அக்கா மகளே இந்து – 2

அத்தியாயம் 2

சிவமணி லேப்டாப்பை திறந்ததும், விவரங்களைப் பார்த்தான் DEATH CERTIFICATE என்று பார்த்ததும் ஒரு பாரம் வந்தது. அவன் மனசு சொன்னது “வயசைப் பாரு 93. நல்லா நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அம்மா. அதனால உணர்ச்சி வசப்படாம வேலையை பாரு.”

அதே நேரம் போன் அதிர்ந்தது.
எல்லாம் அந்த புது குடும்பக் குழுவில் இவனைக் குறிப்பிட்டு செய்திகள்
“மணி சாப்டியா?”
“மணி இன்னைக்கு உங்க ஏரியால மழையா என்ன?”

அவன் சத்தத்தை மியூட் பண்ணாலும் பிரோஜனமில்லை. “மணி” என்ற வார்த்தை ஒவ்வொரு தடவையும் அவன் மீது ஒரு சின்ன ஸ்பாட்லைட் போட்டு விடுது.

அவன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். நேம், பிளேஸ்… இந்த வேலையை முடித்துவிட்டு சிலரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
மரணத்துக்கான காரணம்.
அந்த வார்த்தை கீழே போக, மேலே வாட்ஸப் வாய்ஸ் நோட் வந்தது.

க்ரூப் அட்மின் செந்தில் அண்ணாவிடமிருந்து ஒரு 3:12 நிமிடங்களுக்கு.

சிவமணி கேட்கவில்லை. வாய்ஸ் நோட்களை கேட்காததே அவன் வாழ்க்கையில் எடுத்த நல்ல முடிவுகளில் ஒன்று. ஏன்னா கேட்டாலும் ஒண்ணும் புரியபோவதில்லை. இப்போது யாருக்கும் யாருக்கும் சண்டை என்று நீயே புரிஞ்சுக்கோ என்ற ஒரு தொனி இருக்கும்.

மாலை 4:50.

அவனுக்கு முதலில் தொடர்பு கொண்ட பெண்மணி தனியாக மறுபடியும் சேட்டில்
“மணி… செர்டிபிகேட் ரெடியா?”

சிவமணி தயார் செய்திருந்த பைலை அவளுக்கு தனி செய்தியில்  அனுப்பினான்.

அடுத்த நொடி க்ரூப்பில் வந்தது
“எல்லாம் ரெடியாம் அகிலா கால் பண்ணி சொன்னா. மணியால ஒரே நாளில் வேலை முடிஞ்சது. தாங்க்ஸ் டா”

அங்கே இருந்து நன்றிகளும், கடவுள் அருள் புரிவார் போன்ற வாழ்த்துக்களும் மழை மாதிரி கொட்டின.

என்னமோ ஒரு பெரிய சாதனை போல இருந்தது “இவங்க சொல்ற மணி நானா இல்லை வேற யாரையோ நினைச்சு என்னை சொல்றாங்களா. எது என்னவோ… காசு வருமான்னு தெரியலயே… காந்தி கணக்கில் எழுதிற வேண்டியதுதான்”

அந்த அக்கா மகள் இந்து வேறு மெசேஜில்
“மாமா… தாங்க்ஸ் என்றாள்”

சிவமணி ஏதாவது பெரிய வார்த்தை எழுத முடியாது. அதுவே ஆபத்து. அவன் தப்பிச்சு போக ஆசைப்பட்டாலும் அவனுக்குள் ஒரு பச்சாதாபம்  இருந்தது. துக்கத்துல இருக்காங்க. இப்படியாப்பட்ட நேரத்துல விலகினா கஷ்டம். அதுவும் இந்த க்ரூப் சொந்தக்காரங்களா இருந்துட்டா அப்பாவும் தாத்தாவும் திட்டியே காதை செவுடாக்கிடுவாங்க.

அவன் எழுதி விட்டான்:
“எதுக்கு?”

இந்துவின் பதில்
“நீங்க எவ்வளோ பொறுமையா இருக்கீங்க… அதுக்கு.”

பொறுமை அந்த வார்த்தை அவனை ஒரு நொடிக்கு நிறுத்தியது. நான் பொறுமையானவன் இல்ல. நான் குழப்பத்தில் இருக்கேன். ஆனா அத உங்களுக்கு காமிக்காம இருக்கேன்.

அவன் இந்த சமயத்தில் என்ன எழுதுவது. இருக்கவே இருக்கு ஸ்மைலி. ஒரு ஸ்மைலி மக்களின் மனநிலைக்கு ஏற்றபடி ஆயிரம் அர்த்தங்களைத் தரும்.
“🙂”

அடுத்த நொடி:
“பாருங்கண்ணா உங்க வாய்ஸ் நோட்டுக்கு பதில் இல்லை. அக்கா மக இந்து கேட்டதும் உடனே பதில் வருது பாருங்க. நீங்களாடா ஒரு காலத்தில் நாயும் பேயுமா சண்டை போட்டக் குடும்பம்”

அப்படியா? சண்டையா? வேகமாக அக்கா மக இந்துவின் பிரோஃபைலை எடுத்து பார்த்தான். வெந்தய மஞ்சளில் புடவை காட்டிக் கொண்டு, காதோரம் குடை மாதிரி பெரிய ஜிமிக்கி, செதுக்கிய மூக்கும், கிளோசப் விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம் போன்ற முத்துப் போன்ற வரிசை பற்களும். அக்கா மகளே இந்து, என்று நம்பரை சேமித்துக் கொண்டான்.

இம்பூட்டு களையா இருக்கும் பெண்ணின் குடும்பத்திடமா அப்பா சண்டை போட்டார். நிஜமாவே இவ அம்மா நமக்கும் அக்கா முறைதானா? உறமுறை இருக்குற, அதுவும் லட்சணமான பொண்ணு இருக்குற குடும்பத்துகிட்டல்லாம் சண்டை வலிக்க வேண்டியது, அப்பறம் ஊரு பூராவும் கல்யாணத்துக்கு பொண்ணு தேடி அலைய வேண்டியது.

எல்லாத்துக்கும் மேல நடக்குற குழப்பத்துக்கெல்லாம் தாந்தான் காரணம்னு புரியாத சேமாப்பட்டி சொந்தக்காரனுங்க எல்லாரும் சேர்ந்துக்கிட்டு 90ஸ்‌ கிட்ஸ், முரட்டு சிங்கிள்ன்னு என்னைக் கலாய்க்க வேண்டியது. கடுப்பாய் இருந்தவனது மனநிலமை புரியாது புதிய சொந்தம் வேறு போஸ்டாக போட்டுத் தள்ளியது.


“மணியை அப்படி சொல்லாதே. எவ்வளவோ பொறுமையாயிட்டான்”

அட்மின் செந்திலண்ணா மெசேஜ் போட்டார்
“ஞாயித்துக்கிழமை எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்க. மணி நீ கண்டிப்பா வந்துரு”

சிவமணி மனதினுள் “பைலை தந்ததும் பிரச்சனை முடிஞ்சுடும்னு நினைச்சேனே. இப்போ தான் உண்மையான பிரச்சனை ஆரம்பம் போலருக்கே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page