ஹாய் பிரெண்ட்ஸ்.
நீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள்
[scribd id=274856616 key=key-v5RqmFcimVn2U1Hmw6cc mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 1
“தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
கண்மூன்றுடைய கனலே போற்றி
புண்ணிய கங்கைப் புனலே போற்றி”
பாடியவண்ணம் அர்ச்சகர் அருட்பெரும்சோதியாய் நம்மை ஆட்கொள்ளும் தெய்வத்துக்குத் தீபாராதனை காட்டினார்.
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
மனதாரப் வேண்டியபடி கண்டங்கருத்தானை, கபாலக்கூத்தனை வணங்கி, வெண்சங்காய் சுடர்விட்ட நீரெடுத்து பட்டையாய் இட்டுக் கொண்டான் கைலாஷ்.
“நல்லாயிருக்கிங்களா தம்பி. ஊரிலே இருந்து எப்ப வந்திங்க. இப்ப ரொம்பக் குளிராமே.” ஆரத்தித் தட்டைக் காட்டியபடி ஷேம லாபங்களை விசாரித்தார் அர்ச்சகர்.
பதிலளித்துவிட்டு நகர்ந்தான் கைலாஷ்.
“யாரது” என்று கேள்வி கேட்டவரிடம்
“நம்ம கைலாசத்தோட பேரன் வோய். இவன் பேரும் கைலாஷ்தான். இவங்க அப்பா தாமோதரன் மெட்ராஸ் எக்ஸ்போர்ட் கம்பெனில சூப்பரவைசரா வேலைபார்த்தார். ரிடையர்ட் ஆனவுடனே குடும்பத்தோட இங்க வந்து செட்டில் ஆயிட்டார்”
“காவிரிநகர்ல புதுசா வீடு கட்டினாங்களே”
“அவரேதான்….. இவன் அமெரிக்கால இருக்கான்”
“வெயிலே படாத இருந்திருப்பான். அதுதான் இந்தப் பளபளப்பு”
மக்களது பொறாமைப் பார்வையைக் கண்டு கொள்ளாத கைலாஷ் தன் வீட்டுக்குக் கிளம்பினான்.
வீட்டினுள் நுழையக் கூட இல்லை. அதற்குள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவனது தாய் சுலோச்சனா எதிர்கொண்டாள்
“உன் மாமியார் வீட்டு சொந்தம் ஒண்ணு உன்னைப் பார்க்க வந்திருக்கு. திறந்த வீட்டில் ஏதோ நுழைஞ்ச மாதிரி உன் ரூமுக்குள் நுழைஞ்சாச்சு….. விருந்தாளிகள் வர நேரம். சட்டு புட்டுன்னு பேசி அனுப்புற வழியைப் பாரு”
யாராக இருக்கும் என்ற கேள்விக்குறியோடு அறையை நெருங்கினான். அங்கு குனிந்து குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் மீனாக்ஷி. அவன் மனைவி கங்காவின் ஒன்று விட்டத்தங்கை.
“ஹய்யோ ரெண்டு பேரும் எவ்வளவு அழகா இருக்கிங்க! இந்தப் பஞ்சு மெத்தையை விட சாப்ட்டா கையும் காலும்”
“மூக்கைப் பாரு, நீளமா ஸ்கேல் வச்சுக் கோடு போட்டாப்புல…. உங்களுக்கு அப்படியே உங்கப்பா மூக்குத்தான்”
“நீங்க கொட்டாவி விடுறது கூட அழகாயிருக்கு செல்லூஸ்”
“நீ என்னடா உங்கப்பா மாதிரியே பாக்குற”
சாக்லெட் பாக்டரியில் அவிழ்த்து விடப்பட்ட வாண்டு எதை எடுப்பது, எதை விடுப்பது என்று முடிவெடுக்க முடியாமல் சந்தோஷத்தில் திணறுவதைப் போல, இரண்டு குழந்தைகளின் தொட்டிலுக்கும் மாறி மாறி சென்று கொஞ்சினாள்.
“மீனு… ” என்று மெதுவாய் அழைத்தான் கைலாஷ்.
கைலாஷைப் பார்த்ததும் பிரியமாய் “மாமா…. எப்படி இருக்கிங்க? என்ன மாமா இப்படி ஆயிட்டிங்க”
“என்னாயிட்டேன்”
“தலைல பாருங்க, வெள்ளை முடி வந்துருச்சு”
“நான் என்ன வயசே ஏறாத மார்க்கண்டேயனா?” கிண்டலாய் சிரித்தான்.
மீனாவின் பார்வை அவனை விட்டு விலகி எப்பொழுதோ குழந்தைகளின் பால் மீண்டும் சென்றிருந்தது.
“ரெண்டு பேரும் ரொம்ப அழகு மாமா…. உங்களை மாதிரியே இருக்காங்க”
“வந்து ரொம்ப நேரமாச்சா”
“ரெண்டு தடவை வந்து பார்த்தேன் மாமா. உங்கம்மா நீங்க வந்தவுடனே வீட்டுக்கு வான்னு சொல்லிட்டாங்க. மூணாவது தடவை உங்கப்பா இருந்தாரா… ஏமாத்திட்டு உள்ள நுழைஞ்சுட்டேன்” தனது சாதனையைச் சொல்லிச் சிரித்தாள்.
