Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 19, 20

முதல் வருடத்தில் ஆறு மாதங்கள் ஓடிப் போயிருந்தன. அன்று வேலை முடித்துவிட்டு வரும்போதே வேலுவின் முகம் சரி இல்லை.

“என்ன வேலு என்னாச்சு?”

“ஒண்ணும் இல்ல”.

சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து சென்று விட்டான். பிரசன்னாவிடம் ஏதோ சொல்லி இருப்பான் போல, அவனும் சற்று வாட்டமாகவே இருந்தான்.

“என்னப்பா ரெண்டு பேரும் இப்படி GEM (ginger eaten monkeys) மாதிரி மூஞ்சியத் தூக்கி வச்சுட்டு இருக்கீங்க?” பதில் சொல்லாமல் இருவரும் எழுந்து சென்று விட்டனர்.

சாகுலிடம் கேட்டு விஷயத்தை வாங்கி விட்டனர் சுஜியும், ரோஸியும். அன்று அறைகளைச் சுத்தம் செய்பவர்கள் நாலைந்து பேர் விடுமுறை எடுத்து விட்டனர். திடீரென்று ஒரு பெண்கள் கும்பல் வந்து ஒரு நாள் தங்கிச் சென்று விட, அறைகளைச் சுத்தப் படுத்தும் வேலைக்கு உதவி செய்வதற்காக வேலுவும் சென்று இருக்கிறான். அங்கே பெண்கள் சமாச்சாரம் எல்லாம் தரையில் கிடக்க, எல்லோரும் சேர்ந்து எடுத்துபோட்டு விட்டு, தரையினைக் கழுவிவிட்டு வந்து இருக்கின்றனர். வசதி குறைவானாலும், வீட்டில் ராஜா மாதிரி வளர்ந்த வேலுவுக்கு இந்த வருத்தம் தாங்க முடியவில்லை. “எங்காத்தாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்டா. முதல்ல இங்க வேல செய்யவே அது ஒத்துக்கல. வீட்டுல நா சாப்பிட்ட தட்டக் கூட எங்காத்தாவும், தங்கச்சிங்களும் கழுவ விட்டதில்ல. எந்துணியக் கூட நா துவச்சதில்ல. இப்ப… யார்… யாரோ…” என்று கண்ணீர் விட்டிருக்கிறான்.

சொல்லி முடித்த சாகுல், “இதெல்லாம் நிறைய இடத்துல நடக்குற விஷயம். சில சமயம் இதை விட மோசமான விஷயம் எல்லாம் நடக்கும். ஆனா அது நம்மள பாதிக்கும் போது தான் கஷ்டம் தெரியுது” என்றான்.

கேட்டு வருத்தம் அடைந்த சுஜியும், ரோஸியும் பழனிசாமியைச் சந்தித்தனர்.

“சார் ஒரு சின்ன விண்ணப்பம். இனிமே வேண்டாததை டிஸ்போஸ் பண்ணுறதுக்காக ஒரு சின்ன ஜிப்லாக் அல்லது பொலிதீன் பேக் ஒவ்வொரு ரூம்லயும் வச்சுடலாம் சார். அத டஸ்ட்பின்லதான் கண்டிப்பா போடணும்னு பிரிண்ட்அவுட் எடுத்து சுவத்துல ஒட்டிட்டா இன்னும் நல்லது சார். கிளீனிங் செய்ய வரவங்களுக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்”.

அவர்கள் சொல்ல வந்த விஷயம் பழனிச்சாமிக்கு நன்றாகப் புரிந்தது. அவரும் மாணவராய் இருந்து ஆசிரியராய் ஆனவர் தானே.

“நல்ல யோசனை. இத மேலிடத்துக்கு சொல்லி அனுமதி வாங்குறேன். ஆனா இதுனால மட்டும் இந்த பிரச்சனை தீர்ந்துடும்னு நினைக்காதிங்க. கொஞ்சம் குறையலாம் அவ்வளவுதான். எப்ப இந்த மாதிரி கிளீனிங் பண்ணுறவங்க கூட நம்மள மாதிரி மனுஷங்கன்னு விடுதில தங்குறவங்க நெனைக்குறாங்களோ, அப்பத்தான் நிரந்தர தீர்வு வரும்”.

பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் அதிதியின் எல்லாக் கிளைகளிலும் இந்த யோசனை அமலாக்கப்பட்டது. ரோசி, சுஜியிடம் வேலு மட்டுமின்றி வேலை செய்யும் அனைவரும் நன்றி சொன்னார்கள்.

