தாமரை குளம் – 7

அத்தியாயம் – 7

“நிஜமாகத்தான் சொல்றீங்களா தென்னாடன்?”

“நானும் பாத்துட்டேன் மேடம்… நெஜமா தான்… இன்னும் டெஸ்ட்ங்க சிலது செய்ய வேண்டி இருக்கு செஞ்சுதான் நம்ம கணிப்ப உறுதிப்படுத்திக்க முடியும்”

“ஏற்கனவே மேல் இடத்துல பிரஷர் தாங்க முடியல. மீடியா வேற குதிச்சுக்கிட்டு கெடக்கு. இதில் டெஸ்ட் ரிசல்ட் வேற தாமதம் ஆகும்னு சொன்னா எவனும் நம்ப கூட மாட்டானே. நம்மளத் தாளிச்சு எடுத்துடுவாங்க”

“வேற வழியே இல்ல மேடம். நீங்க பொறுத்து தான் ஆகணும். சில விஷயங்கள்ல தடாலடியா முடிவெடுக்க முடியாது. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு முதல்ல டெத் ரீசனை தப்பா சொல்லிட்டோம் இதுதான் உண்மையான காரணம்னு சொல்ல முடியாது இல்லையா”

“ஐ அக்ரி. காரணங்களை மாத்தி மாத்தி சொல்றது  இன்வேஸ்டிகேஷனோட உண்மை தன்மையே சந்தேகத்துக்கு உள்ளாக்கிடும். சரி எவ்வளவு நாளைக்குள்ள ரிசல்ட் சொல்லுவீங்க”

“மேக்ஸிமம் ஒன் வீக்ல பைனல் ரிசல்ட் தந்துருவோம் மேடம்”

“ஆக்சிடென்ட் கேஸ் தான் இந்த அளவு சொதப்பிருச்சு. சரி அந்த பொண்ணோட பாடி…”

“அந்த பொண்ணுக்கு அட்டாப்சி ஸ்டார்ட் பண்ணியாச்சு. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் பார்மால்டீஸ் முடிஞ்சிடும்”

“அட போங்கப்பா, முதல் பாடிக்கு ஆக்சிடென்ட் கேஸ்தான் ரெண்டு மணி நேரத்துல எல்லாம் முடிச்சு பாரன்சிக் ரிப்போர்ட் வந்துரும்னு சொன்னிங்க. அதுவே இன்னும் ஒரு வாரத்துக்கு இழுக்கும் போல இருக்கே”

“எங்க கணிப்பும் தவறா போகுதே, என்ன செய்றது மேடம்”

“மீடியா பீப்பிள் கேள்விகளுக்கு அவசரத்துக்கு ஆன்சர் பண்றதோட அக்யூரேட்டா ஆன்சர் பண்றது நமக்கு ரொம்ப முக்கியம். நீங்க கண்டினியூ பண்ணுங்க”

தென்னாடன் சென்று விட அதற்காகவே காத்துக்கொண்டிருந்தார் போல அல்லி தயங்கியபடியே விஜயாவிடம் வந்தாள்

“மேடம் கொஞ்சம் வீடு வரைக்கும் போயிட்டு வந்துரட்டுமா”

“என்னம்மா ஆச்சு? முக்கியமா ரிசல்ட் தர சமயத்துல போயிட்டு வரேன்ற”

“பீரியட்ஸ் வந்துருச்சு மேடம். சானிட்டரி பேடு பேக்ல வச்சிருக்கேன் ஆனா இங்க மாத்திக்க இடம் இல்ல. மரத்துக்கு பின்னாடி எங்கேயாவது ஒதுங்கலானு பார்த்தா எல்லா இடத்திலும் மக்களும் மீடியாவும் இருக்கு பிரைவசி சுத்தமா இல்ல. கண்டிப்பா வீட்டுக்கு போகணும் மேடம்”

இது போன்ற சமயத்தில் மரத்தையும் புதரையும் தேடி ஓடியவர் தானே விஜயாவும். அதுவும் இரண்டாவது குழந்தை பிறந்து பல மாதங்களுக்கு பீரியட்ஸ் நிக்கவே இல்லை. காக்கிச்சட்டை வீட்டு வாசலுக்கு வருவதே மானக்கேடாக நினைக்கும் நம் மக்கள் பெண் போலீஸ் வீட்டிற்குச் சென்று பேடை மாற்ற அலோ செய்வதாகவது ஒன்றாவது . அதனால் ரத்தப்போக்குடன்  இன்வேஸ்டிகேசனுக்கு அலைந்து களைத்துப் போனவர் தான் விஜயாவும். அவரால் உணர முடியாதா என்ன?

வெளிநாடுகளில் மொபைல் டாய்லெட்ஸ் இருக்கிறதாம்.  இந்தியாவுக்கு அது எப்போது வரப் போகிறதோ தெரியவில்லை. அதுவரை காவல் பணியில் இருக்கும் மகளிர்க்கு சில சலுகைகள் தேவைதான்.

“சரிம்மா போயிட்டு டைரக்ட்டா ஸ்டேஷனுக்கே வந்துரு. நாங்களும் அந்த பொண்ணோட அடாப்சி ரிசல்ட் வந்ததும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவோம்”

***

“ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிடுடி. ஏற்கனவே வயித்து வலி இதுல வெறும் வயித்தோட அலைஞ்சா  பொரட்டிக்கிட்டு வரும்”

“சொன்னா கேளும்மா… ஏதாவது சாப்டா தான் வயத்த பொரட்டிகிட்டு வரும். ஏன்னா நேத்து ராத்திரியில் இருந்து நான் பார்த்த காட்சிகள் எல்லாம் அப்படி. இன்னைக்கு என்ன விட்று”

வீட்டுக்கு வந்த சுருக்கோடு ஒரு குளியல் ஒன்றை போட்டுவிட்டு மறுபடியும் வேறு யூனிபார்மை மாற்றிக்கொண்டு. உடுத்தி வந்த யூனிஃபார்மை துவைக்க போட்டுவிட்டு கிளம்பினாள் அல்லி. அதற்குள் அவள் அம்மா இட்லியாவது சாப்பிடும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

கையில் ஏதோ பழைய இரும்பு துண்டினை வைத்துக் கொண்டு

“அல்லி வீட்டுக்கு தூரமா வேற இருக்க. இதுல பிணத்து பக்கம் எல்லாம் நிக்க வேண்டி இருக்கு. இந்த இரும்பு துண்டை கையோட எடுத்துட்டு போ பேய் பிசாசு அண்டாது”

தாயின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து மறுக்க மனமில்லாத அந்த இரும்பு துண்டை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.

“ஏம்மா பேய் பிசாசு உண்மையாலுமே இருந்தா அவங்கள இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்கள தானே பழி வாங்கணும். அப்பாவியா காவல் காக்க போற எங்களை போய் ஏம்மா பயமூத்தனும்? அதுவும் நாங்க தான் அவங்கள பேயாக்குனவங்கள கண்டுபிடிச்சு தர பொறுப்பில் வேற இருக்கோம். இதெல்லாம் பார்த்தாவது அந்த பேயிங்க கருணை காட்ட கூடாதா”

“இங்க பாரு அதுக்கெல்லாம் ஆயிரம் காரணம் இருக்கும். அதுங்க செத்துப் போன உடனே ஒரு மாசத்துக்கு உடம்பு இருக்கிற இடத்தயேதான் சுத்திக்கிட்டு இருக்குமாம். உடம்புக்குள்ள போக முடியலன்னு கோவத்துல பக்கத்துல யாராவது இருந்தா அடிச்சுருமாம். இத பத்தி எல்லாம் தெரியாம வாய்க்கு வந்தபடி பேசிகிட்டு கிடக்கக் கூடாது.

பாரு பிஸ்கட் பாக்கெட் இருக்கு எடுத்துக்கோ. இந்த மோரையாவது குடிச்சிட்டு போ”

அம்மாவிற்கு அறிவியல் வகுப்பு எடுக்க இப்போதைக்கு அல்லிக்குத் தெம்பில்லை. அதனால் பிஸ்கட்டை வாங்கி போட்டுக்கொண்டு கடகடவென்று மோரை குடித்துவிட்டு

ஒரு பையில் பர்ஸ், அது தவிர அவளுக்கு தேவையான பொருட்களை திணித்து முதுகில் மாட்டிக் கொண்டு வேகமாக ஸ்டேஷனுக்கு ஓடினாள்.

