ஹோரஸ் தந்திருந்த காணொளிகளைக் கண்ட ரஞ்சனி, ராபர்ட் மற்றும் ஜெய் மூவரும் பிரம்மித்தார்கள்.
“அந்தப் பய்யன் கிட்ட விஷயமிருக்குடா… வீடியோ எடுத்து, எடுத்த படத்தில் அவங்க மூணு பேரையும் மறைச்சு , என்ன அழகா கட்டிங் ஒட்டிங், எடிட்டிங் பண்ணிருக்கான் பாரேன்” ரஞ்சனி பாராட்டினாள்.
“உண்மையிலேயே விஷயம் தெரிஞ்சவங்கதான் ரெண்டாவது தடவை மாரா, ஹோ, பிரேமா மூணு பேரும் சந்திச்சதுக்குப் பிறகு ஈஸ்வர்கிட்ட நிறைய மாற்றம். தொடர்ந்து கவுன்சிலிங் போயிட்டு இருக்கான்டா… நேத்து ஒரு கிளையன்ட் மீட்டிங்குக்கு கூப்பிட்டப்ப ரஞ்சனி சொல்றதைக் கேட்டு வேற டிரஸ் மாத்திட்டு அட்டென்ட் பண்ணான்”
“சாப்பாடெல்லாம் கூட இப்ப தந்தா தகராறு பண்ணாம கொஞ்சம் சாப்பிடுறான். ஆர்டிஸ்ட் மூணு பேருக்கும் பணம் செட்டில் பண்ணதும் ஈஸ்வர் கண்ணில் படாம கொஞ்சநாள் மறைஞ்சு வாழ சொல்லணும்” என்றாள் ரஞ்சனி.
“அதை எல்லாம் நான் பிரேமா கிட்ட பேசிட்டேன். அவளுக்கும் பணமும் செட்டில் பண்ணிட்டேன்” என்றான் ராபர்ட்.
“இந்த வீடியோவை இப்ப ஈஸ்வர்கிட்ட காமிச்சா முழு பலனிருக்கும்னு படுது. அவனைக் கூட்டிட்டு வா ராபர்ட் இப்பயே போட்டுக் காட்டிடலாம்” என்றான் ஜெய்
ஈஸ்வர் தன் முன் காண்பிக்கப்பட்ட அந்தக் காணொளியை வெறித்து நோக்கியவண்ணம் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தான். அவனது நண்பர்கள் மூவரும் அவனைச் சுற்றிலும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்.
முதல் காணொளியில் யாருமில்லாத லிப்ட்டில் தனியாக நின்று கொண்டு எங்கோ பார்த்து கத்துகிறான்
“உன்னோட கிப்ட் எனக்கு வேண்டாம். ஏன்னா என் மகனுக்கு அது கிடைக்கல. இந்த வாழ்க்கையே எனக்கு ஒரு சிறையா இருக்கு. இந்த சிறையில் இருக்குறது எனக்குப் பரிசில்ல வேதனை”
அடுத்த காணொளியில் பஸ்ஸில் அமர்ந்திருந்த வண்ணம் பக்கத்தில் திரும்பி காலி சீட்டிடம் யாரோ மனிதரிடம் பேசுவதைப் போல
“இதெல்லாம் கடவுளின் விளையாட்டு, இந்தப் பிறவிக்கான கடமை முடிஞ்சது அதுதான் காரணம்… இதுதானே சொல்லப் போற…” என்று முணுமுணுத்துவிட்டு திடீரென “ஒவ்வொருத்தரையும் படைச்சு, வாழும் ஒவ்வொரு நாளும் படாதபாடுபடுத்தி கடைசியில் ஒவ்வொரு பாகமா ஒடுக்கி செயலிழக்க வச்சுக் கூட்டிட்டு போற உன்னை என்னால எப்படி மதிக்க முடியும்” என்று உரக்கக் கத்தினான். பேருந்தில் இருந்த ஒன்றிரண்டு நபர்கள் கூட அவனை பயத்தோடு பார்த்தார்கள்.
மூன்றாவதிலோ இருட்டில் “உன்னை நம்பறதா… ” என்று வெற்றிடத்தைப் பார்த்துக் கோவத்தில் கடித்துக் குதறினான். கடைசியில் “வலியில் கூட நீ இருக்கியா… நீ எனக்கு வேணும் நீ இல்லாம இருக்க முடியாது ஆனால் என்னால இந்த வலியைத் தாங்க முடியல. அது தீர ஒரு வழி சொல்லு” என்று தரையில் அமர்ந்து கதறியவன் யாரோ துரத்துவது போலத் தலை தெறிக்க ஓடினான்.
ஓடிச் சென்று மருத்துவமனையின் வாசலில் நின்றான். அங்கு வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் என்னவோ பேச, அவள் மணிக்கட்டில் நேரத்தைப் பார்த்துவிட்டு அவனை உள்ளே அழைத்து சென்றாள்.
