அத்தியாயம் 3
ஞாயிறு வர 24 மணி நேரமே இருந்தது. அதற்குள் க்ரூப்பில் ஒரு அத்தைக்கு சந்தேகம்.
காலையிலிருந்து பிரேக்ஃபாஸ்ட் ரெண்டு முட்டைகள், ஒரு கிளாஸ் சோயா பால் என்று டயட் மெனுவிலிருந்து பொங்கல் மெதுவடை மசாலா தோசை என்று அவரவர் வீட்டு மெனுவை போட்டோ போட்டனர்.
இதையெல்லாம் இவங்க நிஜமா சமைக்கிறாங்களா இல்லை கூகுளில் இருந்து தேடி போஸ்ட் பண்றாங்களா என்ற சந்தேகம் சிவமணிக்கு. ஏனென்றால் அவன் அம்மா சுட்ட தோசைகளில் ஒண்ணு கூட இது மாதிரி மொறு மொறுப்பாக வந்தது இல்லை. சின்னதாக, தடிமனாக மூன்று நான்கு தோசைகள் அவ்வளவுதான்.
“மணி, டேய் எருமை, தோச சுட்டு வச்சிருக்கேன். வந்து தின்னுபுட்டு ஊர் சுத்தப்போ” என்று அர்ச்சனை ஆராதனைகளோடுதான் அந்த மூன்று தோசைகளும் கிடைக்கும். இம்புட்டூண்டு வயத்தை நிரப்ப எவ்வளவு மானம் கெட்டுத் திரிய வேண்டியிருக்கு.
இந்த போட்டோக்களை எல்லாம் பாக்கும்போது தான் ஊரு உலகத்தில் இப்படியெல்லாம் தோசை சுட்டு, ரெண்டு வகை சட்டினியோடு மினி டிஃபன் ரேஞ்சுக்கு சாப்பிடத்தராங்கப்பா. ரவா தோசை, ராகி தோசை, கம்பு தோசை எல்லாம் வீட்டுலையே சுடுவாங்கன்னு நேத்து டின்னர் போஸ்ட்ஸ் பார்த்துத்தான் தெரிந்து கொண்டான். நம்ம அம்மாவுக்குத்தான் தோசை சுடத் தெரியாதோ? பழைய சோறு, இட்லி, ஊத்தப்பம், உப்புமாவை இந்த நாலு டிசைனை மட்டும் கத்துகிட்டு 35 வருஷத்தை வெற்றிகரமா ஓட்டுறது நம்ம அம்மா புவனேஸ்வரியாத்தான் இருக்க முடியும். யோசித்துக் கொண்டே காலை உணவாக டீயையும் பன் பட்டர் ஜாமையும் பேக்கரியில் வாங்கி உண்டான்.
மதியம் க்ரூப் அமைதியாக இருந்தது. அது வாட்ஸப்ல புயலுக்கு முன்னாடி வரும் அமைதி. இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு மெனுவா போட்டுத் தாக்கப் போறாங்க.
இதா சொல்லி வாயி மூடுறதுக்குள்ள வந்துருச்சே…
அவர் சிம்பிள் சமையல் போதும்னு சொல்லிட்டார் அதனால இன்னைக்கு சிம்பிளா புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், பொங்கல் வடை சுண்டல் கொஞ்சமா கேசரி அவ்வளவுதான் என்று சரவணபவன் மினி லஞ்ச் மெனு முதலில் வந்து தாக்கியது. சில பல சாப்பாட்டு போஸ்டுக்களுக்குப் பிறகு குழு அமைதியானது.
மெனுவாக அணிவகுத்திருந்த வாட்சப் படங்களைப் பார்த்துக் கொண்டே பாலாஜி பவனில் தயிர் சாதமும், வாழைக்காய் வெறுமே தாளித்த பொரியலும், வாழைத்தண்டு கூட்டும் அதுவும் வாழை இலையில் மடித்த பொட்டலம். இதென்னடா காம்பினேஷன் என்று கேட்கக் கூடாது…. எங்கள் பாலாஜி பவனில் ஆடி, மார்கழி மாதங்கள் நீங்கலாக, பொழுதன்னைக்கும்… அதுவும் என்ன காரணமோ தெரியல முகூர்த்த நாளுக்கு அடுத்த நாள் வாழைக்காய் பொரியல்தான். நான் நினைக்கிறேன் பட்ஜட் சமையல், என்ன காய்கறி அன்றைக்கு சல்லிசாய் கிடைக்கிறதோ அதை சமைத்து விடுவார்கள் போல. நேற்று பாலாஜி பவனுக்கு அடுத்த கட்டடத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடந்ததே. வாழை மரத் தோரணம் கட்டியிருந்தார்களே என்றெல்லாம் நீங்கள் நோண்டி திருகி கேள்வி கேட்டால் என் பதில் நோ கமெண்ட்ஸ்.
இப்படி வாழைக்காய் பொரியலில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் என் கண் முன்னே விதவிதமான சாப்பாடு படங்களை போட்டு வெறுப்பேத்தினால் எப்படி இருக்கும். சுருக்கமாக சொன்னால் பேச்சுலர்ஸ் யாரும் குடும்ப க்ரூப்பில் இருக்காதிங்க என்பதுதான் கதையின் நாயகனாக இந்த சிவமணி தனிப்பட்ட முறையில் தரும் அட்வைஸ்.
அந்த அமைதியை உடைத்தது திருப்பதி வெங்கடாஜலபதி டிபி வைத்திருந்த ஒரு அத்தை
“மணி… ஒரு விஷயம் கேக்கணும்.”
சிவமணி உடனே போனை பார்த்தான்.
இவங்கல்லாம் மதிய சாப்பாடு சாப்பிட்டுட்டு தூங்கலையா?
அத்தை தொடர்ந்தாள்:
“உன் முழுப் பேர் என்ன? மணிகண்டனா? இல்ல சிவமணியா?”
அமைதியாக இருந்தது க்ரூப். எல்லாரும் அவனது பதிலுக்காக காத்திருந்தது போல பிரமை அவனுக்கு.
அவன் பதிலை யோசித்து முடிப்பதற்குள் அத்தையின் அடுத்த மெசேஜ்
“உன் அப்பா பேர் சிவதாணு தானே?”
தானே பதில் சொல்லி அதற்கு அடுத்த கேள்வியும் அதே அத்தை:
“அப்புறம் என்ன? அப்பா பேரை முன்னாடி சேர்த்துக்கிட்டியா? நியூமராலஜி இன்னமும் பாக்குறியா டா?”
😂🤣 க்ரூப்பில் ஒரே சிரிப்பு.
சிவமணி விளக்கி எழுதினால் தன்னைப் பற்றி சுயசரிதம் எழுத வேண்டி வரும். அத்தோட யாருடா நீங்கள்லாம்… திடீருன்னு வந்து மணி, அக்கா மக இந்துன்னு குழப்புறிங்க என்று புலம்ப சாத்தியமிருப்பதால் சுருக்கமாக பதிலளிக்க முடிவு செய்தான்:
🙂
அதைத் தான் அத்தை சரியாக வாசித்தாள்:
“அப்படியே இவ்வளவு கேள்வி கேக்காதீங்கடா. போன தடவை மாதிரி கோச்சுக்கிட்டு க்ரூப்பை விட்டு போயிர போறான்.”
செந்தில் அண்ணா:
“மணி போக மாட்டேல்ல?…”
சிவமணி யோசித்து டிப்ளமாடிக்காக எழுதினான்.
“ஐ வில் ட்ரை”
அக்கா மகள் இந்து உடனே மீம் போட்டாள்:
“மணி மாமாவுக்கு கோபம் வந்துருச்சு போல.”
க்ரூப் சிரித்தது. சிவமணிக்கு முதல் தடவை கோவம் வரவில்லை. இவர்கள் என் மனம் புண்படக்கூடாது என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று தோன்றியது.
அவன் பதிலளித்தான்:
“ஓம் சாந்தி… சாந்தி.”
செந்தில் “பொய் சொல்றான் அப்பறம் ஏன் என்னோட வாய்ஸ் மெசேஜுக்கு பதிலே போடல”
“எனக்கும்” என்று சில குரல்கள்.
“சண்டை எல்லாம் மறந்துடுடா. நாமெல்லாம் ஒரே குடும்பம் இல்லையா” இன்னொரு வாய்ஸ் மெசேஜ் வேறு.
அப்புறம் சில மணி நேரம்… பார்வெர்ட் மெசேஜுகளுக்கு எல்லாம் சிரத்தையாய் ரிப்ளை செய்தான் சிவமணி.
“உறவுகள் வரம்…”
சிவமணி: “உண்மை.”
அப்துல் கலாமின் டிபி வைத்துக் கொண்டு யாரோ ஒரு நடராஜன் தனது ஞானத்தை வெளிப்படுத்தினார்.

தனது குடும்பத்துடன் இந்த மெசேஜை கன்னெக்ட் செய்து பார்த்தான் யாரோட பையனுக்கோ இந்த வருஷம் NEET மார்க் பத்தல போலருக்கு. அவனுக்கு குடும்ப காம்பெடிஷன் நபருக்கு கிடைச்சிருக்கு. அனுபவம் எச்சரித்தது இதுக்கு என்ன பதில் சொன்னாலும் அடுத்த க்ரூப் கூட சண்டை வரும். பேசாமல் இருந்தான்.
நடராஜனோ அவனை சண்டைக்கு இழுத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, “ஊருக்கெல்லாம் ரிப்ளை பண்ற மணி எனக்கு மட்டும் ரிப்ளை பண்ண மாட்டியோ” என்று கோபப் பார்வை பார்த்தார்.
“நல்ல கருத்து. இதை ஏன் பத்து வருசத்துக்கு முன்னாடி யாருமே எனக்கு சொல்லலைன்னு யோசிச்சேன்” என்று பதில் போட்டு அவரை ஆஃப் செய்தான்.
“கர்மா இஸ் எ பூமராங்…”
சிவமணி: “நோடெட் (Noted)”
“வாழ்க்கை ஒரு சக்கரம், அதில் முதலில் இருக்குறவங்க கடைசிக்கு செல்வதும் கடைசியில் இருப்பவர் முதலில் வருவதும் நிச்சயம். ஆகையால் தலைவிரித்து ஆடாதே மனிதா…”
சிவமணி: “கரெக்ட். ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். ஆனா மழை தூறல் போடுது. எல்லாரும் காய வைத்த துணிகள ஓடிப் போய் எடுங்க” என்று சொல்லி ஆட்டையை கலைத்தான்.
சிவமணிக்குள் ஒரு சின்ன மாற்றம் வந்தது. விரும்பியோ விரும்பாமலோ அந்தக் குடும்பத்தில் அவனையும் அறியாமல் ஒரு இடம் அவனுக்காக உருவாக ஆரம்பித்தது.
(தொடரும்)

Leave a Reply