Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 21

21

மாதவன் அனிதா ஜோடிப் பொருத்தத்தை எண்ணியபடியே வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தாள் சுஜி. புறத் தோற்றத்தைப் பொறுத்தவரை, அனிதா சற்று உயரம் குறைவுதான். ஆனாலும் மாதவனுக்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறாள். கொஞ்சம் அலங்காரத்தைக் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். மினி கூட அழகுதான். ஆனால் அனிதா அளவு பணம் இல்லை. மாதவன் அனிதா இருவரைப் பொறுத்தவரை பணம் பணத்தோடு சேர்க்கிறது. அவ்வாறுதான் சுஜிக்குத் தோன்றியது. இவ்வாறு எண்ணியபடியே வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள் சுஜி.

வீட்டின் முன்னே ஒரு கார் நிற்பதைக் கண்ட சுஜி யாராக இருக்கும் என்று நினைத்தபடி, கொலுசு கலீர் கலீரென சத்தமிட நடந்து சென்றாள். வீடு சற்று அமைதியாக இருந்தது. கூடத்தில் மாதவனும், அனிதாவும் உட்கார்ந்து இருந்தனர்.

“சுஜி எங்க போயிட்டு வர?” என்ற சுந்தரத்தின் குரல் கேட்டு நின்றாள்.

அப்பா என்ன இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டார் என்று எண்ணியபடியே,

“அத்தையோட கோவிலுக்…”

“கழுதை பொய்யா சொல்லுற. உண்மைய சொல்லு.”

“நிஜமத்தான்பா. கோவிலுக்குத்தான் போயிட்டு…”

அவளை முழுவதுமாக முடிக்க விடாமல் இடையில் குறுக்கிட்ட நாகரத்தினம், “நல்லாக் கேளுங்க இதுக்குத்தான் மினி வீட்டுக்குப் போறேன், மினி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சியா ? இன்னைக்கு நீ மினுக்கிட்டுப் போனப்பயே தெரியுண்டி. இப்படி மானங்கெட்ட பொழப்பு பொழக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்.”

பளீரென அறைவிழ, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பிரம்மை பிடித்தாற் போல் நின்றாள். அப்பாவா தன்னை அடித்தது? இதுவரைத் தன்னை கடிந்து கூட பேசாத அப்பாவா?

சுந்தரம் எவ்வளவுக்கு எவ்வளவு சாந்த சொரூபியோ, கோவம் வந்தால் அந்த அளவு கடுமையானவரும் கூட. தனது மகளின் ஒழுக்கத்தை பற்றி ஒரு பெண் சொன்னது அவரின் கோவத்தை மிகுதியாகக் கிளப்பி விட்டது. மாதவனும் அதனை மறுக்கவில்லை என்றதும் அவரது கோவம் இரட்டிப்பானது.

“இப்ப உண்மைய சொல்லு. காலுல என்ன?”

“கொ… கொலுசு…”

அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். பெல்டை எடுத்து விளாசிவிட்டார் சுந்தரம். மாதவன் தடுத்து இருக்கவிட்டால் அடித்தே கொன்று இருப்பாரோ என்னவோ…

நடந்த சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட, மாதவனும் அனிதாவும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முகமே காட்டிற்று. மாதவனின் அத்தையைப் பார்த்து வத்தி வைக்கலாம் என்று எண்ணி, அவர்களின் ஒழுக்கமில்லாப் பெண் பற்றி கொஞ்சம் அதிகமாகவே போட்டுக் கொடுத்த அனிதாவுக்கும் சுந்தரத்தின் செயலைப் பார்த்து அதிர்ச்சி. தான் கொஞ்சம் அதிகப்படியாய் நடந்து கொண்டோமோ என்று வாழ்க்கையிலே முதல் முறையாக நினைத்தாள்.

வாசலில் ஏதோ சத்தம் கேட்க, கேட்டருகே நின்று கொண்டு கமலம் குரல் கொடுத்தாள். “சுஜி பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியா?”

பதில் ஏதும் வராமல் போகவும், உள்ளே வந்தார் கமலம். தரையில் பெல்ட் இருப்பதையும், சுஜியின் உடல் முழுவதும் வரிவரியாக பெல்ட் தடம் இருப்பதையும் கண்டு விஷயத்தை ஓரளவு ஊகித்துக்கொண்ட அவர்.

“ஐயோ பிறந்தநாளதுவுமா பொண்ண இப்படி காட்டுமிராண்டி மாதிரி அடிச்சி இருக்கிங்களே நீங்க நல்லா இருப்பிங்களா?”.

நடந்ததை அங்கிருந்தவர்களின் மூலமாக அறிந்த அவர், “நானும், ராகேஷும் ஒரே மாதிரி கொலுசு இவளுக்கும், மினிக்கும் வாங்கினோம். இதுல என்ன தப்பு இருக்கு? ஒண்ணும் தெரியாமலே அவளுக்கு தண்டனை தந்துட்டிங்க. உங்க எல்லாருக்கும் என்ன தண்டனை தரது? நீ வா சுஜி என் வீட்டுக்கு” என்று எழுப்பி அழைத்துக் கொண்டு சென்றாள்.

உடல் வலியாலும், அதைவிட அதிகமான மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருந்த சுஜி தடுமாறி கீழே விழப்போக, மாதவன் வந்து தாங்கிப் பிடித்தான். கண்களில் நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சுஜி. சில வினாடிகளே ஆனாலும் அந்தப் பார்வையைக் கண்ட மாதவன் திகைத்துப் போனான். இவ்வளவு பேர் எதிரில் அடி வாங்கிய அவமானம்; தான் செய்யாத குற்றத்துக்குப் பெற்ற தண்டனை உன்னால் தானே என்ற ஆதங்கம்; என்னை இப்படிக் கேவலப் படுத்திவிட்டாயே என்ற குற்றச்சாட்டு; உனக்கு நான் என்ன தண்டனை தரது என்ற கேள்வி; இவை அனைத்தும் அந்தப் பார்வையில் இருந்தது.

மாதவன் செய்த தவறின் அளவை அவனுக்கு உணர்த்தியது அந்தப் பார்வை. சரியாக விசாரிக்காமல் தான் செய்த செயல், ஒரு சின்னஞ்சிறு மனதை முறித்த விதம் கண்டு அவன் பதறிப்போனான். அவனது இதயம் துடிக்க ஆரம்பித்தது. அன்று நீதி தவறிய பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் இதயம் இவ்வாறுதான் துடித்து இருக்குமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: