Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31

31 – மனதை மாற்றிவிட்டாய்

“அறிவில்ல உனக்கு, எங்க எல்லாம் உன்ன தேடுறது? இப்டியே பண்ணிட்டு இரு. கொல்லப்போறேன் உன்ன. இடியட். எதாவது பேசு டி ” என்று அவன் கத்திகொண்டே இருக்க அவள் இவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் ஓடி வந்து ஆதி என்று கட்டிக்கொண்டாள். இவனுக்கும் திடீரென அவளின் இச்செய்கை யோசிக்கவிடாமல் செய்ய இருந்தும் அவள் உடல் நடுங்குவதை உணர்ந்தவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கிக்கொண்டு அவள் முதுகை வருடிவிட்டான்.

“ஆதி, ப்ளீஸ் எங்கேயும் போகாதீங்க, ப்ளீஸ் ஆதி, ஆதி…” என விடாமல் புலம்ப ஏதாவது பாத்து பயந்துட்டாளோ என்று எண்ணியவன் இருக்காதே, அப்படி எல்லாம் பயப்படற ஆள் இல்லையே. ரொம்ப பயந்திருக்கா, வேற என்னவா இருக்கும் ….. என யோசிக்க அவளது கண்ணீர் தன் மார்பில் விழ பதறியவன் அவளை தன்புறம் இருந்து விலக்கியவன் அவள் விடாமல் பிடிவாதமாக இருக்க இவனும் “தியா, இங்க பாருடா. ஒண்ணுமில்ல. நான்தான் கூட இருக்கேன்ல. பயப்படாத. என்ன பாரு.” என வலுக்கட்டாயமாக நிமிர செய்தவன் அவளிடம் “என்னாச்சுன்னு சொல்லு..” அவள் தெளிவாகாமல் பார்த்துக்கொண்டே நிற்க கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டவன் “அழுகாம கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. நான் கூடவே தான் இருக்கேன். என்னனு சொல்லுடா..” என கேட்க

அவளும் தான் வந்தது, கேட்ட உரையாடல் அனைத்தையும் சொல்லி முடிக்க அவன் சிரித்துவிட்டு “இங்க யாரு என்ன கொலபண்ற அளவுக்கு இருக்கப்போறாங்க. அந்த அளவுக்கு யார்கூடவும் எனக்கு பகையெல்லாம் இல்ல. கனவு கீது எதாவது கண்டியா? ”

அவளும் “விளையாடாதீங்க ஆதி ப்ளீஸ், ஏதோ பிரச்னை வரப்போகுது. நம்ம ஊருக்கு போகலாம் …” என முடிப்பதற்குள்

அவளை கூர்மையாக பார்த்தவன் “அப்போ, என்ன பயந்துட்டு போகசொல்றியா? என்ன பாத்தா உனக்கு அவ்ளோ கோழையா தெரியுதா? உன்கிட்ட பிடிச்சதே பிரச்னை வந்தா பயப்படாம, அதுக்கான சொலுஷனும் கண்டிப்பா இருக்கும் நம்பிக்கையோட அந்த பிரச்னையை எதிர்க்கிறது, எப்படியாவது அத சால்வ் பண்றது தான். ஆனா நீயும் எல்லா பொண்ணுங்க மாதிரி பயம், அக்கறைனு என்ன கண்ட்ரோல் பண்ண நினைப்பேனு நான் எதிர்பாக்கல…திருவிழா கலவரத்துல உனக்கு எதுவும் ஆகாது. ஆகவிடமாட்டேனு என்மேல நம்பிக்கை இல்லேல. உனக்கு பயம்னா நீ ஊருக்கு போ. இருக்கணும்னு அவசியமில்லை…என்ன நீ நம்பாம எதுக்கு தேவையில்லாம என் பிரச்சனைல மாட்டிக்கணும்… என்ன பாத்துக்க எனக்கு தெரியும் …” என்று கையை விலக்கிவிட

