Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7

அத்தியாயம் – 7. மந்திராலோசனை

 

     வேங்கியிலிருந்து வந்த தூதன் உடனே நாடு திரும்ப வேண்டுமென்று விடைபெற்றுச் சென்று விட்டான். எவ்வித அதிர்ச்சியும்மின்றி அச்செய்தியை அமைதியுடன் ஏற்று நின்ற குலோத்துங்கனுக்கும் சோழ தேவர் விடை கொடுத்து அனுப்பினார். அங்கு ஒரு தூணருகில் நிலைத்துப் போய் நின்றிருந்த மகளை இப்பொழுது தான் அவர் பார்த்தார். “நீ ஏன் அம்மா கண்ணீர் விடுகிறாய், கண்ணீர் விட வேண்டியவனே விடாத போது? போ, அந்தப்புரத்துக்குப் போய் உன் அன்னையிடமும், சிற்றன்னையிடமும் இச்செய்தியை அறிவி,” என்று மகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். பிறகு அவர் எஞ்சியிருந்தவர்களைத் தமது ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தார்.

அங்கே அப்பொழுது அரசியலில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் பெருந்தரத்து அதிகாரிகளும், ஆலோசகர்களும் மட்டுமே இருந்தனர். யாவரும் அமர்ந்ததும் சோழதேவர் வேங்கித் தூதன் கொணர்ந்த ஓலையை உடன்கூட்டத்து அதிகாரியான வீரராசேந்திர மழவராயரிடம் கொடுத்து அனைவருக்கும் படித்துக் காட்டிச் சொன்னார்.

மழவராயர் அதனை வாங்கி உரக்கப் படித்தார்:

“மகாராசாதிராச கோப்பரகேசரிவர்ம உடையார் இராசேந்திர சோழ தேவரவர்கள் சமூகத்துக்கு வேங்கி மாதேவி அம்மங்கை நாச்சியார் அவர்கள் ஆணைப்படி திருமந்திர ஓலைக்காரன் வீர நுளும்பன் ஆயிரங்கோடித் தண்டனிட்டு வரைந்து கொள்வது யாதெனில்:

“எங்கள் தேவியார் மன்னர் சமுகத்துக்கு முன்னர் அனுப்பியிருந்த ஓலை கிடைத்திருக்கலாம். வேங்கி நாடு பாவம் செய்த நாடு. அது தன் அரசர் திலகத்தை இழந்துவிட்டது. எங்கள் குல வேந்தர் நரேந்திர தேவரின் ஆவி நேற்று மாலை விண்ணோகிவிட்ட தென்பதை மிகுந்த துயரத்துடன் சமுகத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பட்ட காலிலே படும் என்பது போல் அதுசமயம் இளவரசர் *சப்தம விஷ்ணுவர்த்தனர் இங்கு இல்லாதது காரணமாக, மன்னர் பெருமானின் தம்பியார் விசயாதித்தர் குந்தள நாட்டின் படைத்தலைவரான சாமுண்டராயரின் உதவியுடன் அரியணையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார். எங்கள் குலதெய்வம் அம்மங்கை நாச்சியார் அக்கசடனால் அரண்மனையிலேயே சிறை செய்யப்பட்டுள்ளார்கள். அதுபற்றியே இத்திருவோலை அவர்கள் கைப்பட வரையப்படாமலும், வேங்கி இலச்சினையைத் தாங்காமலும் வருகிறது.

(*குலோத்துங்கனுக்கு இளவயதில் வேங்கி நாட்டில் இளவரசுப் பட்டம் கட்டப் பட்ட போது அளிக்கப்பட்ட அபிடேகப் பெயர் – Ins.396 & 400 of 1933)

