ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு நீங்க தந்த கமெண்ட்ஸ்க்கு நன்றி. இப்போது அடுத்த பகுதியை பார்க்கலாம். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா
அன்புடன்,
தமிழ் மதுரா
அத்தியாயம் – 14
பிரகாஷ் தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டான். பூர்வஜாவின் உறவைத் துண்டித்தபின் முழு மூச்சோடு படிப்பில் இறங்கினான். மும்பை ஐஐடியில் அவனது ஆராய்ச்சிக் கட்டுரையால் கவரப்பட்ட அவனது கைட் அவனை அது சம்பந்தமான ஆராய்ச்சியைத் தொடர ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் தொடர யோசனை கூறினார். ஒரு வருடம் குடும்பத்தை விட்டு வெளிநாட்டுக்குப் பயணம் செய்தான். வெற்றிகரமாய் பிஹைச்டி முடித்து கல்லூரியில்பணியைத் தொடர வந்தான்.
அவனது துறைத்தலைவர் ஜேக்கப் ஓய்வு பெறப் போவதால் அந்தப் பதவி அவனுக்குக் கிடைக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. ஜேக்கப்பின் பிரிவுபசார விழாவுக்காகக் கிளம்பினான் பிரகாஷ். அவனருகே தயாராய் நின்ற பானுப்ரியாவைப் பார்த்து அவனுக்கு ஒரே ஆச்சிரியம்.
பப்லு ஒருவனுடன் காமாட்சியின் முன்னிலையில் ஆரம்பித்த டேகேர் இப்போது நன்றாக வளர்ந்து விட்டது. வங்கிக்கடனின் உதவியால் இரண்டு பிளாட்டுகளை வாங்கி ஒன்றாக்கி பெரிது படுத்தியிருந்தாள் பானுப்ரியா. நேத்ராவும் சாவித்திரியும் சதாசிவமும் குழந்தைகளை பள்ளியில் விட்டு அழைத்து வரும் பணியையும், தவ்லத்தும் நாசரின் மனைவி நூர்ஜஹான் இருவரும் பச்சிளம் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் செய்தனர். பானு சமையல், குழந்தை பராமரிப்பு, ஆயா என்று அணைத்து வேலைகளும் செய்வாள். நிர்வாகம் செய்வதுடன் அடுத்த படிக்குக் கொண்டு செல்வதற்குக் கடுமையாக முயற்சிக்கிறாள். கணவனுடன் பேசக் கூட அவளுக்கு நேரமில்லை. பிரகாஷ் எத்தனையோ முறை அவளிடம் அவனுக்காக நேரம் ஒதுக்க சொல்லிக் கேட்டும் மறுத்துவிட்டாள்.
“உங்களுக்கும் உங்க சொந்தக்காரங்களுக்கும் என் நேரத்தை செலவழிச்சிருக்கேன். இது எனக்கான நேரம்.. இதை நீங்க தந்துத்தான் ஆகணும்” என்று கண்டிப்புடன் பேசுபவளை மீண்டும் அணுகவே தயக்கமாய் இருந்தது. பழைய பானுவை மாறிக் காலையில் காபி தந்து, அவன் கோவத்தை சமாதனம் செய்ய பிடித்த உணவு தயாரித்து ஊட்டிவிட்டு கொஞ்சிக் குலவிக் கழித்த காலமெல்லாம் மீண்டும் வராதா என்று வெறுப்போடு தன்னருகில் காலியாக இருக்கும் படுக்கையைப் பார்த்தபடி தூங்க முயலுவான்.
அவ்வளவு பிசியாய் இருப்பவள் விழாவுக்குக் கிளம்பித் தயாராய் நின்றதை கிண்டல் செய்தான்.
“என்ன தொழிலதிபர் மேடம். இன்னைக்கு மனசிரங்கி எனக்கு நேரம் ஒதுக்கிருக்கிங்க”
“நேரம் ஒதுக்கினது உங்களுக்கில்லை, ஜேக்கப் சாருக்கு” என்றபடி நடந்த மனைவியை ரசித்தான் பிரகாஷ். தெளிவான முகமும், நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையான நடையும் அவளுக்கு ஒரு தனி கம்பீரத்தை வழங்கியிருந்தது. அந்தக் கம்பீரம் பிரகாஷைக் கூட எட்டியே நிறுத்தியிருந்தது.
