அத்தியாயம் – 2
அந்த அரசு கட்டிடத்தில் நடந்த வாதப் பிரதிவாதங்களை செய்முறையாக கற்றுக் கொள்ளும் பொருட்டு மாணவர்கள் லா காலேஜில் இருந்து வந்திருந்தனர்.
நடப்பதை உற்று நோக்கிக் கொண்டிருந்த நூறு ஜோடிக் கண்கள் கவனமாக பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தன.
நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த நீதியரசர் முன்பு இரண்டு வக்கீல்களும் தங்களது கட்சிக்காரர்களின் சார்பில் வாதாடிக் கொண்டிருந்தனர்.
“நீதிபதி அவர்களே! இப்பொழுது நான் வைத்த வாதத்தின் மூலம், எனது கட்சிக்காரரிடம் எழுதிக் கொடுத்த அக்ரீமெண்ட் படி எதிர்க்கட்சிக்காரர் நடந்து கொள்ளவில்லை என்பதை தெளிவாக உணர்ந்து இருப்பீர்கள்.
அதற்கான சாட்சியங்களையும் அக்ரீமெண்ட் மாதிரிகளையும் உங்களிடம் முன்னரே சமர்ப்பித்து இருக்கிறோம்.
இந்த உலகத்தில் சட்டத்தை மதிக்காத அடாவடிக்காரர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டி, எனது கட்சிக்காரருக்கு சேர வேண்டிய பணத்தைத் திருப்பி வாங்கி தருமாறு இந்த நீதி மன்றத்தைத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்”
எதிர்க்கட்சியும் தனது வாதத்தினை வைத்தது. “நீதிபதி அவர்களே! எனது கட்சிக்காரர் எதிர்த்தரப்பினரிடம் ஒப்பந்தம் போட்டது உண்மைதான். நாங்கள் அதனை மறுக்கவில்லை. அதில் இருக்கும் கையெழுத்தும் எனது கட்சிக்காரர் கையெழுத்து போல் தான் தெரிகிறது.
ஆனால் போடப்பட்ட டேர்ம்ஸ் அது கிடையாது. அதில் கூடுதலாக சிலவற்றை சேர்த்திருக்கின்றனர்.
அது மட்டும் இன்றி எனது கட்சிக்காரர் ஒப்புக்கொண்டது ஒரு லட்சத்திற்கு தான். அது எப்படி ஒன்பது லட்சம் ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அக்ரீமெண்ட்டின் நம்பகத்தன்மையை சோதித்து தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”
“உங்களது ஒப்பந்தத்தின் காப்பி அதாவது மாதிரி வைத்திருக்கிறீர்களா?”
“இல்லை மை லார்ட்”
கோர்ட்டில் நகைப்பொலி எழுந்தது.
“ஏன் சார் அக்ரீமெண்ட் எல்லாம் எவ்வளவு முக்கியம் அதுல இவ்வளவு கவன குறைவா இருக்கலாமா?” என்று போற போக்கில் கமெண்ட் எழுப்பினார் எதிர்க்கட்சி வக்கீல்
சைலன்ஸ் என்று அமைதியை மீண்டும் நிலை நாட்டிய நீதிபதி
“ஒரு அக்ரீமெண்ட் அப்படின்றது எவ்வளவு முக்கியமான விஷயம் அதை எப்படி நீங்க இந்த அளவு கவனக் குறைவா தொலைக்கலாம். உங்களோட ஒப்பந்தம் இப்ப கையில் இருந்தால் சுலபமாக இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே”
“சென்ற வருடம் வந்த வெள்ளத்தில் எனது கட்சிக்காரரின் வீட்டிலிருந்த பொருள்கள் எல்லாம் அடித்து செல்லப்பட்டன. அதில் இந்த அக்ரீமெண்ட்டும் அடக்கம்.