“தேவியார் முன்னர் அனுப்பியிருந்த ஓலையில் இளவரசர் விஷ்ணுவர்தனரை உடனே இங்கு அனுப்புமாறு சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்களாம். ஆனால் இப்பொழுதுள்ள நிலையில் இளவரசர் தனியாக இங்கு வந்தால், அவரும் விசயாதித்தரால் சிறைப்படுத்தப்படக் கூடுமென தேவியார் கருதுகிறார்கள். ஆதலால் இதுகாறும் இளவரசர் கங்காபுரியிலிருந்து (கங்கை கொண்ட சோழபுரத்தைப் பிற நாட்டினர் கங்காபுரி என்றே அழைத்து வந்தனர்) புறப்பட்டிராவிடில், அவர்களை அங்கேயே நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறு தேவியார் தெரிவிக்கச் சொன்னார்கள். ஒருகால் இளவரசர் முன்னமேயே வேங்கிப் பயணத்தை மேற்கொண்டிருந்தால் கூட, வேகமாகச் செல்லக்கூடிய தங்கள் நாட்டுக் குதிரைப் படையினர் சிலரை உடனே அனுப்பி அவரை வழியில் சந்தித்துக் கங்காபுரிக்குத் திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது தேவியாரின் விருப்பம்.

“அதர்மர்கள் தாமாகவே அழிவார்கள்: தர்மமும் நேர்மையும் என்றும் வெற்றி பெற்றே தீரும் என்பது தேவியாரவர்களின் கருத்து. ஆதலால், இப்பொழுதுதான் பெரும்போர் ஒன்றை முடித்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் தாங்கள், மீண்டும் வேங்கிக்காக உடனடியாகப் போர் எதும் தொடுக்க வேண்டாமென்றும் அவர்கள் சமூகத்துக்கு வரையச் சொன்னார்கள்.

இங்ஙனம்,
தங்கள் அடிமைக்கு அடிமை,
திருமந்திர ஓலைக்காரன்
வீர நுளும்பன்.”

மழவராயர் இவ்வாறு படித்து முடித்ததும் சோழதேவர் சொன்னார்:

“குந்தளத்தார் திமிர் இன்னும் ஒடுங்கியதாகத் தெரியவில்லை. கொப்பத்துப் போரோடு அவர்கள் கொட்டம் அடங்கியதென நினைத்தோம். ஆனால் அடிபட்ட பாம்பு காற்றைக் குடித்து மீண்டும் நெளிவது போல் அடுத்த போருக்குத் தயாரானார்கள். முடக்காற்றுப் போரில் அவர்கள் முதுகெலும்பையே ஒடித்துவிட்டு திரும்பினோம்! இப்பொழுது மீண்டும் வாலாட்டத் தலைப்பட்டிருக்கிறார்கள். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கும் அவையோர்களே! இப்பொழுது நாம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை ஆலோசிக்கவே உங்களை இங்கு அழைத்து வந்தேன். அனைவரும் தங்கள் மேலான கருத்தைத் தயக்கமின்றித் தெரிவிக்க வேண்டுகிறேன்.”

அவையில் சிறிது நேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. பின்னர் சோழர்களின் குலகுருவான வாசுதேவ நாராயண பட்டர் பேசலானார்: “மன்னர் மன்னவா! இச் சோழவள நாடு என்றுமே பகைவர்க்கு அஞ்சியதில்லை. பரந்த நம் நாட்டின் எல்லைக் குள்ளேயிருந்து பிடி மண்ணைப் பிற நாட்டான் ஒருவன் அள்ளினால் கூட, அதை நமக்கு விளைவிக்கப்பட்ட அவமதிப்பாகக் கருதிப் போர் தொடுத்திருக்கிறோம். தவிர, நாட்டின் எல்லையைப் பரப்புவதிலும் நாம் இதர நாட்டாருக்குப் பின் வாங்கியவர் அல்லர். மன்னரவர்களின் கருத்துப்படி குந்தளத்தாரின் கொட்டத்தை அடக்கி அவர்களை மீண்டும் தலையெடுக்காதவாறு தரையோடு தரையாக வெட்டிச் சாய்க்க வேண்டியது அகத்தியந்தான். ஆயினும் அரசரவர்களின் சகோதரி வேங்கிப் பிராட்டியார் எழுதியிருக்கிறவாறு நாம் இப்பொழுதுதான் ஒரு நெடும் போரை முடித்துவிட்டுத் திரும்பியுள்ளோம். பல நாட்களாக வீட்டையும் வீட்டாரையும் மறந்து நாட்டின் நலத்தையே கருத்தில் கொண்டு வீரச்சமர் புரிந்த நமது படையினர் தங்கள் மனைவி-மக்களிடம் திரும்பி நான்கு நாட்கள் கூட இன்னும் ஆகவில்லை. அவர்கள் என்றென்றும் தாய் நாட்டுக்காகத் தங்கள் இன்ப-துன்பங்களைப் பாராது வாளெடுக்கக் கூடிய வீரர்கள்தாம். இருப்பினும், மீண்டும் போர் ஆயத்தம் தொடங்கி உடனே அவர்களை இங்கிருந்து கிளப்புவது நல்லதென்று நான் கருதவில்லை.

