கபாடபுரம் – 15

15. பழந்தீவுப் பயணம்

 

    • இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து வெயிலேறியிருந்தது. நீராடிக் காலைக் கடன்களை முடித்த பின்னர் இருவரும் பெரிய பாண்டியரைச் சந்திக்கச் சென்றார்கள். முடிநாகன் மட்டும் உற்சாகமின்றி இருந்தான்.

 

    • “பெரிய பாண்டியரிடம் நமது சாதனைகளாகவோ, வெற்றிகளாகவோ, கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் போகிறோம் சாரகுமாரரே! ‘சுரங்கப் பாதைகள் தொடங்குமிடத்தையும், முடியுமிடத்தையும் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம்’ என்று நான் கூறுவதை அவர் பொருட்படுத்தி மதிக்கவே மாட்டார். ஏற்கனவே உங்கள் மேல் அவருக்கு ஒரு குறை இருக்கிறது. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கலை ஆர்வமோ, முனைப்போ அளவுக்கதிகமாக இருப்பதை – மறுக்கிற மனம் அவருடையது. கலைகளில் ஆர்வம் காண்கிறவன் விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற மெல்லிய மனப்பான்மையை அடைந்து விடுகிறான். இந்த மெல்லிய மனப்பான்மை அரச தந்திரத்துக்கு இடையூறானது. பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாத சூழ்ச்சித் திறனும், நுணுக்கமும் உள்ள வலிய மனமே அரசனுக்கு வேண்டுமென்பவர் அவர். எனவே, அவரால் நம்முடைய அனுபவங்களை வெற்றிகளாக ஒப்புக் கொள்ள முடியாது என்று அஞ்சித் தயங்கியபடியே அவருக்கு முன் போக வேண்டியவர்களாயிருக்கிறோம் நாம்” என்றான் அவன்.

 

    • முடிநாகன் கூறியபடியேதான் ஆயிற்று. அவர்கள் கூறியவற்றை எல்லாம் மிக அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவில் அந்த அலட்சியத்திற்கு ஒரு முத்திரை வைப்பது போல் புன்முறுவல் பூத்தார் வெண்தேர்ச்செழிய மாமன்னர்.

 

    • “இப்படிச் சுரங்கங்களும், சூழ்ச்சிகளும் செய்து கொண்டு வாழ்கிற அவுணர்களை நம்பித் தேர்க்கோட்டத்தை ஒப்படைத்திருக்கிறீர்களே; அது என்ன நம்பிக்கையோ?” என்று சிறிது துணிவுடனேயே அவரிடம் நேருக்கு நேர் வினாவினான் இளையபாண்டியன்.

 

    • அவனுக்கு உடன் மறுமொழி கூறாமல் – அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து நோக்கினார் பெரிய பாண்டியர். பின்பு நிதானமாகவும் சுருக்கமாகவும் அவனை நோக்கிச் சில வார்த்தைகளைக் கூறலானார்.

 

    • “உன்னுடைய கேள்விக்கு விடை இங்கே இல்லை. இந்தப் புதிய கோ நகரத்தின் தென்பகுதிக் கடலுக்குள் அங்கங்கே காடுகளாகவும், மலைகளாகவும், சிதறிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழந்தீவுகளில் இருக்கிறது அந்த விடை.”

 

    • “இருக்கட்டும்! அந்தப் பழந்தீவுகள் எல்லாம் கபாடபுரக் கோ நகரத்தின் ஆணைகளுக்கு உட்பட்ட சிற்றரசுகளல்லவா? அவைகளை நம் பகைகளாகக் கருத நேர்வது எப்படி?” என்று மேலும் விடாமல் வினாவினான் சாரகுமாரன்.

 

    • “நீதி, அநீதிகளும், நியாய அநியாயங்களும் தெரியாத அந்தக் காட்டு மனிதர்களிடம் நட்பு இருப்பது போல் பாவனை செய்து நமது அரச தந்திரத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறோமே ஒழிய வேறு பொருள் அந்த உறவுக்கு இல்லை.”

 

    • “அது உறவா, பகையா, என்பதே இன்னும் விளக்கப்படவில்லையே?”

 

    • “விளக்கப்படாமலிருக்கிறவரை தான் சில நிலைமைகளுக்குப் பாதுகாப்பு அதிகம். சில வேளைகளில் அவசரப்பட்டு அவற்றை விளக்கி முடிவு கண்டுவிடுவது கூடச் சிறுபிள்ளைத் தனமாக முடிந்து விடும்! பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் நமது தேர்க்கோட்டத்தில் அடிமைகளைப் போல் பணிபுரிகிறார்கள். தென்பழந்தீவுகளிலுள்ள வானளாவிய மரங்களிலிருந்து வைரம் பாய்ந்த அடிமரப் பகுதிகளும், பிற சட்டங்களும், நமது தேர்க் கோட்டத்திற்காகக் கிடைக்கின்றன. கபாடபுரத்திற்கும், அந்நிய தேசங்களுக்கும் இடையே இராஜபாட்டையைப் போல பயன்படும் கடல்வழிகள் எல்லாம் இந்தத் தென்பழந்தீவுகளை ஊடறுத்துக் கொண்டே செல்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தப் பழந்தீவுகளின் அவுணர்களோடு நாம் கொண்டிருப்பது பகையா, உறவா என்பதை அழுத்தி உறைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல்வதுகூட அவசியம்தானா என்பதையும் அதன் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

 

    • “இப்படியே தொடரவிடுவதிலுள்ள பயன் என்னவாக இருக்குமென்று புரியவில்லை.”

