தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1

அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும்  அமைய வாழ்த்துக்கள்.

செம்பருத்தி – இது தான் கதையின் பெயர், நாயகியின் பெயர். நாம் தினமும் பார்க்கும் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இயல்புள்ள ஒரு பாத்திரமாகத்தான் அவளை வடிவமைத்து இருக்கிறேன். வாரம் ஒரு அத்தியாயமாவது கட்டாயம் பதிவிட எண்ணியுள்ளேன். இந்தக் கதைக்கும் கமெண்ட்ஸ் மூலம் உங்களது சப்போர்ட்டை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், முதல் அத்தியாயம் உங்கள் பார்வைக்காக

 

அத்தியாயம் – 1

 

முருகா சரணம்! கந்தா சரணம்! கடம்ப வனவாசா சரணம்!

 

‘மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை அன்று  வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் அமைய வேண்டுமென்றும், குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றும், புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றும், வேலையில் இருப்பவர்கள், இப்போது இருக்கின்ற வேலையை விட இன்னும் நல்ல வேலை கிடைக்க வேண்டும், உயர் பதவிகளும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானை நினைத்து வழிபடுவோம்!’

 

காலையில் பக்கத்து வீட்டு தொலைக்காட்சியின் வழியே விழுந்த கிருத்திகை செய்திகளை கேட்டவண்ணம் எழுந்தாள் செம்பருத்தி. 

அவளையும் அறியாமல் பாலமுருகனின் கொவ்வைச் செவ்வாய் குமிழ்சிரிப்பு மனதில் நினைவிற்கு வந்தது.

“முருகா அப்பாவும் நானும் நல்லாருக்கணும். எனக்கு நல்லபடியா கல்யாணத்தை முடிச்சு வச்சு அப்பாவின் கவலையைத் தீர். அத்தான்….” அந்த கடைசி வார்த்தையில் திடுக்கிட்டு திகைத்து விழித்தாள். 

 

  முருகா உன்னையே நம்பி இருந்த என்னை இப்படி ஏமாத்திட்டியே. நீ இருக்கியா இல்லையா? இதுவரை உன்னை வணங்கினது , உன்னையே நம்பினது எல்லாம் வீணா? கண்கள் கலங்க  காலியாய் இருந்த தந்தையின் படுக்கையையும், மூடிக் கிடந்த அவளது அத்தான் ரமேஷின் படுக்கை அறையையும் வெறித்தாள். 

 

எத்தனை கோவில், எத்தனை பிரார்த்தனைகள், எத்தனை வழிபாடுகள் அவளும் அவளது தந்தையும் சேர்ந்து செய்தது. அவை அனைத்துக்கும் ஏதாவது பலன் இருந்ததா? அவள் அளவில் இல்லை என்று அடித்துச் சொல்வாள்.

 

ஆனால் எந்த முயற்சியும் செய்யாது, மரம் வைக்காமல், தண்ணீர் ஊற்றாமல், வேண்டும் நேரத்தில் களைகளை பிடிங்கி காப்பாற்றி உரம் இடாமல், காய்க்கத் தொடங்கும் நேரத்தில் வந்து நம்மைத் தள்ளி விட்டு நம் மேல் ஏறி நின்று கனிகளைப் பறித்துக் கொண்டு இனிமேல் இந்த மரம் என்னுடையது என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் சுயநலவாதிகளை வேடிக்கை பார்க்கும் தெய்வம் என்ன தெய்வம்? 

 

அட, போனதை வந்ததை நினைத்துக் கொண்டே பொழுதை வீணடித்து விட்டோமே. இன்று வக்கீல் அவரது வீட்டிற்கு கேஸ் விஷயமாகப் பேசவேண்டும் என்று வரச்  சொன்னாரே. 

 

அவளை சீக்கிரம் கிளம்பச் சொல்லி  நினைவு படுத்தும் அப்பாவும் இப்போது இல்லை. அம்மாவோ அவளை விட்டு சென்று சில வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அடித்துப் பிடித்து எழுத்து தண்ணீரைப் பிடித்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள். 