சற்றுநேரம் அவளை குழந்தைகளிடம் விளையாட விட்டுவிட்டான். சுலோச்சனா தண்ணீர் கூட மீனாவுக்குத் தந்திருக்க மாட்டாள் என்பதைக் கண்டுகொண்டு அவள் பருக டீ தயாரித்தான்.
“இப்ப எதுக்கு டீ தந்து உபசரிக்கிற. அவளைத் துரத்து.. .” கடின முகம் காட்டிய தாயாரிடம்
“அவ கையால எத்தனையோ தடவை சாப்பிட்டிருக்கேன். ராத்திரி ஒரு மணிக்கு வீட்டுக்குப் போனாலும் எனக்குப் பிடிக்கும்னு அம்மில மிளகாய் சட்னி அரைச்சு பரிமாறுவா. நீ காலைலேருந்து அவளைப் பட்டினி போட்டிருக்க. தெருமுனைல குழாய்த் தண்ணீர் பிடிச்சுக் குடிச்சுட்டு நான் வரவரைக்கும் காத்துட்டு இருந்திருக்கா. அவளுக்கு ஒரு வாய் டீ கூடத் தரலைன்னா என் மனசாட்சி மன்னிக்கவே மன்னிக்காது”
“ஏன் காத்துட்டு இருக்குறா.. அவ வீட்டுக்குப் போக வேண்டியதுதானே… ” என்ற தாயின் குரல் தேய்ந்து மறைந்தது.
தனது பையில் வைத்திருந்த வெளிநாட்டு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து அவளை உண்ணச் சொன்னான். அவளும் மறுக்காது உண்டாள்.
“மீனு எப்படி இருக்க? அத்தை மாமா எல்லாரும் நல்லா இருக்காங்களா?” பாசக் குரலில் கேட்டான். அவளைப் பார்த்தது நிஜமாகவே சந்தோஷமாய் இருந்தது.
மீனாவைக் கைலாஷிற்கு மிகவும் பிடிக்கும். மாநிறம்தான் என்றாலும் செதுக்கி வைத்த மூக்கும், குட்டி இதழ்களும், பேசும் விழிகளுமாய் இருப்பவளை யாருக்குத்தான் பிடிக்காது. அது மட்டும் காரணமில்லை மனம் அள்ள அள்ளக் குறையாத அன்பை அவள் எல்லாருக்கும் வழங்குவதும்தான். அந்த விஷயத்தில் கங்கா கூட சுயநலவாதிதான். மீனா, கங்காவின் மேல் வைத்திருக்கும் அன்பில் பாதியாவது கங்காவுக்கு மீனா மேல் இருக்குமா? இருக்காது என்றே கைலாஷுக்குத் தோன்றியது.
கங்கா ஆறுமாதத்திற்கு ஒருமுறை தாய் வீட்டுக்கு வந்துவிடுவாள். திருமணமான முதல் சில வருடங்கள் கைலாஷுக்கு இந்தியா வரும் வேலையில்லை. கங்காவின் சிகிச்சை ஆரம்பித்ததும் அவனும் அடிக்கடி வர வேண்டியதாகிவிட்டது.
கங்காவும், கைலாஷும் ஊருக்கு வந்துவிட்டால் மீனாட்சி தலை தெறிக்க ஓடி வருவாள். மாமா, அக்கா என இருவரின் பின்னாலும் சுற்றியபடியே இருப்பாள்.
“மாமா நீங்க வந்தாத்தான் நாங்க தியேட்டர் பக்கமே போறோம். கூட்டிட்டுப் போறதுதான் போறிங்க, சூர்யா படம் கூட்டிட்டுப் போங்களேன். ப்ளீஸ் மாமா….” செல்லமாய் கெஞ்சுபவளிடம் மறுக்க மனமின்றி அவள் கேட்ட படத்துக்கே கூட்டிச் செல்வான்.
உடன் வரும் உறவினர்களுக்குக் குளிர்பானம், பாப்கார்ன், சிப்ஸ் என வாங்கித் தள்ளுவான்.
“கைலாஷ்… இவளைப் பாரு, நீ வாங்கித் தந்ததையெல்லாம் சாப்பிட்டுட்டு என் மடில படுத்துத் தூங்கிட்டா” கடிந்துக் கொள்வாள் கங்கா.
மறுநாள் காலை “மீனம்மா… நேத்து பாத்த படத்தோட கதை சொல்லு பாக்கலாம்” என அவளை வம்புக்கிழுப்பான்.
“படத்துல சூர்யாக்கு எல்லாமே மறந்துடுமா…. அதே மாதிரி எனக்கும் மறந்துடுச்சு. நினைவுக்கு வரணும்னா இன்னைக்கு மறுபடியும் அதே படத்துக்குப் போகணும். மாமா…. கூட்டிட்டுப் போறிங்களா?”