காட்சிகளைப் பார்த்து மாறி மாறி உணர்ச்சிகளைக் காட்டிய ஈஸ்வரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனியின் கண்களில் கண்ணீர்.
“ஈஸ்வர் என்னாச்சுடா உனக்கு. பஸ்ல, பீச்ல, லிப்ட்ல இந்த மூணு இடத்திலும் யாருகிட்ட பேசின” உலுக்கினாள்.
“ரஞ்சு… ” என்றான் ஈஸ்வர் “யாருகிட்ட இல்லை எதுகிட்ட”
“என்ன சொல்ற”
“நான் சொன்னாலும் நீங்க நம்பப் போறதில்லை. கவுன்சிலிங்ல கூட எனக்கு ஹலூசினேஷன்னுதான் சொல்றாங்க.
முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. இந்த வீடியோ நிஜமானதுதான். நான்தான் பேசினேன். ஆனால் இது எப்படி உங்களுக்குக் கிடைச்சது. என்னைப் பின்தொடர ஆள் ஏற்பாடு பண்ணிங்களா”
“வந்து… நீ லிப்ட்டில் பேசினதைப் பாத்து பயந்துட்டு நம்ம ஆபிஸ்ல யாரோ பின்தொடர்ந்து வந்து உன்னை வீடியோ எடுத்துத் தந்தாங்க” ஈஸ்வரின் கூர்மையான பார்வையைக் கண்டு மேலே தொடர முடியாமல் திணறினான் ராபர்ட்.
“ராபர்ட் இனிமே பொய் சொல்லவேண்டாம். எஸ் ஈஸ்வர் நாங்கதான்டா உன்னைப் பின் தொடர ஆள் ஏற்பாடு செஞ்சோம். நீ எங்க போற என்ன செய்றன்னு எங்களால் பயந்துகிட்டே இருக்க முடியல. அதனாலதான் செஞ்சோம். இன்னிவரைக்கும் நாங்க செய்ற ஒன்னொன்னும் உன்னை மீட்டெடுக்கணும்னு தான்” என்றாள் ரஞ்சனி.
எழுந்து நின்று ரஞ்சனியின் தலையில் கைவைத்தான் ஈஸ்வர் அப்படியே அந்தக் கரங்களால் அவளது தலையை வருடினான் “ரஞ்சு… நீ எங்களுக்கு இன்னொரு அம்மாவா எப்படி இருக்க… உன் வாழ்க்கைல பெரும்பகுதி எங்களை சகிச்சுகிறதிலேயே ஓடிடுது இல்ல. எங்களை உன் குடும்பமா நினைச்சு குழம்பிக்கிறதுதான் உனக்குன்னு ஒரு குடும்பம் உருவாகுறதைத் தடுக்குதோ…” என்றான்.
அவன் பழைய நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வருவதை உணர்ந்தனர் மற்றவர்கள்
“நான் பேசாம இருந்ததால உங்களை எல்லாம் கவனிக்காம இருந்தேன்னு நினைக்காதிங்க. உங்களை அப்சர்வ் பண்ணேன் ஆனால் பதில் வினை புரியணும்னு என் மனசு நினைக்கவே இல்லை. இப்ப கொஞ்ச நாளா கவுன்சிலிங் போயிட்டு இருக்கேன். சீக்கிரம் முழுமையா வெளிவந்துடுவேன். அதுவரைக்கும் என் பைத்தியக்காரத்தனத்தை நீங்க பொறுத்துக்கணும்” கஷ்டப்பட்டு புன்னகை புரிய முயற்சித்தான்.
தான் அவர்கள் பிரச்சனையை அறிந்திருக்கிறேன் என்பதை சொல்லும்விதமாக முதலில் ராபர்ட்டிடம் சென்றான்
“ராபர்ட்… உன் குடும்பத்துகிட்ட பிரியம் செலுத்த அவங்களோட அனுமதி தேவையில்லை. உன் மனைவியையும் பொண்ணையும் மனசார லவ் பண்ணு. அன்பு என்பது பிடிக்குதோ இல்லையோ பாராபட்சம் இல்லாம பொழியும்”
ஜன்னல் அருகே சென்றவன் வெளியே தெரிந்த காட்சிகளை சில வினாடிகள் பார்த்துவிட்டு பின் ஜெயேந்தரை நோக்கித் திரும்பினான்.
“ஜெய் எத்தனை நாள் உன்னோட உடல்நிலையை எங்க கிட்ட மறைக்க முடியும்னு நினைச்ச… உனக்கு பெரிய மேதாவின்னு நினைப்பா… உனக்கு ட்ரீட்மென்ட் எடுத்து குணமாக்குறதுதான் எங்க முதல் வேலை”
“அப்படி குணமாக்க முடியலைன்னா என் குடும்பத்தை பாத்துக்குவிங்களாடா…” அப்போதுதான் விஷயத்தை முழுவதுமாகக் கேள்விப் பட்ட மற்ற நண்பர்கள் விக்கித்து நிற்க “ஜெய் நான் உயிரோட இருக்கும் வரை உன் குடும்பத்தைக் கவலைப் பட விடமாட்டேன். ” என்று உறுதி மொழியளித்தான் ஈஸ்வர்.
”ஆனால் உன்னைக் காப்பாத்த ஒவ்வொரு நொடியும் போராடுவேன். ஏன்னா போராடிக் கிடைக்கும் தோல்வி கூட வெற்றிதான்”
ஜெய்யின் உடல்நிலையைப் பற்றி சொன்னதும் அங்கு எழுந்த உணர்ச்சிப் போராட்டம் அடங்க வெகு நேரமானது. ஜெய் உண்மையை மறைத்ததற்காக மாற்றி மாற்றி அவனைத் திட்டித் தீர்த்தபின் தங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் அவனது நோய் பற்றி சொல்லி சிகிச்சைக்கு வழியிருக்கிறதா எல்லா வகையிலும் அறிய முயற்சித்தார்கள். சில மணி நேரங்களில் பதில் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நவீன அறுவை சிகிச்சை செய்தால் ஐம்பது சதவிகிதம் வாய்ப்பிருப்பதாகத் தகவல் வர அதனை மேற்கொள்ள சம்மதம் சொன்னார்கள்.
“அடுத்தக் கட்டமா கம்பனியை விஸ்தாரப் படுத்தும் வேலைல இறங்கலாம். ஏஷியாவில் மற்ற எங்கயாவது பிஸினெஸ் ஆரம்பிக்க முடிஞ்சா அங்கயும் ஒரு பிரான்ச் ஸ்டார்ட் பண்ணி நீ அதைப் பார்த்துக்கோ ராபர்ட்”
“எப்படிடா ஏற்கனவே கம்பனி லாசில் போயிட்டிருக்கு”
அவனை முறைத்த ஈஸ்வர் “இந்த கம்பனியை முழு கடனில்தானே. ஆரம்பிச்சோம். எந்த நம்பிக்கையில் ஆரம்பிச்சோம். மேல கொண்டு வந்துடலாம்னு தானே. இப்ப அதை விட நல்ல நிலமையில் தானே இருக்கோம். இன்னும் ஒரே வருஷம் எல்லாத்தையும் தலைகீழா மாத்திடலாம்”
“இந்த அளவுக்கு நம்பிக்கை எனக்கில்லை”
“நம்புடா… ஒவ்வொரு உயிரும் இந்த உலகத்துக்கு வந்ததே அந்த நம்பிக்கைலதான் ”
ஈஸ்வரின் ஈடுபாட்டால் அடுத்து வந்த சில நாட்களில் அவர்கள் நிறுவனத்திற்கே எனெர்ஜி ரெட்டிப்பாகிவிட்டதைப் போல உணர்ந்தார்கள் நண்பர்கள் மூவரும்.
அந்த ரெஸ்டாரண்டுக்கு மாராவை டின்னருக்கு அழைத்திருந்தான் ஜெய். அவனை உற்றுப் பார்த்த மாரா
“எல்லாருக்கும் சொல்லிட்டியா ஜெய்… ”
“எஸ்… நீ சொன்ன மாதிரி அவங்களுக்கு குட் பை சொல்ல நேரம் தந்திருக்கேன் மாரா. அவங்களும் தயாராகணுமில்ல… ”
விளங்க முடியாத சிரிப்பு அவளிடம்.
“ராபர்ட் சொன்ன இந்த டிராமா இப்படி ஒரு அற்புதமான பலனைத் தரும்னு நான் நினைச்சே பார்க்கல. ஐ லைக் யூ மாரா. உனக்கு இருக்கும் சின்சியாரிட்டியை நான் இது வரைக்கும் யாருகிட்டயும் பார்த்ததில்லை. ஆசாம் பெர்பார்மன்ஸ் மாரா” மெலிதாக அடுத்தவர் கவனத்தைக் கவராத வண்ணம் கைதட்டினான்.
மாராவின் கண்கள் பல்பு போட்டது போலப் பளிச்சிட்டது “தாங்க்ஸ் ஜெய். எப்போதும் பிரேமாவுக்கும், ஹோரஸ்க்கும் கிடைக்கும் பாராட்டு எனக்குக் கிடைச்சதே இல்லை. ஒருவேளை நான் வில்லி வேஷத்தை மட்டுமே பண்றதால மக்களுக்கு என்னைக் கண்டால் வெறுப்பா இருக்கலாம். என்னை விரும்புறவங்க குறைவு. திட்டுறவங்கதான் அதிகம். எனக்கு முதன் முதலில் கிடைச்ச பாராட்டு ஜெய். இதை நான் மறக்கவே மாட்டேன்” என்றாள் மாரா.
இருவரும் அமைதியாக உணவினை உண்டனர். “ஈஸ்வர் எப்படி இருக்கான்”
“தாங்க்ஸ் மாரா உன்னால் அவன்கிட்ட ஏகப்பட்ட மாற்றம். இப்ப எனக்கு ட்ரீட்மென்ட் தந்தே ஆவேன்னு ஒத்தைக் காலில் நிக்கிறான்….” சிரித்தான் ஜெய்.
“அமெரிக்காவுக்குப் போக ஏற்பாடு பண்ணிட்டிருக்கான். எவ்வளவு தூரம் இது வொர்க் அவுட் ஆகும்னு தெரியல…
எனக்கு ஒரு கனவு இருக்கு மாரா மெரீனா பீச்சில் என் பேரனோட பட்டம் விடணும். அதை என் மகன், மருமகள், மனைவி எல்லாரும் பாத்து ரசிக்கணும். பேரன் என்னைத் தாத்தா தாத்தான்னு கூப்பிட்டுட்டே பின்னாடி ஓடி வரணும்… அழகான கனவில்ல…” என்றான் மனக்கண்ணால் பார்த்து ரசித்தபடி.
புன்னகைத்த மாரா… “நேரமாச்சு நான் கிளம்புறேன்… அப்பறம் சந்திக்கலாம் தாத்தா… ” என்றாள்.
“அடுத்த மாசம் சந்திக்கலாம்னு சொல்லிருந்தியே… ”
“சொன்னேன் ஜெய் ஆனால் எனக்கு வேற வேலை வந்துருக்கு… அதைப் பாக்கணுமே… ”
“வேலை முக்கியம். அதைப் பாரு மாரா… ஆனால் உன்னை நான் மிஸ் பண்ணுவேன்”
“எனக்கு அடுத்த ப்ராஜெக்ட் வந்துடுச்சு. இன்னைக்கே நான் அங்க போகணும். அதனால் நான் இப்போதைக்கு உன்னை சந்தோஷமா மிஸ் பண்றேன். நம்ம நீ தாத்தா ஆனவுடன் மறுபடியும் டேட் பண்ணலாம் ஜெய்” என்று கண்ணடித்தாள்.
“மாரா…. யூ ஆர் சோ ஸ்வீட். உன்னை என்னால் மறக்கவே முடியாது” என்று கட்டி அணைத்துப் பின் வழியனுப்பி வைத்த ஜெய்யை ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு இருளில் கலந்து மறைந்தாள் மாரா.
ரஞ்சனி தனது மொபைலில் இருந்த குழந்தைகளின் படங்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புக்களையும் பார்த்தாள். அநாதை ஆசிரமத்திலிருந்து வந்தது. குறும்பு சிரிப்புடன் வெல்லக்கட்டியாய் பார்க்கும் போதே இனிக்கும் இந்தக் குழந்தைச் செல்வத்திற்கு என் மேல் என்ன கோபமோ. அருகில் வரவே மாட்டேன் என்கிறதே. பெருமூச்சுடன் மொபைலை அணைத்தாள்.
யாரோ வரும் ஓசை கேட்டு நிமிர்ந்தவள் ஹோரஸ் என்று கண்டு கொண்டதும் புன்னகைத்தாள். தனது கைப்பையை மறுபடியும் திறந்து காசோலையை எடுத்தாள்.
“உன்னோட வீடியோக்கள் பிரமாதம். நடிப்பில் கொஞ்சம் ஓவர்ஆக்ட் பண்ணாலும் கூட… ஈஸ்வர்கிட்ட மாற்றம் கொண்டு வந்துட்ட… வெல்டன் ஹோ” என்று பாராட்டினாள்.
ஹோ ஒரு தடவை நன்றாக இருக்கிறது என்று சொன்ன கேக்கை நினைவில் வைத்து அவனுக்காக வாங்கி வந்திருந்தாள். அதனை அவனிடம் முதலில் தந்தாள்
அதன்பின் காசோலையைத் தந்தவள் “இத்தனை பணத்தை வச்சு என்ன செய்யப் போற ஹோ… உன் வயசுக்கு கைல நிறைய காசு பார்த்தா தப்பு செய்யத் தோணும். ஒழுங்கா ஏதாவது கோர்ஸ்ல சேர்ந்து படி. நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் படிப்பை விட்டுடாதே. என்ன…” என்றபடி அவனது தோளில் அன்பாகத் தட்டினாள்.
“உனக்கு எப்ப என்ன வேணும்னாலும் நான் ஒருத்தி இங்க இருக்கன்னு நினைவு வச்சுக்கோ” என்றவளை பதில் சொல்லாமல் பார்த்தான் ஹோரஸ்.
“நீங்க ஒரு நல்ல அம்மா ரஞ்சனி. உங்களோட ஒவ்வொரு செயலிலும் தாய்மை இருக்கு”
திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் குளம் கட்டிய நீரைக் கட்டுப்படுத்தியவண்ணம் “தாய்மை இருக்கலாம் ஆனால் ஒரு அம்மாவா இருக்க கொடுப்பினையை இயற்கை மறுத்துட்டது… ”
அவளைப் பேசாமல் ஏறிட்டுப் பார்த்த ஹோரசிடம் விரக்திப் புன்னகையுடன் “இயற்கையை எதிர்த்துத் தாய்மையை அடையப் போராடினேன். ஆனால் காலம் அதைத் தப்புன்னு உணர்த்திடுச்சு” என்றாள்.
அவளைப் பார்த்து மெலிதாக சிரித்த ஹோரஸ் “ரஞ்சனி மேடம் … தாய்மை ஒரு உணர்வுதான். அது எல்லா உயிரினத்துக்கும் இற்கு. மதர் தெரசான்னு சொல்றாங்க அவங்களுக்குக் குடும்பமே இந்த உலகம்தான்.
அம்மான்னு சிலரை அன்போட அழைக்கிறோம். இந்த இடத்தின் பொருள் அவங்க எத்தனை குழந்தைகளைச் சுமந்து பெத்தாங்கன்னுறது இல்லை…. எத்தனைக் குழந்தைகளைத் தன்னோட அன்பால் சம்பாதித்துப் பெற்றார்கள்ன்னு தான் காலம் கணக்குப் போடுது.
குட்டிக் கண்ணனை கோபாலனாவும், யசோதை மகனாவும்தான் நம்மால் கற்பனை செய்ய முடியுது. இதிலிருந்து என்ன தெரியுது உங்க குழந்தைன்னு சொல்றது உங்க வழியா வருவது இல்லை… உங்கள் வழியாகத் தொடர்வது. அது படி பார்த்தா உங்களுக்கு இன்னமும் நிறைய நேரம் இருக்கு. யோசிச்சு முடிவெடுங்க ரஞ்சனி” புதிராக அந்த மாயக்கண்ணனின் சிரிப்புடன் அவளைப் பார்த்து விடை பெற்றுக் கொண்டான்.
தனது காரை அந்த மருத்துவமனைக் கட்டடத்தில் நிறுத்திவிட்டு ஓடினான் ஈஸ்வர். சில வாரங்களாக கவுன்சிலிங் செக்ஷனுக்கு சரியாக வர முடிவதில்லை. ஜெய்க்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பினான். அது தவிர நீண்ட நாட்கள் கழித்து ராபர்ட்டின் மகள் நான்ஸியின் பிறந்தநாளில் கலந்து கொள்ள நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு வந்திருந்தது. முன்பெல்லாம் குழந்தைகளைப் பார்த்தவுடன் இருப்புக் கொள்ளாமல் தவிக்கும் மனது இப்போது கட்டுக்குள் இருந்தது காயத்திரியின் அன்பான வார்த்தைகளால்தான் என்று முழுமையாக நம்பினான்.
ரஞ்சனி வேறு இரண்டு குழந்தைகளைத் தத்தெடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறாள். ராபர்ட் குடும்பத்தோடு வேறு கிளைக்கு செல்லவிருக்கிறான். இனி தனது பங்களிப்பு நிறுவனத்தில் அவசியம். இனிமேல் இந்த கவுன்சிலிங்கிற்கு எந்த அளவுக்கு நேரம் தர முடியும் என்று ஈஸ்வருக்குத் தெரியவில்லை.
வழக்கமாக கூட்டத்தை நடத்தும் காயத்திரி இல்லாமல் வேறு யாரோ நடத்தியது ஈஸ்வருக்கு மனதில் ஏமாற்றமாகவே இருந்தது. என்னவோ ஒரு வெறுமை. கூட்டம் கலைந்ததும் அங்கு வேலை செய்பவரிடம் “காயத்திரி மேடம் இன்னைக்கு வரலையா” என்றான்.
“அவங்களுக்கு உடம்பு சரியில்லை… லீவு” என்று வந்த பதிலைக் கேட்டுக் கொண்டு காரில் அமர்ந்தான்.
உடம்பு சரியில்லையாமே… காயத்திரியை யார் கவனிச்சுப்பாங்க. துணைக்கு யாருமில்லைன்னு அன்னைக்கு சொன்ன நினைவு… என்று எண்ணிக் கொண்டே வண்டியை ஓட்டியவன் காயத்திரியின் வீடு இருக்கும் பகுதிக்குத் தன்னையும் அறியாமல் வந்ததை நினைத்துத் திடுக்கிட்டான். அந்தப் பகுதியில் சில முறைகள் வந்திருக்கிறான். நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது.
மறுபடியும் வண்டியைக் கிளப்ப எண்ணியவன் காயத்திரியின் உடல்நிலையை விசாரித்து செல்ல எண்ணினான். அவள் குடியிருக்கும் அந்த பழைய அப்பார்ட்மென்ட்டுக்கு வந்தவன் வாட்ச்மேனிடம் விசாரித்தான்
“காயத்திரி வீடு”
“நாலாவது மாடி. லிப்ட் கிடையாது, படியில் ஏறிப் போங்க”
மூச்சு வாங்க ஏறிச் சென்று கதவைத் தட்டினான். கதவைத் திறந்த காயத்திரி அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகமே காட்டியது.
“ஹாய் காயத்திரி… ”
பதில் பேச முடியாது திகைத்து விழித்தவளிடம் “உள்ள வரலாமா” என்றான்.
“வாங்க… உக்காருங்க” சோபாவை சுட்டிக் காட்டினாள்.
“காய்ச்சல்னு சொன்னாங்க… எப்படி இருக்கிங்க”
“மாத்திரை சாப்பிட்டிருக்கேன். இப்ப தேவலாம்”
“நீங்க தனியாத்தான் இருக்கிங்களா… ஹெல்புக்கு யாராவது”
அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி “தனிதான்… வேற வழியில்லை” என்றாள்
அவளது கண்கள் சிவந்து முகம் வீங்கியிருப்பது கண்டு “காய்ச்சல் இன்னும் சரியாகல போல… டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகட்டுமா”
“இல்ல வேண்டாம்… இருங்க உங்களுக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்”
“நீங்களும் என் கூடக் குடிக்கிறதா இருந்தால் ஓகே”
“சரி நமக்குக் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.
அவள் சென்றதும் அங்கிருந்த ரூமில் இருந்த பொருட்களின் மேல் அவனது பார்வை பட்டது. சுவற்றில் மகனின் கிறுக்கல்கள் மாம், டாட் என்று… புரியாத பொம்மைகள், கோடுகள்… மேலும் பார்க்க முடியாமல் அவனது கண்கள் கலங்கின.
காயத்திரி அழுது கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பட்டது. மெதுவாக அருகிலிருந்த சமையலறைக்கு சென்றான். அவனது எண்ணம் சரிதான் என்பது போல பால் கொதித்து, பொங்கி கீழே கொட்டிக் கொண்டிருக்க, அதை உணராது அடுப்பருகே நின்று எங்கோ வெறித்துக் கொண்டிருந்த காயத்திரியின் கண்களிலிருந்து நீர் வழிந்துக் கொண்டிருந்தது.
“காயத்திரி… ” என்று அவளை அழைத்தவண்ணம் அடுப்பை நிறுத்தினான்.
“என்னது இது… அழாதம்மா…”
“என் பையனோட ஆல்பம் பார்த்தேன்… என்னால தாங்க முடியல ஈஸ்வர்… ”
அவளை என்ன சொல்லித் தேற்றுவது என்றறியாமல் நின்றான்.
“அழகழகான போட்டோஸ். என்கூட சேர்ந்து பாக்க வர்றிங்களா”
வேண்டாம் என்று சொல்ல நினைத்தவன் அவள் கண்களை சந்தித்தவுடன் பதில் பேச முடியாது நின்றான். அதனை அவனது சம்மதமாக எண்ணிக் கைகளைப் பற்றி இழுத்து சென்றவள் அந்தப் பெரிய ஆல்பத்தைப் பிரித்தாள்.
பலவண்ண நிறத்தில் தெரிந்த அந்தப் புகைப்படங்களைக் காணப் பிடிக்காமல் இருப்புக் கொள்ளாது தவித்தான் ஈஸ்வர்.
“இது அஹான் வயத்தில் இருந்தப்ப எடுத்தது, இது அவன் பொறந்தப்ப அவன் அப்பா கைல இருந்த போது எங்கப்பா எடுத்த போட்டோ… இது அவனோட அப்பா கூட விளையாண்டபோது எடுத்தது”
சொல்லிக் கொண்டே வந்தவள் “என் பய்யன் பேரு அஹான் அவனை மூணு வயசில் பிரிஞ்சுட்டேன்… ” விக்கி விக்கி அழுதாள்.
“உங்க மகன் பேரு என்ன ஈஸ்வர்” என்றாள் கேவிக் கொண்டே…
அவன் பதில் சொல்லாதது பார்த்து ஒரு உறுதியுடன் எழுந்து தனது கைப்பையைத் திறந்து ஒரு கிரீட்டிங் கார்டை எடுத்தாள். அதனை ஈஸ்வரின் கைகளில் திணித்தாள்
“‘நம்ம ரெண்டு பேரும் அறிமுகமில்லாதவங்களா இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்’. இது நீங்க எனக்கு எழுதினது. அதுமாதிரியேதான் நான் நடந்துட்டு இருந்திருக்கேன். இப்பவாவது சொல்லுங்க ஈஸ்வர் உங்க மகன் பெயர் என்ன”
அந்தப் புகைப்படத்தில் கிரிகெட் பேட்டுடன் தன் காலைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த சிறுவனைப் பார்த்த வண்ணம் குரல் நடுங்க, கண்களில் நீர் வழிய சொன்னான் ஈஸ்வர்
“என் மகன் பேரு அஹான். அவனை மூணு வயசில் ஒரு விபத்தில் தவறவிட்டுட்டேன் காயூ… ” என்றபடி உரத்த குரலில் ஓ எனக் கதறியவன் அவளைக் கட்டிக் கொண்டு குலுங்கினான்.
கண்கள் சிவக்க, குரல் நடுங்க, “ஐ ஆம் சாரி… என்னை மாதிரிதானே நீயும் தவிச்சிருப்ப. நான் உன்னை விட்டுட்டுப் போன மாதிரி நீயும் என்னை விட்டுப் போயிடாத காயூ… என்னால தாங்க முடியாது” என்றான் குரல் நடுங்க…
“போக மாட்டேன் ஈஸ்வர்… ” அவனது முதுகைத் தட்டி சமாதானப்படுத்தினான். ஒன்றிரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அவர்களது அழுகையும், தேம்பலும் தம்பதியினர் இருவரின் மனபாரத்தை ஓரளவு குறைத்தது.
தனது மடியில் சாய்ந்து படுத்திருந்த ஈஸ்வரின் தலையைக் கோதியபடியே கேட்டாள் காயத்திரி “எதனால நம்ம பிரிஞ்சோம்னு நினைவிருக்கா… ”
கண்களை மூடித் திறந்தவன் “நினைவில்லை காயத்திரி… காரணம் எதுவா இருந்தாலும் நம்ம இழப்பு கூட ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது தூசியாத்தான் தெரியுது. ஒரு வேளை நம்ம ரெண்டு பேரும் பிரியாம இருந்திருந்தால் அந்த விபத்து நடந்திருக்காதோ… அஹான் மேல யாராவது ஒருத்தர் கவனத்தை வச்சுட்டே இருந்திருப்போம் இல்ல… ”
“சிலதுக்கு பதில் நம்மகிட்ட இல்ல ஈஸ்வர். காலத்துக்கு வேணும்னா தெரிஞ்சிருக்கலாம்”
எழுந்து நின்றான் ஈஸ்வர் “ரொம்ப நேரமாச்சு. முகம் கழுவிட்டு, ட்ரெஸ் மாத்திட்டு வா… எங்கயாவது போய் சாப்பிட்டுட்டு, என் வீட்டுக்குப் போகணும்”
“சாப்பிட்டதும் என்னை ஆட்டோல ஏத்தி விட்டாக் கூடப் போதும் ஈஸ்வர். நானே வந்துடுவேன்”
கண்களை மூடித் திறந்தவன் “நடுவில் இறக்கிவிட உன்னைக் கூப்பிடல… உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாமத்தான் கூட்டிட்டுப் போறேன். எனக்கு போட்டுக்க ட்ரெஸ் எடுத்துட்டு இங்கயே வந்துடலாம்”
“நிஜம்மாவா ஈஸ்வர்” கண்களில் ஆச்சிரியம் பொங்கக் கேட்டாள் காயத்திரி.
“இது என் மனைவி வாழும் வீடு, என் மகனோட ஜீவன் இந்த வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியிருக்கு… அப்ப இது தானே நான் இருக்க வேண்டிய இடம்” என்றவனின் கன்னங்களில் ஒரு மென்மையான முத்தமிட்டவள் “அஞ்சு நிமிஷத்தில் வந்துடுறேன்” என்று சொல்லி குளியலறைக்குள் மறைந்தாள்.
அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியிருந்த மகனின் கிறுக்கல்களையும், பொம்மைகளையும் தடவிப் பார்த்தான் ஈஸ்வர். ஷோ கேசில் மகனது கார் பொம்மைகள், கார்டூன் கேரக்டர்கள் என்று ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தவண்ணம் இருந்தவனை சில பொம்மைகள் கவர்ந்தன அவற்றைக் கையில் எடுத்து வெளிச்சத்தில் பார்த்தான்.
“ஈஸ்வர்… ” என்று குரல் கொடுத்தவண்ணம் வந்த காயத்திரி அவன் கையிலிருந்த பொம்மைகளைப் பார்த்து ஆச்சிரியத்தைக் காட்டினாள்.
“இது…” என்றான் ஈஸ்வர்
“இந்த மூணு பொம்மையும் பாண்டிச்சேரி போனப்ப ஒரு சாமியார் கிப்ட்டா கொடுத்தார். ஏதோ ட்ரைபல் க்ரூப் வச்சிருந்ததாம். இந்த மூணு அஹானுக்கு ரொம்பப் பிடித்தமான டால்ஸ். ஏதோ பிரெண்டு கூட பேசுற மாதிரி இந்த மூணு கூடவும் பேசிட்டு விளையாண்டுட்டு இருப்பான்”
“அப்படியா… ” ஆசையாக அவற்றைத் தடவிப் பார்த்தான்
“என்னமோ எழுதிருக்கே… தமிழ் எழுத்தா…” என்றவண்ணம் அவற்றில் பொறித்திருந்த எழுத்துக்களைப் படிக்க முயற்சித்தான்.
“நானே சொல்றேன் மாரான்னா மரணக் கடவுள், ஹோரஸ்னா காலதேவன் இல்ல நேரம் மாதிரி ஒரு அர்த்தம் , பிரேமான்னா நமக்கே தெரியுமே காதல்” என்றாள் காயத்திரி.
மாரா ஒரு வயதான பெண்மணியாகவும், ஹோரஸ் ஒரு போர் வீரனைப் போன்ற துடிப்பு மிக்க இளைஞனாகவும், பிரேமா பார்த்தாலே மயக்கம் அழகு நிறைந்த யுவதியாகவும் மரத்தில் செதுக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் அவற்றின் கண்களில் ஒரு உயிர்ப்பு இருப்பதைப் போலவே பட்டது ஈஸ்வருக்கு
எனவே மறுபடியும் அவற்றை உற்றுப் பார்த்தான். “அதை ஏன் இப்படி உத்து உத்துப் பாக்குறிங்க”
“இல்ல இந்த பொம்மைகளைப் பார்க்கும் போது ரொம்ப அறிமுகமானதா தோணுது” என்றான்.
“இருக்கலாம்… ஒரே மாதிரி சாயல்ல பொம்மைகள் இருக்குறதில் என்ன அதிசயம் இருக்க முடியும்” என்றவளின் நெற்றியில் தனது இதழ்களைப் பதித்தவன் மூன்று பொம்மைகளையும் அதே இடத்தில் வைத்துவிட்டு மனைவியின் தோளில் கைகளைப் போட்டு அணைத்தவாறு நடந்தான்.
காயத்திரி கதவை சாத்தும் முன்பு கிடைத்த வினாடிக்கும் குறைவான நேர இடைவேளையில், அவற்றை மறுபடியும் இமைக்காது பார்த்தான். அப்போது மூன்று பொம்மைகளும் அவனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகை புரிந்தாற்போலத் தோன்றியது உண்மையா பொய்யா என்று யோசித்தவண்ணம் காயத்திரியின் கைகளை இறுக்கமாகப் பற்றியவாறு ஈஸ்வரின் பயணமும், அவளையே எண்ணியவாறு அவனது வாழ்க்கைப் பயணமும் தொடர்ந்தது.
நிறைவு பெற்றது
ஹலோ பிரெண்ட்ஸ்,
இந்தக் கதையை இவ்வளவு சீக்கிரம் முடித்ததற்குக் காரணம் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதைநாயகி லலிதாவா இல்லை நம்ம எழுத்தாளர். ஆர்த்தி ரவியா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். லலிதா கதை ஓட்டத்தில் ஒரு கான்செப்ட் சொல்லியிருந்தாலும் ஆர்த்தி எழுப்பிய கேள்வியே இந்த கோல் செட் செய்யும் யோசனையைத் தூண்டியது. சோ… ஆர்த்தி உங்களுக்கு ஒரு ப்ரூப் கிடைச்சாச்சு. உங்களது முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள் ஆர்த்தி
இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தோழமைகளே. வழக்கமான பாணியிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது இந்தக் கதை. இதற்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள ஆசை.
பதிவுகளைத் தரும்போதே ஓரளவு முடிவினை ஊகித்த யாழ்சத்யாவிற்கும், மாரா ஹோரஸ் பிரேமா பெயர்காரணத்தைக் கண்டு பிடித்த சத்யவாணிக்கும் (சத்யாக்களுக்கு ஊகிக்கும் சக்தி அதிகம்னு நினைக்கிறேன்) எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
வாசகத் தோழர்கள் கதையினைப் பற்றிப் பகிரும் பொழுது முடிவைச் சொல்லாமல் பகிர்ந்தால் படிப்பவர்கள் நீங்கள் பெற்ற அதே வாசிப்பு அனுபவத்தைப் பெறுவார்கள்.
மறுமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு லல்லி பாரியுடன் வார இறுதியில் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.



Bselva
Very nice mathura. Friends kana solution kidachathu athuvum eshwar oda life sarianathum remba happy.didnt expect gayu is eshwar wife.ranjini is so sweet.blessed to have friends like them.