தாமரை குளம் – 19

அத்தியாயம் – 19

அலுவலகத்துக்கு வந்த விஜயாவை, சோர்வோடு பார்த்த கண்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் சொன்னார் 

“ஹாண்ட் ஓவர் பண்ணச் சொல்றாங்க. பண்ணலாம். பார்மலிட்டிஸ் பண்ணிடலாம். ஆனா… இந்த வழக்கை நான் விட்டுட மாட்டேன்.”

“என்ன மேடம் சொல்றிங்க”

“இன்னைக்கே சென்னைக்கு கிளம்புறோம்”

“சென்னையா?” அல்லி கண்களைச் சுருக்கினாள்.

 “ஆமாம் சென்னை கிளம்புறோம். தென்னாடன் லீவு சொல்லிட்டு வரட்டும். ரித்திக் விசாரணை ரெக்கார்ட்ஸ், கைபற்றிய டிவைஸ்கள் எல்லாம் பாதுகாப்பா வச்சிருக்க சொல்லி வடபழனி ஸ்டேஷனுக்கு மீண்டும் தகவல் சொல்லிடுங்க. விக்டர் தவிர லாலோட கூட்டாளிகள் லிஸ்ட் எடு கிரேஸ். சென்னைல யாராவது  இருந்தா அனுப்பு. அப்படியே அங்க ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பாக்கலாம்” என்று தெளிவாக கட்டளையிட்டார். 

“ஆமா. பார்மலிட்டிஸ் ஹாண்ட் ஓவர் பண்ணுற மாதிரி காட்டிக்கிட்டு, நம்ம வேலை நாம பாக்கணும்”  

அல்லி தென்னாடான் இருவரும் விஜயாவுடன் கிளம்ப, கிரேஸ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களுக்கு தேவையான குறிப்புக்களை தயாரிக்க ஊரில் தங்கிவிட்டார். 

பஸ் ஸ்டான்ட்டில் நின்றபோது “மேடம் நமக்கு பிளைட் டிக்கெட் தர வேண்டாம். ஒரு ட்ரெயின் டிக்கெட். சரி அவசரமா போகும்போது கிடைக்காதுன்னு சொல்லுவீங்க. ஆனா ஒரு ஆம்னி பஸ்லயாவது டிக்கெட் போடலாம்ல. இந்த பஸ்ஸை பார்த்தாலே பயமாருக்கு. இதில் தான் போகணுமா ?” அல்லி கேள்வி கேட்க, 

“அரசாங்க சம்பளக்காரங்க அரசாங்க பஸ்ஸில் போக தயங்கினா எப்படி அல்லி” 

“போங்க மேடம்… இந்த பஸ்ஸில் சென்னைக்கு போறதுக்குள்ள என் முதுகே ஒடியப்போவுது. இதில் எனக்கு பீரியட்ஸ் வேற, இவனுங்க நிறுத்துற இடத்தில் பாத்ரூமை பாத்தாலே வாந்தி வரும்”

“பாரு அல்லி ரெண்டு பேரா இருக்குறதால பஸ் டிக்கெட். இதுவே பதினஞ்சு இருபது பேரு போறதா இருந்தா நம்ம டிபார்ட்மென்ட் ஒரு வண்டில திணிச்சு அனுப்பிரும்”

“ஆமா ஆமா… நமக்கு இதுவே பெருசு போலருக்கு” அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் நின்று விடாமல் கார் ஹாரனை அடித்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான் ஒருவன். 

“ஏய் என்னடா திமிரா” என்று காவல்துறை குரலில் அல்லி கத்தியவண்ணம் திரும்பிப் பார்க்க, 

அங்கே காரை ஒட்டிக் கொண்டு வந்திருந்தான் தென்னாடன் . அவள் கத்தியதை திகைப்புடன் பார்த்துவிட்டு அப்படியே ஸ்டியரிங்கில் வைத்தவண்ணம் உறைந்துவிட

“அல்லி பாரு தென்னாடானை பயப்படுத்திட்ட… இனி அவரால காரை ஓட்ட முடியுமான்னு தெரியலையே”

“ஏய் தென்னாடா பயந்துட்டியா” டிரைவிங் சீட்டில் அமர்ந்திருதவனை ஜன்னல் வழியே கையை விட்டு தோளை பிடித்து உலுக்கினாள். 

