கபாடபுரம் – 16

16. எயினர் நாடு

 

    • தன் தாய் திலோத்தமையாருக்குச் சாரகுமாரன் நிறைய ஆறுதல் கூற வேண்டியிருந்தது. எவ்வளவு ஆறுதல் கூறியும் பழந்தீவுகளில் அவன் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதை மகனிடம் கவலையோடும், பாசத்தோடும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவள். அறிவுக்கும் அன்புக்குமிடையே இளையபாண்டியனின் உள்ளம் சில நாழிகை நேரம் ஊசலாடியது. பாசம் என்னும் மெல்லிய உணர்வும், அறிவு என்னும் தீவிரமான கடமையும் போராடின. தான் ஆறுதல் கூறியது போதாதென்று முடிநாகனைக் கொண்டும் தாய்க்கு ஆறுதல் கூறச் செய்தான் இளையபாண்டியன்.

 

    • “இளையபாண்டியருக்குத் துணையாக அடியேனும் உடன் செல்லுவதால் கோப்பெருந்தேவி – இவ்வளவு மிகையாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக அரசகுமாரர்கள் பட்டத்துக்கு வருமுன் தன் நாட்டிற்கு நான்கு புறத்துமுள்ள கடல் எல்லை, நிலவெல்லைகளிலுள்ள பகுதிகளை அரசதந்திர முறையில் சுற்றிப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என்பதனாலேயே பெரியபாண்டியர் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பட்டத்திற்கு வந்தபின் இத்தகைய சுற்றுப் பயணங்களைச் செய்ய முடியாது போகும். செய்ய முடிந்தாலும் அது தன்னிச்சையானதாகவும், சுதந்திரமானதாகவும் இராது. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால் கோப்பெருந்தேவி இளையபாண்டியருக்கு முழு மனத்துடன் விடை கொடுக்க முடியும்” என்று முடிநாகன் எடுத்துக் கூறியபோதும் கூடக் கோப்பெருந்தேவி அரைகுறை மனநிலையில் தான் இருந்தாள். அவளுடைய மனநிலையை மகன் சாரகுமாரன் மூலமாகக் கேள்விப்பட்டு அநாகுலபாண்டியன் வந்து கடுமையாக எடுத்துக் கூறியபின்பே அவள் இணங்கினாள்.

 

    • “மகனிடம் உனக்குப் பாசமும், அன்பும், இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக கடமையை மறந்துவிடலாகாது. அரச குடும்பத்துப் பிள்ளையைச் செல்லமாக வளர்க்க நினைப்பதை விட அதிகமாக ஒரு தாய் அவனுக்கும், அவன் பிறந்த நாட்டிற்கும் வேறெந்தக் கெடுதலையும் செய்துவிட முடியாது என்பதை நினைவு வைத்துக் கொள். நீ இன்று உன் மகன் மேல் மட்டும் பாசம் காண்பிக்கிறாய்! அந்த மகனோ நாளை இந்த நாட்டின் உயிர்க்குலத்தின்மேல் எல்லாம் பாசம் காண்பித்து ஆள வேண்டியவன். நாளைப் பரந்த பாசத்தைக் காண்பிக்க வேண்டியவர்களை இன்று நாம் குறுகிய பாசத்தால் வளர்ப்பது கூடத் தவறு.”

 

    • “குறுகிய பாசத்தால் பேணப்பட்டுச் செல்வப் பிள்ளைகளாகவும், சவலைப் பிள்ளைகளாகவும் வளர்க்கப் படுகிறவர்கள் நாளை பரந்த அன்பையும், பாசத்தையும், செலுத்த முடியாதவர்களாகிவிடுவார்கள். இளைய பாண்டியனைப் பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீ இணங்கவில்லை என்பது தெரிந்தால் பெரியபாண்டியரே உன்னிடம் பேசவருவார். அவர் எதிரே வந்து நின்றால் உனக்குக் கைகால் பதறும். பேசுவதற்குச் சொற்கள் வராமற் போய்விடும்” என்று அநாகுலபாண்டியன் இவ்வளவெல்லாம் எடுத்துக் கூறிய பின்பே திலோத்தமை இதற்கு இணங்கினாள். பெரியபாண்டியர் தன் எதிரில் வந்துநின்று கடுமையான சொற்களில் திடமாக விவாதிப்பார் என்பதைக் கேள்விப்பட்டதும் அந்நிலை வரை போகவிடுவதில் பயனில்லை என்று தோன்றியது அவளுக்கு.

 

    • “நான் பெண்! இதற்கு மேல் அரசியல் காரணங்களின் விளைவுகளை மறுக்கச் சக்தியில்லாதவள். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்று சோகம் இடறும் இனிய குரலில் கணவனுக்குப் பதிலிறுத்தாள் திலோத்தமை. இளையபாண்டியனும், முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் பயணம் செய்வது உறுதியாயிற்று. சிகண்டியார், அவிநயனார் ஆகிய ஆசிரியர்களிடம் கூறி விடைபெறுவதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பேரப்பிள்ளையாண்டானாகிய சாரகுமாரனை அழைத்துக் கொண்டு போனார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர்.

 

    • “புலவர் பெருமக்களே! இலக்கண இலக்கியங்களையும் இசைக்கலையையும் நீங்கள் கற்பித்து விட்டீர்கள்! பரம்பரை பரம்பரையாக வரவேண்டிய அரசதந்திர முறைகளை இவனுக்குக் கற்பிப்பதற்காக நான் சில காரியங்களைச் செய்யப் போகிறேன். இந்த மாபெரும் பாண்டியர் மரபில் அரச குடும்பத்துச் சூழ்ச்சித்திறன் குறைவாகவும், ஒரு கலைஞனைப் போன்ற மென்மையும், இங்கிதமும், அதிகமாகவும் கொண்டு பிறந்திருப்பவன் இவன் தான். ஆகவே இவனைப்பற்றி மட்டும் நான் சற்றே அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. உங்களுடைய நூல்கள் கற்றுத்தரமுடியாத பல கடுமையான அனுபவ பாடங்களைக் கற்றுத்தர நான் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. இதை நீங்கள் எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்களென்று எனக்குத் தெரியும். ஆயினும் முறை கருதியும், நாகரிகம் நோக்கியும் உங்களிடம் விடைபெற இவனை அழைத்து வந்தேன்” என்று அவர்களிடம் பேச்சைத் தொடங்கினார் வெண்தேர்ச் செழிய மாமன்னர்.

 

    • “நமக்கெல்லாம் நிகழ்காலத்தைப் பற்றிய கவலைகள் என்றால் பெரியபாண்டியருக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்தான்…” என்று சிகண்டியாரிடம் சிரித்துக் கொண்டே விளையாட்டாகக் கூறினார் அவிநயனார்.

 

    • பெரியவர் விடவில்லை. “ஆம்! ஆம்! எனக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைதான். நிகழ்காலத்தைப் பற்றி நான் நினைத்துத் தயங்கிக் கொண்டிருக்கும்போதே அது கரைந்து போய்விடுகிறது. இறந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை. நிச்சயமாக எனக்கு முன் நான் நினைக்கவும் திட்டமிடவும் முடிந்த காலமாக எதிரே மீதமிருப்பது எதிர்காலம் ஒன்றுதான். ஆகவே அதைப் பற்றி மட்டும் நான் நிறையக் கவலைப்படுவது நியாயம்தானே அவிநயனாரே?” என்று அவிநயனாரை மடக்கினார். இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் பெரியபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அவிநயனார். பெரியவர்களும் மூத்தவர்களும் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பேச்சில் இடையே தான் குறுக்கிடுவது கூடாது என்று கருதியது போல் அடக்கமாகவும் விநயமாகவும் ஒதுங்கி நின்றான் சாரகுமாரன்.

 

    • “பழந்தீவுகளுக்குப் பயணம் செல்லுமுன் இளையபாண்டியனை அரச கம்பீர மரியாதைகளுடன் இந்தக் கபாடபுரத்தின் பிரதான வீதிகளில் நகருலா வரச் செய்ய வேண்டுமென்பது என் ஆசை. வசந்தகாலத்தின் செழிப்பான மலரைப் போல் இளமை அரும்பி நிற்கும் நம் சாரகுமாரனைக் கோ நகரில் யாவரும் காண ஆவலாயிருப்பார்கள் அல்லவா?” என்று ஒரு விநோதமான ஆசையை வெளியிட்டார் சிகண்டியார். ஆனால் என்ன காரணத்தாலோ, ‘அப்படிச் செய்ய முடியாது செய்யவும் கூடாது’ என்று பெரிய பாண்டியர் அதை உடனே மறுத்துவிட்டார்.

 

    • “நகரணி மங்கல நாளன்றுதான் எங்களோடு இவனும் தேருலா வந்திருந்தானே? இப்போது மறுபடியும் தனியாக இன்னொரு நகருலாவுக்கு அவசியமென்ன?”

 

    • “அது பொதுவாக நிகழ்ந்த தேருலா. மூவாயிரம் முத்துத் தேர்கள் தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்டன. அதில் ஏதோ ஒரு தேரில் இளையபாண்டியனும் வந்தான். நீண்ட நாள் குருகுலவாசத்துக்குப் பின் சாரகுமாரன் கோ நகரத்துக்கு வந்திருப்பதால் அவன் மட்டுமே சிறப்பாகவும், தனியாகவும் ஒரு தேருலா வருதல் வேண்டும்.”

 

    • “இவ் வேளையில் அப்படிச் செய்வது நல்லதில்லை. இவன் பழந்தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான் என்ற செய்திப் புறத்தார்க்கு அதிகம் தெரியக்கூடாதென்று கருதுகிறேன் நான். ‘தேருலா’ நிகழச் செய்வது இந்தப் பயணத்தை ஊரறிய முரசறைவது போலாகும். பல்வேறு தீவுகளின் ஒற்றர்களும் நிரம்பியுள்ள நம் கோ நகரத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படிச் செய்வது சாத்தியமில்லை” என்று பெரியவர் தீர்மானமாக மறுத்த பின்பே சிகண்டியாசிரியர் அடங்கினார்.

