ஹாய் பிரெண்ட்ஸ்,
காதல் வரம் யாசித்தேன் -3 பகுதி உங்களுக்காக
[scribd id=274858503 key=key-Ggqn9dtctcEg8dgTWKvd mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 3
கங்கா யாரிடமும் நெருங்கிப் பழக மாட்டாள். அவளது படிப்புண்டு வீடுண்டு என்றிருப்பாள். தோழிகளுடன் விளையாட்டு வெளியே சுற்றுவது என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை இல்லை என்றே சொல்லலாம். அவளுக்கு சுருக்கென கோபம் வருவதால் மற்ற வகுப்புத் தோழிகள் சற்று தள்ளியே நிற்பார்கள். வெளி உலக அனுபவம் என்றால் அவளும் அவள் தாய் கலைவாணியும் திருச்சிக்கு சென்று வருவார்கள். சில சமயம் அவர்களுடன் மீனாட்சியும் செல்வாள். அவ்வளவுதான் அவளது உலக அனுபவம்.
கங்காவுக்கு முற்றிலும் மாறாக வளர்ந்தான் அவள் கணவன். கைலாஷ் என்றால் கலகலப்பு என்றே பொருள். ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அவனது அக்கா தங்கை இருவரையும் வம்பிழுத்து அழ வைப்பது இன்னொரு பொழுதுபோக்கு. அந்த நடுத்தரக் குடும்பத்தில் நன்றாகப் படித்தான். பொறியியல் முடித்துவிட்டு சில நிறுவனங்களில் வேலை செய்தவன் அந்தத் தகுதியின் அடிப்படையில் உலகப் புகழ் வாய்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தான். அந்நிறுவனத்தின் கிளையில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கான்கார்ட் எனும் ஊரில் பணிபுரிந்து வருகிறான். குடும்பத்தின் தலைமகனாய் தனது அக்கா தங்கைகளின் திருமணத்தை சிறப்பாய் செய்ய பொருளுதவி செய்தவன். பெற்றோருக்கும் அவர்கள் சொந்த ஊரிலியே வீடு கட்டித் தந்தான்.
ஜாதகப் பொருத்தம் பார்த்து குடும்பத்தினர் கலந்து பேசி கங்காவுக்குக் கைலாஷை திருமணம் பேசி முடித்தார்கள். கைலாஷ் குடும்பம் பெண் பார்க்க வந்த அன்று அவர்கள் குடும்பத்தை வரவேற்றது, வேண்டும் என்று கேட்டதை எடுத்துத் தந்தது அனைத்தும் மீனாட்சியே. கைலாஷோ கங்காவின் புகைப்படம் பார்த்தே திருமணத்துக்கு சம்மதம் சொன்னான்.
“கங்கா குட்டையா, நெட்டையா…. கருப்பா சிவப்பா… எதுவும் தெரிய வேண்டாமா… போட்டோ பார்த்தே ஓகே சொல்லிட்ட. நீ பொண்ணை பாக்க வேண்டாமாடா” என்று அவன் தமக்கை கோகிலா வியப்பாய் கேட்டாள்.
“உன்னைப் பொண்ணு பாக்க வந்தப்ப என்ன பண்ணோம். ஒரு இன்ச்சுக்கு பௌண்டேஷன் போட்டு, கண்ணு புருவம் எல்லாம் வரைஞ்சு முகத்தையே மாத்தில்ல மாமா தலைல கட்டினோம். உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு மாமா என்னை தனியா கூட்டிட்டு போய் ‘பொண்ணு பாக்க வந்தப்ப ஒருத்தியை காட்டினிங்களே யாருடா அதுன்னு கேட்டு எப்படி கதறினாறு தெரியுமா?’”
ஏற்கனவே உடன் பிறந்தவர்கள் கல்யாணத்துக்கு வாங்கிய கடனே தலைக்கு மேல் இருக்கிறது. சொந்த ஊரில் வீடு வாங்கியதன் கடன் வேறு பங்குக்கு சேர்ந்து விட்டது. இதை எல்லாம் சொன்னால் பிறந்த வீட்டுக் கவலையில் பெண்கள் மனது வாடும். நிதி நிலைமையைப் பற்றி சொல்லாமல் பேசியே சமாளித்தான்.
திருமணத்துக்கு பத்து நாட்கள் முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்தவன் யாருக்கும் தெரியாமல் பெரம்பலூரிலிருக்கும் கங்காவைப் பார்க்கக் கிளம்பினான். கங்கா திருச்சிக்கு கடைவீதிக்கு சென்றிருக்க, மீனாட்சிதான் வீட்டில் இருந்தாள்.
அழைப்பு மணியை அடித்தவுடன் ராஜபாளையம் நாய்கள் இரண்டு பாய்ந்து வந்தது. இந்த மாதிரியான வரவேற்பை எதிர்பார்க்காத கைலாஷ் தகவல் தெரிவித்து விட்டே வந்திருக்கலாமே என்று தன்னைத் தானே நொந்த சமயம். சிறிய அழகான நிலவாய் ஒரு முகம் ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தது. தாமரை மலர் விரிவதைப் போல கண்கள் விரிந்து ஆச்சிரியத்தைக் காட்டின. சில நொடிகளில் அந்த மங்கை வெளியே வந்தாள்.
“வாங்க வாங்க. நீங்க வரேன்னு சொல்லவே இல்லையே… வீட்டில் எல்லாரும் திருச்சிக்கு போயிட்டாங்களே” என்றபடி வந்தவளை நன்றாகப் பார்த்தான்.
வீட்டில் அணியும் சாதாரண சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். பச்சை வண்ண அந்த உடையை அவள் அணிந்திருந்த விதமே கண்ணியமாய் இருந்தது. போட்டோவில் இருந்ததுக்கும் நேரில் பார்பதற்கும் பல வித்யாசங்கள் தெரிந்தன. முகம் ஓரளவு புகைப்படத்தில் இருந்ததைப் போலவே இருந்தாலும் நேரில் சற்று சிறிய பெண்ணாகவே தெரிந்தாள். எஜமானியை எடை போடுவது பிடிக்காமலோ என்னவோ நாய்கள் வேறு குலைத்தன.
“நாயைக் கட்டிப் போட்டின்னாதான் உள்ளே வர முடியும். இல்லைன்னா வாசலோட கிளம்பிடுவேன்”
“சாரி..” என்றபடி இரண்டு நாய்களையும் இழுத்து சென்று கட்டிப் போட்டாள். பின்னர் கதவைத் திறந்து அவனை உள்ளே அழைத்து சென்றாள்.
“ஊரிலிருந்து வந்துட்டிங்கன்னு அத்தை ரெண்டு நாள் முன்னே போன்ல சொன்னாங்க. ஆனால் இப்படி திடீருன்னு வீட்டுக்கு வருவிங்கன்னு தெரியாது. உள்ள வாங்க” என்று கைலாஷை வரவேற்பறையில் அமர வைத்தாள்.
வரவேற்பறையின் ஒவ்வொரு இன்ச்சிலும் பணம் தெரிந்தது. கைலாஷ் வீட்டில் சித்தி, அத்தை என்று இரண்டு டஜன் விருந்தினர்கள் குவிந்திருந்தனர். இங்கு வீட்டில் யாரும் இருப்பதைப் போலவே தெரியவில்லை.
“வீட்டில் நீ மட்டும் தனியாவா இருக்க”
“ம்ம்… டிரஸ் வாங்க, பத்திரிகை வைக்கன்னு எல்லாரும் வெளிய போயிட்டாங்க”
“ஆளுங்க யாராவது இருப்பாங்கன்னு நினைச்சேன்”
“எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இதே ஊர்தான்.கல்யாணத்துக்கு முதல்நாள்தான் வருவாங்க… உக்கார்ந்திருங்க… ஒரு நிமிஷத்தில் வந்துடுறேன்”
தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு மறைந்தாள். உடைமாற்றி வருவாளாயிருக்கும் என்று நினைத்தான். அவள் முகத்தில் அவனைப் பார்த்ததும் ஏதாவது உணர்ச்சிகள் தெரியுமா என்று நினைத்தான். ஆனால் சிறு வியப்புக்குப் பின் இயல்பாக நடந்தது ஏமாற்றமாய் இருந்தாலும் அவள் தன்னைப் போலவே ப்ராக்டிகலாய் இருப்பது கைலாஷுக்குப் பிடித்திருந்தது. சிறிய தட்டில் சிற்றுண்டியும், காபியும் எடுத்து வந்தாள்.
“இந்தாங்க ஸ்வீட், காரம், காப்பி. நியாயமா பொண்ணு பாக்க வரும்போது தந்திருக்கணும். கொஞ்சம் லேட்டா தரேன்” என்று புன்னகையுடன் பரிமாறினாள்.
“முதலில் ஸ்வீட் தான் சாப்பிடணும்” என்று அவள் சொன்னதைத் தட்ட முடியாமல் மைசூர்பாகை எடுத்துக் கொண்டான்.
“இதென்ன பஜ்ஜி, சொஜ்ஜி தராம மைசூர்பாகும், முறுக்கும் தர. அதெல்லாம் இன்னொரு நாள் செஞ்சு தர்றியா”
“அதெல்லாம் பொண்ணு பாக்க வரவங்களுக்குத்தான். லேட் கம்மர்ஸ்க்கு மைசூர்பாகுதான்”
போனில் பேசும்போது தயங்கித் தயங்கி பேசியவளா இந்தப் பேச்சுப் பேசுகிறாள். “போனில் என்னமோ பேசவே கூலி கேட்ட. இப்ப இந்தப் போடு போடுற” என்றவன் அவளது திகைத்த பார்வையைக் காணாமல் “உங்க அம்மா அப்பா இல்லாததும் நல்லதுதான். ஊரிலிருந்து கொஞ்சம் கிப்ட் வாங்கிட்டு வந்தேன். இந்தா..” என்று தந்தான்.
“மாமா…. “ என்று திகைப்பாய் சொல்லிவிட்டு பின்னர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். அவளைப் புரியாமல் பார்த்தான் கைலாஷ்.