“பதுங்கியிருந்து பாயும் குள்ள நரியைப்போல் விசயாதித்தன் நாம் நாடு திரும்பிக் கொண்டிருக்கையிலே வேங்கியைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டான். சந்தர்ப்பங்களும் அவனுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டன. இது மன்னரவர்களுக்கும், அவர்கள் சகோதரி, மருமகன் போன்றோருக்கும், இப்புனிதச் சோணாட்டுக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பே. ஆயினும், அவமதிப்பு என்னவோ இழைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது நாம் போர் தொடுத்து வேங்கியைக் கைப்பற்றினாலுங்கூட, அது அந்த அவமதிப்பைப் போக்கியதாகி விடாது. ஆதலால் இன்னும் சில காலம் நமது படையினருக்கு ஓய்வளித்த பிறகே போர் ஆயத்தங்களைச் செய்ய வேண்டும் என்பது என் ஆலோசனை.”

“குருதேவரவர்கள் மன்னிக்க வேண்டும்,” என்று கூறியவாறு சிங்கம்போல் உடனே எழுந்து நின்றார் இளவரசர் வீரராசேந்திரன். “படையினருக்கு ஓய்வா? ஓய்வைப் பற்றிப் பேசும் படை ஒரு போதும் நாட்டைக் காக்கும் படையாகாது. நமது சோழப்படையை நான் அத்தகைய சோம்பேறிப் படையாகக் கருதவில்லை. அந்த வீரப்படையிலுள்ள ஒவ்வோர் ஆண்மகனுக்கும் நாடே வீடு; நாட்டின் நலமே வீட்டின் நலம். அதிலும் இப்பொழுது நாம் நாட்டின் எல்லையைப் பெருக்க அடுத்த சமருக்குத் தயாராகவில்லை. கடந்த இரண்டு தலைமுறைகளாக வேங்கி நாடு சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிருக்கிறது. அது நம் நாட்டின் வடவெல்லைப் பாதுகாப்புக் கேந்திரம். அந்தப் பாதுகாப்புக் கேந்திரத்தை நம்மிடம் பல தடவைகள் தோற்றோடிய பேடி ஒருவன் வஞ்சமாகக் கைப்பற்றி, உரிமையற்ற மற்றொரு பேடிக்கு வழங்கியிருக்கின்றான். அதோடு நில்லாமல் பதியை இழந்து பரதவித்து நின்ற அந்நாட்டின் அரசியை-எங்கள் அருமைசோதரியை சிறையிட்டிருக்கிறான். இதைவிடப் பெரிய அவமானத்தை ஒருவன் சோழ நாட்டுக்குச் செய்ய முடியுமா? நம்மை அவமானப் படுத்தியவனை உடனே போருக்கு இழுத்து, அவன் பூண்டே இல்லாமல் ஒழிக்க வேண்டியது ஒவ்வொரு சோழப்பிரஜையின் கடமையாகும். அக்கடமையைப் புறக்கணித்து ஓய்வை விரும்புபவனின் உடலில் ஓடுவது வீரம் செறிந்த சோழ நாட்டின் உதிரம் அன்று. அது கோழை உதிரம். அத்தகையவன் உயிரோடு இருப்பதே நம் நாட்டுக்கு ஓர் அவகேடு. ஆதலால், என்ன நேர்ந்தாலும் சரி, நாம் உடனே வேங்கியின் மீது பொருது கொண்டு சென்று அந்தக் கயவன் சாமுண்டராயனைக் கொன்று, விசயாதித்தனையும் நாட்டைவிட்டு ஓட்டிவிட்டு எங்கள் மருமகனும், வேங்கி அரியணைக்கு உரிமையுள்ளவனுமான குலோத்துங்கனுக்கு மகுடம் சூட்டி வரவேண்டும் என்பது என் முடிவான கருத்து.”