 

வேக வேகமாய் குளியலை முடித்துவிட்டு கையில் கிடைத்த சுடிதார் ஒன்றினைப் போட்டுக் கொண்டு, பாராசூட் எண்ணையை உள்ளங்கையில் ஊற்றி, தலையில் அழுத்தி தேய்த்தாள் . முடியை வழித்து சீவிவிட்டு, உடைக்குப் பொருத்தமான காப்பர் ஸல்பேட்  நிற ரவுண்டு ஸ்டிக்கர்  பொட்டினை ஒட்டிக் கொண்டாள் . உடைக்கு மேட்சாக பொட்டு வைத்தால் தனது பட்டிக்காட்டுத்தனம் மறைந்துவிடுமோ? பட்டிக்காட்டுத்தனம் மட்டுமா? உருவத்திலேயே எத்தனையோ குறைகள் இருக்கிறதே. 

 

இன்னும் கொஞ்சம் நிறம் இருந்திருக்கலாம் அப்படி இருந்திருந்தால் ஊரார் மாநிறம் என்று சொல்லி இருப்பார்களோ? வட்ட முகம் சற்று அளவுக்கு மீறியே கன்னம் கதுப்பெல்லாம் சதை வைத்து தாம்பாளத்  தட்டினைப் போல பரந்து இருந்தது. சில மாதங்களாக பருக்கள் வேறு அதிகமாக வந்து கன்னங்களில் தடம் பதித்துச் செல்கிறது. இவற்றை எல்லாம் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. ஆனாலும் இவை எல்லாம் அணிவகுத்து ஒரே சமயத்தில் வந்ததற்கு மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் காரணம் என்கிறார் அவள் ஆலோசனை பெற்று  வந்த பெண் மருத்துவர். 

 

“செம்பருத்தி, வயதுக்கு மீறி வெயிட் போட்டிருக்க, இருபத்தி ரெண்டு வயசு பொண்ணு மாதிரியா இருக்க? டபிள் சின் எல்லாம் வச்சு உடல்வாகு முப்பது வயசைக் காட்டுது. உனக்கு பி‌சி‌ஓ‌எஸ் இருக்குது அதனாலதான் பீரியட்ஸ் தாறு மாறா வருது. இது எல்லாத்துக்கும் உன்னோட உடல் எடைதான் முக்கியமான காரணம். உடனடியா நீ எடை குறையணும் . இல்லைன்னா உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப பாதிப்பு ஏற்படும்” 

 

மருத்துவர் மாரியம்மா அவளது வீட்டின் அருகிலேயே வசிப்பவர். சிறு வயதிலிருந்து அவளுக்குப் பழக்கம். அதனால் டாக்டர் என்றெல்லாம் அழைக்க மாட்டாள். அக்கா தான். 

 

“பீரியட்ஸ் வந்து நாலு மாசமாச்சுக்கா. எனக்கே பயமா இருக்கு. முடி வேற பயங்கரமா கொட்டுது. வீடு முழுசும் என் முடிதான். தலை குளிக்கவே பயம்மா இருக்குக்கா. இப்படியே போணுச்சுன்னா சீக்கிரம் எலி வாலாட்டம் ஆயிரும். இதுக்கு ஏதாவது மருந்து தந்து குணப்படுத்துளேன்” 

 

“ஹார்மோன் மாத்திரைகள் எல்லாம்  பயங்கரமான பக்க விளைவை ஏற்படுத்தும். உன் வயசுக்கு அதெல்லாம் இல்லாம முறையான வாழ்க்கையை கடை பிடிச்சாலே எல்லாம் ஓடிடும். முதல்ல அந்த ஸ்வீட் கடை வேலையை விட்டு வேற வேலைக்குப் போ. அங்க சேர்ந்ததில் இருந்துதான் உனக்கு எடை அதிகமாச்சு”