மேலும் சில மாதங்கள் சென்றன. மதியம் உணவு வேளைக்குப் பிறகு, தனக்கு யாரோ பார்வையாளர் வந்திருப்பதை அறிந்து விரைந்துச் சென்றாள் சுஜி.

“ஹாய் பர்த்டே பேபி எப்படி இருக்க?” என்றபடி நின்ற மினியைத் தாவி அணைத்துக் கொண்டாள் சுஜி.

“தாங்க் யு மினி. எப்படி இருக்க?”

“நல்ல திவ்யமா இருக்கேன்”

“வா மினி என்னோட ரூமுக்குப் போகலாம்”

“முதல்ல இந்த புது டிரஸ்ஸை போட்டுட்டு வா. பக்கத்துல இருக்க பார்க்குக்கு போயிட்டு வரலாம்”

வெள்ளை நிறத்தில் பொடிப் பொடியாய் மஞ்சள் நூல் வேலை செய்யப் பட்டிருக்க, முழங்கை அளவு இருந்த கைகளும், வீ வடிவக் கழுத்தும், அதில் செய்யப்பட்ட பொன் மஞ்சள் வேலைப்பாடும் கண்ணை உறுத்தாது கண்ணியமான தோற்றத்தைத் தந்தது. மஞ்சள் நிறம் சுஜியின் நிறத்தோடு அழகாகப் பொருந்த, பொன் மாலை நேரத்தில் அந்த உடையை அவள் அணிந்து நடந்து வந்தது ஒரு சூர்யகாந்திப் பூவே காற்றில் அசைந்தாடி வந்ததைப் போல இருந்தது. எல்லாக் கதைகளையும் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பூங்காவில் இருந்த ஒரு மரநிழலில், யார் பார்வையிலும் சுலபத்தில் படாதவாறு அமர்ந்திருந்த அந்த உருவம், சுஜியின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருந்தது. அவள் கலகலவென சிரிக்கும் போது புன்னகைத்துக் கொண்டது. அவளது ஒவ்வொரு அசைவையும் அவனது கண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டது. வாழ்க்கையெனும் நதியில், ஒரு கரையில் அவள் இருக்க, மறுகரையில் நின்று கொண்டு, அவளது முழுமதி முகத்தையும், மார்கழிக் குரலையும் இதயம் முழுவதும் இடைவெளி இல்லாமல் நிரப்பிக் கொண்டான். சுஜியும், மினியும் சென்ற பின் மெதுவாக இருட்டில் கிளம்பி சென்றே விட்டான் அவன்.

20

மினிக்கும் பிறந்தநாள் வாழ்த்தையும், தன்னாலான ஒரு சிறு பரிசையும் கொடுத்துவிட்டு, அறைக்கு வந்த சுஜிக்கு அன்று இரவு தூங்க முடியவில்லை. போன வருடம் இதே நாளில் நடந்த சம்பவம் அவளைப் படுத்தி எடுத்தது.

ன்று அவள் பிறந்தநாள். நல்ல அரக்கு நிறத்தில் அந்திவான ஆரஞ்சுகரை போட்ட பாவாடையும், அதே அரக்கு நிறத்தில் ஜாக்கெட்டும், ஆரஞ்சு நிற தாவணியும் அணிந்து கொண்டு, கமலத்துடன் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்றாள். தாயுமானவர் சன்னதியை நோக்கி பேசியபடி சென்றுக் கொண்டிருந்தனர்.
“சுஜி எல்லா காலேஜ்லையும் அப்பிளிகேஷன் போட்டியா?”

“போட்டுட்டேன் அத்த.”

“எந்த காலேஜ்ல சேரலாம்னு இருக்க?”

“மீனாக்ஷி காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் சேரலாம்னு நினைக்குறேன் அத்த. ஸ்காலர்ஷிப் கிடைக்க நல்ல சான்ஸ் இருக்குன்னு எங்க ஸ்கூல் சீனியர்ஸ் சொல்லுறாங்க. விக்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா வேல கிடக்குறது ஈசின்னு சொல்லி இருக்கான்.”

“விக்கி சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்ப அதுவே ட்ரை பண்ணு. நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் ஆசைக்குப் படிக்க முடியாது. வேலைக்குத் தான் படிக்கணும்”.

இவ்வாறு பேசியபடி முக்குருணி விநாயகரை அடைந்து விட்டிருந்தனர்.

“சுஜி நில்லு” என்று சத்தம் போட்டபடி ஓடி வந்தான் மினியின் அண்ணன் ராகேஷ்.