வீரராசேந்திரர் இவ்வாறு கூறி முடிந்ததும் ஒரு கலகலப்பு ஏற்பட்டது. “ஆம், இளவரசர் கூறுவதே சரி,” “இந்த அவமானத்துக்கு உடனே பழி வாங்கியே ஆக வேண்டும்,” “சாமுண்டராயனைக் கண்டதுண்டமாக வெட்டாமல் என் வாளை உறையில் இடேன்; வேங்கி நாட்டுக்குச் சோழ நாடு பட்டுள்ள கடன் இது; இதைத் தீர்க்காவிடில் நாம் கடமை மறந்த கசடர்கள் ஆவோம்!” எனப் பலப்பல கருத்துக்கள் அங்குக் கூடியிருந்த இதர அதிகாரிகளிடமிருந்து துள்ளி விழுந்தன.

 அந்தக் கலகலப்பு அடங்கியதும், சோழதேவர் அமைதி ததும்பும் குரலால் சொன்னார்: “வீர திலகங்களே! உங்கள் உணர்ச்சிகளை நான் மெச்சுகிறேன். உங்களைப் போன்ற தன்னலம் கருதாத உழைப்பாளர்கள் இருக்கும் வரையில் இச்சோழ நாட்டுக்கு எவ்விதக் கவலையும் கிடையாது. ஆயினும், போர் விஷயமாகக் குருதேவர் வெளியிட்ட கருத்தையே நான் ஆமோதிக்கிறேன்.”

குறுநில மன்னர் மிலாடுடையான் நரசங்கிவர்மன் இப்பொழுது எழுந்து நின்று, “மன்னரவர்கள் அந்த முடிவுக்கு வந்ததன் காரணத்தை அவையோர் அறியலாமா?” என்று வினவினார்.

“காரணம் நான் சற்றுமுன் விளக்கிய காரணமாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தானே மன்னவா?” என்று கேட்டார் குருதேவர்.

“ஆம் குருதேவா. அதோடு மற்றொரு முக்கியமான காரணமும் உளது.”

“என்ன அது?” எங்கோ தூரத்தில் அமர்ந்திருந்த படைத் தலைவர் வினவினார்.

“நமது முயற்சி விழலுக்கு இறைத்த நீராகக் கூடாதென்று நான் கருதுகிறேன்.”

“விழலுக்கு இறைத்த நீரா?” என்று வியப்புடன் கேட்டார் வீரராசேந்திரர்.

“ஆம்; சற்று முன் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள். தந்தை இறந்து விட்டார்; நாட்டைப் பிறர் கைப்பற்றிக் கொண்டு விட்டான் என்று கூறக் கேட்டபோது, இப்பொழுது நீங்கள் அடைந்திருக்கிறீர்களே, இந்தக் கொதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அடைந்தானா குலோத்துங்கன்? நான் சொல்கிறேன்; அவனுக்கு அந்நாட்டின் மீது பற்று இல்லை. தன் சிற்றப்பன் அதை ஆள விரும்பினால் ஆண்டுவிட்டுப் போகட்டுமே என்ற கருத்தை அவன் பல தடவைகள் பலரிடம் வெளியிட்டிருக்கிறான். இவ்வாறு அவனே அந்நாட்டைத் தனது சிறிய தந்தைக்கு விட்டுக் கொடுக்க விரும்பும் போது, நாம் அதை அவனது சிறிய தந்தையிடமிருந்து பறிப்பதற்காகப் போரிட நினைப்பதில் பொருள் என்ன இருக்கிறது?”

“என்ன? குலோத்துங்கனா இப்படிக் கருதுகிறான்?” என்று கொதித்தார் வீரராசேந்திரர்.

“ஆம், தம்பி.”