 

அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. லாலா ஸ்வீட் கடையில்தான் அவள் வேலை பார்க்கிறாள். பள்ளி சென்று வந்த போதெல்லாம் இந்த எடை பிரச்சனை இல்லை. வயல் வெளியில் தோட்டத்துக்கு மத்தியில் இருந்த ஓட்டுவீட்டில் குடியிருந்தனர் செம்பருத்தியும் அவளது குடும்பத்தினரும். பள்ளி அவளது வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருந்தது. அரசாங்கத்தின் இலவச சைக்கிளின் உதவியால் தினமும் பள்ளிக்கு சென்று வந்தாள். அப்போதெல்லாம் உடல் சிக்கென இருக்கும். 

 

வீட்டுக்கு வந்ததும் வேலைகள் இருக்கும். அதைத் தவிர கணக்கு, அறிவியல் என்று வீட்டுப்பாடங்கள் வேறு அணிவகுத்து நிற்கும். அதனை மறுநாள் செய்து வராவிட்டால் அவ்வளவுதான் டீச்சர் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துவிடுவார். ஆறாம், ஏழாம் வகுப்பு பிள்ளைகளுக்கு முன்னர் மானக்கேடு. குனிக் குறுகி நிற்க வேண்டும். மற்ற சில பிள்ளைகளைப்  போல, வீட்டுப்பாடமும் செய்யாமல் வந்துவிட்டு, திமிர் பார்வை பார்க்கும் வித்தை என்னவோ அவளுக்கு வரவே இல்லை. 

 

விழுந்து விழுந்து வீட்டுப்பாடம் செய்துவிட்டு பின்னர் அவளும் அவளது அப்பாவும் குளத்து மீனில் குழம்பு வைத்தோ , வீட்டை சுற்றி பாத்தி போட்டு வளர்க்கும் அரைக்கீரையை கடைந்தோ சமைத்து உண்டுவிட்டு படுத்து விடுவார்கள்.  காலை இருக்கவே இருக்கிறது பழைய சோறும் பச்சை மிளகாயும். அப்பா அய்யம்மா கடையில் இட்டிலியோ, ஆப்பமோ, இடியாப்பமோ வாங்கி வருவார். அதனை அப்படியே மதிய உணவுக்கு எடுத்து சென்று விடுவாள். முடியாதபோது சத்துணவு. இப்படி சைக்கிளில் பயணம், வீட்டு வேலை என்று ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருந்த வரை அவளுக்கு உடலும் நன்றாகவே இருந்தது. அன்னையின்  இழப்பைப் பற்றி சிந்திக்க விடாமல் அவளுக்கும் அவளது தந்தைக்கும் வேலை இருந்தது. 

 

டாக்டர் அக்கா சொன்னது போல மங்கிலால் சேட்டின் மிட்டாய் கடையில் வேலைக்கு சேர்ந்ததுதான் உடல் எடை போடக்  காரணமாக இருக்குமோ? அது காரணமில்லை…  அதை சாக்காக வைத்துக்கொண்டு வழக்கமான உணவை விடுத்து காலை டிபன் இனிப்பு பூந்தி, மிச்சர் காப்பி, மதியம் உணவுடன் தொட்டுக்கொள்ள அப்போதுதான் சூடான எண்ணையில் பொறித்து எடுத்த முந்திரி பக்கோடா, சாயந்தரம் சாப்பிட சமோசா சர்க்கரை தூக்கலாகப் போட்ட டீ , இரவு வீட்டுக்கு கிளம்பும்போது மங்கிலால் பெரிய மனதுடன் இவர்கள் அனைவருக்கும் தரும் செக்கச் சிவந்த ஜிலேபி கொத்து மல்லி சட்னி இதெல்லாம்தான் காரணம். 

