தாமரை குளம் – 9

அத்தியாயம் – 9

சூரியன் உச்சி நேரத்தில் உக்கிரமாக எல்லோருடைய தலையிலும் காய்ந்து கொண்டிருந்தான்.

ரோட்டோரத்தில் மரத்தடியில் இரண்டு மூன்று பாட்டிகளும் ஒரு இளநீர் கடை மற்றும் டீக்கடை  இவற்றைக் கண்டவுடன் அங்கு போலீஸ் ஜீப்பை நிறுத்தி  இருந்தான் சேது

நெற்றியில் பெருகி வழிந்த வியர்வையை கர்ச்சிப்பால் துடைத்தபடி அங்கு  ரோட்டோரமாக மரவள்ளி கிழங்கு அவித்து துண்டு போட்டு விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம் கிழங்குகள் சில வாங்கிக் கொண்டார் விஜயா.

“அந்த கிண்ணத்துல வச்சிருக்கியே அது என்னம்மா “

“காந்தாரி மொளவு, சின்ன உள்ளி, தேங்காய் போட்டு இடிச்சு செஞ்சது. சப்புனு இருக்கிற கிழங்குக்கு தொட்டுக்கிட நல்லா இருக்கும்”

“சரி அதை ஒரு பொட்டலத்தில்  மடிச்சுக் கொடு”

பணத்தை தருவார்களா மாட்டார்களா என்று சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு நூறு ரூபாய் தாளைப் பார்த்ததும் முகம் எல்லாம் மலர்ச்சி.

“ஏம்மா அரை டஜன் கதலிப்பழம் குடுமா”

பக்கத்தில் இருக்கும் அம்மாவிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டு மத்தியான சாப்பாட்டுக்கு வழி செய்து விட்ட திருப்தியோடு விஜயா.

24 மணி நேரமாய் உண்ணாம உறங்காம இங்கும் அங்கும் அலைந்ததில் வயிறு என்ற ஒன்று இருந்ததே மறந்து போயிருந்தது அவருக்கு. இந்தப் பாட்டிகள் மட்டும் கிழங்கும் பழமும் இங்கு விக்காமல் இருந்திருந்தால் இவர் டீமில் அனைவரும் மதியமும் பட்டினி தான் இருந்திருப்பார்கள். டீயை மட்டுமே நம்பி அன்று முழுவதையும் ஒட்டி இருப்பார்கள்.

“மேடம் கலாரூபம்ல இருந்து கால்”

விஜயா அல்லியின் குரல் கேட்டு ஓட்டமும் நடையுமாக ஜீப்புக்கு விரைந்தார்.

செய்தி எப்படி இருக்கும்? காயா பழமா தெரியல… ஆனால் அடுத்து என்ன செய்வதுன்னு முடிவெடுக்க அங்கிருந்து வரும் செய்தி மிக உதவியாக இருக்கும்.

தமிழ்நாடு போலீஸ் என்பதால் அங்கு கடையில் வேலை பார்க்கும் தமிழ் தெரிந்த ஒரு நபரை பதிலளிக்க சொல்லி இருப்பார்கள் போலும்.

“நமஸ்கார் மேடம். தமிழ்நாடு போலீஸ்லிருந்து ஒரு ட்ரெஸ்ஸோட போட்டோ அனுப்பி அத பத்தின விவரம் தெரியுமான்னு கேட்டிருந்தாங்க. அந்த சுடிதாரோட சீரியல் நம்பரை உள்ளுக்குள்ளார மறைவா சின்ன லேபிள்ல தச்சு வச்சிருப்போம். அதையும்  தெளிவா போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி இருந்தோம். நீங்க சரியா அனுப்பிட்டதுனால எங்களுக்கு மேற்கொண்டு தகவல்கள் திரட்ட உதவியாகவே இருந்தது மேடம்”

சாப்பாடு எதுவும் சாப்பிடாமலேயே வயிறு சில்லென்றானது விஜயாவுக்கு.

சீரியல் நம்பரை எப்படி எடுத்த என்று கண்களாலே அல்லியிடம் கேள்வி கேட்டார் விஜயா.

“சையது கிட்ட சொல்லி போட்டோ எடுத்து அனுப்ப சொன்னேன்” என்றாள்.

சையது அங்கு எவிடன்ஸை பாதுகாக்கும் இடத்தில் குமாஸ்தாவாக வேலை பார்ப்பவன். அல்லியின் வயதினன் ஆதலால் இருவரும் தோழர்களாகி விட்டார்கள்.