“அப்பாடி…” என்று நின்று சற்று மூச்சு வாங்கிக் கொண்டான்.

“ஏண்டாப்பா ராகி அப்படி என்ன தல போற அவசரம்? கொஞ்சம் மெதுவாத்தான் வரது” என்ற கமலத்தைப் பார்த்து, “நல்லா இருக்கிங்களா அத்தை. தலபோற அவசரம்தான். இன்னைக்கு நைட் மினியப் பார்க்க மெட்ராஸ் போறேன். நாளைக்கு மினிக்கு பொறந்தநாள். ஒரு மோதிரம் வாங்கலாம்னு நினைச்சேன். சுஜிக்கும் அவளுக்கும் ஒரே அளவுதான். அதுதான் சுஜிய செலக்ட் பண்ண கூட்டிட்டுப் போகலாம்னு வீட்டுக்குப் போனேன். சுஜி சித்தி அவ உங்ககூட கோவிலுக்குப் போனதா சொன்னாங்க. உங்களைப் பார்க்க ஓடோடி வரேன். விளக்கம் போதுமா. இல்ல இன்னும் உப்பு, புளி போட்டு விளக்கணுமா?” என்றான்.

சம்மதித்த சுஜியும் கமலமும் கடகடவென தாயுமானவர் சந்நிதியில் சுந்தரேஸ்வரரை வணங்கிவிட்டு, சித்தர் சந்நிதி, துர்கை அம்மன் இருவருக்கும் அவசர ஸல்யூட் அடித்துவிட்டு ரகேஷுடன் தெற்காவணி மூலவீதிக்கு, கமலம் வழக்கமாக செல்லும் நகைக்கடைக்குச் சென்றனர்.

மோதிரம் மேலே மாடியில் இருக்க, கமலம் வெள்ளி நகை செக்ஸனில் நின்று கொண்டாள்.

“நீங்க போய்ட்டு வாங்க, நான் கொலுசு பார்க்கணும். மினிகிட்ட நானும், சுஜியும் வாங்கித் தந்தோம்னு சொல்லி கொடுத்திடு” என்றவாறே கொலுசுகளை ஆராய ஆரம்பித்தாள்.

சரி என்றவாறே மாடிக்கு சென்றனர் சுசியும், ராகியும். ரகேஷை ராகி என்றே மினி அழைப்பது வழக்கம். சுஜியும் அவ்வாறே அழைக்கவேண்டும் என்று மினி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் சுஜியும் அவ்வாறே அழைக்க ஆரம்பித்தாள்.

“எல்லா மோதிரமும் நல்லா இருக்கு ராகி.”

“அதுக்காக எல்லாத்தையும் வாங்க என்னால முடியாது. நீ வேணுன்னா ட்ரை பண்ணுற மாதிரி போட்டுப் பார்த்துக்கோ. இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது.”

என்னதான் இருந்தாலும் சுஜியும் சாதாரணப் பெண் தானே. மேலும் அந்த ஸ்வீட் செவென்டீனுக்கு ஒரு குறும்புத்தனம் இருக்கும் அல்லவா, அது தலைத் தூக்க, போட்டுப் பார்க்க ஆரம்பித்தாள் சுஜி. சில மோதிரம் விரலில் மாட்டிக் கொண்டு கழட்ட முடியாமல் சுஜி கஷ்டப்பட்டபோது, ராகி உதவிக்கு வந்தான். இருவரும் சிரிப்பும், கேலியுமாக மோதிரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக ஒரு பவள மோதிரத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். 

முதுகில் என்னவோ துளைப்பதுபோல் இருக்க, சுற்றும் முற்றும் பார்த்தாள் சுஜி. என்ன சுஜி என்று வினவிய ராகியிடம், “யாரோ பாக்குறது மாதிரி இருக்கு”.

“பின்ன இந்த காலத்திலயும் இப்படி ஒரு தாவணிக் குயிலான்னு யாராவது பாத்து இருப்பாங்க” என்றான்.