 

    • “பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும், தீமைகள் எவையும் இல்லை. நமக்கு வேண்டிய மரங்களும், காய், கனி, கிழங்குகள், அபூர்வ மூலிகைகள் முதலியனவுமெல்லாம் இந்தப் பழந்தீவுகளிலிருந்து கிடைத்துவிடுகின்றன. அவர்களும் எப்போதாவது கபாடத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு போகிறார்கள். கடல் கோளுக்குப் பின் இந்தப் புதிய கோ நகரத்தையும் தேர்க்கோட்டத்தையும், நான் சமைக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களோ, அவர்களுடைய வழிமுறையினரோ தான் இப்போது இங்கு நம்மைச் சுற்றி இருக்கும் அவுணர்களாவர்.”

 

    • “காரணம் கருதியே அவர்களை நான் பொதுவாக விட்டு வைத்திருக்கிறேன். விரோதிகளாக ஏற்றுக்கொண்டு அழிக்க முயலவுமில்லை. நண்பர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டாடவுமில்லை. மனம் இடைவிடாமல் நினைப்பதற்கும், பாவிப்பதற்கும் விளைவுகள் கூட நாளடைவில் ஏற்பட்டுவிடுமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சிலரைக் காரணமின்றி பகைவர்களாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டோமென்றால் நாளடைவில் நாம் அவர்களிடமிருந்து பகைத்தன்மைக்குரிய தீவிர விளைவுகளையே எதிர்பார்க்கலாம். அவுணர்களை நான் அப்படிக் கருதாததற்கு இதுதான் காரணம். வெறும் சுரங்கங்களால் என்ன செய்து விட முடியும்? எங்காவது உயர்ந்த இடங்களில் கொள்ளையடிக்கிற முத்துக்களையும், இரத்தினங்களையும் தங்கள் தீவுகளுக்குக் கடத்திக் கொண்டு போக முடியும். தேர்களை – ஓர் அணுவளவு கூட அசைக்க முடியாது. கடல் நீரில் தேர்களை ஓட்டிக் கொண்டு போய் அவர்களுடைய தீவுகளில் நிறுத்திவிட முடியாது. ஆகவே தான் இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்தி நான் கவலைப்படவில்லை.”

 

    • “ஆனால் என்னுடைய கவனம் ஒரு பகுதியில் மட்டும் கூர்மையாக இருக்கிறது. இந்த அவுணர்களில் சிலர் நமது கோ நகரத்தின் தெய்வீகக் கபாடங்களிலுள்ள இரத்தினங்களைப் பெயர்த்துக் கொண்டு போய்விடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகக் கேள்விப்படுவதை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இங்கு குளித்தெடுக்கப்படும் முத்துக்களையும், நமது மகேந்திரமலை இரத்தினாகரங்களில் விளையும் இரத்தினங்களையும் வாரிக் கொண்டு போனால் கூட ஓரளவு அவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம். கபாடங்களை நெருங்கினால் அவர்கள் தங்களுக்கே அழிவு தேடிக் கொள்கிறார்கள் என்றாகிறது… நீ ஒரு காரியம் செய்ய வேண்டும் சாரகுமாரா! உன்னுடன் நகரணி மங்கலத்துக்காக இங்கு நம் கோ நகரத்துக்கு வந்திருக்கும் அவிநயனாரும், சிகண்டியாசிரியரும் ஏனைய சங்கப் புலவர்களும் சிறிது காலம் இங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.”

 

    • “முடிநாகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பி வரவேண்டும் நீ. அப்படிப் பயணம் புறப்படும்போது உனக்கு நினைவிருக்க வேண்டியதெல்லாம் இது ஓர் இராஜதந்திரச் சுற்றுப் பயணம் என்பதுதான். ஒவ்வொரு விநாடியும் இது உனக்கு நினைவிருக்க வேண்டும். இதற்குப் பழுது உண்டாக்கும் முறையில் முடிநாகனோ, நீயோ, உங்களை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட அதே நிலைகள் தான் இன்றும் தென்பழந்தீவுகளில் இருக்கின்றனவா அல்லது மாறுதல் ஏதேனும் உண்டா – என்பது எனக்குத் தெரிய வேண்டும். நானே நேரில் போய்ச் சுற்றியறிந்து வருவதற்கு என் முதுமை இடங்கொடாது. உன் தந்தையைப் போகச் சொல்லலாம் என்பதற்கும் வழியில்லை. கோ நகரத்து அரசியற் கடமைகளை அவன் கவனிக்க வேண்டும். ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னையும் முடிநாகனையும் பழந்தீவுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் குழந்தாய்!”