 

நெல்லையிலிருந்து ஒரு மணி நேர தொலைவில் இருந்தது ஆரைக்குளம். அதுதான் செம்பருத்தி வசிக்கும் கிராமம். பச்சை பசேல் என்று அழகாக கண்ணைப் பறிக்கும், எண்ணி இருபதே தெருக்களும் சந்துக்களும்  இருக்கும் இந்த ஊருக்கா இப்படி ஒரு ஹோல்சேல்  இனிப்புக் கடை? ஆரைக்குளம் வாசிகள் அத்தனை இனிப்புப் பிரியர்களா? இப்படியெல்லாம் நீங்களும் நானும்தான் யோசிப்போம். வியாபாரத்தையே சுவாசிப்பவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும்  எப்படி லாபம் பார்க்க வேண்டும் என்று தெரியாமலா இருக்கும். 

 

மங்கிலால் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளைத் தயாரிக்கத் தெரிந்த நபர்களை தனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்கள் கைவண்ணத்தில்  இனிப்புகளைத் தயாரித்து நெல்லையில் இருக்கும் முக்கியமான கடைகளுக்கு அனுப்புவார். அத்துடன் வெளிநாட்டுக்கும் அனுப்புகிறார். 

சூடாக சுகாதாரமாக தயாரித்து பேக் செய்து அரபு நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் அனுப்பி பணத்தில் கொழிக்கிறார் என்று சிலர் காதில் புகை வர சொல்வார்கள். 

இருக்கட்டும், அவர் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாரிக்கட்டும். பன்னெண்டாவது படித்ததும் வேலை போட்டுக் கொடுத்து, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்க சொல்லி ஊக்கம் கொடுத்து. பரீட்சை சமயங்களில் விடுமுறையும் கொடுத்தவர். இப்போது மாதம் இருபதாயிரம் சம்பாரிக்கிறாள் என்றால் அவரால்தானே. அதனாலேயே செம்பருத்தியைப்  பொறுத்தவரை மற்றொரு தந்தையைப் போன்றவர். 

 

“அட அவருக்கு கல்லாப்பெட்டியைப் பாக்க, ஏமாத்தாம கணக்கு வழக்கு பாக்க உன்னைவிட்டா வேற நம்பிக்கையான ஆள் கிடைக்குமா? சும்மாவா பரீட்சைக்கு லீவு தந்து அனுப்புறாரு. நீயும் லீவு எடுத்த நாளுக்கு ஈடுகட்ட ஞாயிறு கூட வேலைக்கு வந்துடுறியே. வியாபாரிக்கு எல்லாமே வியாபாரம்தான். இப்படி பாக்குறவங்களை எல்லாம் நம்புறதை நிறுத்து. உன்னை சொல்லி என்ன பிரயோஜனம் உன்னையும் உங்கப்பாவையும் இளிச்ச வாயாவே படைச்ச அந்த சாஸ்தாவை சொல்லணும்” என்பாள் உடன் பணிபுரியும் ஜலப்பிரியா ஆயாசத்துடன். 

 

மங்கிலாலுக்கு ஒரு மணிக்கு ஒருதரம் ஏதாவது கொறிக்க வேண்டும். அங்கு வேலை பார்க்கும் இவர்களையும் சாப்பிட சொல்லும் பெரிய மனது எத்தனை முதலாளிகளுக்கு வரும்? தெரியவில்லை. ஆனால் அவளை விட்டுவிட்டு அவர் சாப்பிட்டதே இல்லை. அதற்கு அவளது அப்பாவும் அவரும் நண்பர்கள் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். 

 

“பேட்டி, சேது மசாலா கடலை போட்டிருக்கான் போலிருக்கு. சூடு ஆறுறதுக்குள்ள நம்ம ரெண்டு பேருக்கும் தட்டில் போட்டு எடுத்துட்டு வா. சாப்பிட்டுக்கிட்டே கணக்கு பாக்கலாம்”

 

“ஜலப்ரியாவுக்கு கொஞ்சம் சுவீட் கொடுங்கப்பா. நம்ம கடை இனிப்பை சாப்பிட்டாவது வெயிட் போடட்டும். என்ன பிரியா, உன் ஊட்டுக்காரன் சமச்சுப் போட்டாத்தான் உனக்கு வெயிட் போடுமா?” என்று செம்பருத்தியின் தோழியை வேறு வம்புக்கு இழுப்பார்.  