“மாமா… நான் மீனாட்சி. கங்கா அக்கா பெரியம்மா பெரியப்பா கூட திருச்சிக்குப் போயிருக்கா…. நல்ல வேடிக்கை… அடுத்த வாரம் கல்யாணம்… ஆனா கட்டிக்க போற பொண்ணைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியல.” என்றதும் டன் டன்னாய் அசடு கைலாஷ் முகத்தில்.
“சாரி சாரி… போட்டோல பாத்ததால சட்டுன்னு அடையாளம் தெரியல. முகஜாடை கூட உங்களுக்கு ஒரே மாதிரிதான் இருக்கு“
“பரவால்ல மாமா…. அக்கா போட்டோ மட்டும்தானே உங்களுக்கு அனுப்பிருப்பாங்க. என்னைப் பத்தி சொல்லிருக்க வாய்ப்பில்லை. அதுதான் குழம்பிட்டிங்க போலிருக்கு. கங்கா அக்கா என் பெரியப்பா பொண்ணு. நாங்க பக்கத்து தெருவில் தான் குடியிருக்கோம். நான் எப்போதும் அக்கா கூடத்தான் இருப்பேன். இப்ப ப்ளஸ்டூ முடிச்சுட்டு லீவ்ல இருக்கேன்” சுருக்கமாய் சொன்னாள்.
“வந்து… “ தயக்கமாய் இழுத்தான்.
“நீங்க என்னை அக்கான்னு தப்பாப் புரிஞ்சுட்டு பேசினதை யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். ஓகேயா” என்று அவன் மனதைப் படித்தவள் போல் சொன்னாள்.
“டபுள் ஒகே” புன்னகைத்தான் கைலாஷ்.
“ஆனால் எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குன்னு எங்க பெரியம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அது மாதிரி, இதுக்கும் ஒரு விலை கேட்பேன்”
“என்னது அது… “
“அதை எப்படி இப்பயே சொல்ல முடியும். சினிமா கூட்டிட்டு போக சொல்லலாம். இல்லை டிரஸ் கேட்கலாம். இல்லை ஸ்கூட்டி வாங்கித் தர சொல்லலாம். எவ்வளவோ இருக்கே. யோசிச்சு சொல்லுறேன்”. அவள் சொன்ன விதத்திலேயே கைலாஷின் முகத்தில் புன்னகை அரும்பியது.
கைலாஷ் நடந்ததைப் பற்றி சொல்லாமல் தாயிடம் மீனாட்சியைப் பற்றிய விவரத்தை மட்டும் கேட்டான். “ஓ.. அவளா.. அவங்க அப்பா சரியான தண்ணி வண்டியாம். சொத்தை தொலைச்சுட்டு இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்படுராங்கலாம். இந்த பொண்ணை இவங்கதான் படிக்க வைக்கிறாங்க போலிருக்கு. அதுவும் இவங்க வீட்டில் வேலை எல்லாம் செஞ்சுட்டு உதவியா இருக்கு” என்பதுடன் முடித்து விட்டனர்.
மேலோட்டமாய் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பதைப் போலிருந்தாலும். மீனாட்சியின் சிரிப்புக்கும் பேச்சுக்கும் உள்ளே மெல்லிய சோகம் மறந்திருப்பதைப் போல. அவள் வருத்தத்தை மறைக்கவே அவள் குதூகலமாய் இருப்பதைப் போல வேஷம் போடுவதாகவே பல நேரங்களில் கைலாஷுக்குப் படும்.
கைலாஷுக்கும் கங்காவுக்கும் நல்லபடியாகத் திருமணம் நடந்தது. தம்பதியினர் இருவரும் மிக மகிழ்ச்சியாகவே இருந்தனர். அவனுடன் பழகி கங்காவின் சுபாவம் கூட ஓரளவு கலகலப்பாக மாறிவிட்டது. எல்லாம் பிடித்திருந்தாலும் கங்காவிடம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று நினைத்தால் தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை அம்மா வீட்டுக்கு சென்று வருவாள். சென்றால் அங்கு ஒரு ஆறு மாதம் தங்கிவிடுவாள். அப்பாவிடம் சொல்லி டிக்கெட் புக் செய்துவிட்டுத் தன்னிடம் தகவல் சொல்லும் மனைவியை என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பான் கைலாஷ். ஒரே பெண்ணாய் வளர்ந்ததால் இந்த ஒட்டுதல். குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று தேற்றிக் கொண்டான். அதிலும் சிக்கல். திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் கங்கா கர்ப்பம் தரிகாதது அவள் மனதில் பெரிய பிரச்சனையாய் உருவெடுத்தது.




arthyravi
Hi Tamil, Read all three updates now. As usual, I’ve the feeling ‘Wow! This Tamil takes each title entirely to a different level. Each characterization of your stories stand unique. Kailash, Ganga, Meenatchi… Each introduction is very nice. Expecting Kailash, Meena pair to bring in more charm n a bit fun to this story.
I read your athai maganey athaaney for second time recently. Manohar n Amirtha… Nice to read after a couple years again.
Will review it in my fb soon.