அவள் ஸ்டேஷனுக்கு வந்தபோது அங்கே விஜயா மிக பரபரப்பாக தொலைபேசியில் பலரிடம் அப்டேட்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்

“கிரேஸ் அக்கா என்ன ஆச்சு டீடெயில்ஸ் எதுவும் கண்டுபிடிச்சீங்களா? அந்த தற்கொலை பொண்ணு பத்தின விவரம் ஏதாவது தெரிஞ்சுதா?”

“நம்ம முன்னாடியே சொன்ன மாதிரி தான் கழுத்து இறுக்கப்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கு. அதை மட்டும் தான் உறுதிப்படுத்த முடியும்.ஆனால் அது எப்படி, அவளே சுருக்கு போட்டு நடந்ததா இல்லாட்டி வேறு யாராவது கழுத்தை இறுக்குனாங்களா இதெல்லாம் இனிமேல் நம்ம புலனாய்வு செஞ்சுதான் கண்டுபிடிக்கணும்”

“கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு? அவளை யாரோ கொலை செஞ்சு மரத்துல கட்டி தொங்கவிட்டு இருக்காங்கன்னு நான் உறுதியாக சொல்லுவேன்.ஆனால் இந்த சட்டம் அதுக்கு கூட எவிடென்ஸ் கேக்குதே. நீங்க சொல்லுங்க அக்கா அந்த பாடிய கண்ணால பார்த்தீங்க இல்லையா அவள் தற்கொலை பண்ணிட்ட மாதிரி தோணுதா”

“நீயும் நானும் கண்ணால பார்த்தோம் அல்லி. ஆனால் சட்டத்துக்கு தான் கண்கள் கட்டப்பட்டு இருக்கே. அதனால அது கண்ணால பார்த்ததை நம்பாது. காதால கேட்கிற ஜோடனை கதைகளை நம்பாது. தீர விசாரிச்சு கிடைக்கும் எவிடென்ஸ்தான் உண்மையை நிரூபிக்க முடியும்”

“சிம்பிளா முடிஞ்சிடும் நெனச்சேன் அக்கா. ஆனால் ஒரு மரணம் எவ்வளவு வேலைகளை நமக்கு இழுத்து விடுது”

“இன்னொரு சுவாரசியமான தகவல் சொல்லட்டுமா. கார் விபத்து நடந்ததற்கு அப்புறம் தான் இந்த பொண்ணோட மரணம் நிகழ்ந்திருக்கு. இதை பாரன்சிக்ல உறுதிப்படுத்தி இருக்காங்க”

“ஓ அப்ப அந்த பொண்ணு மரணம் நிகழ்ந்தப்ப அவளுக்கோ இல்லை அவளை கொலை பண்ணவங்களுக்கோ இப்படி ஒரு விபத்து நடந்தது தெரிந்தே இருக்கும் கரெக்டா”

“ரொம்ப சரி ஆனால் மீடியாவுக்கு தெரியுறதுக்கு முன்னாடியே சில பேருக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு” என்ற விஜயாவின் குரலைக் கேட்டு அதிர்ந்து போனார்கள்

” முன்னாடியே தெரியுமா அப்ப தெரிஞ்சும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கமா இருக்காங்களா?அத எப்படி மேடம் கண்டுபிடிச்சீங்க”

“ஏன்னா இந்த கொலைக்கு நடந்த தாமரை குளத்துக்கு அந்த பக்கம் சில லாரிகள் வந்துட்டு போன தடங்கள் பதிவாயிருக்கு”

“அப்ப அந்த லாரில வந்தவங்க தான் கொலை செஞ்சிருப்பாங்களா?”

“அப்படியும் சொல்லிட முடியாது.அந்த லாரியில் இருந்தவங்க இந்த பாடிஸ், இந்த பொண்ணோட பாடியோ, அல்லது குளத்தில் இருக்கும் காரையோ பார்த்திருக்கலாம்”

“லாரி டயர் தடங்க எல்லாம் கிடைச்சிருச்சா மேடம்… அத வச்சு தான் உறுதி பண்ணிங்களா?”

“ஆமா. ரொம்ப லேசான தடங்கள்தான் கிடைச்சிருக்கு.மழைக்காலமானதுனால நிறைய எவிடன்ஸ் அழிஞ்சு போய் இருக்குது. அங்க இருக்கவங்கள எல்லாம் கொஞ்சம் விசாரிச்சதுல லாரிகள் எல்லாம் இங்கே அடிக்கடி வந்துட்டு போகிறதா தகவல் கிடைத்தது. அதுவும் சில குறிப்பிட்ட வகை லாரிகள் அங்கு வழக்கமா ராத்திரி நேரத்தில் நிக்கும் அப்படின்னு தகவல் கிடைச்சுது. அதைப்பற்றி இந்த விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கோம்.

கடைசியா ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த பக்கம் சில லாரிகளை பார்த்ததா சாட்சியங்கள் இருக்கு.

அதற்கப்புறம் லாரிகள் வரவில்லை அப்படின்னும் உறுதியான தகவல்கள் கிடைச்சிருக்கு”

“அப்ப அந்த கோணத்தில் பிடிச்சா ஏதாவது தகவல் கிடைக்கலாம் இல்லையா மேடம்”

“ஆமாம் அதையும் ஒரு பக்கம் முயற்சி செஞ்சுக்கிட்டு தான் இருக்கும் எல்லாம் செக்போஸ்ட் லாரிகள் வழக்கமா நிக்கிற இடத்துல இருக்கும் சிசிடிவிகள் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கோம்”

“செத்துப்போன அந்த பொண்ண பத்தி ஏதாவது தகவல் கிடைத்ததா மேடம்”

“இத்தனை கோடி ஜனங்கள்ல எங்கிருந்து அந்த பொண்ண கண்டு பிடிக்கிறது தெரியல… மிஸ்ஸிங் கேஸஸ் எல்லாம் கம்பேர் பண்ணிட்டு இருக்காங்க”

“பாடிய நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வந்துறட்டுமா?”

“எப்படியும் சில ஃபார்மாலிட்டீஸ்காக ஜி ஹெச் போக வேண்டி இருக்கு. நீயும் என் கூட வா”

சற்று நேரத்தில் ஜிஹெச்சை அடைந்த விஜயா, அங்கு சில தகவல்களை பெற்றுக் கொண்டு, பாடியையும் எவிடன்ஸ் செய்யும் தனது கோணத்தில் இன்வெஸ்டிகேட் செய்துவிட்டு வந்த அல்லியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

“இந்த பொண்ண பத்தி ஒரு லீடும் இல்லை அல்லி. நீ பாடிய பாத்தியா ஏதாவது தகவல் கிடைச்சுதா”

“பாடிய பார்த்தேன் மேடம் அப்படியே சில போட்டோஸ் எடுத்துட்டு வந்து இருக்கேன். ஆக்சுவலா அவள பத்தின தகவல் எல்லாம் அவகிட்டே இருக்கு மேடம். நமக்கு லக் இருந்தா இன்னும் சில நாள்ல இவ யாரு இவ கொலைக்கான மோடிவ் அல்லது தற்கொலைக்கான காரணம் என்ன அப்படின்னு கண்டுபிடிச்சிடலாம்”

“அப்படி என்ன கண்டுபிடிச்ச சொல்லு பாக்கலாம்” என்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு ஆர்வமாக கேட்டார் விஜயா.

“அந்தப் பொண்ணு கண்டிப்பா நம்ம ஊரு பொண்ணு இல்ல மேடம். சிட்டில வளர்ந்த பொண்ணு. சொல்ல போனால் சிட்டிலேயே வாழ்கிற பொண்ணு. அதனால மிஸ்ஸிங் கேஸ்ல இந்திய அளவில் தேட வேண்டி இருக்கும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page