 

ஜலாப்ரியாவும் சளைக்காமல் “என் கைல மட்டும் ஒரு ரெண்டு லட்சத்தை எண்ணி வச்சிங்கன்னா அடுத்தமாசமே என் வீட்டுக்காரன் கையால சாப்பிட்டு பாத்து ட்ரை பண்ணிடுறேன்” என்று பதில் பேசுவாள். 

 

“நீ இந்த வாய் அடிக்கிறியே. உன் சாமர்த்தியத்தை எல்லாம் உன் பிரெண்டு செம்பருத்திக்கு கத்துக் கொடுத்தா என்ன?”

 

“நான் என்னதான் நியாயத்தை எடுத்து சொன்னாலும். வேலை நேரம் முடிஞ்சதும் இவளோட அத்தை வந்து வேப்பிலை அடிச்சு மனசை மாத்திருதே!” என்று பெருமூச்சு விடுவாள் ஜலப்பிரியா. 

 

இதெல்லாம் செம்பருத்தியின் வாழ்வின் ஆறுதலான பக்கங்கள். இன்னொரு பக்கம் இருக்கிறது. அது துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் நிரம்பியது. 

 

“நடந்ததை மறந்துடு. இல்லைன்னா ஸ்ட்ரெஸ் கூடும். நீ ஓவரா சாப்பிடுறதுக்கு ஸ்ட்ரெஸ் ஒரு முக்கியமான காரணம்” மருத்துவர் மாரியம்மா. 

 

“மறக்க முடியலக்கா” வருத்தப்பட்டவளிடம். 

 

“தெரியும்டி, ஆனால் மறந்தாத்தான் உனக்கு நல்லது. இங்கிருந்தால் உன் மனசு நினைச்சு நினைச்சு உருக்குலைஞ்சுடும். பேசாம இந்த இடத்தை விட்டு நகர்ந்துடு. கண்ணில் காணாதது கருத்திலும் நிலைக்காதுன்னு சொல்லிருக்காங்க”

 

“ யாரு?” 

 

“ஒரு பெரிய மோட்டிவேஷனல் நாவல் எழுத்தாளர். ரமணிச்சந்திரன்னு பேரு”

 

“ஹே எனக்கும் அவங்களைத் தெரியுமே… கதைல சொல்லுவாங்களே. படிச்சிருக்கேன்”

 

“ஆமாம் உங்க சேட்டுகிட்டயே கேட்டு திருநெல்வேலில வேலை கிடைச்சா கொஞ்சநாள் போயிட்டு வா. ஆனால் இந்த சுவீட் கடையை விட்டு தள்ளி இருக்கிறது உனக்கு நல்லது. நீ திம்பண்டத்துக்கு அடிக்ட் ஆயிட்டே. அதை கண்ணில் பார்த்தா  உன்னால  சாப்பிடாம இருக்க முடியாது”

 

“எனக்காக இல்லை உங்களுக்காக இல்லை நம்ம ஆர்சி மேம் சொன்னதால சுவீட் கடையை விட்டுட்டு வேற வேலையைத் தேடுறேன். ஏன்னா, கண்ணில் பார்க்காதது கருத்தில் நிலைக்காது” 

 

இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

No Comments
Krishnapriya Rajesh Narayan

Super… ஒரு இயல்பான தொடக்கம். கனமான பதிவு. அருமை.

Happy pongal…

Sharadakriahnan

Mankilal sweet shopudan nalla arambam. Anal sembacirku inda chinna vayadhil en obesity. Swwrt mattum karanam illai.appa amma illada thanimaibyen

Leave a Reply to Sharadakriahnan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page