“உதை…. உன் மாமா அமெரிக்கால ரூபா நோட்டு அடிக்கிறான்னு நெனச்சுட்டியா?” கிண்டலாய் சொன்னாலும் இன்னொருமுறை கங்காவுடன் அவளையும் அழைத்துச் செல்வான்.
“கெஞ்சிக் கெஞ்சியே என் வீட்டுக்காரரை ஏமாத்துறடி” கங்காவும் செல்லமாய்த் திட்டுவாளே தவிர மீனாவின் மேல் கோவம் கொள்ள மாட்டாள்.
“உன் தங்கை ஏஞ்சல் மாதிரி இருக்கா கங்கா. அவ கெஞ்சும்போது பாரேன் ரெண்டு கண்ணும் என்னம்மா சதிராட்டம் ஆடுது”
கங்கா அவனது காதைத் திருகுவாள் “பொண்டாட்டியோட தங்கச்சியை சைட் அடிக்கிறியே, உனக்கு வெட்கமா இல்லை”
“இதுல என்ன வெட்கம். அழகான பூவை ரசிக்கிறோம், இனிமையான பாட்டை ரசிக்கிறோம், குழந்தையோட சிரிப்பை ரசிக்கிறோம். அதே மாதிரிதான் உன் தங்கையும் எனக்கு. என் மனசில எந்த ஒரு கள்ளத்தனமும் இல்லை”
மீனாவைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. கங்காவின் மரணத்துக்குப் பின் சுத்தமாய் தொடர்பில்லை.
கடும் வெயிலில், சுடுமணலில், செருப்பில்லாமல் நிற்பதைப் போலத் தவித்தபடி நின்றாள் மீனாட்சி.
“மீனம்மா…. என்ன விஷயம். யாரையாவது காதலிக்கிறியா” கேட்டான் கைலாஷ்.
இல்லை என மறுத்தவள் “நீங்க ரெண்டாவது கல்யாணம் செய்துக்கப் போறிங்களா மாமா” கேள்வி கேட்டுவிட்டு அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
“ம்ம்….”
“அப்ப அக்காவோட நீங்க அத்தனை வருஷம் வாழ்ந்தது. அதை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டிங்களா? அக்கா மேல உங்களுக்கு காதலே இல்லையா?”
“கங்கா மேல நிறையா காதலிருக்கு மீனா. ஆனா அதையும் தாண்டி நடைமுறை வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கு. என்னோட ரெட்டை குழந்தைகளை கவனிச்சுட்டு வேலைக்கும் போயிட்டுவர கஷ்டமாயிருக்கு. அதனாலதான்”
“அதுக்காக யாரவது கல்யாணம் செய்துப்பாங்களா…. என்னை மாதிரி வேலைக்காரி யாரையாவது வச்சு கவனிச்சுக்களாமே”
அதுக்காக மட்டும்தான் கல்யாணமா? இவள் ஏன் இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறாள்.
“அங்க வேலைக்காரி எல்லாம் வச்சுப் பார்த்துக்க முடியாது”
“அத்தை மாமா குழந்தைகளை வளக்க மாட்டாங்களா?”
“சொந்தக்காரங்க யாரோட உதவியும் எனக்கும் என் பசங்களுக்கும் கிடையாது”
“ வேணும்னா குழந்தைகளை நான் எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா? நல்லா வளர்த்துத் தரேன்”
“எது வரைக்கும்…. உனக்கு நாளைக்குக் கல்யாணம் ஆகவேண்டாமா? காலம் முழுசும் என் குழந்தைகளுக்கு ஆயா வேலை பார்ப்பியா”
“செய்யுறேன் மாமா…. எனக்குக் கல்யாணமே வேண்டாம். அவங்களை நல்லபடியா வளர்த்துத் தரேன். ஆனா நீங்க வேற கல்யாணம் பண்ணிகிட்டா, வர்றவ குழந்தைகளை நல்லா கவனிப்பாளா….. கொடுமை படுத்தினா? எதுக்கு மாமா வீணா ரிஸ்க் எடுக்கணும்? அதனாலதான் சொல்லுறேன் என்கிட்டே தந்துடுங்க மாமா”
“லுக் மீனாக்ஷி…. உன் லிமிட் தாண்டிப் பேசுற. என் குழந்தைகள் என்கிட்டத்தான் வளருவாங்க”
“கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கத்தான் போறிங்களா?”
பதில் சொல்லவில்லை கைலாஷ்.
“அப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா மாமா?” மீனாட்சி கேட்டுவிட்டுத் தலைகுனிந்தாள்.
“உளறாதே”
“உளறல மாமா…. நிஜம்மாத்தான் சொல்லுறேன். வேற யாரையாவது கல்யாணம் செய்துட்டு குழந்தைகளை விட்டுட்டுப் போய்டுவேன்னு தானே பயப்படுறிங்க. நான் உங்களையே கல்யாணம் செய்துட்டு குழந்தைகளைப் பாத்துக்குறேன்”




பொன்
நன்றி.
காதல் வரம் வீடு தேடி வருதே