வீரராசேந்திரரின் வாய் அடைத்துப் போயிற்று. ஆனால், தண்டநாயகர் மதுராந்தகத் தமிழ் பேரரையர் எழுந்து சொன்னார்: “மன்னர் பெருமானே! வேங்கிச் சிங்கக் குட்டி வீரம் குன்றி இவ்வாறு முடிவுறுத்திருப்பார் என்று நான் கருத மாட்டேன். அவர் இச்சோழவள நாட்டின் மீது குன்றாத பாசமுடையவர். தாம் இங்கேயே ஒரு சாதாரணப் படைத் தலைவராக இருந்து தம்மை வளர்த்த நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருப்பதை நான் அறிவேன். அது பற்றியே அவர் இவ்வாறு முடிவுறுத்தியிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.”

குதிரைப்படைத் தலைவர் ஜயமுரி நாடாழ்வார் அடுத்ததாக எழுந்து பேசினார்: “தண்டநாயகர் அவர்களின் கூற்றை நான் ஆமோதிக்கிறேன். ஆயினும் வேங்கி இளவரசர் இக்கருத்துடையவராக இருப்பது பற்றி மட்டும் நாம் போர் தொடங்குவதை நிறுத்தக்கூடாது. ஏனென்றால் அவர் கருத்து எப்படி இருந்தாலும், விசயாதித்தன் கைக்கு வேங்கி போய் விட்ட பிறகு, சோழ நாடு தன் வடவெல்லைப் பாதுகாப்புக் கேந்திரத்தை இழந்து விட்டது. விசயாதித்தன் குந்தளத்தாரின் கைப்பாவை. ஆதலால் நமது வடவெல்லைப் பாதுகாப்புக் கேந்திரம் இப்பொழுது தெற்கெல்லைப் பிராந்தியமாகி விட்டது குந்தளத்தாருக்கு. எனவே, இளவரசர் குலோத்துங்கன் வேங்கி அரியணையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாம் அந்நாட்டைப் போரில் வென்று நமது மாதண்டநாயகராக அரச குடும்பத்தினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்பதே அடியேனின் கருத்து.”

“ஆம், அதோடு சிறை செய்யப்பட்டுள்ள எங்கள் சகோதரியாரை மீட்க வேண்டியதும் நம் நாட்டின் கடமையாகிறது. அதற்காகவேனும் நாம் வேங்கி மீது பொருது கொண்டே ஆக வேண்டும்” என்று கூறினார் வீரராசேந்திரர்.

அவையோர் கூற்று அனைத்தையும் அமைதியோடு செவிமடுத்த பின் சோழதேவர் மொழிந்தார்: “உங்கள் கருத்துக்கள் என்னைக் கவர்கின்றன; உங்கள் வீரம் என்னை வீறுகொள்ளச் செய்கிறது: உங்கள் நாட்டுப் பற்று என் உள்ளத்தில் நன்றிப் பெருக்கை விளைவிக்கிறது. ஆயினும் வேங்கிப் படையெடுப்பு இப்பொழுது தேவையா என்ற ஐயத்தை என்னால் போக்கிக் கொள்ள முடியவில்லை. ஆம், இப்பொழுது நாம் தொடுக்க நினைக்கும் போர் தேவையற்ற போர் என்றே இன்னும் நான் கருதுகிறேன்.”

“தேவையற்ற போரா?”, “மன்னரவர்களின் கருத்துத் தவறு”, “இல்லை, இல்லை; இது தேவையான போர்தான்,” என்று சோழதேவரின் சொல்லுக்குப் பலரிடமிருந்து எதிர்ப்புக்கள் வந்தன.