அவனை உறுத்து விழித்தவள் “போதும் ஆதி, என்ன சொல்லவரேனே புரிஞ்சுக்கமாட்டீங்களா? கேக்றதுமில்லை. எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசவேண்டியது. பயந்திருந்தா அவங்க கொலை பண்றத பத்தி பேசுனதுமே போயிருப்பேன். அவங்க யாருனாவது தெரிஞ்சுக்கணும்னு தான் பின்னாடியே வந்தேன். பட் இருட்டு அவங்களும் கொஞ்சம் தள்ளி இருந்ததால முழுசா பாக்கமுடில. அடுத்த தடவ பாத்தா வேணா ஞாபகம் வரும். யாருன்னே தெரியாம யாரன்னு போயி நீங்க பாத்து சண்டைபோடுவீங்க? இல்லை எங்க இருந்து பிரச்னை வரும்னு தெரியாம யாரை தப்பு சொல்லமுடியும். நீங்க இங்க இருந்தா தானே திருவிழா அப்போ கலவரம் பண்ணி உங்கள ஏதாவது பண்ண பாப்பாங்க… நீங்களே ஊர்ல இலேன்னா அதுக்கு அவசியமே இருக்காது. நம்ம பிரச்சனைக்கு எத்தனை உயிரை பனையவெக்கமுடியம் ? அதுவும் இல்லாம ஊருக்கு போறேன்னு சொல்லி போகும்போது நீங்க தனியா சிக்குனா நல்லதுன்னு தான் அவங்களும் நினைப்பாங்க, அந்த சான்ஸ யூஸ் பண்ணிப்பாங்க. கண்டிப்பா அவங்க யாருனு தெரிஞ்சுக்கணும். அவங்க பிளான்ல சும்மா அப்போதைக்கு நீங்க மிஸ் ஆகி போய்ட்டாலும் இங்கதான் தாத்தா பாட்டின்னு வயசானவங்க, அங்கிள், ஆண்ட்டி, வயசுப்பொண்ணு சுபின்னு இத்தனை பேரு இருக்காங்க. உங்கள ஒன்னும் பண்ணமுடிலேன்னு அவங்க மூலமா பழிவாங்க நினச்சா என்ன பண்றது. இத பண்றவன் யாருனு தெரிஞ்சாதான் அவனுகள மொத்தமா அடக்கமுடியும். உங்கள மட்டும் ஊருக்கு போங்கன்னு சொல்லல. வாங்க போலாம்னு என்னையும் சேத்திதான் சொன்னேன். உங்க மேல நம்பிக்கை இருக்கறதால தான் வீட்ல சொல்லலாம், ஹெல்ப் கூப்படலாம்னு எதுவும் சொல்லாம உங்ககிட்ட சொன்னேன். அப்டி ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு தனியா போகும் போது எனக்கு பிரச்சனைனா நீங்க பாத்துப்பிங்கனு முழுசா உங்கள நம்பனதால தான் உங்ககூட நானும் வரேன் வாங்க போலாம்னு சொன்னேன். ஆனா நீங்க என்னவெல்லாம் பேசுறீங்க. விடுங்க. நானே அத யாருனு கண்டுபுடிச்சுக்கறேன்.” என கோபமாக கத்திவிட்டு அவள் நகர்ந்து செல்ல

ஆதி “இவ இவ்வளோ கோபப்பட்டு இவ்வளோ கத்துவாளா?, அவளை பாத்துப்பேன்னு என்மேல தான் எவ்வளோ நம்பிக்கை தனியா அதுவும் கொலை பண்ணப்போறாங்கனு தெரிஞ்சும் கூட வரேன்னு சொல்றா. அவ சொல்றதும் உண்மைதா கலவரம் அது இதுன்னா எல்லாருக்கும் கஷ்டம். ச்ச அவ சொல்லவரத கேக்காம இப்டி பேசிட்டேனே என “நினைத்து தன்னை திட்டியவன் வேகமாக அவள் பின்னால் சென்று அவள் கையை பிடித்து

“நீயா போயி என்ன பண்ணுவ? எப்படி கண்டுபுடிப்ப?”

“என்னமோ பண்றேன். அதப்பத்தி உங்களுக்கு என்ன கவலை. எனக்கு தான் உங்க மேல அக்கறையே இல்லையே, பிரச்னை வந்தா ஓடிடுவேன்ல. ..உங்கள பாத்துக்க தான் உங்களுக்கு தெரியும்னுங்கள்ல.. அத மட்டும் நீங்க பாத்துக்கோங்க. யாரு என்னனு நான் பாத்துக்கறேன்…நான் சொன்னதும் சிரிக்க தானே செஞ்சீங்க. நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பப்போறதும் இல்லை. அப்புறம் ஏன் கேள்வி கேக்கறீங்க? ” என்று கையை உருவ அவள் முயல அவளின் இந்த கோபத்தையும் செய்கையும் ரசித்தவன், இவை அனைத்தும் தனக்கானவை என மகிழ்ந்தவன் அவளுக்கு காதலை புரியவைக்கும் நோக்கில் அவளை தன்னருகில் இழுத்து

“ஏய், கூல் கூல். எதுக்கு மேடம்க்கு இவ்வளோ கோபம், டென்ஷன். நீ சொன்னது கரெக்ட் தான். கலவரம், வீட்ல யாருக்காவது ப்ரொப்லெம்ன்னு எல்லாம் வந்தா கஷ்டம்தான். சரி நீ சொல்றத நான் நம்பரேன். யோசிச்சு முடிவு பண்ணலாம்…. அண்ட் நான் பாத்துக்கறேன். பிரணட போலீஸ்ல இருக்கான். கலவரம் இந்தமாதிரி எல்லாம் எதுவும் வராம யாருக்கும் எந்த பிரச்னையும் வராம பாத்துக்கலாம். சரியா?” அவள் அமைதியாக இவனை பார்க்க “என்னையும் பாத்துக்கறேன் போதுமா… எனக்கு என் உயிர் முக்கியம். வாழணும்னு ரொம்ப ஆச இருக்கு. இன்னும் நான் அனுபவிக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு. அதனால நீ சொல்றத விளையாடவும் எடுத்துக்கமாட்டன் ஓகேவா? ” என்றதும் அவளும் தலையசைக்க இவன் சிரித்துவிட்டு

“அது சரி, நீ இப்படி எல்லாம் பதட்டமா ரியாக்ட் பண்ணமாட்டியே… நான் வரும்போது பிரீஸ் ஆகி நின்ன. என்னாச்சு?”

“தெரில. அவங்க சொன்னதை எல்லாம் கேட்டு உங்களுக்கு எதாவது ப்ரோப்லேம் வந்திடுமோன்னு நினைச்சுதான் ஞாபகம் இருக்கு. அப்புறம் உங்கள பாத்தத்துக்கு அப்புறம் தான் என்னால நார்மலாக முடிஞ்சது.”

“அதுதான் ஏன், எதுக்கும் பயப்படமாட்ட, நெக்ஸ்ட் என்ன பண்றதுன்னு யோசிப்ப. எதுவுமே புரியாம நின்னுட்டு அழுகையெல்லம் வேற வந்தது. ஏன்? ”

“ஆமா, கொஞ்சம் பயந்துட்டேன். எதுவுமே எனக்கு ஸ்ட்ரைக் ஆகுல”

“அதான் ஏன்? யோசிச்சியா? ”

“ஏன் ஏன்னா என்ன சொல்றது. எனக்கு தெரில..”

“வேற என்னதான் தெரியும். என்னதான் தோணுது உனக்கு? எதையுமே யோசிக்க மாட்டீயா?” என புரிந்துகொள்ளாமல் அவள் பதில் கூற இவனும் சட்டுனு கோபமாக கேட்க

“நீங்க எப்போவும் சந்தோசமா இருக்கணும்னு தோணுது. உங்க சிரிப்ப மட்டும் தான் பாக்கணும்னு தோணுது.. நீங்க கோபப்பட்டா , உங்களுக்கு ஒரு பிரச்சனைனா அத உடனே எப்படியாவது சால்வ் பண்ணனும்னு தோணுது. உங்களுக்கு வர பிரச்னை எதுவும் உங்கள பாதிக்கமா பாத்துக்கணும்னு தோணுது. அப்படி வர பிரச்னையாகட்டும், அத பண்றவங்களாகட்டும் சும்மா விடக்கூடாதுனு கோபம் வருது, அது நானே இருந்தாலும் சரி, எனக்கும் கண்டிப்பா தண்டனை இருக்கும். உங்களுக்கு பிடிச்சதை எல்லாமே உங்கள சுத்தி இருக்கணும்னு தோணுது, உங்களுக்கு ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும். எப்படியாவது அத உங்ககிட்ட சேக்கணும்னு தோணுது. உங்க முகம் கொஞ்சம் சுருங்கினாலும் அத ஏத்துக்கமுடியல. அது கோவமோ, கவலையோ எதுனாலும் சரி, உங்ககிட்ட நெருங்கவிடக்கூடாதுனு தோணுது. எப்போவுமே உங்க கண்ணுல தெரியற சிரிப்பு, கம்பீரம், அப்டியே இருக்கனும். கொஞ்சம் கூட கலங்கக்கூடாதுன்னு தோணுது. அத என்னால தாங்கிக்க முடில. இதெல்லாம் ஏன்னு எனக்கு தெரியல. அத என்னால யோசிக்கவும் முடில. இப்போ உங்களுக்கு அந்த பிரச்சனை வரக்கூடாதுன்னு மட்டும் தான் என் மைண்ட்ல இருக்கு… எதுவும் ஆகாதில்ல..” என ஆவேசத்தில் உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்து இறுதியில் கேள்வியோடு தவிப்பாக முடித்தவளை தன்னோடு இழுத்து அணைத்துக்கொண்டான் ..

காதல் என்ற வார்த்தையை உபயோகிக்காமல் காதலை இதைவிட அழகாக சொல்லமுடியுமா என்று தோன்றவில்லை. தன்னிடம் எந்த தயக்கமும் இன்றி மனதில் தோன்றிய அத்தனை உணர்வுகளையும் மறைக்காமல் கொட்டியவளை தனக்குள் புதைத்துக்கொண்டான்.

தன் வாழ்க்கை துணைக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது, வரவிடமாட்டேன். சந்தோசம் மட்டுமே நிலைக்க வேண்டுமென எழும் உணர்வை ஒரு வேகத்தோடு , அதை வெளிப்படுத்துவது ஆண்களுக்கு மட்டுமே உரியது என யார் கூறியது. இதோ என்னவள் கூறுகிறாள்.

எனக்காக எதையும் செய்வேன் என,

கோபமே அறியாதவள் எனக்காக ரௌத்திரம் கொள்கிறாள்.

பயத்தை காணாதவள் எனக்காக அச்சம் கொண்டு என்னிடமே தஞ்சம் அடைகிறாள்.

தைரியத்தை துணையாக கொண்டவள் எனக்காக

தன்னிலை மறந்து கண் கலங்கி கண்ணீர் விடுகிறாள்.

காதலில் என்னை போலவே ஓர் வேகம்,

அன்பிலும் ஆளுமை,

யாருக்காகவும் விட்டுகுடுக்காமல் சண்டையிடும் குணம்,

அத்தகைய பிடிவாதமான அன்புஎன்று

அனைத்தையும் கொண்டு என்னை காதலிப்பவள்

என் மனம் கவர்ந்தவள் .

மற்ற அனைத்திலும் இருவரும் நேர் எதிர் குணம் ஆனால் காதலில் இருவரின் வெளிப்பாடும் ஒன்றே என்பதை உணர்த்துக்கொண்டான். இத்தனையும் கொண்டவள் யாருக்கும் அடங்காதவள் என்னிடம் அடங்க நினைக்கிறாள். என் மகிழ்ச்சியில் அவள் மகிழ்கிறாள். என எண்ணியபோது அவனுக்கு கர்வமாகவே இருந்தது. அதன் வெளிப்பாடு அவனின் இறுகிய அணைப்பில் தெரிந்தது. அவளும் அதிலிருந்து விலகமுற்படவில்லை…இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவன் விரைவில் திருமண நாள் பார்க்க சொல்லவேண்டுமென முடிவடித்துக்கொண்டு அவளை விலக்கியவன் கைகளை பற்றிக்கொண்டு நடக்கலானான். அவளும் ஒன்றும் கூறாமல் உடன் வந்தாள்.

வீட்டினுள் நுழைந்தவளிடம் அனைவரும் எங்க போன? ஏன் இவ்வளோ நேரம் என கேட்க அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் “இல்லமா, நானும் அந்த வழியா போனதால கொஞ்ச நேரம் இரண்டுபேரும் பேசிட்டே மெதுவா வந்தோம். லேட்டாயிடிச்சு..”

அவளுடன் மாடிக்கு பின்னாடியே வந்தவன் அறைவாசலில் அவளை தன்புறம் திருப்பி “தியா, என்ன பாரு. எனக்கு ஒன்னும் ஆகாது. நீ எப்போவும் என்கூட தான் இருப்ப… எதைப்பத்தியும் நினைக்காம போயி ரெஸ்ட் எடு சரியா. என அவளும் அமைதியாக இருக்க எனக்கு அடாவடியான என் வாலு தியாவ தான் பிடிக்கும். இந்த அழுமூஞ்சி வேண்டாம். நீ இப்டி இருந்தா எனக்கும் கஷ்டமாயிருக்கு என்னாலதான்னு. ”

அவசரமாக “இல்ல ஆதி, அப்படியெல்லாம் இல்ல. நீங்க பீல் பண்ணாதீங்க. நான் இப்டி இருக்கமாட்டேன். நான் ஓகே தான். தூங்கி எழுந்தா சரி ஆய்டும்.” என்றவளை ‘எனக்காக தன் உணர்வுகளையே மாற்றிக்கொள்கிறாளே என நினைத்தவன் அவளது நெற்றியில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்து விட்டு “குட் நைட் குட்டிமா.” என்று சென்றுவிட்டான்.

அறையினுள் நுழைந்த அவளுக்கு தான் கலவனையான உணர்வுகள். ஆதியும், இவளும் பேசியது அவன் கேட்ட கேள்விகள் இவளது உணர்வுகள் என அனைத்தையும் ஓட்டி பார்த்தவள் இறுதியாக அவன் அளித்து முதல் முத்தத்தை நினைக்க உடல் முழுக்க சிலிர்க்க ஏனோ முகம் எல்லாம் சூடாவது போல உணர்வு கொண்டவள் ஆதியை காதலிப்பதை அவரும் வாய் விட்டு சொல்லாவிடினும் தன் அனைத்து செயல்களிலும் அதை காட்டிருக்கிறான். நான் தான் புரிஞ்சுக்கவே இல்லையா. அதனால தான் அத்தனை தடவ கேட்டாரோ. ஏன் உனக்கு தோணுது. யோசி யோசி னு. ச்ச… மக்கா இருந்திட்டோமே. பாவம் புரியவெக்க ட்ரை பன்னிருக்காரு. நான் அதுக்கும் வழ வழன்னு பேசிட்டு வந்திட்டேனே. அவரு திட்டுனா கூட எவ்வளோ அக்கறை இருந்தது. நான் அடிப்பட்டதுனு பொய் சொல்லி வரவெச்ச போது அவரோட பதட்டம் எல்லாம்…, எதுலையுமே புரிஞ்சுக்காம இருக்க என்ன வெச்சுகிட்டு என்ன பண்ணுவாரு… பாவம்… நான் தான் விளையாடறேனு அவரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..இனிமேல் அப்டி எல்லாம் கிறுக்குத்தனம் பண்ணக்கூடாது. என தனக்குள் கூறி கொள்ள இன்னொரு மனமோ அவர்கூட இருக்கும் போது ரொம்ப ஜாலியா, பிரியா பீல் பன்றேனே. என்ன பண்றது. அவர்கிட்ட தான் ரொம்ப கம்பர்ட்டா இருக்கேன் அதுல என்ன தப்பு என விவாதம் நடத்தி ஒருவழியாக ஆதியை காதலிப்பதை உணர்ந்துகொண்டு மகிழ்ச்சியில் உணவுகூட உண்ணாமல் உறங்கியே விட்டாள்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: