Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 1’

ரவும் பகலும் கொஞ்சிக் குலாவும் மாலை வேளை. லேசான மழை தூறி சாலையை நனைத்தது. அந்தத் தார் சாலையில் ஓரத்தில் நிரம்பியிருந்த மண்ணில் நீர்த்துளிகள் பட்டு மண்வாசனை அந்தப் பகுதியை நிறைத்தது. மும்பை – கற்பனைவாதிகளும், கடின உழைப்பாளர்களும் ஒருங்கே நிறைந்த இந்தியாவின் கனவு நகரம். மழைக்கு சூடான சமோசாக்களும், பாவ் பாஜியும் உண்டபடி உரையாடும் மக்கள். வார விடுமுறையை கழிக்கும் ஆர்வத்தில் பட்டாம்பூச்சியாய் அந்தப் பகுதியில் நிறைந்திருந்த இளம் சமுதாயத்தினர்.

கிழக்கு அந்தேரியின் நவநாகரீக அலுவலகக் கட்டத்தின் மூன்றாவது தளம் ‘கேட் அட்வர்டைசிங் ஏஜென்சி’ என்று தங்க நிற எழுத்தில் தகதகத்தது. வரவேற்பறையின் ஒவ்வொரு இன்ச்சிலும் பணமும் அழகாய் காட்ட எடுத்துக் கொண்ட சிரத்தையும் தெரிந்தது. அலுவலகத்தின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து வெளியே வந்த குழாமுக்கு இருவத்தி ஐந்திலிருந்து முப்பத்தைந்து வயதுவரை இருக்கும். நீட்டாக டக் செய்யப்பட்ட முழுக்கை சட்டை, சிலர் கோட் சூட் இன்னும் சிலர் ஜீன் என்று விதவிதமாய் உடை.

“ஹப்பா…. இந்த ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் தயார் பண்றதுக்குள்ள பெண்டு கழண்டுடுச்சுடா..”

“அந்த ரூபி ப்ராஜெக்ட்டா… “

“அதேதான்…”

“வர்ற வியாழக்கிழமைதானே ப்ரசென்ட் பண்ணனும்”

“வியாழன்தான். ஆனால் இதில் கேட் நேரடியாய் இன்வால்வ் ஆயிருக்காங்க. சோ இந்த வாரமே மார்கெட் ரிசர்ச் முடிச்சு பக்காவா ரெடி ஆயிட்டோம்”

“கேட் ப்ராஜெக்ட்டா… கிளையன்ட் ஒகே செய்துட்டா இனி சாப்பாடு தூக்கம் மறந்துட வேண்டியதுதான்”

“ஆமாம்…. இந்த ஆட் ஏஜென்சில கேட் பொறுப்பு எடுத்துட்ட சமயம் பூஜ்யத்தில் இருந்தோம். அங்கிருந்து ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம்னா அதுக்கு நூறு சதவிகிதம் அவங்களோட  கடின உழைப்புத்தான் காரணம். அந்த சமயத்தில் நான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு போகும்போதும் கேட் ரூமில் வேலை நடக்கும். அடுத்த டீம் காலை ஆறு மணிக்கு வந்து ஜாயின் பண்ணிக்கும். எல்லா டீமிலும் கேட்டை பார்க்கலாம்”

“கேட்டைப் பத்தி நீ சொல்லவே வேண்டாம். இந்த நிறுவனத்தையே கல்யாணம் செய்துட்டவங்க…. ஆனால் இந்த ரூபி மல்டி மில்லியன் ப்ராஜெக்ட் ஆச்சே…. நம்மளோ வளரும் நிறுவனம், அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டுக்கு நம்மை எப்படி கன்சிடர் பண்ணாங்க”

“நீ சொன்னது சரி. இது வரைக்கும் எவ்வளவோ வேலைகள் செய்திருக்கோம். போன தடவை ஒரு சாப்ட்வேர் கம்பனிக்கு செய்து தந்தது தாறுமாறு ஹிட். அப்பறம் கொஞ்சம் ஹாஸ்யம் கலந்து நம்ம செய்த குளியல் சோப்பு விளம்பரம் இண்டர்நேஷனல் லெவலில்  பேசப்பட்டது. அதனாலதான் இம்ப்ரெஸ் ஆகி  ரூபில கூப்பிட்டிருக்காங்க. மும்பையோட சிறந்த விளம்பர நிறுவனங்கள் இந்த வாய்ப்பு  கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்துட்டு இருக்காங்க. ஆனால் நம்ம டீம் கடின உழைப்பை மட்டுமே நம்பி இறங்கிருக்கோம். ரூபி நெட்வொர்க் ப்ராஜெக்ட் மட்டும் நமக்கு கிடைச்சதுன்னா ஜாக்பாட்தான். சக்ஸஸ்புல்லா முடிஞ்சா நம்ம நிறுவனம் எங்கேயோ போயிரும்”

வரவேற்பறையில் பணிபுரிபவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சமயம், அலுவலகத்தின் கண்ணாடிக் கதவுகளை உறுதியான அந்தப் பொன்னிறக் கரங்கள் திறந்தது. வெளியே வந்த யுவதி அழகே உருவாய் இருந்தாள். சராசரி உயரம், முழு நிலவு முகம், குண்டு கன்னம், ரோஜா இதழ்கள், தாமரை நிறம், சுருட்டி பின் குத்தப்பட்ட கரிய அடர்த்தியான கூந்தல்.அந்த அழகிய பெரிய கண்களில் தீட்டியிருந்த மை சற்றே கலைந்து களைப்பைக் காட்டியது. பார்வையில் கனிவும் தெளிவும் போட்டி போட்டன.

“கய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். சாரி டு டிஸ்டர்ப் யூ. ரூபி ப்ராஜெக்ட் பண்றவங்க மீட்டிங் ரூம் வர முடியுமா?” என்ற குரலில் ஆளுமை நிறைந்திருந்தது.

சிறிது நேரத்தில் மீட்டிங் ரூமில் அனைவரின் முன்பு நின்ற கேட் தொண்டையைக் கனைத்தபடி பேசத் தொடங்கினாள்.

“ரூபி ப்ராஜெக்ட் ப்ரசெண்டேஷன் வியாழக்கிழமைன்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதில் ஒரு சிறிய மாற்றம்”

“போஸ்ட்போன்டா கேட்..”

“தள்ளிப் போட்டிருந்தா ஏன் இப்படி அவசரமா கூப்பிடுறாங்க? கான்சல் பண்ணிட்டாங்களா கேட்” கவலையாய் கேட்டாள் ஒருத்தி.

“நீங்க பயப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. ப்ரசன்டேஷனை வரும் திங்கட்கிழமையே தர சொல்றாங்க”

“நாலு நாள் முன்னமேவா”

“ஆமாம், இப்பதான் ரூபி நெட்வொர்க்லேருந்து தகவல் வந்தது”

கேட்டின் உதவியாளர் கல்பனா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“குட் நியுஸ் கேட். நமக்குப் போட்டியா இருத்த கம்பனிகளில் மூணு பேர் ஷார்ட் நோட்டிஸ், எங்களால முடியாதுன்னு ஜகா வாங்கிட்டாங்க”

“தாங்க் காட், நம்ம எல்லா முக்கியமான வேலைகளையும் முன்னாடியே முடிச்சது நல்லதா போச்சு”

“எஸ். இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வேலைகள் பாக்கி இருக்கு. அதையும்  இன்னைக்கே செய்துட்டா மத்ததை நான் பாத்துக்குறேன். நீங்க வீக் எண்டை என்ஜாய் பண்ணலாம்…

கல்பனா எல்லாருக்கும்  நைட்டுக்கு பீட்சா டின்னரும், நாளைக்கு பேமிலி சினிமா டிக்கெட்டும் ஏற்பாடு செய்துடு” என்று உத்தரவிட்டாள்.

மளமளவென வேலைகள் நடந்தது. கணினியை மூடிவிட்டு அனைவரும் கிளம்பிவிட்டனர். கல்பனா கேட்டின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

“உனக்கு உணவை மைக்ரோவேவ்ல சூடு பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன். சாபிட்டுட்டு கிரீன் டீயைக் குடி”

“வச்சுட்டு போ… “

“கேட் சாப்பிட வாயேன். எனக்கும் பசிக்குது. நானும் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போகணும்”

“கல்பனா… நீ ஏன் சாப்பிடல”

“பாஸ்  பட்டினியா இருக்கிங்களே. உங்களை விட்டுட்டு சாப்பிட மனசு வரல.”

தட்டினை வாங்கி உண்டவள் கல்பனாவையும் உண்ண வைத்தாள் “கல்பனா…. இந்த மாதிரி எனக்காக வெயிட் பண்றதெல்லாம் என் வேலைக்கும் கேரக்டருக்கும் ஒத்து வராது. எனக்கு பசிக்கும்போது நானே சூடு பண்ணி சாப்பிட்டுக்குவேன். நீ பொழுதோட வீட்டுக்கு கிளம்பு”

“சரி கேட்”

“கம்பனி கேப் சொல்லிட்டியா?”

“வெளில வெயிட் பண்றான்”

“கிளம்பு… அப்பறம் என்னைக் கம்பல் பண்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்”

கைப்பையை எடுத்துக் கொண்டு வீட்டுகுக் கிளம்பிய கல்பனா சற்றுத் தயங்கினாள்.

“சரி… கேட் உன் முகத்தைப் பாத்தா, மனசில் ஏதோ ஒரு குழப்பம் ஓடிட்டு இருக்கு போலிருக்கே”

“எஸ் கல்பனா, ரூபி நெட்வொர்க்ல மீட்டிங்கை முன்னாடியே வச்சு எந்த அளவுக்கு அவங்க கம்பனி ப்ராஜெக்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரா இருக்கோம்ன்னு செக் பண்றான். கடைசி நேரத்தில் வேலை செய்யும் நிறுவனங்களால் இவனோட இந்த மூவ் தாக்கு பிடிக்க முடியல”

“நம்ம நல்லவேளை முன்னாடியே தயாரா இருக்கோம்… ஆனாலும் ரூபி ப்ராஜெக்ட் கிடைச்சா இதைவிடக் கடுமையா உழைக்கணுமே..”

“ஆமாம்…. “

“அந்த கம்பனி ஹெட் பேரு என்னவோ சொன்னியே… சட்டுன்னு நினைவுக்கு வரல?”

“வம்சி கிருஷ்ணா…. ஒன் மேன் ஆர்மி மாதிரி ஒற்றை ஆளா நின்னு இந்த நிறுவனத்தை வளர்த்திருக்கான்”

“கிட்டத்தட்ட உன்னை மாதிரியே… வம்சி கிருஷ்ணா பத்தி இன்னைக்கு கூகுள் ஆண்டவர்கிட்ட குறி கேக்குறேன்”

புன்னகைத்தாள் “இந்த ப்ராஜெக்ட் கிடைச்சா நம்ம நிறுவனம் எங்கேயோ போயிடும். அதுக்காக ராப்பகலா உழைச்சுட்டு இருக்கேன். ஆனால் இது கிடைச்சா  வம்சிட்ட வேலை பாக்குறதுக்குள்ள தினமும் உயிர் போயிட்டு வரும்னு என் மனசில் ஒரு பட்சி சொல்லுது”

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: