ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி காதல் வரம் – 5 பகுதி உங்களுக்காக
[scribd id=275022643 key=key-FAEcKzGTXYeZ9t59obvq mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்யாயம் 5
கைலாஷின் மனதில் அவனுக்கும் மீனாட்சிக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் ஒரு படம் போல ஓடி முடிந்தன. குழந்தை பிறந்தது, கைக்குழந்தைகளை பாரத்தை இவன் மேல் சுமத்திவிட்டு கங்கா உலகை விட்டு மறைந்தது. அதைத் தொடர்ந்து அவன் பட்ட துன்பங்கள். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியாவது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வற்புறுத்தியது.
தங்கையின் நாத்தனார் நிரஞ்சனா விவாகரத்து பெற்று வாழ்பவள். அவளையே பேசி முடித்தது என்று சம்பவங்கள் மனதில் மின்னல் வேகத்தில் வந்து போயின. அவனே இப்போதுதான் ஒரு வாறு மனதை இந்தத் இரண்டாவது மணத்திற்கு தேற்றி இருக்கிறான். மீனா வேறு வந்து புது குழப்பத்தை ஏற்படுத்துகிறாள் என்று எண்ணியவனுக்கு இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
கங்காவுடன் திருமணம் முடிந்த கையோடு கைலாஷுக்கு நாய்கள் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் நாய்களை எங்கோ விற்று விட்டனர் அவள் வீட்டினர். அன்று சாயந்தரம் வீட்டுக்கு சோர்வாய் வந்தாள் மீனா. கங்கா அவள் உணவருந்தவில்லை என்று தெரிந்து திட்டியபடியே உணவு பரிமாறினாள்.
“இப்ப லால்குடிக்கு போய் நாயைப் பாத்துட்டு வரலைன்னு யாருடி அழுதா.. “
“போக்கா… இவ்வளவு நாள் நம்ம வீட்டில் நாய்களை கண்ணும் கருத்துமா பார்த்துட்டோம். புதுசா வாங்கிருக்கவங்க எப்படி கவனிச்சுப்பாங்களோன்னு கவலையா இருந்தது. அதுதான் அந்தப் பக்கம் போயி அந்த வீட்டை பார்த்துட்டு வந்தேன்”
“நல்லா கவனிக்கலைன்னா என்ன செஞ்சிருப்ப”
“நம்ம ஜானியையும், ஜிம்மியையும் கடத்திட்டு வந்திருப்பேன்” என்று தீவிரத்துடன் சொன்னாள்.
“கடத்திட்டு வந்து”
“வீட்டில் வச்சு பாத்துப்பேன். நான் சாப்பிடற சாப்பாட்டில் ரெண்டு கவளம் கூடவா அதுங்களுக்குப் போட முடியாது” என்று தீவிரத்துடன் சொன்னதை நினைத்தான்.
அதே மனநிலையில்தான் இன்னமும் இருக்கிறாள். தன் அக்கா கங்காவின் குழந்தைகளை நிரஞ்சனா சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால்… என்ற கவலைதான் இந்த அளவுக்கு மீனாவை முட்டாள்தனமாய் சிந்திக்க வைத்திருக்கிறது.
இப்படி முடிவு செய்தபின் சற்று தெளிவு வந்தது. இவளை சீக்கிரம் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும். ஏற்க்கனவே உள்ளூர் ஆட்கள் ரெண்டு மூன்று பேர் அவர்கள் இருவரும் தனியே நின்று பேசுவதை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றார்கள். அதில் ஒரு பெண்மணி நிரஞ்சனாவின் சொந்தக்காரி வேறு.
“மீனா உன் கவலை பயம் எல்லாம் அர்த்தம் இல்லாதது. சூர்யாவும் சந்திராவும் என் குழந்தைகள் தானே. அவங்களை நான் நல்லா பாத்துக்க மாட்டேனா. நிரஞ்சனாவும் ரொம்ப நல்ல பெண். அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கா. இந்தக் கல்யாணம் எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடு மாதிரி. புரிஞ்சுக்கோ”
“அப்ப நிரஞ்சனாவும் அவளோட பாதுகாப்புக்காகவும், அவ குழந்தையோட வளமான எதிர்காலத்துக்காகவும்தான் உங்களைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்கா” அவளது கேள்வி கைலாஷையே சற்று குழம்ப வைத்தது
“சொல்லுங்க மாமா”
“இருக்கலாம்.. அது இயற்கைதானே… “
“அவளோட லைப்பை பொறுத்தவரை அவளும் அவ குழந்தையும் முதலில், நீங்க ரெண்டாவது, நம்ம வீட்டு குழந்தைங்க மூணாவது சரியா… “
“என்ன சொல்ல வர்ற?” அவன் பேச்சில் உஷ்ணம்
“மாமா அவ கடைசி இடம்தான் குழந்தைகளுக்குத் தருவா… ஆனால் எனக்கோ அவங்கதான் வாழ்க்கை. அவளைக் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிற நீங்க ஏன் என்னை வெறுத்து ஒதுக்கிறிங்க”
கைலாஷின் பொறுமை காற்றில் பறந்தது. “கல்யாணம் கல்யாணம்னு பேசினேன்னா அறைஞ்சு பல்லைக் கழட்டிடுவேன். என் கல்யாணத்தப்ப ஸ்கூல் முடிச்சுட்டு சுத்திட்டு இருந்த… உன்னை போய் நான் கல்யாணம் செய்துக்க… ஓ காட்… என்னால கற்பனை செய்து பார்க்கக் கூட முடியல….”