உங்களுக்கே தெரியும் உயிருக்கே ஆபத்தான சமயத்தில் அவரோட உயிரையும் குடும்பத்தினரின் உயிரையும் காப்பாற்றுவது தான் எனது கட்சிக்காரரின் முதல் ப்ரயாரிட்டியாக இருந்தது. அவரோட பணத்தையோ, பொருளையோ, அக்ரீமெண்ட்டையோ காப்பாத்த நேரமும் இல்லை அவர் மனசுல அது தோணவும் இல்லை. இது நியாயமான காரணம் என்று நினைக்கிறேன் மை லார்ட்”
“மிக நியாயமான காரணம். சரி அதுதான் எதிர் தரப்பினர் அக்ரீமெண்ட் வச்சிருக்காங்களே”
“அதோட உண்மை தன்மைதான் இப்போது கேள்விக்குறியா இருக்குது”
“ஓகே இந்த டாக்குமெண்ட் வெரிஃபிக்கேஷனுக்காக நம்ம தடையவியல் துறையிலிருந்து வந்திருக்காங்க. அவங்களோட வார்த்தைகள் இதில் ரொம்ப முக்கியம். பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இருந்து யாருப்பா வந்திருக்கீங்க”
தென்னாடன் எழுந்து சென்றான். அவன் கையில் இதற்கு தேவையான ஆதாரங்கள் குறிப்புகள் இருந்தன.
“வணக்கம் மை லார்ட். எங்களுடைய இன்வெஸ்டிகேஷன் முடிவுகளின்படி இந்த ஒரிஜினல் டாக்குமெண்ட் போலியாக இருப்பதற்கு தான் சான்ஸ் இருக்கு”
“புரியலையே ஒரிஜினலா இருக்கணும் இல்லாட்டி போலியா இருக்கணும் அது என்ன ஒரிஜினல் டாக்குமெண்ட் போலியா இருக்க சான்ஸ் இருக்கு”.
“ஆக்சுவலா லார்ட், இதுல எழுதி இருக்கிறது, கையெழுத்து எல்லாமே சரிதான். ஆனால் ஒரிஜினல் டாக்குமெண்டில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன”.
“என்ன திருத்தங்கள் என்று சொல்ல முடியுமா”
“முதலில் இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பத்திரம். ஒன்று 1 என்ற நம்பர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒன்றுக்கு மேல சுழிச்சு விட்டு ஒன்பதா 9 மாத்தி இருக்காங்க.
அடுத்தபடியாக அதை வார்த்தைகளில் எழுதும் போது o என்ற எழுத்து சின்னதா எழுதி இருக்கிறதுனால அதை i யாக மாத்தி அதற்கு முன்பு ஒரு N சேர்த்து இருக்காங்க. இப்படித்தான் 1, 9 பின்னர் one, nine ஆனது.
ஆகையால் ஒரிஜினல் ஒரு லட்சம் தான் ஒன்பது லட்சங்கள் கிடையாது.
அதேபோல் ஒரிஜினலில் நான்கு பேரக்ராப்கள்தான் இருந்திருக்கின்றன. ஐந்தாவது பத்தி புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது”
“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க”
“எங்களோட அட்வான்ஸ் இன்வேஸ்டிகேஷன் அப்ளிகேஷன்ஸ் மூலம் இது ரெண்டும் வெவ்வேறான இங்க்ல பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்தோம்.
ஒரு பகுதி திரவ லிங்க்லையும் இன்னொரு பகுதி பவுடர் இங்க்லயும் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ரெண்டும் வேற வேற டெக்னாலஜி. அதாவது வேற வேற பிரிண்டர்களை உபயோகிச்சிருக்காங்க. அதனால அதில் இருக்கும் ஏதோ ஒரு பகுதி புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும்.
அதுமட்டுமில்லாம ஒன்னு ஒன்பதா மாதிரி இருக்கிற இடத்தில் வேறு வகையான ஒரு ஹை குவாலிட்டி பேனாவில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்களுடைய லேட்டஸ்ட் டெக்னாலஜில வச்சு பார்க்கும் பொழுது அந்த இங்க்கோட டிஃபரென்ஸை துல்லியமா கண்டுபிடிக்கலாம் . அதாவது புதிதாக சேர்க்கப்பட்ட இங்க் மட்டும் வேறு நிறத்தில் தெரியும்.
அதற்கான ஆதாரங்களை உங்ககிட்ட சமர்ப்பிச்சு இருக்கேன். இது எல்லாத்தையும் வச்சு பார்க்கும் பொழுது இந்த ஒரிஜினல் டாக்குமெண்டில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது உறுதியா தெரியுது”
நல்ல வேளை நீதி இன்னும் உயிரோடு இருக்கிறது என்று ஏமாற்றப்பட்டவர் திருப்தி பெருமூச்சு விட்டார். உலகமே எதிர்த்து நின்றாலும் ஒரு மனிதராவது உண்மைக்குப் பக்கம் இருப்பார். இன்றோ தென்னாடனின் வாயிலாக உண்மை.
அவ்வளவுதான் இனி நீதிதேவி தனது கடமையைச் செய்வாள்.
ஆதாரங்களை சமர்ப்பித்த தென்னாடன் சற்று இளைப்பாற கட்டிடத்தை விட்டு வெளியே வந்தான்.
பாக்கெட்டில் இருந்த மொபைலில் அலுவலக மெயிலை செக் செய்தான். அங்கு தூரத்தில் தெரிந்த வேப்ப மரத்தடியில் கர்சிப்பால் விசிறி கொண்டு உட்கார்ந்து இருந்த அல்லியைக் கண்டவன் அவளருகே சென்றான்.
“என்ன அல்லி இந்த பக்கம்“
“ஒரு போலீஸ்காரியப் பார்த்து கேட்கிற கேள்வியா இது. நாங்க எல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல எந்திரிச்சு நீதிமன்றத்தில் நாளை முடிச்சுட்டு வீட்டுக்கு போறவங்க. இதெல்லாம் உன்னைப் பார்த்து நான் கேட்க வேண்டிய கேள்வி. நீ என்ன இந்த பக்கம்”
“ஒரு டாக்குமெண்ட் போர்ஜரி”
“என்ன போலி டிகிரி சர்டிபிகேட்டா”
“அதுதான் இப்ப ஏராளமா இருக்கே. இது ரெண்டு பார்ட்டி அக்ரிமெண்ட். எவிடன்ஸ் எல்லாம் கோர்ட்ல சப்மிட் பண்ணி இருக்கேன். இதுல எங்களோட சாட்சியம் ரொம்ப ரொம்ப முக்கியம்”.
“உன்னுது என்ன கேஸ். நீ மட்டும் தனியா வந்து இருக்க அக்யூஸ்ட் எங்க”
“ஏட்டு கூட்டிட்டு போயிருக்காரு. எப்படியும் ரிலீஸாயிடுவான். இல்ல கொஞ்சமா ஃபைன் கட்டுவான்”
“சரி கேசு என்ன? பிக் பாக்கட்டா, பெட்டி க்ரைமா”
“ஆல்ஃபா மேல்”
“அப்படின்னா”
“நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய அடி அடி என்று அடிக்க வேண்டியது. அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புறது கிடையாது. லவ்வுன்னு டார்ச்சர் பண்ணி உன் அன்பு எனக்கு மட்டும் தான் சொந்தம் பொசசிவ்னஸ்னு சொல்லி சைக்கோ தனம் பண்ணி அவளை உங்க அம்மா அப்பா அண்ணன் தம்பி ஃப்ரெண்ட்ஸ் யார் கூடயும் காண்டாக்ட் வைச்சுக்க விடுறதில்லை.