 

    • “நான் கூறுகின்றவைகளைக் கவனமாகக் கேட்டுக் கொள். கொற்கையிலும், மணலூரிலும் தங்கி இலக்கண இலக்கியங்களைக் கற்று அறிவது போல் இது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நீயோ அரசியலின் பாலபாடத்தைக் கூட இன்னும் கற்கவில்லை. அரசியல் ஞானமும், சூழ்ச்சித் திறன்களும், படிப்படியாய் அனுபவங்களின் மூலமே கிடைக்க வேண்டும். சில அனுபவங்கள் நமக்குப் பாதகமாய் முடியலாம். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். இன்னும் சில அனுபவங்கள் நமக்குச் சாதகமாய் முடியும். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். வேறு சில அனுபவங்களோ சாதகமாக முடியுமா, பாதகமாக முடியுமா என்பதை இனங்காண முடியாமல் அரைகுறையாக நிற்கும். அவற்றிலிருந்து படிப்பினைகளைத் தேடும் வேளைகளில் மட்டும் அவசரப்பட்டுவிடக் கூடாது. பழந்தீவுகளில் பயணம் செய்யும் போது தேசாந்திரிகளைப் போல் சுற்றித்திரிய வேண்டுமே ஒழியக் கபாடபுரத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு சந்தேகப்பட இடங்கொடுத்து விட்டீர்களானால் நீங்கள் அவர்களைச் சுற்றிப் பார்த்து அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் உங்களைச் சுற்றிப் பின்தொடர ஆரம்பித்து விடுவார்கள். இதில் பலவற்றை முடிநாகன் நன்றாக அறிந்திருப்பதால்தான் அவனை உன்னோடு துணைக்கு அனுப்புகிறேன்” என்றார் பெரியபாண்டியர்.

 

    • பழந்தீவுப் பயணத்துக்கு முழுமனத்தோடு இணங்கினான் சாரகுமாரன். பெற்றோர்களிடம் விடைபெற்று வருமாறு அவனை அனுப்பினார் பெரியபாண்டியர். தந்தை அநாகுல பாண்டியர், “போய் வரவேண்டியது அவசியம் தான். போய்வா! ஆனால் உன்னோடு பரிசாகக் கொடுப்பதற்கேற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு செல். பல வேளைகளில் அது உன்னைக் காப்பாற்றும்படி நேரிடலாம்” என்று குறிப்பாக ஒன்றைக் கூறினார். தாய் திலோத்தமையோ அவனுடைய அந்தப் பயணத்தையே மறுத்தாள். அவளுக்குச் சீற்றமே வந்துவிட்டது. “உன் பாட்டனாருக்கு ஏன் தான் இப்படிக் கொடுமையான எண்ணம் வந்ததோ, தெரியவில்லையே? பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீதானா அகப்பட வேண்டும். முடியாதென்று மறுத்துவிடு குழந்தாய்” – என்று சீறினாள் அவள்.

 

    “மறுப்பதற்கில்லை அம்மா! நான் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து ஒப்புக் கொண்டுவிட்டேன். பெரியபாண்டியருடைய கட்டளையை மறுக்கவேண்டுமென்று என்னால் நினைக்கவும்கூட முடியாது. எனக்கு அரசதந்திர நெறிகளையும் சூழ்ச்சித் திறனையும் கற்பிப்பதற்காக அவர் செய்யும் ஏற்பாட்டை நான் எப்படி மறுக்க முடியும்? தவறாமல் நானும் முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் போயே ஆகவேண்டும். அதனால் எனக்கும் சில அரசதந்திரப் பயன்கள் உண்டு” என்று புன்சிரிப்போடு அன்னைக்கு மறுமொழி கூறினான் அவன்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 12காயத்திரியின் ‘தேன்மொழி’ – 12

பாகம் 12 கிஷோருக்கு இப்பொழுது புதிய தலைவலி ஆரம்பித்துவிட்டது….10 நாளுக்கு முன்னர் ராஜமாணிக்கம் கிரானைட்ஸுக்கு அரசு இடத்தில் கிரானைட் தோண்டியதால் புகார் செய்யப்பட்டதன் பெயரில் அவன் சீல் வைத்தது இவ்வளவு பெரிய பிரச்சனையை கொண்டு வந்துவிட்டது…ராஜமாணிக்கம் தாதாவாக வடசென்னையில் சுற்றித்திரிபவன் பல

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 17பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 17

“சிந்தாமணி, பெண்ணல்லடி” என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன! என்ன?” என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, “பயப்படாதே! எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே,

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ Full linkசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ Full link

அன்பு வாசகர்களே ! அத்தியாயம் அத்தியாயமாகப் போடலாம் என்றால் எனக்கு நேரம் கிடைத்தால் தானே… முழுகதையும் உண்டு . வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive” dir=”file/d/1gQysvhDszrRxlEWoNovbwghytJA4dpBx/preview” query=”” width=”640″ height=”480″ /]