காரில் பயணிக்கும்போது சத்தமிட்ட அலைப்பேசியை எடுத்தவள் “சொல்லும்மா, எனக்கு உதவி செய்ய சென்னைக்குக் கிளம்பி வரியா… நான் உன்கிட்ட உதவி எதுவும் கேக்கலையே… என்ன, அண்ணி கூட மறுபடியும் சண்டையா…”
“…”
“குடும்பம்னா ஏதாவது பிரச்சனை இல்லாம இருக்குமா… அதுக்காக சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இங்க வந்து உக்கார முடியுமா சொல்லு…. நான் என் வீட்டுலதான் இருக்கணும். நீ உன் வீட்லதான் இருக்கணும்…. அங்கேயே இருந்து பிரச்சனையை சமாளி. நான் ஒரு பான்க்க்ஷன் போயிட்டு இருக்கேன். வச்சுடுறேன்” என்றபடி அலைப்பேசியைக் கீழே வைத்தாள்.
“பேசினா பதில் பேசத்தெரியாம முழிக்கிற என் பானு எங்க போனா” சிரித்துக் கொண்டே விழா நடக்கும் ஹாலுக்கு காரை செலுத்தினான் பிரகாஷ்.
“ஆனா அந்த பானுவை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்” என்று சொல்லவும் தவறவில்லை
குடும்பத்துடன் இறங்கிய பிரகாஷைப் பார்த்து வயிறெரிந்தது பூர்வஜாவுக்கு. பிரகாஷுடன் உறவை ஓட்ட வைக்க முயன்ற பூர்வஜாவுக்கு ஏமாற்றமே. அந்தக் கல்லூரி நிறுவனர் சென்னையின் மறுகோடியில் ஆரம்பித்த மற்றொரு கல்லூரிக்கு மாறுதல் கிடைத்தது. வேறு வழியின்றிக் கிளம்பினாள். அவளது பணிமாற்றம் பற்றிக் கேள்விப் பட்டாள் பானு. பிரகாஷ் பூர்வஜாவை வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கக் கூடாதென்று எச்சரித்திருந்ததால் அவளும் பானுவைப் பார்க்க வரத் துணியவில்லை. தவிர பிரகாஷ் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டான். இனி அவன் வீட்டுக்கு சென்று பானுவைப் பார்த்து என்ன ஆதாயம்.
பானு டேகேர் ஆரம்பித்திருக்கும் விஷயமும் பூர்வஜாவின் காதுக்கு வந்தது. கட்டின கணவன் அடுத்தவளிடம் கைமாறிப் போனதையே கண்டுகொள்ளத் தெரியாதவள் எதில் முன்னேற முடியும்ஏளனமாய் சிரித்துக் கொண்டாள். பிரகாஷ் மறுபடியும் வந்ததைக் கேள்விப்பட்டாள். அவனுக்குத் துறைத்தலைவர் பதவியும் கிடைத்ததை அறிந்தாள். இடைவெளியை சரிசெய்ய அவளது உள்ளம் துடித்தது. அவனைக் காணவென்றே ஜேக்கப்பின் பிரிவுபசார விழாவுக்கு வந்திருந்தாள். வழக்கமாய் இது போன்ற விழாக்களுக்கு பானு வருவதில்லை. இன்றும் வரமாட்டாள் என்றே நினைத்தாள். ஆனால் இப்படிக் குடும்பத்தோடு நண்பர்கள் சூழ வருவார்கள் என்று பூர்வஜா கனவு கூட காணவில்லை.
பிரகாஷின் அழைப்புக்கிணங்க நேத்ரா, தவ்லத், சாவித்திரி, பிரகாஷின் கல்லூரியிலேயே மாணவனாக சேர்ந்திருந்த யாஸிம் அனைவரும் வந்திருந்தனர். பானு பட்ட துன்பத்திற்கு மயிலறகால் மருந்திட்டத்தைப் போல அமைந்த விழாவை நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாய் கண்டனர்.
சிற்றுண்டி எடுத்துக் கொண்டு பெண்கள் அனைவரும் அலாவளாவத் தொடங்கினர். எல்லாருக்கும் நடுவே புகுந்த பூர்வஜா அனைவரின் முன்பும் பானுப்ரியாவிடம் “என்னடி பானு… இன்னைக்கு ஆயா வேலைக்குப் போகலையா.. லீவ் விட்டுட்டியா.. உன் முதலாளிங்க வீட்டை விட்டுத் துரத்திடப் போறாங்க” என்றாள். அவளது பேச்சு அங்கிருக்கும் அனைவரின் முகத்தையும் சுழிக்க வைத்தது. பானுவுக்கு பதிலடி கொடுக்க வராது என்று நம்பினாள் பூர்வஜா.
பிரகாஷின் முகம் ரத்தமென சிவந்தது.
“நான் ஆயா வேலை பாக்கலடி பூர்வஜா, உழைச்சுப் பிழைக்கிற தாயோட குழந்தைகளுக்குக் கொஞ்ச நேரம் அம்மாவா இருக்கேன். பணம் பாக்குற இடத்தில எல்லாம் ஓட்ட முயற்சி பண்ணுற நீதான் தொரத்தி விட்டா ஓடணும். என்னை மாதிரி முதலாளிங்களுக்கு அந்த நிலைமை வராது”. வாக்கியத்துக்கு நான்கு அக்கா போட்டு மரியாதையுடன் பேசும் பானு, பதிலுக்கு டீ போட்டு மரியாதைக் குறைவாகப் பேசியது பூர்வஜாவுக்கு பயங்கர அதிர்ச்சி.
“தாலி கட்டினவனையும் பெத்த குழந்தையும் அம்போன்னு விட்டுட்டு இங்க வந்து ஊர் சுத்துறவங்களுக்கு எப்படி பானு அம்மாவைப் பத்தித் தெரியும்” என்று கிண்டலாய் கேட்டார் சாவித்திரி.
பானுவின் தோளில் கை போட்டுக் கொண்டான் பிரகாஷ். அனல் பறக்கும் பார்வை ஒன்றை பூர்வஜாவின் மீது வீசினான்.
பூர்வஜாவின் கொழுப்பெடுத்த பேச்சு சரியான இடத்தில் சேர்ந்தது. நிறுவனரின் மனைவி பானுவிடம் அவளது தொழிலைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தார். பூர்வஜாவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தவர் கணவரிடம் “பொது இடத்தில் நாகரீகமா பேசக் கூடத் தெரியாதவ எப்படி நம்ம கல்லூரில வேலை பாக்கலாம். அவளை வெளிய அனுப்புங்க” என்று கட்டளையிட, மிக விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் நிறுவனர்.
அனைவரின் முன்பும் பிரகாஷைப் பேச அழைத்தார்கள். ஜேக்கப்பை பற்றிப் பேசியவன் தனது ஆராய்ச்சியைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொண்டான்
“நிறை குறை இருக்கும் மனிதன் செய்யும் இயந்திரம் தானே ரோபாட். நம்ம மனிதர்களால் செய்ய முடியாத பல வேலைகளை இயந்திரத்தைக் கொண்டே செய்கிறோம். இத்தகைய இயந்திரத்தில் பழுது ஏற்படுறது இயல்பான ஒன்று. அதைக் கண்டறிந்து பழுது ஏற்படும் முன்னரே சரி செய்துக் கொள்ளும் ஆட்டோகரெக்ஷன் பத்தின ஆராய்ச்சிதான் நான் செய்தது. இது நம்ம நாட்டுக்கே மிகவும் உதவியாக இருக்கும். ஐஐடியில் இது சம்பந்தமான் போஸ்ட் டாக்டரேட் ரிசர்ச்க்கு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
நான் இந்த வெற்றியை அடைய என் நிறைகுறைகளைத் தாங்கிக் கொண்டு பயணிக்கும் என் மனைவியும், அன்பான குழந்தைகளும், சொந்தத்தை விட மேலான அப்பார்ட்மென்ட் நண்பர்களும்தான் காரணம். பானுப்ரியா என் மனைவி என்பதைத் தவிர ஒரு வளரும் தொழிலதிபர். எத்தனையோ அம்மாக்கள் தங்களது குழந்தைகளை இவரை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளை தாயாய் மாறி கவனிக்க நிறைய பொறுமையும் அன்பும் வேண்டும்.அவருக்கு அது இருக்கிறது. என்னை மாதிரி ஒரு கோவக்காரக் கணவனை அனுசரித்துப் போவதிலிருந்தே அவரது சகிப்புத்தன்மையை நீங்கள் கணித்துவிடலாம்”என்று சொல்லி முடித்தவுடன் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.


thenu23
ஹாய் தமிழ்
ud நல்லா இருக்கு…
பானு தன் திறமையால் முன்னேறியதாக சொன்னது நல்லா இருக்கு…, அவள் அதிகம் படிக்கவில்லை.., வேலைக்கு போக முடியாதுன்னு சில காரணங்களை சொல்லி…, அவள் பிரகாஷுக்கு அடங்கி போவது போல காட்டாமல் …, அவள் தன்னம்பிக்கையால் ஜெயிப்பது போல காட்டியது சூப்பர்…!
அந்த பூர்வஜா அடங்கவே மாட்டாளா…!! இன்னும் திமிர் அடங்காம ஆடிக்கிட்டு இருக்கா…! அவளுக்கு சரியான பதிலடி கொடுத்தா பானு…
பிரகாஷுக்கு இப்போத்தான் மனைவியின் அருமை பெருமை தெரியுதோ…!!