“பொய் சொல்றிங்க மாமா… முதன் முதலில் அக்கான்னு நினைச்சுத் தானே என்னைப் பார்த்திங்க. அப்ப நான் கங்காவா இருந்திருந்தேன்னா என்னைத் தானே கல்யாணம் செய்திருப்பிங்க”
அவளது கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை “மீனா… உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. ஆனால் என் மேல இல்லை கங்கா மேல. அதனால்தான் அக்கா குழந்தைங்க கஷ்டப்படக் கூடாதுன்னு இப்படி மாமாவைக் கல்யாணம் செய்துக்குறேன்னு விபரீதமா பேசுற”
“இருக்கலாம் மாமா… அக்கா குழந்தைகளை பெத்துக்க எவ்வளவு கஷ்டப்பட்டான்னு எனக்குத்தான் தெரியும். எவ்வளவு மருந்து மாத்திரை, எத்தனை கோவில், எத்தனை விரதம்னு நீங்க நினைச்சுக் கூடப் பாக்க முடியாது. கங்காக்கா கஷ்டப்பட்டுப் பெத்த குழந்தைகளைக் காப்பாத்துற பொறுப்பு எனக்கு இருக்கு. நீங்க நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுத்தான் ஆகணும்”
கைலாஷுக்கு கோபத்தில் முகம் சிவந்து விட்டது “என்னடி… உனக்குத்தான் பேசத் தெரியும்னு பேசுறியா… உன்னோட இந்த பேராசைக்கு நான் ஆளில்லை. வேலையைப் பார்த்துட்டு போடி”
“இப்படியெல்லாம் பேசி என்னைக் கெட்டவளாகாதிங்க மாமா… கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுங்க”
“இப்ப நல்லவளா இருக்குறதா நினைப்பா… உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ”
“மாமா மாமா” என்று அவள் கத்தக் கத்தக் காதில் வாங்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டில் நிரஞ்சனாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
“பக்கத்தில் சொந்தக்காரங்களுக்குப் பத்திரிகை தர வந்தோம். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்”னு என்று இழுத்தார் நிரஞ்சனாவின் அப்பா. அவர் தங்கையின் மாமனார் வேறு. அதனால் முன்னரே அவர்கள் குடும்பம் பழக்கம்.
“வாங்க மாமா… எப்ப வந்திங்க…”
“வந்து ரெண்டு மணி நேரமாச்சு. பிரெண்ட் கூட கோவிலுக்குப் போயிருக்குறதா சம்மந்திம்மா சொன்னாங்க. எங்க சொந்தக்காரங்க கூட யாரோ ஒரு பொண்ணு கூட ஆத்தங்கரையில் பேசிட்டு இருக்குறதா சொன்னாங்க. கூடப் படிச்சவங்களா இருக்கும்னு சொன்னேன்” அதில் குற்றம் சாட்டும் தொனி.
“மீனாட்சி வந்திருந்தா. அவ கூடத்தான் பேசிட்டு இருந்தேன்”
“மீனாட்சியா… இறந்து போன உங்க சம்சாரத்தோட தங்கைதானே… அவங்க வீட்டு கூடப் போக்குவரத்து இல்லைன்னு சொன்னாங்களே…. “ கேள்விப் பார்வை பார்த்தார் சுலோச்சனாவை. மறைத்துவிட்டாயே என்ற எரிச்சல் அதில் மறைந்திருந்தது. பேச முடியாமல் திணறினார் அவர்.
“கல்யாணத்தைப் பத்தி விசாரிச்சுட்டுப் போக வந்திருந்தா” என்றான் கைலாஷ் அவசரமாக
“எதுவா இருந்தாலும் அவங்க கூட உறவு வச்சுக்கிறது நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. பார்த்து நடந்துக்கோங்க” என்றார்.
வெளியே யாரோ காலிங்பெல் அடித்தார்கள். போலிஸ்காரர் ஒருவர் நின்றிருந்தார்.
“இங்க கைலாஷ்னுறது யாரு”
“நான்தான்”
“உங்களைக் கையோட கூட்டிட்டு வர சொல்லி சப்இன்ஸ்பெக்டரம்மா உத்தரவு”
“எதுக்கு சார்”
“எதுக்கா… நீ காதலிச்சு ஏமாத்தினியே அந்தப் பொண்ணு விஷத்தைக் குடிச்சுட்டா…. பாத்தா படிச்சவனாட்டம் இருக்க. உனக்கெல்லாம் ஏன்யா இந்த புத்தி?”
அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.



selvipandiyan
meenakshi visham kudichuttalaa??? ippo enna aakum??kailash manam maarumaa???