மலமும் இதற்குள் மினிக்கும், சுஜிக்கும் ஒரே மாதிரி கொலுசு எடுத்து வைத்துவிட்டு, தெரிந்தவர்களைப் பார்த்துவிட்டதால் சுஜியிடம் வீட்டுக்குப் போக சொல்லிவிட்டாள். அன்று சுஜியின் பிறந்தநாள் என்பதால், தான்தான் அந்தக் கொலுசு வாங்கித் தருவேன் என்று கூறி அடம் பிடித்து வாங்கினான் ராகி. உடனே அதனைப் போட்டு அளவு பார்த்தாள் சுஜி. திருகாணி கொலுசின் உள்ளே போகாமல் அடம்பிடிக்க, ராகியும் முயற்சி செய்து பார்த்தான். அவனாலும் முடியவில்லை.
“சுஜி கொஞ்சம் நில்லு, வேற திருகாணி வாங்கிட்டு வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

கையை யாரோ வேகமாகப் பற்றி இழுக்க, சுஜி வெலவெலத்து நிமிர்ந்து பார்த்தாள். மாதவன்தான் மிகக் கோவமாக நின்றுக் கொண்டிருந்தான். தரதரவென ஒதுக்குப்புறமாக இழுத்துச் சென்றான்.

“ஓங்கி ஒண்ணு விட்டேண்ணாத் தெரியும். அறிவிருக்கா உனக்கு. இப்படித்தான் பொது இடத்துல நடந்துக்குறதா?… ச்சே… மத்தவங்க எல்லாம் அவனப்பத்தி சொன்னப்ப நான் நம்பல. அவனப் பத்தி உனக்கு தெரியுமா? இன்னொரு தடவை அவன்கூட ஒன்னப் பார்த்தேன் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”.
பேசுவதற்கு இடம் கொடுக்காமல், தானே பேசிக் கொண்டு இருந்தவனை அச்சத்துடன் பார்த்தாள் சுஜி.

“மாது இங்கேயா இருக்க?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். அங்கே அழகான ஒரு மிக நாகரீகமான பெண் நின்று கொண்டிருந்தாள்.

அழகா திருத்தப்பட்ட புருவம் வில்லைப் போல் வளைத்திருந்தது. கூர்நாசி. காதுகளிலும், கழுத்திலும் போட்டிருந்த வைரம் அவளது கன்னத்தோடு சேர்ந்து டாலடித்தது. அவள் பேசும்போது அசைந்த அவளது உதடு ஒரு செர்ரிப்பழம் அசைவது போல் இருந்தது. தனது ஐந்தேகாலடி உயரத்தைச் செருப்பின் தயவால் ஐந்திரை அடிக்கு உயர்த்தி இருந்தாள். அவளது இறுக்கிப் பிடித்த ஜீன்ஸும், டிஷர்டும் நான் அல்ட்ரா மார்டனாக்கும் என்று சொன்னது. மொத்தத்தில் சினிமாவில் வரும் சில நடிகைகளைப் போல் அழகாக இருந்தாள். ஓ… இவள்தான் மினி சொன்ன அந்த அனிதாவோ.

“யார் மாது இது? உனக்கு தெரிஞ்சவளா?”

மாதவன் கண்களில் ஒரு சிறியச் சுருக்கம். “ஆமா.”

“ஏ… பொண்ணு உன் பேர் என்ன? மாது உனக்கு என்ன வேணும்?”
சுஜி பதில் கூறும் முன்பே முந்திக் கொண்ட மாதவன். “தூரத்து சொந்தம். பேர் சுஜாதா.”

“தூரத்து சொந்தம்னா என்ன ஒரு நூறுமைல் இருக்குமா?” என்று சிரித்தவள், “என்ன சுஜாதா நீ பேசமாட்டியா? மாதவன் உனக்கு என்ன முறை வேணும்?” என்றாள்.

“அ… அத்தான்” என்றாள் சுஜி பயந்தபடியே.

“சுஜி நேரமாச்சு பாரு, நீ வீட்டுக்குப் போ. அப்பறமா வந்து உன்னப் பாக்குறேன்” என்று அழகாக கத்தரித்து அனுப்பினான் மாதவன்.

விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு மறைந்தாள் சுஜி. மாதவனின் வார்த்தையை ஆராய்ந்து பார்க்குமளவுக்கு அவளுக்கு முதிர்ச்சி இல்லை. அவற்றை அவள் பொருட்படுத்தவும் இல்லை. ஒருவேளை, அவள் அவன் வார்த்தைகளை மதிக்காமல் விட்டதுதான், அவன் கோவத்துக்குக் காரணமோ, என்று அவள் பின்னாளில் யோசித்து இருக்கிறாள்.

ராகேஷ் பிறந்தநாளுக்கு என்று வற்புறுத்தி வாங்கித் தந்த இனிப்பை உண்டு விட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சுஜி. இனி தான் படப் போகும் துன்பத்துகெல்லாம், அன்றுதான் பிளையார் சுழி என்பதை அறியாமல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: