அக்கா மகளே இந்து – 5 (நிறைவு)

அத்தியாயம் – 5

சிவமணிக்கு அடுத்தடுத்த நாட்கள் ஒரே மாதிரி ரொட்டீன். ராத்திரி முழுவதும் உறங்காமல் அவ்வப்போது மொபைலில் காண்டாக்ட் லிஸ்டில் அக்கா மகள் இந்துவை பார்த்துவிட்டு மூடி விடுவதும், காலையில் எழுந்து அவசரவசரமாக கிளம்பி வேலைக்கு செல்வது, நண்பன் அருளின் வற்புறுத்தலால் டீ, பன், மதிய தயிர்சாதம் என்று ஓடியது.

ஒரு சில நாட்களில் அக்கா மகள் இந்து மட்டுமில்லாலாமல் அவளது குடும்ப க்ரூபும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. அன்று வீட்டை விட்டு வெளியே வந்தவன் க்ரூப்பை எட்டிக் கூட பார்க்கவில்லை. அத்தைகள் போஸ்ட் செய்யும் இட்லி சாம்பார், செவ்வாய் கிழமை இன்று வடபழனி முருகன் இருக்க பயமேன் போன்ற சின்ன சின்ன மெசேஜசை கூட மிஸ் செய்த உணர்வு.

நூற்றுக்கணக்கான செய்திகள் அந்த க்ரூப்பில் போஸ்ட் செய்திருந்தார்கள் இருந்தாலும் தனக்கு உரிமையில்லாத வீட்டில் எப்படி நுழைவது என்ற தயக்கம். யாராவது இவன் வேற்றாள் என்று நீக்கி விட்டால் கூட பரவாயில்லை என்று எண்ணினான்.  இதையெல்லாம் கவனிக்காமல் இந்த அட்மின் செந்திலண்ணா என்ன செய்கிறார்?

ஒரு மழை தூறும் மாலை. சென்னையின் புழுதியை மழை மட்டுப்படுத்தி இருந்தது.

டீ கொண்டு வரும் கடைப்பையன் “இந்தக் கடைதான் அக்கா. சிவாண்ணா உங்களை பாக்கணும்னு சொன்னாங்க” என்றபடி உள்ளே வந்தான்.

யாராவது வாடிக்கையாளராய் இருக்கும் என்றெண்ணிய சிவமணிக்கு கண்களையே நம்ப முடியவில்லை.

அக்கா மகள் இந்து ஒரு பூவரசம்பூ இலை பச்சையில் ஒரு சுடிதார் அணிந்து நின்றிருந்தாள்.

“வாங்க வாங்க” என்று அவசர அவசரமாக நாற்காலியை தூசு தட்டி அவள் உட்கார ஏற்பாடு செய்தான்.

வரவேற்பை கிரகித்த பய்யன் “சிவாண்ணா டீ கொண்டு வரட்டுமா?” என்று பிஸினஸ் பிடித்தான்.

“அப்படியே சூடா நாலு பஜ்ஜியும் எடுத்துட்டு வா”

ஓ முக்கியமானவங்கதான் போலாருக்கு இல்லாட்டி டீ வாங்கவே யோசிக்கிற இந்தக் கஞ்சனாவது பஜ்ஜி வாங்கித் தரதாவது.

“சூடா ஸ்வீட் போளி கூட இருக்குண்ணே. அதையும் ரெண்டு சேர்த்தே எடுத்துட்டு வர்றேன்” சிவமணி பதில் சொல்ல வாய் திறப்பதற்க்குள் ஓடிவிட்டான்.

“வாங்க இந்து. நல்லாருக்கீங்களா. வீட்ல எல்லாரும் ஓகேயா?”
“நல்லாருக்கோம். நீங்க”

“நல்லாருக்கேன். மணிகண்டன் அண்ணா ஊருக்கு போயிட்டாரா?”

“போய்ட்டார்”

அதற்கு பின் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. பேப்பர் வெய்ட்டை கையால் சுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். மூன்று நிமிடங்கள் இப்படியே கடந்தது. இந்து அவனை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கா மகளே இந்து இந்தப்பார்வைக்கு என்ன பொருள்?

“ஏதாவது செர்டிபிகேட் வேணுமா” என்றான்

“செர்டிபிகேட் வாங்கத்தான் இங்க வரணுமா?”