நல்ல வேளை சையத்தின் உதவியால் உடனே போட்டோ எடுத்து அனுப்ப முடிந்தது. ஒவ்வொரு முறையும் அல்லி நேரில் சென்று விவரங்களை வாங்கி  தரும்படி இருந்தால் நேர விரையம்தான்.

மறுமுனையில் அந்த நபர் தங்கள் நிறுவனத்தைப் பற்றி சொன்னார்.

“முதல்ல எங்களோட சர்வீஸ் பத்தி சொல்லிடுறேன். நாங்க ஒரு டிசைன்ல மூனே மூணு உடை மட்டும் தான் செய்வோம். ஏன்னா எங்களுக்கு மூணு பிரான்ச் தான் இருக்கு. சென்னையில ஒண்ணு, பெங்களூர்ல இரண்டாவது கடை, மும்பை தான் ஹெட் ஆபீஸ்.

நீங்க அனுப்பின சுடிதாரும் மூணு தான் ரெடி பண்ணோம். அந்த மூன்று உடையும் கூட ஒரே மாதிரி இருக்காது, கொஞ்சம் மாறுதல்கள் செஞ்சுருப்போம். ஏன் அப்படின்னா எங்களோட வாடிக்கையாளர்கள் எல்லாரும் ரொம்ப பணக்காரங்க. அவங்களோட உடைகள் மாதிரியே இன்னொருத்தர் டிரஸ் போட்டுட்டு வந்தா அவங்களுக்கு பிடிக்காது.

அதனால கஸ்டமர் எங்களுக்கு தந்த டிசைன் வேற யாருக்கும் தரக்கூடாது ஸ்ட்ரிக்டா சொல்லிடுவாங்க.

அதனாலேயே துணி டிசைன் ஒரே மாதிரி இருந்தாலும் மாடலை மாற்றி போட்டு விடுவோம். அதுவும் இல்லாம ஒரு கடையில் ஒரு நிறத்தில் ஒரு டிசைனில் ஒரே ஒரு சுடிதாரோ சேலையோதான் இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி அதே பிரின்ட்ல தோடு வளையலில் இருந்து, பெண்டண்ட கைப்பை… ஏன் ஒரு சிலருக்கு கால் செருப்பு கூட அதே டிசைன்ல தந்திருக்கோம். ஒரே மாதிரி ரெண்டு செட் வேணும்னா எங்ககிட்ட ஸ்பெஷலா ஆர்டர் கொடுக்கணும்”

“அப்ப இந்த உடையும் அதே மாதிரி ஒரே மாடல்ல இருந்ததுன்னு சொல்றீங்களா. இந்த உடை, அதோட மாடல் வச்சு எந்த பிரான்ச்சில் இருந்து வித்தது என்று சொல்ல முடியும் ஆனால் யாருக்கு வித்தது என்று சொல்ல முடியுமா”

“இந்த டிரஸ் எங்க பொட்டிக்கோட  சென்னை கடையில விக்கப்பட்டு இருக்கு”

“சூப்பர் அப்ப யாருக்கு வித்தது அப்படின்ற தகவல் கிடைக்குமா”

“நாங்க சென்னை பிரான்ச்சுக்கு செய்தி அனுப்பி இருக்கோம் மேடம். ஒரு சாதகமான விஷயம் என்னன்னா இந்த மாடல் இப்ப  ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் ரிலீஸ் ஆனது. அதனால அதுக்கு சேல் பில் எல்லாம் பார்த்து மேற்கொண்டு தகவல உங்ககிட்ட டைரக்டா whatsapp ல அனுப்ப சொல்லி இருக்கோம்.பெரும்பாலும் எங்ககிட்ட துணி வாங்குறவங்க வாடிக்கையாளர்கள் தான். இவங்களும் எங்க வாடிக்கையாளராக இருக்கறதுக்கு சான்சஸ் இருக்கு”

“ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்களுடைய தகவல் இந்த கேசுக்கு மிக மிக உதவியா இருக்கும்”

அலைபேசியை வைத்ததும் இந்த செய்தியை அல்லிடம் பகிர்ந்து கொண்டார்

“அல்லி உன்னால தான் இந்த கோணத்தில் கேசை பார்த்தோம். ரொம்ப ரொம்ப நன்றி”

“நன்றி அந்த பொண்ணுக்கு தான் சொல்லணும் மேடம். அவள் இந்த மாதிரி  கடையில போயி துணி வாங்குற அளவுக்கு பணக்காரியா இல்லன்னா, நம்மள மாதிரி சாதாரண கடையில துணியை வாங்கி தச்சு போட்டுக்குற மிடில் கிளாஸ் பொண்ணா இருந்திருந்தா, இந்த கேஸ் கிணத்துல போட்ட கல்லு மாதிரி அங்கேயே  இருக்கும். இந்த அளவு கூட துப்பு  கிடைத்து இருக்காது”

“வாழ்க்கையில சின்ன விஷயங்கள் கூட பணக்காரங்களா இருந்த ஈசியா இருக்கும்னு சொல்ல வர”

” அதுல என்ன சந்தேகம் மேடம். நானெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கும் போது அம்மாவோட சேலையை டெய்லர் கிட்ட கொடுத்து சுடிதார் தச்சு போட்டு இருக்கேன். என்னை  மாதிரி ஒரு பொண்ணா இருந்தா எப்படி கண்டுபிடிக்க முடியும்”

“அட நான் மட்டும் என்ன வித்தியாசமா எங்க வீட்டுல எங்க அம்மாவோட சேலையை ரெண்டா கிழிச்சு நானும் என் தங்கச்சியும் பாவாடை தைச்சுக்குவோம். அதே தானே இப்ப ஃபேமிலி பாவாடை, செட் பாவாடைன்னு விக்கிறாங்க. நம்ம அப்பவே 2கே ட்ரெண்டல இருந்து  இருக்கோம்”

“அடுத்து என்ன செய்றது மேம். கலாரூபம் சென்னை பிரான்சில் நம்மள காண்டாக்ட் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணலாமா இல்லை நம்மளே அவங்கள காண்டாக்ட் பண்ணி பேசிடலாமா?”

“இப்பதானே மும்பை ஆபீஸ்ல தகவல் சொல்லி பழைய பில் தேட சொல்லி இருப்பாங்க. இன்னும் அவங்க சேல் பில் எல்லாம் பாத்துட்டு நம்மள தொடர்பு கொள்ள கொஞ்ச நேரம் ஆகும். ஒரு ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சு அவங்கள காண்டாக்ட் செய்தால் போதும்”

“நம்ம அடுத்த பிளான் என்ன மேடம்?”

“நான் என் கையில இருக்கிற ஒரு முக்கியமான பொருளை அர்ஜெண்டா தென்னாடன் கிட்ட கொடுக்கணும். அப்புறம் ஆக்சிடென்ட் கேஸ்ல இருக்கிற வண்டியோட ஓனர் பத்தின தகவல் கிடைச்சிருக்கு. இங்க தான் பக்கத்துல தூத்துக்குடியில் இருக்காரு நான் போய் பார்க்க வேண்டியது இருக்கும்.

நீ அந்த மூட்டைகள் இருக்கிற இடத்துல போய் உன்னுடைய இன்வெஸ்டிகேஷன ஆரம்பி. ஆனா அது எல்லாத்துக்கும் முதல்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு”

“அது என்ன மேடம் முக்கியமான வேலை”

“ரொம்ப நேரமா நம்ம வண்டிய பின் தொடர்ந்துட்டே வந்துட்டு இருக்கானே அந்த டூவீலர் காரன்…”

தூரத்தில் நல்ல பிரவுன் கலரில் ஒரு சட்டையை போட்டுக் கொண்டு டீ குடிப்பது போல் நின்று கொண்டு இவர்கள் ஜிப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் டேய் போலீஸ்காரங்களயே மோப்பம்  பிடிக்கிறியா?

“ரகசியமா போயி அங்க இளநீர் வாங்குற மாதிரி நின்னுகிட்டு, அவன் மூக்கில் நீ முழங்கைல விடுற பன்ஞ்சுல அவன் சில்லு மூக்கு உடைஞ்சு ரத்தம் வரணும்.

அதுக்கப்புறம் நான் வந்து மூக்கு தொடைக்கிறதுக்கு  துணியை கொடுத்துட்டு, எதுக்காக எங்களை காலையிலிருந்து பின் தொடர்ந்து இருக்க அப்படின்னு கேட்கணும்.

சேது நீங்க டீ வாங்குற மாதிரி போயி அவன் தப்பிக்காமல் ஆப்போசிட் டைரக்ஷன்ல லாக் பண்ணிக்கோங்க. நான் வந்தேன்னா உஷார் ஆயிடுவான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page