ஹலோ பிரெண்ட்ஸ்,
இரண்டாவது பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதிரி வழக்கமான ஹீரோ ஹீரோயின் இந்தக் கதையில் இல்லை. ஆனால் அழுத்தமான கதை. இது போன்றதொரு நிகழ்ச்சியை நீங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள். அதைத்தான் தர முயல்கிறேன்.
சீக்கிரம் மூன்றாவது பதிவோடு வந்துவிட்டேன். துர்வாசர் இன்று அறிமுகம். படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… நான் செல்லும் பாதை சரியா தவறா என்பதை உங்களது கருத்துக்களின் உதவியோடே கணிக்கிறேன்.
பானுப்ரியாவின் அன்பாலே அழகான வீட்டைப் பார்ப்போமா…
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 3
பதட்டமாய் மாடி ஏறினாள் பானுப்ரியா.
மெதுவாய்செருப்பை கழற்றி ஓரமாய் தள்ளிவிட்டு வியர்வை துளிர்த்த முகத்தைகர்ச்சிப்பால் துடைத்தபடி பூனை போல் நடந்தாள். டைனிங் டேபிளில் அமர்ந்துகணக்கு செய்துகொண்டிருந்தாள் சத்யபாமா.அழுததில் முகம் சிவந்துவீங்கியிருந்தது. அம்மாவைக் கண்டதும் பாமாவின் கண்ணில் புதிதாய் நீர் துளிர்த்தது .சின்னவள் ஷ்யாமா ஓவென்று கத்தி அழுதபடி அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
“அம்மா, அப்பா என்ன அடிச்சுட்டாரு.. இங்க பாரு” என்று முதுகைக் காட்டினாள்
“செல்லம் அழக்கூடாது. அப்பா ஏன் கண்ணா அடிச்சாரு”
“நான் பெயிண்ட் பால் தூக்கிப் போட்டு வெளாண்டேனா.. அப்பாவோட ட்ரெஸ்ல ரெட் பால்பட்டு ரெட் கரையாயிடுச்சு. அதுக்கு முதுகுல அடிச்சுட்டாரும்மா.. ஃபோர் அடி…” மறுபடி அழுகையில் இரைந்தாள்.
“பாமா ஏன் அழுறா”
“செவென் டேபிள்ஸ் தெரியல” தேம்பியபடி சொன்னாள் சத்யபாமா.
“என்ன, உங்க ‘ஊர்சுத்தி’ அம்மாட்ட என்னைப்பத்திக் கம்ப்ளைன்ட் தந்தாச்சா…” மனைவியை முறைத்தபடிபாத்ரூமிலிருந்து வெளிப்பட்டான் சந்திரப்ரகாஷ்.
உயரம், நிறம், எதிலும் குறைசொல்ல முடியாது. அவனது கண்களில் அணிந்த கண்ணாடியே கம்பீரத்தை தந்த அதேவேளை அவன் கண்டிப்பானவன் என்பதையும் சொன்னது. நேத்ராப்ரபசர் என்றுகிண்டல் செய்வதற்கு ஏற்றாற்போல் பார்த்தவுடன்மரியாதை தர வைக்கும் தோற்றம்.
கையிலிருந்த ஷர்ட்டை பால்கனியில் கட்டியிருந்தகொடியிலிருக்கும் துணிகளை நகர்த்திவிட்டுக் காயப் போட்டான். கொடியில்காய்ந்த பானுவின் உள்ளாடைகளைப் பார்த்துவிட்டு கீழே தெருவைப் பார்த்தவன்திரும்பி அனல் பறக்கும் பார்வை ஒன்றை அவள் மீது வீசினான்.
ஐயோ உள்ளாடைகளை தனியாய் தரையில் மடக்கி வைப்பது போன்ற ட்ரையரில் வெளியில் தெரியாமல் போட சொன்னாரே… வழக்கம்போல மறந்துட்டேனே… இவர் பால்கனில துணியைக் காயப் போடுவாருன்னு கனவா கண்டேன். அடுத்து திட்டு வாங்கப் போறது நானா என்று திகிலுடன் பார்த்தாள்.
“இப்படிப்பட்டஒரு தத்தி அம்மாவுக்குப் பொறந்த குழந்தைகள் கிட்ட புத்திசாலித்தனத்தைஎதிர்பாத்தது என் தப்புத்தான்” கோவத்தால் பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைத்துப்பினான்.
காயப்போட்ட சட்டையில் கரை முழுதும் மறையாதது கண்டு எரிச்சல் அடங்காமல் ஷ்யாமாவை ஒரு கொட்டு கொட்டினான் பிரகாஷ்.
“புள்ளையா இது, குட்டிச்சாத்தான். இதால என் லக்கி டிரஸ் பாழாயிடுச்சு. பெருசு இருக்கே அதுக்கு டேபிள்ஸ் கூட ஒழுங்க சொல்லத் தெரியல. இதெல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிக்கப் போவுது. வாத்தியார் பிள்ளை மக்குன்னு சாட்சி சொல்லப் பொறந்திருக்கு. நீங்கள்லாம் எங்க படிச்சு உருப்படப் போறிங்க. இந்த மாதிரி இருந்தா எங்காவது போய் சட்டிதான் சுரண்டணும்” ஆத்திரத்தில் இரைந்தான்.
“உங்கம்மா கல்யாணம் செய்துட்டு வாழ்க்கையை வீணடிக்கிறா, நீங்க அவளை மாதிரியே முட்டாளாப் பொறந்து உயிரை எடுக்குறிங்க. ரெண்டுல ஒண்ணாவது என் அறிவோட பொறந்திருக்கக் கூடாது.”
சுருக்கென தைத்த வார்த்தையால் மனம் புண்பட, ஊமைக் காயத்தில் வடிந்த ரத்தமாய் பானுப்ரியாவின் கண்களில் நீர் துளிர்த்தது.
“அதை ஊறவச்சுத் துவைக்கணும். நான் செஞ்சுத்தரேன்” என்றபடி அவன் சட்டையை எடுத்துச் சென்றாள். அழுத ஷ்யாமாவை இடுப்பில் உட்கார வைத்து சமாதானம் செய்தவாறே சட்டையை கரை மறைய வைக்கும் பொடி போட்டு அந்த இடத்தில் அழுத்தமாய் தேய்த்து ஊற வைத்தாள்.
‘இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான லெக்சர் இருக்குன்னு சொன்னாரே பானு… அந்த டென்ஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்திருப்பார். வீடு பூட்டியிருக்கவும் எரிச்சல் வந்திருக்கும். குழந்தைங்க அது புரியாம சேட்டை பண்ணிருக்கும். அதுதான் இவ்வளவு கோவம். முதல்ல வீட்டுக்காரர் வயித்துக்கு ஏதாவது போடு. கோவம் ஓடிப் போயிடும்’ தனக்குத் தானே சமாதனம் செய்து கொண்டவாறே இரவு உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தாள்.
சட்டையைப் மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான் பிரகாஷ். மூட் அவுட்டானால் வெளியே சென்று ஒரு சிகிரெட் பிடித்து வருவான். அது பானுவுக்கும் தெரியும். கதவை ஓங்கி அடிக்கும் சத்தம் கேட்டது பானுவுக்கு
பிரகாஷ் வெளியே சென்ற சிலநிமிடங்களில் “வாத்தியார் கதவை அடிச்சே உடைச்சுடுவார் போலிருக்கே” மெதுவாய் சொல்லியபடி வீட்டினுள் நுழைந்தனர் நேத்ராவும், சாவித்திரியும். அவர்கள் கையில் பாத்திரம்.
“இன்னைக்கு வெள்ளைக் கொடி பறக்கவிட பூரி மசாலாதானே செய்யப் போற… தவ்லத் ஏற்கனவே மாவு பிசைஞ்சு, உருளைகிழங்கு வேக வச்சு எடுத்து வச்சிருக்கா. மூணு பேரும் சேர்ந்து செஞ்சுடலாம்”
நன்றியுடன் பார்த்தவள் கண்கள் தவ்லத்தை தேட, “கடுவன் பூனை வீட்டுக்கு வந்தாச்சு. அதனால தவ்லத் ஆண்ட்டி பதுங்கு குழிக்குள்ள மறைஞ்சாச்சு” பதில் சொன்னாள் நேத்ரா.
“நான் பாத்துக்குறேன் மாமி. நீங்க மாமாவுக்கு சாப்பாடு போடுங்க” வெங்காயத்தை அரிந்தபடியே சொன்னாள் பானு.
“உன் வீட்டுக்காரனை ஒரு அரைமணி நேரம் கடைப்பக்கமே பிடிச்சு வைக்க சொல்லி உங்க மாமாவுக்கு உத்தரவு போட்டுட்டு வந்திருக்கேன். நேத்ரா குட்டிங்களைப் பாத்துக்கோடி. ரெண்டுக்கும் அழுதழுது முகம் சிவந்து கிடக்கு. அந்தப் புளியோதரையை ஊட்டி விடு” பேத்திக்குக் கட்டளையிட்டவாறு மாவில் வட்டமாய் பூரிகளைத் தேய்த்து,செய்தித்தாளில் பரத்தி வைத்தார்.
அரைமணி நேரம் கழித்து வீட்டுக்கு ஆயாசமாய் வந்தான் பிரகாஷ். பசியோடு வந்தவனை மொட்டை ப்ளேடால் அறுத்து பேச்சால் வறுத்தெடுத்த சதாசிவத்தை வெட்டி போட்டு விடலாம் போல் ஆத்திரம் வந்தது.
“யப்பா மனுஷன் வாயைத் திறந்த மூட மாட்டான் போலிருக்கு”
என்று அலுத்தவாறு வீட்டுக் கதவைத் திறந்தவனை வெங்காயம் வதக்கிய மணம் வரவேற்க, ஆவலுடன் சமயலறையில் நுழைந்தான். வியர்வை வழிந்தோட, முந்தானையால் துடைத்தவண்ணம் சூடான பூரிகளைப் பொறித்து தட்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அவளது சமாதன முயற்சியை உணர்ந்தவாறே சிரித்துக் கொண்டான்.
“டேபிள்ல தக்காளி குருமா செஞ்சு மூடி வச்சிருந்த, ராத்திரிக்கு இட்லின்னு நினைச்சேன்” என்றவாறு ஆவலுடன் பூரியை எடுத்து கடாயில் இருந்த கிழங்கில் அப்படியே தொட்டு வாயில் போட்டுக் கொண்டான்.
உணவு நாவில் வெண்ணையாய் கரைய, அதன் சுவையில் மயங்கியவாறு அடுத்த வாய் பூரிக்கும் கடாயில் இருக்கும் உருளைக் கிழங்கில் கைவைத்தான். பட்டென அவன் கையில் அடி போட்டவாறே தட்டில் பூரிக் கிழங்கை வைத்து நீட்டினாள்பானுப்ரியா.
“அங்கிருந்து எடுக்காதிங்க தட்டில வச்சு சாப்பிடுங்க”
“ஏன்?”
“எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு. சாப்பாட்டை தட்டில் வச்சுத்தான் சாப்பிடணும். இப்படி பரக்கவெட்டியாட்டம் சாப்பிட்டா என் வீட்டுக்காரருக்குப் பிடிக்காது”
“அவனுக்குப் பிடிக்காட்டி போகட்டும்.. நான் உன் கழுத்தில் தாலி கட்டினத்தில் இருந்து இப்படிப் பறக்கா…வெட்டியாயிட்டேன்” புன்னகைத்தபடி கையில் இருந்த மிச்ச பூரித் துண்டை பானுவின் வாயில் திணித்தான்.
“அப்பா, அம்மாவுக்கு மட்டும் ஊட்டி விடுறிங்க… எனக்கு… ” என்று வந்து நின்ற ஷ்யாமாவை பார்த்து அசடு வழிந்தவன், அவளுக்கும் ஊட்டி விட்டான். தட்டை எடுத்துக்கொண்டு சத்யபாமாவிடம் சென்றான்.
அழுது கண்கள் சிவந்திருந்த பாமாவுக்கு அப்பா மேல் வருத்தம் மறையவில்லை “நான்தான் அம்மா மாதிரி தத்தியாச்சே. மக்குக்கெல்லாம் ஊட்டி விட வேண்டாம்”என்று தந்தையிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“மூக்கு மேல வர்ற கோவத்தில மட்டும் அப்படியே அப்பா மாதிரி”
பெரியவளை சமாதனப்படுத்தி, கணக்கை பொறுமையாய் சொல்லித்தந்தான். சரியாகச் செய்ததால் சத்தியபாமாவுக்கு ஸ்பெஷல் முத்தமும் தந்தையிடமிருந்து கிடைத்தது. சாயந்தர கோவத்துக்கு ஈடு செய்ய இரவு குழந்தைகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைத்துவிட்டு, மனைவிக்கும் பாடம் சொல்லித் தந்தான்.
“எவ்வளவு முக்கியமான லெக்சர் தந்துட்டு உங்ககிட்ட ஷேர் பண்ணணும்னு ஆசையோட வந்தேன்… வீட்டைப் பூட்டிட்டு கோவிலுக்குப் போய்ட்ட… ” குழந்தைகள் தூங்கியதும் மனைவியிடம் ஆதங்கப்பட்டான்.
“மாமி கூப்பிட்டப்ப போக வேணாம்னு தான் நினைச்சேன். அப்பறம்தான் நினைவுக்கு வந்தது. போயிட்டு வந்தேன்”
“என்ன நினைவுக்கு வந்தது”
“இன்னைக்கு என் பொறந்தநாள்..” தயங்கியபடியே சொன்னாள்.
குற்ற உணர்ச்சியுடன் “ஹேப்பி பெர்த்டே பானு… மறந்துட்டேன்ம்மா” என்றான்.
“போடி.. இப்ப ஒரு சாக்லேட் கூட வாங்க முடியாது” அலுத்துக் கொண்டவன் காலையில் அவள் செய்து வைத்திருந்த பொங்கலை எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டான். அவளை ஊட்டிவிடச் சொல்லி ஒரு வாய் வாங்கிக்கொண்டான்.
“பரவால்ல… அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் இந்தப் பிறந்தநாளுக்குத் தான் என்னை விஷ் பண்ணிருக்கிங்க தெரியுமா” கண்களில் மகிழ்ச்சி தெரிய சொன்னாள்.
“போன வருஷம்…. “
“மூணு வருஷமா பாம்பே போயிட்டிங்க..” நினைவு படுத்தினாள்.
இனம் காண முடியா உணர்வுடன் இருளை வெறித்தான்.
“நான் உங்களை தப்பு சொல்லலைங்க. உங்க ஆராய்ச்சி விஷயமாத்தானே போயிட்டு வர்றிங்க…..” கணவனை சமாதானப் படுத்தினாள். “நல்லவேளை இந்தமுறை நாளைக்குத்தான் பாம்பே கிளம்பணும்” குதூகலமாய் சொன்னாள்.
“போகல” என்றான் பிரகாஷ்.
“ஏன்… பிஎச்டி படிச்சு முடிச்சுட்டிங்களா?”
“இல்லை… ஆனா…. “ ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் நிறுத்திக் கொண்டு மனைவியின் தலையைக் கோதினான். “இந்த தடவை போகல… நாளைக்கு எங்கயாவது வெளிய போயிட்டு வரலாமா” அன்பாய் வினவினான்.
“பீச் போயிட்டு வரலாம்…. நான் சாப்பிட பலகாரம் செய்து எடுத்துட்டு வந்துடுறேன்”
“பீச்லருந்து வரும்போது டி.நகர் போயி ட்ரெஸ் வாங்கிட்டு வரலாம்”
“வேணாம் மாசக் கடைசி… கிரெடிட் கார்ட்ல செலவு பண்ணாலும் நம்மதான் அடுத்தமாசம் கட்டணும். வீடு வாங்கிட்டு தாம்தூம் அடிக்க முடியுமா… பேசாம இருங்க”
“கடை முழுசும் அலசிட்டு முன்னூறு ரூபாய்க்கு பூனம் சேலை ஒண்ணை எடுக்கப் போற….. எங்க வீடு உங்களை மாதிரி மலையம்பட்டி மிராசா இருக்காம இருக்கலாம். உன் பிறந்தநாளுக்கு ஒரு சேலை கூட வாங்கித் தர வக்கில்லாதவனில்லை உன் புருஷன்” மென்மையாய் ஆரம்பித்து உஷ்ணமாய் முடிந்தது அவன் பேச்சு.
“ஏன் இவ்வளவு கோவம்…. புடவை யாருக்காவது பிடிக்காம இருக்குமா. நாளைக்கு சேலை வாங்கித்தாங்க… சரியா.. இப்பக் கொஞ்சம் சிரிங்க பாக்கலாம்” கணவனை தாஜா செய்தாள்.
“உங்க ரிசர்ச் பத்தி சொல்லுறிங்களா… எனக்குப் புரியுதான்னு பாக்குறேன்” கணவனிடம் ஆர்வமாய் வினவினாள்.
“நிஜம்மாவா..” என்று கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.
“நான் பண்ணுற ஆராய்ச்சி ஆட்டோகரெக்க்ஷன் பத்தினது. அதாவது இயந்திரங்கள் புத்திசாலித்தனமாய் வடிவமைப்பத்தின் மூலமா பின்னாடி வரப்போற பிரச்சனைகளை சிறு சிறு அறிகுறிகள் மூலமா முன்னாடியே கண்டுபிடிச்சு சரிபடுத்திக்க முயலும். எப்படின்னா…. “ அவனுக்கு சொல்ல அலுக்கவில்லை. ஆனால் பானுவுக்குத்தான் போர் அடித்தது.
பானுவும் புரிந்துக் கொள்ளத்தான் முயன்றாள். ஆனால் காலையிலருந்து செய்த வேலைகளும், கணவனின் அன்பும் தந்த நிறைவில் தூக்கம் கண்ணிமையைப் பிரித்து அமர்ந்து கொண்டது.
சற்று நேரத்தில் பானுவின் சீரான மூச்சில் அவள் தூங்கி விட்டதை உணர்ந்தவன். ‘நீ என் மேல பாசமா இருக்க, ரொம்ப காதல் வச்சிருக்க, என் கோவத்தை பொறுத்து என்னை அனுசரிச்சு நடந்துக்குற… எல்லாம் சரி, ஆனா எனக்கு ஏத்த மாதிரி இன்னும் கொஞ்சம் அழகா, சூட்டிகையா கொஞ்சம் அறிவா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்’ பெருமூச்சு விட்டபடி உறங்க முயற்சி செய்தான்.


பொன்ஸ்
me 1