 

    • இளையபாண்டியனும், முடிநாகனும், பழந்தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யும் செய்தி அரண்மனை வட்டத்தினரிலும் அரசகுடும்பத்தோடு பொறுப்பான தொடர்புள்ள சிலருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாகப் பட்டத்து அரசர்களோ, அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கடற்பயணம் புறப்படும்போது பெரிய துறைமுகத்தில் கோலாகலமாகவும் அலங்காரமாகவும் வழியனுப்பும் வைபவம் நடைபெறுவதுண்டு. இந்த முறை அந்த அலங்கார வைபவங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. பயணமே பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போல் கடலிற் கலக்கும் சிறு துறைமுகத்தின் வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணம் புறப்படுமுன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று இளையபாண்டியன் எண்ணியிருந்தும் அது இயலாமல் போயிற்று. கடைசி விநாடிவரை பெரியபாண்டியர் பல எச்சரிக்கைகளையும் செய்திகளையும் அவனுக்குக் கூறிக் கொண்டே இருந்தார்.

 

    • சிறுதூறலாக மழை பெய்து கொண்டிருந்த மங்கலான நண்பகல் வேளை ஒன்றில் அவனும் முடிநாகனும், தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். பாட்டனாரும், தந்தை அநாகுலபாண்டியரும், அரசகுடும்பத்தினரும், சில புலவர்களும் வழியனுப்ப வந்திருந்தார்கள். அவர்களுடைய பாய் மரக்கப்பல் பொருநை முகத்துவாரத்திலிருந்து திருப்பத்தைக் கடந்து தென்பெருங்கடலில் பிரவேசித்தபோது காற்று அவர்கள் செல்ல வேண்டிய திசைக்கு ஏற்றதாக வாய்த்திருந்தது.

 

    • கப்பல் கடலுக்குள் வந்ததும் தற்செயலாகத் தொலைவிலே தென்பட்ட புன்னைத் தோட்டமும் அதன் சுற்றுப் புறங்களும் இளையபாண்டியனின் கண்களிலே தெரிந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. அந்த நினைவோடு கப்பல் தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபாண்டியனை அணுகித் தென்பழந்தீவுகள் பற்றிய திசை விவரங்களும், குறிப்புகளும், வரையப்பட்டிருந்த திரைச்சீலையைப் பிரித்துக் காண்பிக்கலானான் முடிநாகன். இளையபாண்டியனுடைய கவனமும் அப்போது அதில் சென்றது. போது இருட்டுவதற்குள் எயினர் தீவுகளின் ஒரு முனையான மரங்கள் அடர்ந்த மலைப் பகுதியை அடையலாம் என்று திரைச்சீலையிற் கண்ட விவரங்களிலிருந்து தெரியவந்தது.

 

    “நம்முடைய கபாடபுரத்துத் தேர்க்கோட்டத்தில் உருவாகும் தேர்களுக்கு வேண்டிய வைரம் பாய்ந்த தேர்ச் சட்டங்களும், மரங்களும், இந்தத் தீவிலிருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன” என்று அந்தத் தீவைப் பற்றி விளக்கத் தொடங்கினான் முடிநாகன். பயணத்தின் உற்சாகமும், கடற்பரப்பின் கருநீல அழகும், வெயிலே தெரியாத மங்கலான வானமும், இளையபாண்டியனின் உள்ளத்தில் களிப்பு நிறையச் செய்திருந்தன. அவனுடைய இதழ்களில் மனத்தின் களிப்பை வெளிக்காட்டுவது போல் இசை பிறந்தது. அந்த இசையால் கப்பல் ஊழியர்கள் களைப்பை எல்லாம் மறந்தனர். முடிநாகனும் அதை இரசிக்கலானான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 9உள்ளம் குழையுதடி கிளியே – 9

சரத் சந்தருக்கு மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது மிகவும் சந்தோஷம். லாபகரமான இந்த ஒப்பந்தம் கிடைக்க முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில சந்திப்புகளில் முழுமையாகக் கிடைத்துவிடும் என்று நம்பினான்.  சோர்வாக அறைக்கு வந்தவனுக்கு உணவு கூட உண்ணத் தோன்றவில்லை. படுத்து உறங்கினால்

நிலவு ஒரு பெண்ணாகி – 4நிலவு ஒரு பெண்ணாகி – 4

வணக்கம் தோழமைகளே, போன பகுதி பற்றிய உங்களது கருத்துக்களுக்கு நன்றி.  இன்றய பகுதியில் நான் முன்பே சொன்னதைப் போல நிலாப்பெண்ணின் சிறிய இன்ட்ரோ. அவளைப் பற்றிய பகுதிகளை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நான்காவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18

உனக்கென நான் 18 அதிகாலை சேவலையும் வம்புக்கு இழுக்கும் அன்பரசியோ அமைதியாக உறங்கிகொண்டிருக்க ஆதவனோ தன் கடமையென அவளை ரசிக்க வந்துவிட்டான். எல்லாம் அந்த மாத்திரைகளின் வீரியத்தின் விளைவுதான். இன்று அவளை தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாலையிலேயே எழுந்தவன் தன் அத்தையுடன்