Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 69

கல்கியின் பார்த்திபன் கனவு – 69

அத்தியாயம் 69
உறையூர் சிறைச்சாலை

விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய காலத்து ஞாபகங்கள் அடிக்கடி வந்தன. பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு கிளம்பிய காட்சி அவன் மனக்கண் முன்னால் பிரத்யட்சமாக நின்றது. அதற்கு முதல்நாள் மகாராஜா இரகசிய சித்திர மண்டபத்துக்குத் தன்னை அழைத்துச் சென்று தம்முடைய கையால் எழுதிய கனவுச் சித்திரங்களைக் காட்டியதெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. ஐயோ! அவையெல்லாம் ‘கனவாகவே போகவேண்டியதுதான் போலும்!” தந்தைக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலாமென்னும் ஆசை அவனுக்கு இதுவரையில் இருந்தது. இப்போது அடியோடு போய்விட்டது. பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளையை எதிர்பார்த்து இந்தச் சிறைச்சாலையில் எத்தனை நாள் கிடக்கவேண்டுமோ தெரியவில்லை. அவரிடமிருந்து என்ன கட்டளை வரும்? மரண தண்டனையை நிறைவேற்றும்படி தான் அநேகமாகக் கட்டளை வரும். மாரப்பன் அந்தக் கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருப்பான். தன்னுடைய கதியைப் பற்றி யாருக்கும் தெரியவே போவதில்லை. பார்த்திப மகாராஜாவின் பெயராவது ஜனங்களுக்குச் சில காலம் ஞாபகம் இருக்கும். தன் பெயரைக் கூட எல்லாரும் மறந்துவிடுவார்கள்.

 

செண்பகத் தீவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன்? – என்னும் கேள்வியை விக்கிரமன் அடிக்கடி கேட்டுக் கொண்டான். சின்னஞ்சிறு தீவாயிருந்தாலும் அங்கே சுதந்திர ராஜாவாக ஆட்சி செய்தது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! அதைவிட்டு இப்படித் தன்னந்தனியே இங்கே வரும் பைத்தியம் தனக்கு எதற்காக வந்தது? அந்தப் பைத்தியத்தின் காரணங்களைப் பற்றியும் அவை எவ்வளவு தூரம் நிறைவேறின என்பது பற்றியும் விக்கிரமன் யோசித்தான். செண்பகத் தீவிலிருந்தபோது பொன்னி நதியையும் சோழ வள நாட்டையும் எப்போது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் மீண்டும் மீண்டும் அவனுக்கு ஏற்பட்டு வந்தது. ஆனால், சோழ நாட்டின்மேல் அவனுக்கு எவ்வளவு ஆசை இருந்தாலும் சோழநாட்டு மக்கள் சுதந்திரத்தை மறந்து, வீரமிழந்து பல்லவ சக்கரவர்த்திக்கு உட்பட்டிருப்பதை நினைக்க அவன் வெறுப்பு அடைவதும் உண்டு. அந்த வெறுப்பு இப்போது சிறையில் இருந்த சமயம் பதின்மடங்கு அதிகமாயிற்று. வீரபார்த்திப மகாராஜாவின் புதல்வன் உள்ளூர்ச் சிறைச்சாலையில் இருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் தானே இந்த ஜனங்கள் இருக்கிறார்கள்.

 

தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒன்று இருந்தது, அதுவும் நிறைவேறவில்லை. நிறைவேறாமலே சாகப்போகிறோமோ, என்னவோ? அப்புறம், குந்தவி! – அவளை நினைக்காமலிருப்பதற்கு விக்கிரமன் ஆனமட்டும் முயன்றான். ஆனால் முடியவில்லை. குந்தவியை நினைத்ததும், விக்கிரமனுக்குப் பளிச்சென்று ஓர் உண்மை புலனாயிற்று. செண்பகத் தீவிலிருந்து கிளம்பி வந்ததற்குப் பல காரணங்கள் அவன் கற்பித்துக் கொண்டிருந்தா னென்றாலும், உண்மையான காரணம் – அவனுடைய மனத்தின் அந்தரங்கத்தில் கிடந்த காரணம் இப்போது தெரிய வந்தது. குந்தவிதான் அந்தக் காரணம். இரும்பு மிகவும் வலிமை வாய்ந்ததுதான்; ஆனாலும் காந்தத்தின் முன்னால் அதன் சக்தியெல்லாம் குன்றிவிடுகிறது. காந்தம் இழுக்க, இரும்பு ஓடிவருகிறது. குந்தவியின் சந்திரவதனம் – சீ, இல்லை!- அவளுடைய உண்மை அன்பு தன்னுடைய இரும்பு நெஞ்சத்தை இளக்கி விட்டது. அந்தக் காந்த சக்திதான் தன்னை செண்பகத் தீவிலிருந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தது. ஜுரமாகக் கிடந்த தன்னை எடுத்துக் காப்பாற்றியவள் அவள் என்று தெரிந்த பிறகுகூட விக்கிரமனுக்குக் குந்தவியின் மேல் கோபம் இருந்தது; தன்னுடைய சுதந்திரப் பிரதிக்ஞையை நிறைவேற்றுவதற்கு அவள் குறுக்கே நிற்பாள் என்ற எண்ணந்தான் காரணம். ஆனால், கடைசி நாள் அவளுடைய பேச்சிலிருந்து அது தவறு என்று தெரிந்தது. ‘இவரை மன்னிக்கும்படி நான் என் தந்தையிடம் கேட்கமாட்டேன்; ஆனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் இவரை மணம் புரிந்து கொள்ள அனுமதி கேட்பேன்’ என்று எவ்வளவு கம்பீரமாய்க் கூறினாள்! இத்தகைய பெண்ணின் காதலை அறிவதற்காகச் செண்பகத் தீவிலிருந்து தானா வரலாம்? சொர்க்க லோகத்திலிருந்து கூட வரலாம் அல்லவா? ஆகா! இந்த மாரப்பன் மட்டும் வந்து குறுக்கிட்டிராவிட்டால், குந்தவியும் தானும் வருகிற அமாவாசையன்று கப்பலேறிச் செண்பகத் தீவுக்குக் கிளம்பியிருக்கலாமே!

 

அமாவாசை நெருங்க நெருங்க, விக்கிரமனுடைய உள்ளக் கிளர்ச்சி அதிகமாயிற்று. அமாவாசையன்று செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்துக்கு வரும். அப்புறம் இரண்டு நாள் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எப்படியாவது இச்சிறையிலிருந்து தப்பி அமாவாசையன்று மாமல்லபுரம் போகக் கூடுமானால்! இவ்விதம், விக்கிரமன் எண்ணாததெல்லாம் எண்ணினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு ஒரு யுகமாயிருந்தது. கடைசியில் அமாவாசைக்கு முதல்நாள் மாலை மாரப்பபூபதி வந்தான். விக்கிரமனைப் பார்த்து நகைத்துக் கொண்டே, “ஓ! இரத்தின வியாபாரியாரே! காஞ்சியிலிருந்து கட்டளை வந்துவிட்டது” என்றான். ஒரு கணம் விக்கிரமன் நடுங்கிப்போனான். கட்டளை என்றதும், மரண தண்டனை என்று அவன் எண்ணினான். மரணத்துக்கு அவன் பயந்தவனல்ல என்றாலும், கொலையாளிகளின் கத்திக்கு இரையாவதை அவன் அருவருத்தான். ஆனால், மாரப்பன், “காஞ்சிக்கு உன்னைப் பத்திரமாய் அனுப்பி வைக்கும்படி கட்டளை, இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் கிளம்பவேண்டும், சித்தமாயிரு” என்றதும் விக்கிரமனுக்கு உற்சாகம் பிறந்தது. வழியில் தப்புவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேரிடலாமல்லவா? அல்லது போராடி வீர மரணமாவது அடையலாமல்லவா? இது இரண்டும் சாத்தியமில்லாவிட்டால், சக்கரவர்த்தியின் முன்னிலையில் இன்னொரு தடவை, “அடிமை வாழ்வை ஒப்புக் கொள்ள மாட்டேன்; சுதந்திரத்துக்காக உயிரை விடுவேன்” என்று சொல்வதற்காவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படலாமல்லவா? ஆகா! குந்தவியும் பக்கத்தில் இருக்கும்போது இம்மாதிரி மறுமொழி சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைவிடப் பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘பரிசல் துறை’-1கல்கியின் ‘பரிசல் துறை’-1

1 காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட ‘சலசல’ சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச

சாவியின் ஆப்பிள் பசி – 35சாவியின் ஆப்பிள் பசி – 35

நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு. ‘தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது

சாவியின் ஆப்பிள் பசி – 12சாவியின் ஆப்பிள் பசி – 12

 சகுந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, “என்ன பிரமாதம் போங்கள். கடைசியில் கண்ணீர் வந்துடுத்து!”