படிச்ச பிள்ளையை, அடுத்தவன் கிட்ட கைகட்டி வேலை பார்க்கக் கூடாதுன்னு சொல்லி பொருளாதார சுதந்திரம் இல்லாமல் வீட்ல அடைச்சு வச்சிருக்க வேண்டியது”
“இப்ப என்னதான் ஆச்சு. அந்த பொண்ணு கம்ப்ளைன்ட் கொடுத்துச்சா?”
“குடுத்துட்டாலும்… அவ அடிக்கிற கைதான் அணைக்கும்ன்னு சொல்றா. இவன் அடிச்சுட்டு போனதில்ல அவ மயக்கம் போட்டு விழுந்துட்டா. ஹாஸ்பிடல்ல பக்கத்து வீட்டுக்காரங்க அட்மிட் பண்ணி இருக்காங்க. ஹாஸ்பிடல்ல இருந்து கேஸ் கொடுத்துட்டாங்க. இவ கழுத்தை நெரிச்சிருகாங்க அதுல இந்த தடிமாடோட கை தடம்”
தூரத்தில் ஏட்டு ஆல்ஃபா மேலுடன் வந்து கொண்டிருந்தார். அவரது முகமே அவன் போய் பழையபடி ஆரம்பிக்கப் போகிறான் என்று சொன்னது
“ஆல்பா கையில் என்ன மாவு கட்டு”
“வந்து… பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்”
“அது என்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு வர பல கைதிகள் பாத்ரூம்ல வழுக்கி விழுறாங்க. அவ்வளவு மோசமா பாசி பிடிச்சுப் போயி பாத்ரூம் வச்சிருக்கீங்களா. பக்கத்துல யாரையாவது கூப்பிட்டு கழுவி விட சொல்ல வேண்டியதுதானே “
“உனக்கெல்லாம் சொன்னாப் புரியாது. ஆனாலும் சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ, சிஸ்டம் எல்லாம் சரியாகிற வரைக்கும் பாத்ரூம்ல கைதிகள் வழுக்கி விழுந்து மாவு கட்டு போட்டுக்கிறத தடுக்கவே முடியாது”
“உங்க எஸ் ஐ மேடம் எங்க? ஊர்ல இருந்து திரும்பி வந்துட்டாங்களா?”
“அட அவங்களே ரொம்ப நாள் கழிச்சு குடும்பத்தோட லீவுல போய் இருக்காங்க. இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும் வர்றதுக்கு””.
அதற்குள் “எஸ் சார், உடனே வந்துடுறோம் சார்” என்று யாரிடமோ பேசியபடி ஏட்டு வந்துவிட்டார்.
“பாரன்சிக்லருந்து தென்னாடன் வேற கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு வந்திருக்கார் சார். அவரையும் கையோட கூட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு வைத்தார்.
கேள்விப் பார்வை பார்த்தவர்களிடம் “அல்லி, மதிய சாப்பாட்டுக்கு நேரமில்லை. பக்கத்தில் வடை கிடை வாங்கித் தின்னுகிட்டே கிளம்பு. தாமரைக் குளம் போகணும்”
“க்ரைமா”
“கார் ஒன்னு தண்ணிக்குள்ள மூழ்கிருச்சாம்”
“யாரும் செத்துட்டாங்களா”
“செத்துட்டார்கள்னு பன்மைல சொல்லு”
“எத்தனை பேரு”
“தெரியல”
“கார்னா அதிகபட்சம் 4 பேருதானே”
“கார்ல மட்டுமில்ல”
ஏட்டு சொல்லி முடிப்பதற்குள், பக்கத்தில் இருந்த ஒரு நபர் கன்யாகுமரி முகநூல் பக்கத்தில் இருந்த வீடியோ செய்தியை இவர்கள் காதில் விழுமாறு சத்தமாகப் போட்டார்
“தோண்டத் தோண்ட பிணம். தாமரைக் குளமா இல்லை பிணக்குளமா. இப்ப பாத்துடலாம் வாங்க”


Leave a Reply