இராசேந்திரசோழப் பேரரசர் இளமுறுவல் பூத்தார். “அமைதி!” என்றார் அவர். அவையில் அமைதி நிலவியதும் தொடர்ந்தார்: “அறிவிற் சிறந்த உங்களில் பெரும்பான்மையோர் கருத்தை ஏற்று, அதன்படி ஒழுக வேண்டியது மன்னனாகிய என் கடமையே. ஆயினும் என் கருத்தையும் அவையோர்களுக்கு வெளியிட எனக்கு உரிமை உண்டு. நான் என் கருத்து முழுவதையும் கூறவில்லை. அதற்குள் அனைவரும் துடிக்கிறீர்கள். உங்கள் துடிப்பு பாராட்டுதற்கு உரியதுதான். எனினும் நான் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவையோர்களே! நம் தவத்திரு நாடு பல தலைமுறைகளாக, பல போர்களைப் பல காரணங்களுக்காக நிகழ்த்தியிருகிறது. ஆனால் அப்போர்கள் எல்லாவற்றிலும் நாமும் சரி, நமது முன்னோர்களும் சரி, அடிப்படைக் கொள்கை ஒன்றைப் பின்பற்றி வந்திருக்கிறோம் – அதாவது, வீரர்களோடு தான் போரிடுவது என்று! இப்பொழுது நீங்கள் தொடுக்க விரும்பும் இந்தப் போரைக் குந்தள மன்னன் ஆகவமல்லனோடு தொடுப்பதாக இருந்தால், உங்களுக்கு முன்னர் நான் போர்க் களத்தில் குதிப்பேன். ஆனால் இந்தப் போரோ, கோழையும், பேடியுமான விசயாதித்தன் மீது தொடுக்கப் போகும் போர்!…”

“ஆனால் இப்பொருக்கு மறைமுகமாகக் காரணமாக இருந்தவனும், இப்பொழுது நாம் போர் தொடுத்தால் விசயாதித்தனுக்கு உதவப் போகிறவனும் அந்த ஆகவமல்லன் தானே?” என்று குறுக்கிட்டுக் கூறினார் வீரராசேந்திரர்.

“உண்மைதான் தம்பி,” என்று மீண்டும் ஒரு முறுவலைச் சிந்தினார் சோழதேவர். பின்னர் புகன்றார்: “விசயாதித்தன் தனக்கு வேங்கி அரியணையில் உரிமை இல்லாதது கண்டு குந்தளத்தாரை அடைக்கலம் சார்ந்து உதவி கோரினான். இம்மாதிரி அரச குலத்தோர் படைப்பலமுள்ள பிறநாட்டு மன்னர்களை நாடி, அவர்கள் உதவி பெற்று ஓர் அரசை அடைவது ஒன்றும் புதிய செயலல்ல. ஆகவமல்லனைப் போல் நம் முன்னோர்கள் கூடப் பல சிற்றரசர்களுக்கு உதவியிருக்கின்றனர். ஆயினும் அதனை எதிர்த்துத் தொடுக்கப்படும் போர், அப்படை அடைக்கலம் சார்ந்தாரின் மீது தொடுக்கும் போராகுமேயன்றி, அடைக்கலம் அளித்தவர்கள் மீது தொடுக்கும் போராகாது. அவ்வாறே இந்தப் போரையும் எல்லா நாட்டு மன்னர்களும், எல்லா நாட்டு மக்களும் ‘வேங்கிப் போர் என்றும், பேடியான விசயாதித்தன் மீது தொடுக்கப் பட்ட போர்’ என்றும் கூறுவார்களேயன்றி, மற்றெவ்விதமும் குறிப்பிட மாட்டார்கள். விசயாதித்தனோ பெருங்கோழை என்றும், வாள் பிடித்துப் போர் செய்தே அறியாதவன் என்றும் நாம் அறிவோம்!”

அப்போது:

“வேங்கியிலிருந்து மற்றோரு தூதன் வந்திருக்கிறான் அரசே.”

“மற்றொரு தூதனா? அவனை வரவிடு!” கட்டளையிட்டார் மாமன்னர்.

சற்றைக்கெல்லாம் அங்கு வந்த வேங்கித் தூதன் சோழதேவரை வணங்கிவிட்டு, “மன்னர் மன்னவா எங்கள் பிராட்டியார் அம்மங்கை தேவி இவ்வோலையைத் தங்களிடம் சேர்க்கக் கட்டளையிட்டார்கள்,” என்று ஓர் ஓலையை நீட்டினான்.

சோழதேவர் அவ்வோலையை வாங்கிப் படித்தார். படிக்கப் படிக்க அவரது முகமும் கண்களும் குருதிச் சிவப்பாக மாறின. “ஒற்றன்! ஒற்றன்!” என்ற சொற்களை உதடுகள் உதிர்த்தன.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: