுட மசாலா டீ, முதல் நாள் வீட்டில் செய்த நான்கதாய், பைனாப்பிள் கேசரி என்று கண் முன்னே கடை பரப்ப, திகைப்பாய் பார்த்தாள் கீதா.

“லலிதா, நீ போன்ல பேசுறப்ப அழுதது மாதிரி இருந்தது குரல். அதான் அடிச்சு புடிச்சு ஓடி வந்தேன். இதென்ன இவ்வளவு சுவீட் காரம்னு பெருசா கடை விரிக்கிற?”

“அதெல்லாம் இரு, டீக்கு சக்கரை போதுமான்னு பார்த்து சொல்லு. போத்தலைன்னா இன்னும் கொஞ்சம் போடறேன். உனக்கு அவ்வளவா சக்கரை பிடிக்காதுன்னு தான் குறைவா போட்ருக்கேன்”

எடுத்து ஒரு சிப் டீ பருகிவிட்டு, தன்னை மீறி முகம் சுளிப்பதை நிறுத்தமுடியாமல் கீழே வைத்துவிட்டு, “போதும், இதுவே பானகம் மாதிரி இருக்கு. விஷயத்துக்கு வா…. என்ன பிரச்சினை?”

“இன்னிக்கி என்னாச்சு தெரியுமா கீதா? குண்டாயிட்டேனான்னு சும்மா ஒரு பேச்சுக்கு இவர்கிட்ட கேட்டேன், இதான் சாக்குன்னு வரைஞ்சு கட்டி என்னவெல்லாம் பேசிட்டார் தெரியுமா?”

தலையை திருப்பி புருவம் உயர்த்தி ரமேஷை பார்த்தாள் கீதா. நீயா? பெண்டாட்டியை திட்டினியா? என்பது போல சந்தேகமாக பார்க்க,

“இந்த நான்கதாய் எடுத்துக்கோ. நானே செய்தேன். நல்லா வந்திருக்குல்ல? இரு பைனாப்பிள் கேசரியை ஒரு கப்புல போட்டு கொடுக்கறேன்”, என்று கிளம்பினாள்.

“இல்ல, எனக்கு சுவீட் வேண்டாம். இந்த டீயிலயே நிறைய சுவீட் இருக்கு. இதுக்கு மேல சுவீட் வேண்டாம்”

“நான்கதாய்?”

“சரி ஒண்ணே ஒண்ணு கொடு போதும். இன்னமும் எண்ணை எதுக்கு கூப்பிட்டேன்னு நீ சொல்லவே இல்லையே?”

“இரு, கொஞ்ச நேரம் சாவகாசமா பேசலாம். எனக்கு நல்லா பசி. இவரோட சண்டை போட்டப்பறம் இன்னும் அதிகம் ஆகிடுச்சு”, சில பல நான்கதாய்கள் இரண்டு கிண்ணம் நிறைய கேசரிகளும் சுவாஹா ஆன பிறகு மாரியாத்தா மலை இறங்கினது போல நிதானத்திற்கு வந்தாள் லலிதா.

“எனக்கு இன்னும் ஒரே மாசத்துல பத்து கிலோ வெய்ட் குறைக்கணும். நீ தானே அப்பாலிருந்து இப்போ வரைக்கும் அப்படியே வெயிட் மைண்டைன் பண்ணுறே! அதான் உன்கிட்ட ஐடியா கேட்கலாம்னு. என்னென்னலாம் சாப்பிட்டா உடனே வெயிட் குறையும்?”

“என்னோட காலேஜ் friend சொல்லுவா, தினம் காலையில் ஆறு பாதாம், அப்பறம் ஒரு வாழைப்பழம், அதுக்கப்பறம் ஒரு கைப்பிடி உலர்ந்த திராட்சை சாப்பிடணுமாமே! க்ரீன் டீ குடிக்கணுமாம்! சரியா?”

“ஹான்…. அது வந்து….”

“சொல்லு சொல்லு, நான் நோட்டுல எழுதி வெச்சுக்கறேன்”

“லலிதா, ஒரு நாளைக்கு ஆயிரத்து எண்ணூரில் இருந்து இரண்டாயிரம் காலரி வரை சாப்பிடணும்!”

“ஓ….”

மேலும் அரை மணிநேரம் தொண்டை தண்ணீர் வரள, தோழிக்கு உபதேசம் செய்துவிட்டு, “வாயை கட்டுப் படுத்தணும் லலிதா, இப்படி பார்க்கறதையெல்லாம் கபளீகரம் பண்ணினா ரொம்ப கஷ்டம்”

“பசிக்குமே…” பரிதாபமாக இன்னொரு நான்கதாய் நோக்கி பார்வை போக, பார்வை போன திசையில் விரல்கள் நீள, அதை அவள் எடுக்கும் முன் அந்த தட்டை அங்கிருந்து நகர்த்தினாள் கீதா.

அந்தோ பரிதாபம், பக்கத்தில் இருந்த கேசரி பாத்திரத்தை லபக்கி, உள்ளிருந்து கரண்டியால் ஒரு கரண்டி கேசரியை கையில் மார்கழி மாத சர்க்கரை பொங்கல் பிரசாதம் போல போட்டுக் கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாள் லலிதா.

எழுந்து கைப்பையை எடுத்தபடி, “லலிதா, உனக்கு வெயிட் குறைக்கணும்னா, நீ தான் முயற்சி பண்ணனும். இதையெல்லாம் குறைக்கணும். இல்லேன்னா கஷ்டம்”, என்று கூறிவிட்டு புறப்பட்டாள் கீதா.

அவள் அந்தப் பக்கம் போனதும், சட்டென அபவுட் டர்ன் அடித்து, கண்களில் நீர் திரள, “நான் இப்படியே இருந்துட்டு போறேன்…. என்னால பசி தாங்க முடியாது”, படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் மாதிரி காலை மடக்கி உட்கார்ந்து சற்று தள்ளி இருந்த சிப்ஸ் பாக்கெட் எடுத்து உண்ண ஆரம்பித்தாள் லலிதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: