தாமரை குளம் – 21

அத்தியாயம் – 21

அந்த அறையை இன்ச் பை இன்ச்சாக தேடத் தொடங்கினர். ஒன்றும் பெயரவில்லை. என்னவோ அந்தக் கட்டிலைப் பார்த்ததும் சந்தேகம் விஜயாவுக்கு. இவ்வளவு பெரிய கட்டில். கட்டிலுக்கு அடியே பெட்டிகள் அதில் போர்வைகள் தலையணை உறைகள் எல்லாம் அடுக்கி இருந்தது. 

“அதை இழு அல்லி”

பெட்டியை இழுத்தாள் அல்லி. அடிக்கடி நகர்த்தி எடுத்ததைப் போன்றதொரு தடம். பக்கத்தில் கூட சில பெட்டிகள் அந்தக் கட்டிலுக்குக் கீழே அடுக்கப்பட்டிருந்தன. 

“அதையும் இழு”

திறந்து பார்த்தால் உள்ளே மடித்து அடுக்கப்பட்டிருந்த ராஜியின் துணிமணிகள். 

“எல்லாம் அவளோட துணிமணிகள் தான்”

இவ்வளவு பெரிய அலமாரி எல்லாம் இருக்கும்போது எதுக்காக கீழ இத்தனை பெட்டில துணிமணி. 

“பழசு மாதிரி தெரியுது மேடம்”

“இதெல்லாம் காட்டன், டிசைனர் துணி இல்லை. சல்லிசா கிடைக்குற துணிமணிகள் தானே”

“ஆமாம் மேடம். அதுவும் பழசு மாதிரி தெரியுது”

“அதை ஏன் தூக்கிப்போடாம இவ்வளவு பத்திரமா வச்சிருக்கா? அதுவும் அடிக்கடி இந்தப் பெட்டியெல்லாம் நகத்தின மாதிரி தெரியுது. அல்லி உள்ள போயி தேடு”

அல்லி அந்த கட்டிலின் அடியில் புகுந்து செல்போனின் டார்ச்சை உயிர்பித்துத் தேட ஆரம்பித்தாள். 

டொக் டொக் என்று தட்டும் போது வித்யாசமான ஒலி கேட்க

“மேடம், இந்த கட்டில் மரத்துக்கு நடுவே ஹாலோவா இருக்கு”

“சபாஷ் அல்லி, அப்ப அந்த இடத்தில் ரகசியமா என்னவோ இருக்கு. ஓபன் பண்ண முடியுதான்னு பாரு”

கைகளை வைத்து நகர்த்தி தேடியவள் அங்கே கட்டில் காலுக்கு பக்கத்தில் சிறிய வளைவு இருப்பதைக் கண்டாள். அதில் விரலை வைத்து அழுத்தி திறக்கவும் அப்படியே திறந்தது. அதிலிருந்து பொத் என விழுந்தது ஒரு பெட்டி. உள்ளே தேடிப் பார்க்க, சில ரூபாய் நோட்டுக் கட்டுகள். 

“அவ்வளவுதான் மேடம்”

அத்துடன் டார்ச்லைட் அடித்துப் பார்த்ததில், கட்டிலின் காலுக்கு இடையில் எப்போதோ மாட்டிக் கொண்ட காகிதம் ஒன்று இருந்தது. 

அந்த டப்பாவை பார்த்தவர். “இதென்ன தென்னாடன்?”

“பாரடே பவுச் மேடம். போன் இல்ல எலெக்ட்ரானிக் கார் சாவி இதெல்லாம் போட்டு வைக்கும் போது சிக்னல ட்ராக் பண்ண முடியாது”

“அதை திறங்க”

சில பல முயற்சிகளுக்குப் பின்னே தென்னாடன் திறந்தபோது அதில் இருந்து ஒரு பட்டன் போன் ஒன்று அவர்களைப் பார்த்து சிரித்தது. அத்துடன் சாவியில் சிறிய எலெக்ட்ரானிக் சாதனம். 

“இதென்னப்பா”

“USB  இது கணினியின் ஹார்ட் டிரைவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாது. USB-ஐ உருவிவிட்டால், அந்த கணினியில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது”

“சரியான கிரிமினல் பொம்பளை”

“இதில் ஏதாவது தகவல் இருக்கான்னு பார்க்கணும்” 

“மேடம் ஒரு சீட்டு இருந்தது” நைந்து போன காகிதத்தில் சில வார்த்தைகள் தெரிய, 

“அதையும் பத்திரமா எடுத்து வச்சுக்கோங்க” 

அடுத்த ஒரு மணி நேரம் சல்லடை போட்டுத் தேடியும் வேறு தடயங்கள் இல்லை.  

எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வடபழனி ஹோட்டல் அறையில் வைத்தனர். 

“தென்னாடன். முக்கியமான வேலை, லால் பத்திய தகவல் ஒன்னு கிடைக்கும்போல இருக்கு. நான் வெளிய போயிட்டு வரேன். நீங்க அதுக்குள்ளே இதில் ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு தேடி வைங்க” என்று சொல்லிவிட்டு விஜயா கிளம்பினார். 

அவர் திரும்ப வந்தபோது இரவு எட்டாகி இருந்தது. 

“என்னாச்சு மேடம்? ஏதாவது துப்பு கிடைச்சதா?”

“துப்பு தேடி போனா இன்னுமும் கேஸ் சிக்கலாகுது”

“என்ன சிக்கல்”

“இன்னைக்கு சோலைமலை சிபாரிசில் விருகம்பாக்கத்தில் ஒரு ரிட்டையர்டு போலீசை சந்திச்சுட்டு வந்தேன்” சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினார். 

“சோலைமலை நீங்க லால் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் கிடைச்சா ஷேர் பண்ண சொன்னிங்கன்னு சொன்னாரு”

“ஆமா சார். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

“லால் மும்பைதான். இருந்தாலும் நம்ம ஏரியாவில் கொஞ்சநாள் சுத்திகிட்டு இருந்தான்”

“அப்படியா? எந்தப்பக்கம்”

“துறைமுகம் பக்கம்தான். இவனுக்கு மூல தொழிலே கள்ளக்கடத்தல் தானே… “

“சரி… “

“நாங்க ரோந்து வரும்போது ஒரு தடவை சக்கையா சிக்கினான். பிடிச்சுறலாம்னு பாத்தோம், அதுக்குள்ளே லோக்கல் கேங்க் ஒன்னு கான்ஸ்டபிள் ஒருத்தரை தாக்கிட்டு அவனை தூக்கிட்டு போயிருச்சு”

யோசித்தார் விஜயா “லோக்கல் கேங்கா… அப்ப அவனுங்க கூடவும் கூட்டு இருந்திருக்கு. லால் இங்க இருக்குற அவன் சம்பந்தப்பட்ட வேலைகளை இந்த சென்னை கேங்தான் முடிச்சு வச்சிருக்குன்னு சொல்லலாமா?”

“கண்டிப்பா… அவனுங்களும் லேசு பட்டவனுங்க இல்லை, கடத்தல், கொலை, கற்பழிப்புன்னு எல்லா குற்றச்செயல்களையும் செய்றவனுங்கதான்”

“அந்த கேங்கில் யாரையாவது அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா? தகவல் சேகரிக்கத்தான்”

“உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை மேடம். அந்த கேங்கே இப்ப கலைஞ்சிருச்சு”

அதிர்ந்தார் “எப்படி”

“புளிக்கரை மோகன் தெரியுமா?”

“இப்ப சமீபத்தில் செத்துப் போனானே. ஆக்ஸிடெண்ட்னு படிச்ச நினைவு. நமக்குத்தான் இந்த கிரிமினல்ஸ் பத்தின தகவல்கள் எல்லாம் அப்படியே மண்டைல எறிருதே”

“அவனேதான் மேடம்… காஸ் சிலிண்டர் வெடிச்சு விபத்தில் செத்து போய்ட்டான்னு சொல்றாங்க. ஆனால் நான் நம்பல. அவனோட எதிரிங்க யாராவது போட்டுத் தள்ளிருப்பானுங்க. நான்தான் போட்டேன்னு சில கும்பல் சொன்னதா கேள்வி. என்ன நடந்துச்சுன்னு தெரிய வாய்ப்பில்லை”

லால் செத்து போய்ட்டான் அதை சோலைமலை உட்பட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது.  புளிக்கரை மோகனும் காலி. தலையை பிச்சுக்கலாம் போல விஜயாவுக்கு இருந்தது. இருந்தாலும் அவனுடன் இருந்த யாராவது ஒருவனை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக் கொண்டு விடைபெற்று அறைக்கு வந்தார். 

“எனக்கு ஒரு கேஸ் விஷயமா துப்புத்துலக்க இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச களவாணித்தனம் தெரியணும். அதுக்கு மேல இன்வால்வ் ஆக மாட்டேன்”

“அதுதான் மேடம் உங்களுக்கும் நல்லது. ஏன்னா மோகன் செத்து போனாலும் கூட லால் அவனைவிட பெரிய கிரிமினல். இப்போதைக்கு தலைமறைவா இருக்கான். இருந்தாலும் அவன் சம்பந்தப்பட்ட விசயம் ஏதாவது நம்ம டச் பண்ணோம் தொலைச்சு கட்டிருவான்” என்று எச்சரித்தார்.

அய்யா அந்த லாலே அவன்தான் செத்துப்போனான்னு தெரியாத மாதிரி யாரோ ஒரு முத்துராமன் பெயரில் அடக்கமாகிருக்கான் என்று சொல்வதற்கு முடியாமல் ஜாக்கிரதையாக நடந்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அறைக்கு வந்திருக்கிறார்.

“இதுதான் நடந்தது. லால் மோகன் ரெண்டு பேரும் இறந்தது விபத்து மாதிரி நடந்த கொலை. பேட்டர்ன் பார்த்தா ஒரே கேங் தான் செஞ்ச மாதிரி இருக்கு ஆனால் யார் செஞ்சது? எதுக்காக? இதுதான் நம்ம கண்டுபிடிக்கணும்” யோசனையுடன் சொன்னார். 

“சரி உங்க ப்ரோக்ரேஸ் சொல்லுங்க”

தென்னாடன்  அல்லி இருவரின் முகத்திலும் அப்படி ஒரு தெளிவு. 

“ஏதாவது தேறுச்சா?”

“பலது… “

காலை நீட்டி எதிரே இருந்த மோடாவில் போட்டுக் கொண்டே கேட்டார் “சொல்லுங்க ஒண்ணொண்ணா கேட்போம்” 

“நீங்க இங்கேருந்து கிளம்பியதும் நாங்க ராஜியோட பட்டன் போனை ஆன் பண்ணோம்” ஆரம்பித்தாள் அல்லி 

“அதுல இருக்குற IMEI அப்படின்னு சொல்ற கிட்டத்தட்ட மொபைல் போனோட ஆதார் கார்டுன்னு வச்சுக்குவோம். அது சிக்னல் வெளிய போய்டா கூடாதுன்னுதான் அவ பாரடே பவுச்ல வச்சிருந்தா போலருக்கு. அப்பறம் ICCID அதை எடுத்து சைபர் டீம்ல கொடுத்து இந்த போன் யாரோடதுன்னு கண்டுபிடிக்க சொன்னோம்”

“நான் சொல்லவா… விலாசத்தை கண்டுபிடிச்சு உரிமையாளரைத் தேடி போனா இந்த பட்டன் போன் பல வருசம் முன்னாடியே தொலைஞ்சு போச்சுன்னு  சொல்லிருப்பாங்களே” என்று விஜயா சொல்ல, 

“ஐயோ அப்படியே சொல்றிங்களே மேடம்” என்று ஆச்சிரியப்பட்டாள் அல்லி. 

“பட்டன் போன்தானேன்னு தொலைச்சவங்களும் கவனக்குறைவா இருந்திருப்பாங்க. சமூக விரோத செயல்களுக்கு அவங்க அடையாளம் பயன்படுத்தப்படலாம். அதனால மக்கள் அசால்ட்டா இருக்கக் கூடாது”

“சரிதான் மேடம். இந்த செல் குறைவாகத்தான் பயன் படுத்தப்பட்டிருக்கு. கால் ஹிஸ்டரி கேட்டிருந்தோம் 2-3 மணி நேரத்தில் அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க. இன்னும் அரைமணி நேரத்தில் கிடைக்கும்”

பெருமூச்சு விட்டார் “அதில் ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பார்ப்போம்”

“தகவல் இன்னும் ஏராளமா இருக்கு மேடம்” என்றான் தென்னாடன். 

“அப்படியா… “ சுறுசுறுப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் விஜயா. 

“நம்ம சோலைமலை சார் அனுப்பின தகவல்கள். ராஜியோட லேப்டாப்ல கிடைச்ச தகவல்கள் எல்லாம் வச்சு அவளோட ஹிஸ்டரியே கிடைச்சிருச்சு”

“அப்படி எதுவும் சோலைமலை எங்கிட்ட சொல்லலையே. பெருசா ஒரு தகவலும் பெயரலைன்னு சொன்னார்”

“அவர் ரெண்டு லேப்டாப்பை கைப்பற்றி இருக்கார். ஒன்னு ராஜி சமீபத்தில் உபயோகப்படுத்தினது. ரீசன்ட் தகவல்கள் ஒரு குறிப்பும் தரல. ஆனால் அவளே சில வருடங்களுக்கு முன்னாடி உபயோகிச்சு பழசாகி தூக்கிப் போட்ட லேப்டாப் ஒன்னு ரித்திக் ரூமில் இருந்துச்சு. அவனோட அனுமதியோடு அதை எடுத்துட்டு வந்துட்டோம். அதில்தான் தொடங்குது ராஜியோட ரகசிய வாழ்வின் ஆரம்பக்கட்டம்”

You cannot copy content of this page