இந்தக் கேள்விக்கு என்ன பொருள்? தெரியவில்லையே…

“இல்லீங்க என்னை மாதிரி ஆளுங்களை பாக்க சான்றிதழ் வாங்க, லீகல் டாகுமெண்ட் அடிக்க இப்படித்தான் வருவாங்க”

“நான் அதுக்கு வரலிங்க”

“வேற….”

சிவமணி ஏதாவது கனவு கண்டுறாதடா என்று மன குதிரைக்கு கடிவாளம் போட்டு அடக்கினான்.

“முதல்ல நீங்க வாங்கி தந்த செர்டிபிகேட்டுக்கே இன்னும் காசு தரல”

“அதுக்கா வந்திங்க” குட்டி ஏமாற்றம்.

“பின்னே… எத்தனை தடவை நாங்க ஃபேமிலி க்ரூப்ல உங்களுக்கு மெசேஜ் அனுப்பினோம். மணி மாமா ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வர சொல்லி அத்தனை போஸ்ட் போட்டார். எதையுமே நீங்க பாக்கல போலிருக்கு”

என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதற்குள் டீ, நியூஸ் பேப்பரில் கட்டிய பஜ்ஜி, இனிப்பு போளி வந்துவிட்டது.

“சாப்பிடுங்க”

“கொஞ்சம் வேலை ஜாஸ்தி… அதான்…”

“எப்போதிருந்து வேலை ஜாஸ்தி?”

“புரியல”

“எங்க வீட்டுக்கு வந்துட்டு போனதிலிருந்து க்ரூப் பக்கம் ஆளையே காணோமே”

“வந்து… வந்து… “

“சரி எவ்வளவு காசாச்சுன்னு சொல்லுங்க”

“அய்யோ வேணாங்க… “

“ஏன் எல்லாருக்கும் ஓசிலதான் செஞ்சு தருவிங்களா… அப்ப வருமானம்”

“எல்லாருக்கும் இல்ல. சொந்தக்காரங்களுக்கு… “ என்று இழுத்தான்.

“எங்க ஃபேமிலில 100கு மேல மெம்பர்ஸ் இருக்கோம். எங்க எல்லாருக்கும் ப்ரீயா… “

இல்லை உனக்கு மட்டும் வாழ்நாள் முழுக்க, எப்படி சொல்வது என்று  தெரியாமல் விழித்தான்.

“மாசம் அறுபது எழுபதாயிரம் சம்பாரிப்பீங்கன்னு சொல்லிக்கிட்டாங்க. அப்படி ஒண்ணும் தெரியலையே”

“நானும் ஃப்ரெண்டும் பார்ட்னர்ஸ். கடை வாடகை செலவு போக 38லேருந்து ஐம்பதாயிரம் வரை வரும்”

“நானும் ஸ்ரீராம்ல வொர்க் பண்றேன். 35ஆயிரம் சம்பளம்”

இதெல்லாம் அதற்காக பகிர்ந்து கொள்கிறோம் அவனுக்கே தெரியவில்லை.

“சரி இப்பவாவது எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க”

“இல்லீங்க வேணாம் ப்ளீஸ்”

“நாங்க எப்படி உங்க சொந்தக்காரங்க அதையாவது சொல்லுங்க பாப்போம்?”

அது தெரியாமதானே அக்கா மகளே இந்து முழுச்சுட்டு இருக்கேன்.

“சேமாபட்டி வழில இருக்கலாம்.. தெரியலைங்க அகிலா அவங்களைத்தான் கேக்கணும்”

“அவங்களைக் கேக்க வேணாம் நானே சொல்றேன். அகிலா சித்தியோட  வீட்டுக்காரரோட தூரத்து சொந்தம் சேமாபட்டில இருக்கார் அவ்வளவுதான். அவங்களே இதுவரைக்கும் ரெண்டு தடவைதான் அங்க போயிருக்காங்க. எங்களுக்கே அவங்க சொல்லித்தான் அப்படி ஒரு ஊர் இருக்குறதே தெரியும்”

ஆ என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான் சிவமணி. அடுத்த குண்டை அப்படியே அவன் தலையில் போட்டாள்.

“உங்கள க்ரூப்பில் ஆட் பண்ணும்போதே நீங்க மணி மாமா இல்லைன்னு எனக்கு தெரிஞ்சுருச்சு”

அடிப்பாவி அதான் மணி மாமா நீங்களான்னு ஸ்மைலி எல்லாம் போட்டியா?

“ஆனா செந்தில் மாமாவுக்கும் மத்தவங்களுக்கும் மணி பெயர் குழப்பம். எங்க மணிகண்டன் மாமா வேற பொசுக்கு பொசுக்குன்னு கோச்சுக்கிட்டு க்ரூப்பை விட்டு லீவ் பண்ணிருவார். அப்பறம் யாராவது சமாதானப்படுத்தினா வேற நம்பரில் ஜாயின் பண்ணுவார். அதுமாதிரி இது ஒரு நம்பர் போலருக்குன்னு நினைச்சுக்கிட்டாங்க”

“என்னை பாக்குற வரைக்கும் தெரியாதா? இல்லையே சிவதாணு அப்பா பேரான்னு யாரோ கேட்டாங்களே” குழப்பத்தோடு கேட்டான்.

“பதவிசா… கோபப்படாம… உங்களை சண்டைக்கு இழுக்குற மெசேஜுக்கு கூட சாந்தமா பதில் சொன்னிங்க பாருங்க அப்பவே எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. நேரடியா நீ யாருன்னு கேட்டு உங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைச்சாங்க. ஆனால் அவங்க ஒண்ணு கேக்க, நீங்க ஒண்ணு சொல்லி சமாளிப்பிங்க பாருங்க… செம காமெடி…” சில்லறை காயின்களை சிதற விட்டது போல சிரித்தாள்.

ஷாக்கில் இருந்தான் சிவமணி.

“நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் அடுத்தவங்க மனசு நோகாம நோடெட், கரெக்ட் அப்படின்னு பதில் சொன்னதை பார்த்து எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை நீங்க வேறு குடும்பமா இருக்கலாம் ஆனா ஹார்ம்லெஸ்னு புரிஞ்சுகிட்டோம்”

“என்கிட்ட  செந்திலண்ணா  கூப்பிட்டு கேட்டு இருக்கலாமே… “

“அதனாலதான் உங்களை நேரில் வர சொன்னோம். அது தவிர செந்தில் மாமா இங்க வந்து ஏற்கனவே விசாரிச்சிருக்கார். நான் நினைவு படுத்தினதும் அவரும் நல்ல பய்யன் தான்னு ஒத்துக்கிட்டார்”

“எதுக்கு விசாரிச்சார்?” குழப்பத்துடன் கேட்டான்.

முகத்தை சுளித்துக்கொண்டு சொன்னாள் “ம்‌ம்…..போன வருஷம் என் பாட்டி உயிரோட இருந்த சமயம், உங்க அப்பாவும் அம்மாவும் இங்க வந்திருந்தாங்க நினைவிருக்கா”

யோசித்தான் “ஏதோ வடபழனில கல்யாணத்துக்கு வந்தாங்க”

“எங்க வீட்டுக்கும் என்னை பாக்க வந்திருந்தாங்க. நீங்கதான் சென்னை பொண்ணெல்லாம் மார்டெர்னா இருப்பாங்க, மேக்கப்புக்கே நிறைய செலவு செய்வாங்க, உறவுகள் கூட்டுக்குடும்பம் எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்களாமே… இப்படி எல்லாம் யார் உங்க கிட்ட சொன்னது?”

அடேய் மடப்பய மவனே சிவமணி நீ சொன்ன டயலாக் எல்லாம் இவளுக்கு எப்படி தெரிஞ்சது?

“அய்யோ இந்து அது நீயா?” அதிர்ச்சியில் உறைந்தான்.

“ஆமாம் உங்க அப்பா சுண்டல் விநியோகம் பண்ற மாதிரி உங்க ஆபீஸ் அட்ரெஸ், போன் நம்பரைத் தந்துட்டு போக, நாங்களும் சேவ் பண்ணிருந்தோம். நிறைய நாளானதால அகிலா சித்திக்கு மறந்து போயிருச்சு. அவசரத்தில் உங்களை காண்டாக்ட் பண்ணி செர்டிபிகேட் கேட்டுட்டாங்க”

அப்படியே சில மணி நிமிடங்கள் அமர்ந்திருந்தான்.

“சோ உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு உறவும் இல்லை. வேண்டாம்னு நீங்கதான் முதலிலேயே வெட்டி விட்டுட்டீங்க. அதனால எவ்வளவு காசு தரணும்னு சொல்றீங்களா” வெடுக்கென சொன்னாள்.

சடாரென்று சரண்டர் ஆனான் சிவமணி.

“அக்கா மகளே இந்து, நீதானா அது? எங்கப்பா போட்டோ கூட காட்டலையே”

“ஏன் போட்டோல பாத்திருந்தா ஓகே சொல்லிருப்பிங்களா?”

அழுவதை போல மாறிவிட்டது அவன் முகம் “நீயே பாரு இந்த சின்ன ரூம் தான் என் ஆபீஸ். மெட்ராஸ் பொண்ணுங்களை கட்டிக்கிட்டா நல்ல வீடா பாக்கணும். சம்பளத்தில் பாதி வாடகையே போயிரும். அதுதவிர பிற செலவுகள். அரிசி பருப்பு எல்லாம் ஊரில் இருந்து வந்தாலும். குடும்பம் குட்டி வந்தா அதுக்கு செலவு. கிராமத்து வீட்டை வித்து சென்னைல பிளாட் வாங்குன்னு எல்லாம் பின்னாடி பிரச்சனை வந்தா… “

ஆறிப்போயிருந்த டீயை ஒரே மடக்கில் குடித்தான்.

“இதை எல்லாம் சொன்னா எங்கப்பா அம்மாவுக்கு புரியாது. அதனாலதான் இப்படி சொன்னேன்”

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த இந்து.

“என் கண்டிஷன் என்ன தெரியுமா? எங்க வீட்டை விட்டு நான் வர மாட்டேன். அந்த வீடு எங்க எல்லாருக்கும் சொந்தம். ஒவ்வொருத்தருக்கும் சமையல் ரூம், பாத்ரூம் அப்பறம் சின்ன ஹால் ரெண்டு ரூம் இருக்குற குட்டி போர்ஷன். திண்ணை எல்லாருக்கும் பொது. வீட்டுக்கு ஒரு வயசானவங்க இருப்பாங்க அவங்கல்லாம் திண்ணைலதான் அரட்டை அடிப்பாங்க. இப்படித்தான் நானெல்லாம் பிறக்குறதுக்கு மின்னாடியே, கிட்டத்தட்ட 60 வருஷமா அந்த வீட்டில் எங்க குடும்பம் குடி இருக்காம்… எங்க மாமா சித்தி இவங்க எல்லாரும் பிளாட் வீடு எல்லாம் வாங்கிட்டாலும் ரிட்டையர் ஆனதும் இங்க வந்துருவாங்க“

ஆச்சிரியமாய் பார்த்தான் சிவமணி.

“உங்களை பார்த்ததுக்கு காரணமே நீங்களும் ராயப்பேட்டையிலேயே இருக்கிங்க. நான் வேற இடத்துக்கு போக வேணாம்னுதான்”

“என்ன சொல்ற இந்து?”

“நீங்க 40 ஆயிரம் நான் 35 ஆயிரம், வாடகை இல்லாம குடும்பம் நடத்த 75 ஆயிரம் போதாது?”

சென்னை பொண்ணுங்க தைரியம்தான்… எவ்வளவு அழகா கணக்கு போட்டு சொல்றா… சிவமணி விட்டுறாதடா இவளை மட்டும். இந்த முறையும் தவறவிட்ட, இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற சம்பவம் உன் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது.

பதில் இல்லாமல் இருப்பதைக் கண்டு “மழை விட்டுருச்சு, நான் கிளம்புறேன்” என்றாள்.

“நில்லுங்க வீடு வரை நானும் வரேன்” என்றபடி கிளம்பினான்.

நடக்கும்போது “வேற ஏதாவது சந்தேகமா?” இந்து கேட்க

“எனக்கில்ல என் தங்கச்சிக்கு ஒரு சந்தேகம். கேக்கலாமா வேணாமான்னு தெரியல”

“என்ன சந்தேகம்”

“க்ரூப்ல அத்தை போட்ட புளி சாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் எப்படி இத்தனை வெரைட்டி செஞ்சு அடுக்கிருக்காங்க. என் தங்கச்சி மகிழ்வதனாவுக்கு ஒரே ஆச்சிரியம் அதான்”

டேய் நம்மை பத்தி பேச சொன்னா தங்கச்சிக்கு வந்த சந்தேகத்தை எல்லாம் கேக்குறான் பாரு முறைத்தபடி “உங்க தங்கச்சி வதனாவுக்கு  சக்தி, ஆச்சில புளியோதரை மிக்ஸ், தக்காளி சாதம் எலுமிச்சை சாதம் மிக்ஸ் எல்லாம் தலா ஒரு பாக்கெட் வாங்கித் தரேன். ஊருக்கு போனதும் தந்துருங்க”

“வடை”

“அதுக்கும் மிக்ஸ் இருக்கு”

சரியான மிக்ஸர் குடும்பமா இருக்கு மகிழ் பேபி. அண்ணி வீட்டுக்கு வர்றதுக்குள்ள இந்த மிக்ஸ் எல்லாம் வாங்கி சாப்பிட்டு பழகிக்கோம்மா… இது அண்ணானோட வாழ்க்கை பிரச்சனை என்று மகிழ்வதனாவுக்கு மனதில் செய்தி அனுப்பினான்.

“வேற என்ன சந்தேகம்…”

“வந்து…. ஒரு தடவை தப்பு செஞ்சுட்டா திருத்திக்கிறதுக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாம்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரிதானே”

ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் பேசாமல் நடந்தாள்.

வீடு நெருங்கும்போது “எனக்கு உங்க ஃபேமிலி க்ரூப்பை விட்டு விலக இஷ்டம் இல்லைங்க. உங்களுக்கு நான் இருக்குறது பிடிக்கலைன்னா செந்திலண்ணாகிட்ட சொல்லி க்ரூப்லேருந்து என்னை தூக்கிற சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து அறைக்கு வந்துவிட்டான்.

சென்னை பொண்ணுக்கு மட்டும்தான் நாசூக்கா சம்மதத்தை வெளிப்படுத்தத் தெரியுமா… நம்ம சேமாபட்டிக்காரனும் காதலை வெளிப்படுத்துவதில் கில்லாடிதானே…

இரவு அவனுக்கு ஒரு அழைப்பு செந்திலண்ணா, விலக்குவதற்கு முன்னாடி நோட்டீஸ் மாதிரி கால் பண்றாரோ.. பயந்தபடி எடுத்தான்.

“டேய் சிவமணி, நான் உன்னை க்ரூப்லேருந்து தூக்கணுமா? உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என் மண்டையை ஏண்டா உருட்டுறீங்க”

“இல்.. இல்.. இல்லண்ணா” தந்தியடித்தது.

“இங்க பாரு, இந்துவோட பாட்டி பார்த்து நிச்சயம் செஞ்ச கல்யாணம். இப்ப தெய்வமாயிருந்து உங்களை எப்படியோ சேர்த்து வச்சிருக்காங்க. எங்க எல்லாருக்கும் திருப்தி. நல்ல நாள் பாத்து உங்கப்பாவை போயி சந்திச்சு அடுத்து நடக்கவேண்டியதை முடிவு செய்றோம். நாங்களா உன்னை க்ரூப்பை விட்டு விலக்க மாட்டோம். நீயா விலகினாலும் தேடிப் பிடிச்சு இழுத்து வச்சுப்போம். சரியா?”

“சரிண்ணா” சொல்லும்போதே சிவமணியின் முகம் சந்தோஷத்தால் சிவந்தது.

அவர் போனை வைத்ததும். அக்கா மகளே இந்து என்ற எண்ணிற்கு தனிப்பட்ட மெசேஜ் செய்தான்.

“என் அக்கா மகளே இந்து… கால் பண்ணலாமா?”

உடனே பதில் வந்தது “யெஸ் மணி மாமா 🙂”

(நிறைந்தது)

அடுத்து என்னவா? பழமை மாறாம லெட்டர் போட்டு காதலித்த 80ஸ்‌ கிட்ஸ் மற்றும் அல்ட்ரா ஃபாஸ்ட் 2கே ரெண்டுக்கும் இடையில்…  இன்னும் காதலிக்கக் கூட தெரியாம, சக்திமான் பாத்துக்கிட்டு, வெள்ளந்தியாவே திரியுற 90ஸ்‌ கிட்க்கு எப்படியோ கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். தை மாசம் பொறக்கப்போகுது, மத்த முரட்டு சிங்கிள்சுக்கும் இந்த வருஷம் கல்யாணம் நடக்கட்டும் என்று வாழ்த்துகிறோம். இனி அடுத்த கதையில் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page