“பயந்தேனா… நீ கத்துன கத்தில் என்னோட  ஹார்ட்டே  வாய் வரைக்கும் வந்துருச்சு”

“வண்டியை எடுத்திட்டு வந்திருக்கியே ஆனா இதுக்கான துட்டை  எல்லாம் எங்களுக்கு ரீஎம்பர்ஸ் பண்ண மாட்டாகளே”

“நீயும் மேடமும் பஸ்ஸில் போகலாம் ஆனா என்னால முடியாது. மெட்றாஸ்க்கு போனாலும் வெளிய போக வர கார் இருந்தாத்தான் சவுரியம். வந்து ஏறுங்க”

அப்பாடா என்றிருந்தது அல்லிக்கு. முதலில் பயணத்தின் போது பாதுகாப்பான இடத்தில் கழிவறைக்கு செல்லலாம். ஒவ்வொரு முறையும் இந்த கார் பயண சொகுசெல்லாம்  அவளது வேலைக்கு சாத்தியமில்லை. இந்த சூழ்நிலைக்கு விரைவில் பழகிக்கொள்ள வேண்டும். 

பயணத்தின் போது தூக்கமே வரவில்லை அல்லிக்கு. கேள்விகள் கேட்டு தொணத்தி எடுத்துவிட்டாள்.

 தென்னாடன் 

“இதபாரு, நீங்க நேத்தும் தூங்கல. நான் காலைல நல்லா தூங்கி எந்திருச்சு கார் ஓட்டத் தயாரா வந்திருக்கேன். இப்ப சென்னை போனதும் நீங்க ஸ்டேஷன் போயிட்டு வர்ரதுக்குள்ள ஒரு 4 மணி நேரம் நல்லா தூங்கிருவேன். நீ பேய் மாதிரி ராப்பகலா தூங்காம முழிச்சு டயர்ட் ஆகப்போற… “

“விடுங்க தென்னாடன் அல்லியோட முதல் கொலை கேசு. அதனால ஆர்வம்… நாளைக்கு துப்பு கிடைச்சதும் அந்த டைரெக்ஷனில் பிரசீட் பண்ணலாம். இப்ப கொஞ்ச நேரம் தூங்கு” என்று சொல்லி அவளை உறங்கச் சொன்னார் விஜயா. 

காலையில் சென்னை மக்கள் காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டதை போல பரபரவென ஓடிக் கொண்டிருந்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் நம்ம டீம் வேற என்ன செஞ்சுட்டு இருக்கும்? கழுதை கெட்டா குட்டிச்சுவர்தானே… டீக்கடையில் அன்றைய நாளிதழை வாங்கி கண்களால் தலைப்பு செய்தியை படித்தவண்ணம் டீ குடித்துக் கொண்டிருந்தனர். 

“நீ ஸ்டேஷனுக்கு வரலையா?”

“வந்து ஒரு பிரோஜனமும் இல்லை. நீ என்ன நினைச்சிட்டு இருக்க. நீன் போயி கேட்டதும் சாட்சியங்களை தூக்கித் தந்துருவாங்க நம்ம ஒரு கட்டப்பைல தூக்கிப் போட்டுகிட்டு ஈத்தாமொழிக்கு கிளம்பிராலாம்னா?”

“அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல பார்மாலிட்டி ஜாஸ்தின்னு தெரியும். எஃப்‌ஐ‌ஆர் காப்பி அப்பறம் ரெக்குவசிஷன் லெட்டர போயி வடபழனி ஸ்டேஷனில் கொடுக்கணும். அவங்க கோர்ட்ல ஒப்படைச்சிருந்தா அங்க போயி ஃபார்ம் சப்மிட் பண்ணி ஆதாரங்களை பெற விண்ணப்பிக்கணும்”

“எத்தனை ஃபார்ம், லெட்டர் பாத்தியா? இதை எல்லாம் முடிக்க எத்தனை நாளாகும்?”

“2, 3 நாள்”

“ஒரு வாரத்துக்கு குறையாது. இப்ப தெரியுதா ராஜாராம் எதுக்காக இந்த வேலையை முடிச்சுட்டு வான்னு நம்ம மேடமை அனுப்பி விட்டிருக்காருன்னு”

“புரிஞ்சுது” ஆனாலும் முழுமையாக அல்லிக்கு அன்றே விவரம் தெரியவந்தது. 

வடபழனி ஸ்டேஷனில் சுமூகமான சூழ்நிலையே நிலவியது. சோலைமலை பார்மாலிடீஸ் எல்லாம் விரைவாக முடிக்க வேண்டியவற்றை செய்திருந்தார். 

“சுந்தரலிங்கம் சார் உங்களை பற்றி சொல்லிருக்காரு மேடம்”

“சுந்தரலிங்கமா… செங்கல்பட்டில் தானே இருக்கார்”

“ஆமாம் நானும் அவரும் அஞ்சு வருஷம் ஒண்ணா வேலை பண்ணிருக்கோம். நீங்க ரெண்டு பேரும் ஒரே பேட்ச்சுன்னு சொல்வார்”

எதனால் இவ்வளவு உதவி என்று தெரிந்தது. சுந்தரலிங்கத்திற்கு ஒரு கேஸ் விஷயமாக மதுரை வந்தபோது விஜயா கூட இருந்து முடித்துக் கொடுத்தார். ஈகோ பிரச்சனையில் சிலர் சிக்கியிருந்தாலும் இது போன்ற நட்பு வட்டங்கள் காவல்துறைக்கு மிகவும் முக்கியம். 

“எனக்கு டூட்டி காலைலயே முடிஞ்சுருச்சு. உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். ரைட்டர் இன்னைக்கு கோர்ட்டுக்கு கூட வந்து எவிடென்ஸ் எல்லாத்தையும் சீக்கிரம் வாங்க ஹெல்ப் பண்ணுவார்”

“முடிச்சுட்டு சாயந்தரம் வந்து பாக்குறோம். நைட் எங்க கூடதான் உங்களுக்கு  சாப்பாடு” 

விடை பெற்றுவிட்டு விஜயா அல்லியை அழைத்துக் கொண்டு கோர்ட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்தார். 

அறைக்கு திரும்பும் வழியில் “என்ன மேடம் ஆதாரம் கையில் கிடைக்க இன்னும் 3 நாளாவது ஆகும்னு ரைட்டர் சொல்லறாரு. எப்ப ஆதாரத்தை கைப்பற்றி ஆராய்ஞ்சு” புலம்பிக் கொண்டே வந்தாள். 

“ஆதாரம் கையில் கிடைச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை அல்லி”

“என்ன சொல்றிங்க”

“ஆதாரங்கள் எல்லாம் பேக் செஞ்சு அழகா சீல் செஞ்சு கையெழுத்து போட்டு கோர்ட்டில்  ஒப்படைச்சிருப்பாங்க. அதை அப்படியே கொண்டு போயி ராஜாராம் கிட்ட ஒப்படைக்கணும். சீலை உடைக்க நமக்கு அதிகாரம் இல்லை. இது நம்மை அந்த இடத்திலிருந்து சில நாட்கள் அப்புறப்படுத்தத்தான் திட்டம் போட்டு கொடுக்கப்பட்ட வேலை”

திகைத்துப் போனாள்.“அந்தாள் சரியான…. “ அதற்கு மேல் தொடர முடியாமல் வாயை மூடிக் கொண்டாள் அல்லி.

“அதனால ஆதாரமா கிடைச்ச மொபைல், லாப்டாப் எல்லாத்தையும் திறந்து நோண்டிப் பார்த்து தடயங்களை கண்டு பிடிக்கலாம் அப்படின்னு திட்டம் போட்டிருந்தா அதை இங்கேயே குழி தோண்டி புதைச்சுட்டு ரூமில் ஒரு குளியல் போட்டுட்டு நல்லா படுத்துத் தூங்கு”

“அப்பறம் எப்படித்தான் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறது” என்ற அல்லியின் கேள்விக்கு அன்று இரவே விடை கிடைத்தது. 

You cannot copy content of this page