அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அத்தியாயம் 4
ஞாயிறு காலை, சிவமணி எழுந்ததும் முதலில் தோன்றியது: “நான் எதுக்குப் போகணும்?”
அவனுக்கே சரியான பதில் இல்லை. ஆனால் ஒரு சாக்கு மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
“இதே ஏரியாலதான் வீடு இருக்கு. போகாம இருந்தா, இது பெரிய விஷயம் ஆகிடும்.”
மனசாட்சி அவனைப் பார்த்து கை கொட்டி சிரித்தது. உண்மையை சொல்லுடா…
உண்மை என்று சொன்னால் அக்கா மக இந்து தனிப்பட்ட முறையில் அவனுக்கு அட்ரெசை அனுப்பி இருந்தாள்.
பிஸ்மில்லா டீக்கடைக்கு எதிரே, பெரிய கிரில் கெட், ஓம் சக்தி ஸ்டிக்கர் வீட்டுக்கு மேல ஒட்டியிருக்கும்.
சரி, அட்ரெஸ் அனுப்பிருக்கா அதுக்கென்ன? என்று கேட்கும் பூமர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை மாதிரி முரட்டு சிங்கிளுக்கு பொண்ணுங்ககிட்டருந்து கால் வர்றதெல்லாம் “சார் லோன் வேணுமா?”, “இன்ஸ்டால்மெண்ட் கட்ட நாளைக்குத்தான் கடைசி தேதி ரிமைண்ட் பண்ணத்தான் கால் பண்றோம்” சனிபெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தா “கார்டு மேல இருக்கும் நம்பரை சொல்லுங்க” வகையறாதான்.
முதன் முதலில் மங்களகரமா மஞ்சள் சேலையில் இருக்கும் என் அக்கா மகள் இந்து மெசேஜ் பண்ணிருக்கா…
எதனால் இந்த தனிப்பட்ட கரிசனம்? என்னவாக இருந்தாலும் அவளை நேரில் பார்க்க வேண்டும் போல இருந்தது.
அக்கா மக இந்து அட்லீஸ்ட் உன்னை பாக்குறதுக்காகவாவது வரேன்.
தன்னிடமிருந்த ரெண்டு பெட்டிகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, பார்க்க சாதாரணமாகத் தோன்றும் வண்ணம் இருக்கும் நல்ல சட்டையை தேர்ந்தெடுத்து அணிந்துக் கொண்டான். பேர் அண்ட் லவ்லி அரை டியூப் அள்ளி பூசிக்கொண்டு கிளம்பினான்.
அங்கே க்ரூப் அட்மின் செந்திலாண்ணாவுக்கு தனிப்பட்ட மெசேஜ் வந்தது “செந்திலண்ணா… நான் மணி, இதுதான் என் புது நம்பர். டிரைன்லேருந்து இறங்கிட்டேன் வீட்டுக்கு வந்துட்டே இருக்கேன்”
சிவமணி பைக்கை பார்க் பண்ணிவிட்டு கிரில் கேட்டை திறந்தான். வீட்டின் உள்ளே நுழையும்போதே காபி வாசம் அத்துடன் சேர்ந்து நல்ல அகர்பத்தி மணம் இரண்டும் கலந்து கட்டி வரவேற்றது. ராயபேட்டையின் கூட்டுக் குடும்பத்தின் அக்மார்க் அடையாளங்கள் நிறைந்த பெரிய வீடு. அந்த பெரிய வீட்டினை ஆங்காங்கே தடுத்து இரண்டு மூன்று அறைகளாக்கி ஒவ்வொரு குடும்பமும் குடியிருக்கும். ஒவ்வொருவரும் தனித்தனி குடும்பமாக இருந்தாலும் சேர்ந்தே இருப்பார்கள். இந்த காலத்தில் இப்படி குடும்பங்களை பார்ப்பது அரிது. ஆச்சிரியத்துடன் உள்ளே நுழைந்தான்.
ஒரு பெரியவர் கேட்டார்:
“நீ யாரு?”
சிவமணி நேர்மையாக பதில் சொன்னான்
“சிவமணி…”
“மணி தானே?”
“ஆமா.” இந்த மணி என்னை விடவே விடாதா?
“செந்தில், மணி வந்திருக்காண்டா…” வீட்டின் உள்ளே பார்த்து கத்தியவர்
“ஏண்டா மணி…. இப்பத்தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரயிலில் இறங்கி வந்தே. இந்துவை பார்த்துட்டு வரேன்னு சொன்னியே… எனக்கு கண்ணுதான் சரியா தெரியாது காது கேக்கும்“ என்று மேலும் குழப்பினார்.
அறுபது வயதினை தொடும் ஒரு சரத்குமார் சைஸ் ஆஜானுபாகுவான ஆள் ஒருவர் வந்தார்.
“நான் சிவமணி” என்று அவருக்கு மறுபடியும் தெளிவாக சொன்னான்.
“ஏன் வெளியவே நிக்குற உள்ள வா” என்று அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தார்.
அவன் உட்கார்ந்த ஐந்து நிமிஷத்துக்குள், மூன்று பேர் வந்துவிட்டார்கள்
“நம்ம ஊரா?”
மறுபடியும் முதலில் இருந்தா? அப்படி எந்த ஊரில் இருந்துதான் நீங்க எல்லாம் வந்திங்க. முகத்தில் உணர்ச்சி காட்டாமல் “சேமாபட்டி”
“ஓ… “ என்றார்களே தவிர அவர்கள் ஊர் பற்றி ஒரு பிட்டு தகவல் கூட சொல்லவில்லை. எங்களுக்கு தருமி போல் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் என்று சொல்கிறார்களோ?
“சிவதாணு உங்க அப்பா தானே?”
இது நலம் விசாரிப்பது போல நடக்கும் குறுக்கு விசாரணை. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த அறைக்குள் இன்னொரு புது நபர் உள்ளே நுழைந்தார்.
உள்ளே வந்ததும், கண்கள் சிவமணியை பார்த்தது. அடக்க முடியாமல் சிரித்தார். சிரித்து முடித்ததும் கேட்ட முதல் வார்த்தை
“நீ தான் அந்த இன்னொரு மணியா?”
சிவமணிக்குள் என்னமோ உடைந்தது. அப்ப நிஜமா இந்த அன்பு மரியாதை எல்லாம் எனக்கு இல்லையா… இந்த மணிக்கா. உடைந்ததை வெளியே காட்டாமல் சொன்னான்
“ஆமா.”
ஒரு பெண்மணி, அகிலாவாய் இருக்க வேண்டும்
“இவர்தான் எங்க வீட்டுக்காரரு வழில சேமாபட்டில சொந்தம். செர்டிபிகேட்டுக்கு ஹெல்ப் பண்ணாரு”
ஆக இந்த அகிலா விவரம் சொல்லாமல் மணி என்ற பெயரில் குரூப்பில் சேர்த்துவிட்டு இத்தனை குழப்பமும் செய்திருக்கிறது.
மணிகண்டன் சிவமணியிடம் “தாங்க்ஸ் பா. நிறைய கன்பூயுசன் நடந்திருக்கு போல, சாரி”
“பரவால்ல”
“என் பேரால இன்னொரு பையனுக்கு இவ்ளோ வேலை வந்திருக்கு. எனக்கு சந்தோஷம்தான்”
செந்திலண்ணா “நாங்க கொஞ்சம் குழம்பிட்டோம்” என்று உண்மையை ஒத்துக்கொண்டார்.
சிவமணி “எனக்கும் ஒரே குழப்பம்தான் அண்ணா”
பிரச்சனையை தீர்க்கும் எண்ணத்தில் சிம்பிளா சொன்னார்
“இனிமே தெளிவா சொல்லலாம். நீ மணி. இவர் சிவமணி”
அந்த சிரிப்பில் சிவமணியின் டென்ஷன் கரைந்தது.
அப்போதுதான் இந்து வந்தாள். வாட்ஸப்பில் மஞ்சள் புடவை மட்டும் அவள் அனுப்பிய ஸ்மைலி ‘🙂’ மட்டும் பார்த்தவன், அப்போதுதான் முதல் முறையாக நேரில் பார்த்தான். ஊதா நிறத்தில் பச்சை எம்பிராய்டரி போட்ட சுடிதாரில் அலங்காரம் செய்யும் முன் திருத்தமாக இருக்கும் அம்மன் சிலை போல இருந்தாள். எந்த டிராமாவும் இல்லாமல் வாங்க என்று சொல்வது போல தலை அசைத்தாள்.
அதன்பின் அங்கிருக்கும் உறவினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவனிடம் வந்து ஏதாவது கேள்வி கேட்டு சென்றார்கள். இனிமேல் இங்கிருந்தால் மரியாதை இல்லை.
“நான் கிளம்புறேன்”
“சாப்பிட்டுட்டு போ… “ என்றார் செந்திலண்ணா
“இல்ல வேலையிருக்கு இன்னொரு நாள்”
“சரி டீயாவது குடிச்சுட்டு போடா”
டீ வந்தது.
“சர்க்கரை இன்னொரு ஸ்பூன் போடணுமா”
“இல்லை சரியாயிருக்கு”
போகும் போது செந்தில் அண்ணா சொன்னார்:
“தாங்க்ஸ் டா வந்ததுக்கு”
அவனை யாரும் ஸ்பெஷல் என்று கொண்டாடவில்லை. ஆனால் வெளியாள் என்று தள்ளவும் இல்லை. இயல்பாக அந்தக் குடும்பத்தில் ஒருவன் போல் நடத்தினர். அது இன்னமும் சிவமணியை பாதித்தது.
குடும்பத்துக்கு உண்மையான மணி கிடைச்சாச்சு. தவறாக குழுவில் இணைக்கப்பட்ட மணி மீது குற்றம் இல்லை என்று எல்லாரும் ஒரு மனதாக முடிவுக்கு வந்துவிட்டனர். எல்லாம் சரிதான்.
உண்மையில் பார்த்தால் சிவமணி நிம்மதி அடைய வேண்டியது. அப்ப “என் அக்கா மகள் இந்து” இதை நினைத்துத்தான் அவனுக்கு என்னமோ ஒரு வெற்றிடம் உண்டானதைப் போல வருத்தம்.
(தொடரும்)



Leave a Reply