Tamil Madhura ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்',Uncategorized ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 5

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 5

காலை பதினோரு மணி நேரம். அந்த ரயில்வே காலனி அமைதியாக இருக்கிறது. பாலாமணி வீட்டு வாசல் மூங்கில் படல் தடுப்பின் கீழே, ஏதோ பூச்செடியைப் பேணிக் கொண்டிருக்கிறாள். அடுத்த படலைக்கப்பால் கூந்தலை ஆற்றிக் கொண்டு ஓர் இளம் இல்லாள் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

“வெங்காயத்தோலும், டீத்தூளும் போட்டீங்கன்னா, நல்லா பூக்கும்…”

“அட… வாங்க வாங்க டீச்சர்! அபிராமி டீச்சர நினைக்காத நாள் இல்ல. எங்க இப்படி அபூர்வமா…?”

“சும்மா, பாத்திட்டுப் போலாம்னு வந்தேன் டீச்சர். எனக்கு முன்ன ரிடயர் ஆனவங்க, எப்படி இருக்கீங்கன்னு வந்து பாக்கக் கூடாதா?…”

“தாராளமா வாங்க. இந்த மட்டிலானும் என் நினைப்பு வந்திச்சே? சீனி கல்யாணத்துக்குக் கூட வர முடியாம போச்சு. பத்திரிகை வந்திச்சி… உள்ள வாங்க டீச்சர்!”

ஒரு சிறு வராந்தா, முன்னறை, படுக்கையறை, சமையலறை என்று கச்சிதமாக ஒரு சிறு குடும்பம் வாழப் போதுமான வீடு.

முன்னறையில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது பாலாமணி அந்த நாளில் போட்ட குரோசா விரிப்பு அழகுற விளங்குகிறது.

சோபா செட்டு அறையின் பரப்பளவை மிகச் சிறிதாகக் காட்டுகிறது.

“உக்காருங்க டீச்சர், கையக் கழுவிட்டு வரேன்…”

அபிராமி சுவரில் மாட்டியிருக்கும் குடும்பப் போட்டோக்களைப் பார்க்கிறாள். சிறு ஷோகேஸில் பல்வேறு அலங்காரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. ஒன்றும் கருத்தில் பதியவில்லை.

இங்கே எதற்காகத் தாம்பரம் ஒரு கோடி தேடி வந்தோம் என்று புரியாத குழப்பம் ஆட்கொள்கிறது.

“மருமகள் இல்லையா, டீச்சர்?”

“ஆத்தா வூட்டுக்குப் போயிருக்கா, கைக்குழந்தையக் கூட்டிக்கிட்டு. மல்லிகாவும் ராதுவுந்தா ஸ்கூலுக்குப் போயிருக்கு…”

“இளங்கோ எங்கே இருக்கிறான்? …சம்சாரம்… குழந்தை எதானும் உண்டா?”

“தெரியாதா டீச்சர் உங்களுக்கு. இளங்கோதா சவுதிக்குப் போயிட்டானே? கல்யாணம் கட்டி ஆறே மாசந்தா இருந்தான். அவளுக்கு விசா கெடக்கல. இங்கதா அண்ணாமலை புரத்திலே அத்தா வீட்டில இருக்கா…”

“இளங்கோ மோட்டார் கம்பனில நல்ல வேலைல தான இருந்தான்?”

“ஆமாம். யாரு கேக்கறது? அங்க நெறய்யப் பணம்னு, ஆயிரத்து நூறு ரூபா வேலைய விட்டுப் போட்டுப் போயிட்டிருக்கிறான். அத்தப் பாத்துட்டு இவனும், நானும் போறன்னு குதிச்சிட்டிருக்கிறான். தம்பிகிட்ட எனக்கும் சான்ஸ் வந்தா சொல்லு, பாஸ்போர்ட் வாங்கி வச்சிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச்சிருக்கிறான்…”

“அப்படியா?…”

“என்னமோ போங்க, டீச்சர். ரெண்டு வருசமா அந்தப் பொண்ணு பொறந்த வீட்டோடு கிடக்கு. என்னா பணமோ? நாலு மாசம் முன்ன வந்திட்டுப் போனான். வாட்சுக்குள்ள டேப்ரிகார்டர், காமராவுடன் சேர்ந்த கடியாரம்னு கன்னாபின்னான்னு வாங்கிட்டு வந்து இங்க எல்லாத்துக்கும் ஆசை காட்டிட்டான். பொண்டாட்டிய அழச்சிட்டு பம்பாய் டில்லின்னு பிளேன்ல போயிட்டு வந்தா. ஒரு பத்துச் சீலை, சென்டு, வாட்சு, மோதரம் எல்லாம் வாங்கிக் குடுத்துட்டு, ஊருக்குப் போயிட்டா. ஒண்ணும் செரில்ல டீச்சர்!”

பாலாமணி அலுத்துக் கொள்கிறாள்.

தாட்டியான உடம்பு, தளர்ந்து கழுத்துச் சதை கை சதை தொங்குகிறது. முன் கூந்தல் முற்றிலும் நரைத்து, மூப்பை மிக அதிகமாகக் காட்டுகிறது. ஒரு வருஷம் தான் அவள் இவளை விட மூத்தவள்.

“சவூதில வேலை எளிசாக் கிடைக்கிறதுங்கறது நெசந்தானா டீச்சர்?”

“என்னாவோ? வேலை இல்லாதவன் போகட்டும். இருக்கிறவன் இத்தை விட்டுப் போட்டு எதுக்கு ஓடணும்? கலியாணம் கட்டிச் சின்னஞ்சிறிசு, இப்படிப் பிறந்த வீட்டில விட்டு விட்டுப் போறதா?”

“பணம் இல்லாம என்ன ஆகுது டீச்சர்? அதுவும் தானே வேண்டி இருக்கு?”

“பணம் வேணுந்தா. ஆனா அதுவே வாழ்க்கையா? நாங்க கல்யாணம் கட்டிட்ட காலத்துல, ரயில்ல அவருக்கு நாப்பது ரூபாதா சம்பளம். வீட்டில எட்டு ஜீவன். தங்கச்சிங்க ரெண்டு, தம்பி மூணு, எங்க மாமியா, நானு, அவரு. மூத்த பையன், அப்பா எறந்துட்டாரு, குடும்பப் பொறுப்பு அவரு தலைமேல. நானும் செகன்ட்ரிகிரேட் படிச்சி வேலை செஞ்சேனே, பிழைச்சது. காசு எண்ணி எண்ணித் தான் செலவு செய்யணும். நினச்சதுக்கெல்லாம் காசு கிடையாது. நினைச்சா சீல எடுத்திட்டு வாராகளே? உங்களுக்குத் தெரியாதா டீச்சர்? அப்பல்லாம் இப்பிடி நைலெக்ஸ் அது இதுன்னு என்ன உண்டு? சின்னாளப் பட்டுச் சேலை ரெண்டு, அதையே ஸ்கூலுக்கு மாத்தி மாத்தி உடுத்துவேன். ரயில்வேலைன்னு பாஸ் இருந்திச்சி, ஆனா எந்த ஊருக்குப் போனம், வந்தம்? விரலை மடக்குங்க? கெடயாது. மேக்கொண்டு காலணா செலவழிக்க முடியாதே? ரெண்டு தங்கச்சிகளைக் கட்டிக்குடுத்து, தம்பிகளைப் படிக்கவச்சி, வேலையில சேத்துவிட்டு, பின்னாலதா நம்ம குடும்பத்துக்கு வர முடிஞ்சது. நானுந்தா நாலு பெத்தேன். உங்களுக்குத் தெரியாதா?… இப்ப புள்ள பெத்துக்காத, பெத்துக்காதன்னு சொல்லிட்டே, பக்கம் பக்கம் ஆம்பிளயும் பொம்பிளயும், சீல துணியில்லாம, கூச்ச நாச்சம் விட்டு அங்கங்க இதுக்குத்தா இதுக்குத்தான்னு சினிமாலியும் படத்திலியும் கூத்தடிக்கிறாங்க… நீங்க சொல்லுங்க டீச்சர்!…”

குரலை இறக்குகிறாள். “தையக் காரங்கிட்ட ஒரு பாடின்னு சொல்லக் கூசுவோம். இப்ப மூணு வயிசுப் பிள்ளைங்களுக்குத் தெரியாதது ஒண்ணில்ல!”

“டீச்சர், அதெல்லாம் இப்ப சொல்லி என்ன பிரயோசனம்? நாம உலகம் தெரியாத கிழங்களாயிட்டமே?”

“உலகம் தெரியாத ஒண்ணுமில்ல. இவங்க போற போக்கு ஒண்ணும் சரியில்ல ஆமாம்…”

“மருமக… சும்மாதா அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாளா டீச்சர்?”

“அதென்னமோ, அவனுக்கு ஓராம்புளப் புள்ள வேணும், மூணும் பொம்பிளயாயிருக்கேன்னு. அவ வாணாம்னு நிக்கறாப்பல. இப்ப ரெண்டு மாசமா, தப்பிப் போயிருக்குன்னு சமுசயம். இந்தக் காலத்துல ஆருக்குத் தெரியிது? முன்னல்லாம் நாம வேலைன்னு வெளியே தான் போனம். ஸ்கூல் வுட்டு வந்தா, ஒலக்கையப் போட்டுட்டுத்தான் ஒதுங்கி இருப்பம். இப்ப ஒரே கட்டில்ல படுக்கை. எந்த காலத்திலும் அவ அடுப்பாண்ட வந்ததில்ல. காலம எட்டு மணிக்குள்ள நா பொங்கி வச்சிட்டு ஸ்கூலுக்கு வந்தே. இவ கண்ண முளிச்சிட்டு வரப்ப, அவன் டூட்டிக்குக் கிளம்பிடுவா. நமக்குப் பெத்த வயிறு, கடமை… இருட்டோட அஞ்சு மணிக்கு டூட்டிக்குப் போறான்னா மனசு கேக்குறதில்ல… நா செல்விக்கு ஆபரேசன்னு ஒரு மாசம் பங்களூர் போயிட்டேன். வந்து பாத்தா, அவனும் குச்சியாட்டம் போயிட்டான், புள்ளங்க பாக்க சகிக்கல.”

“பாட்டி, அம்மா காலம டிபன் ஒண்ணும் பண்ணாது. ரொட்டி வாங்கி வச்சிடும்னுதுங்க. உங்கப்பா என்னடீ பண்ணினான்னா, அவரே எந்திரிச்சி ஆர்லிக்ஸ் கலக்கிக் குடிச்சிட்டுப் போவார்ங்குதுங்க. இவ ஒக்காந்த எடத்தவுட்டு எந்திரிச்சாத்தான? ஒடம்பு ஏகாண்டமா தடிச்சிப் போச்சி… பிரசர் வந்திருக்காம்… நமக்கு இத்தினி வயசாயி ஒண்ணு சொல்லுறதுக்கில்ல!…”

பாலாமணி பொரிந்து தள்ளுகிறாள்.

அபிராமிக்குச் செவியில் ஒன்றுமே நிற்கவில்லை.

தனது மகன் – மருமகள் – பிரச்னையே பூதாகாரமாக அவளைக் கவிந்து கொண்டு அழுத்துகிறது. அவன் சவுதிக்குப் போவது தான் தீர்வு…

கண்காணாமல் போனபின், நீளமான விதேசியக் கடித உரை – பணம்…

எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்காமலா இருக்கும்?

“நாம்பாரு பேசிட்டே நிக்கிறேன்… டீச்சர், சாப்பிட்டீங்களா, என்ன பண்ணீங்கன்னே கேக்கல…”

“ஓ, அதெல்லாம் காலமயே ஆயிட்டது டீச்சர். இப்ப ஒண்ணும் வாணாம்!” இருந்தாலும் பாலாமணி உள்ளே சென்று ஒரு கண்ணாடித் தம்ளரில் கறுப்பாக திராட்சைச் சாறு கொண்டு வருகிறாள்.

“இதெல்லாம் என்னாத்துக்கு டீச்சர்…? நீங்க… இனிமேத்தான் சாப்பாடா?”

“நானும் சாப்பிட்டாச்சி. காலையில டிபன், சாப்பாடெல்லாம் ஒதுக்கிறதில்ல. இப்பதா சாப்பிட்டுட்டுக் கை கழுவிட்டு வந்தேன். ரோஜாப் பதியன் நேத்து வச்சிட்டுப் போனான். அத்தைப் பாத்துத் தண்ணி ஊத்திட்டிருந்தேன். நீங்க வந்தீங்க. இது வெறும் ஜூஸ்தா சாப்பிடுங்க!”

அபிராமி எடுத்துப் பருகுகிறாள்.

“வீட்டில் பண்ணினதா டீச்சர்?”

“ஆமா கிளாசுக்குப் போயி இதெல்லாம் படிச்சாள்ல்ல. இப்ப முந்தாநா கிரேப்ஸ் சாத்துக்குடி எல்லாம் வாங்கி, ஜூஸ் பண்ணி ஆத்தா வீட்டுக்கு அஞ்சு பாட்டில் கொண்டிட்டுப் போறா. இங்கயும் ரெண்டு பாட்டில் வச்சிருக்கா… நான் பேசிக்கிட்டே இருக்கிறேன். நீங்க கிரகப் பிரவேசம் பண்ணினப்ப, வூடு மேல் பூச்சு கூட முடியல்ல. இப்ப மேல கட்டிருக்கீங்களா டீச்சர்?… சீனி பொண்சாதி எங்க வேலையாயிருக்கு?”

அபிராமி சொல்கிறாள்.

“குழந்தை இருக்கில்ல?… ஆத்தா வீட்டில் விட்டிருக்கிறாளா?”

“இல்ல, இல்ல. இங்கதா இருக்கு. ஆபீசுக்குப் பக்கத்தில் கிரீச் இருக்குன்னு தூக்கிட்டுப் போறா. ஏம்மா, குழந்தை இங்க இருக்கட்டுமேன்னா, பக்கத்தில இருக்கு, லஞ்ச் பிரேக்ல ஒரு நடை பார்த்திட்டு வருவேன். மேலும் நீங்க கொஞ்சம் ரெஸ்டா இருப்பீங்க. நாளெல்லாம் குழந்தை பார்த்துக்கறதுன்னா அதுவும் லேசில்ல. இப்போதைக்கு வாணாம். கொஞ்சம் பெரிசாப் போனாப் பார்த்துக்கலாம்னு தூக்கிட்டுப் போறா. ஒரு குழந்தைத் துணி கசக்கற வேலை கூட இல்ல. எனக்குத் தான் அவளைக் கசந்துக்க முடியல…”

இவளுடைய ஆதங்கம் அடக்க முடியாமல் வருகிறது.

“பாரும்மா, படிச்ச பொண்ணு, வேலைக்குப் போனா தனிப்பண்பு வந்திடுது. கஷ்டம் தெரியிது பாருங்க!… நம்ம வீட்ல… சொல்லக் கூடாது டீச்சர். குந்தாணிதா. ஒரு துரும்ப அசைக்க எந்திரிக்க மாட்டா. அவ புருசன் சம்பாதிக்கிறான். பிறந்த வீடும் வளமை தான், திங்கட்டும். அதுக்குன்னு ஒரு வர முறை இல்ல? வேலைக்காரி என்னாத்துக்கு? இந்த நைலக்ஸு பிசுபிசுச்சீலை நாமெல்லாரும் வேலைக்குப் போறப்ப உடுத்தினோம், இல்லைன்னில்ல, ஆனா, சவம் வீட்டு வேலை செய்யிறப்ப உடுத்தவா முடியிது? எரியிது, நழுவி நழுவி விழுது, மாராப்புத்துணி போறது தெரியல. அடுப்படிக்குப் போவாணாம்மா, அவ நைலக்ஸ் சேலை உடுத்திட்டுன்னு, அவன் சொல்றான். ஆனா பருத்தித்துணி உடுத்த மாட்டாளே? பருத்தித் துணி போராம்! அவ செய்யிற வேலை, உருப்படியா ஒரு மாவாட்டி வைக்கிறதா, அதும் கிரைன்டர்ல. அதும் பாதி நா போட்டா, பாதில கரண்ட் நின்னுபூடும். அப்படிப் போச்சின்னா, அரைகுறையா வாரி ஆட்டாங்கல்ல போட்டு ஆட்ட அவளால ஆவாது. சிசேரியன் பண்ணிட்டிருக்கா… என்னமோங்க டீச்சர், வயசாயிட்டா, எத்தினிபுள்ள இருந்தா என்ன, பொண்ணு இருந்தா என்ன… புருசன் போயி நாம இருந்தா… கேவலந்தா…”

கண்கலங்கிக் குரல் கம்முகிறது.

அபிராமிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“உங்களத்தா டீச்சர், நெனச்சிக்குவேன். புருசன்ற நாதி இல்லாம, பொறந்த வீட்டிலும் தாங்காம, தனிச்சு நின்னு ஒரு பையன வளர்த்து ஆளாக்கிக் கல்யாணமும் பண்ணிட்டீங்க. என்னப் போல நிலைமை வராது…”

அபிராமிக்கு நாநுனி வரையிலும் சொற்கள் மோதியடித்துக் கொண்டு வருகின்றன…

ஆனால்…

இந்த நினைப்பின் புகழ்ந்துரையே குளிர்ச்சியில் அவளை மகிழ்விக்கிறது. இது ஒரு சொப்பன சுகம் தான். ஆனால் இதைக் கலைப்பானேன்?

“நான் வரேன் டீச்சர், சீனி டூர் போகணும்னு சொன்னான். திடும்னு வந்தாலும் வந்து நிப்பான். வீட்டப் பூட்டிக்கிட்டு வந்தேன். அவன் டூர்னு சொன்ன நெனப்பு இப்பத்தான் வருது வரட்டுமா?”

எழுந்து விடுகிறாள்.

“ஒரு ஞாயிற்றுக்கிழமை மருமகளை, குழந்தையை அழைச்சிட்டு வாங்க டீச்சர், நானும் வாரேன். மாடிகீடி கட்டிருக்கீங்களா வீட்டுக்கு?”

“எங்க? இதுவே கையைக் கடிச்சிட்டுதே?”

“இருந்தாலும் எங்க இளங்கோ சொல்றாப்பல, டபிள் இன்ஜீன் குடும்பம்ல. சொல்லப் போனா மூணு இன்ஜீனாக் கூட வச்சுக்கலாம். அட, மாடில ஒரு ரூமைப் போட்டு வாடகைக்கு விட்டா கசக்குதா? போடுங்க டீச்சர். இது ஒண்ணும் சரிப்படலன்னா, அக்கடான்னு என் பென்சனாச்சி நானாச்சினு உங்க வீட்ல வந்து விழுந்து கிடப்பேன்…”

அபிராமி சோகையாகச் சிரிக்கிறாள்.

“வரேன்…”

மேம்பாலம் ஏறி மின் வண்டியைப் பிடிக்கிறாள்.

வேலையை விட்டு விட்டு சவுதி போயிருக்கிறான். இளங்கோவும் பெரிய படிப்பொன்றும் படிக்கவில்லை. ஐடிஐ டிப்ளமா எடுத்தான் என்று நினைவு.

ஆக, சீனி சவுதிக்குப் போகிறேன் என்று சொல்வது நிசமாகப் பலித்தால் தடுக்க வேண்டாம். ஆனால்… பணம், பணமல்லவோ ஐயாயிரம் கேட்கிறான்.

ஐயாயிரம் என்ன, ஓராயிரம் கூட இல்லை. வங்கியில் ஓர் அவசரத்துக்கு என்று துடைக்காமல் வைத்திருக்கும் சில நூறுகள் தானிருக்கும். இவளுடைய ஆறு பவுன் தாலிச் சங்கிலி மட்டும் அப்படியே இருக்கிறது. அது இருப்பதே சீனிக்குத் தெரியாது. முதலில் அந்த நகையை அழித்துத்தான் சுந்தராம்மாளிடம் அவள் மருமகளுக்குச் செய்தது போல் கருகமணி மாலையும், இரண்டு ஜோடி வளையலும் சுஜாவுக்குச் செய்து போட வேண்டும் என்று கொண்டுக் கொடுத்தாள். சுந்தராம்மாதான், “இருக்கும் தங்கத்தை ஏன் அழிக்கறே? நாளுக்கு நாள் உசருது. பணமா நீ பாங்கில போடறதில கொஞ்சம் எடுத்து நகையாப் பண்ணிப்போடு, கிடக்கட்டும்…” என்றாள்.

அப்போதைக்கு அதுவும் சரியாகத் தோன்றியது. அவளிடம் அவளுக்குத் தெரிந்த, வழக்கமாக வாங்கும் சேட் கடையில் நெக்லெசை வாங்கிக் கொடுத்தாள். அதைச் சீனி வாங்கிப் போன செய்தி கேட்ட பிறகு மீண்டும் ஒரு நெக்லெஸ் வாங்க வேண்டி வந்த போது, சுந்தராம்மாளிடம், பையன் கைவரிசை காட்டி விட்டதைச் சொல்லி அழுதாள். அப்போதும் சங்கிலியை அழிக்கவில்லை. மாறாக, சங்கிலியை அவளிடமே கொடுத்து வைத்திருக்கிறாள்.

இப்போது, சுந்தராம்மாளிடம் சென்று தான் யோசனையும், சரியென்றால் அவள் மூலமாகவே பணமும் பெற்று வர வேண்டும்…”

தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அம்மா வீட்டுக்கு எப்ப வருவாங்க’ என்று கேட்ட பின் தான் செல்ல வேண்டும்.

மாம்பலத்தில் இறங்கி அங்கேயே கேட்கிறாள்.

“…நீங்க யாரு பேசறது?…”

“அபிராமி டீச்சர். யாரும்மா, வசந்தா தானே?… அம்மா எப்ப வீட்டுக்கு வருவாங்க!…”

“இன்னிக்கு வீட்ல தா இருக்காங்க டீச்சர். ரெண்டு நாளாவே எங்கும் போகல, பி.பி. ஏறியிருக்குன்னு டாக்டர் ரெஸ்டல இருக்கச் சொன்னார். நீங்க வாங்க!”

முன் ஹாலில் ஆரஞ்சுச் சுளைகளை உதிர்த்துத் தின்று கொண்டு அயர்வுடன் அமர்ந்திருக்கிறாள்.

“வா, வா? என்ன விசேஷம்? சும்மா வரமாட்டாயே?”

“ஆமா மேடம் எனக்கு ஒரு வழியும் தெரியல…”

குபுக்கென்று நீர் தளும்ப சேலைத் தலைப்பின் நுனியால் துடைத்துக் கொள்கிறாள். “என்ன ஆச்சு? உன் பிள்ளை வேலைக்கு ஒழுங்காப் போகலியா? தகராறா?”

“அதெல்லாம் இல்ல…”

“சரி… நிதானமாச் சொல்லு. ஏனிப்படிக் கையெல்லாம் நடுங்கறது?”

“அபிராமி, காலுக்காகாத செருப்பைக் கழட்டி எறிஞ்சிடணும். பிள்ளையானா என்ன, பெண்ணானா என்ன? நீ ரொம்ப ஈஷிக்கற. போடா ராஸ்கல், படி ஏறாதன்னு கத்திரிச்சி விடு. கல்யாணம் பண்ணி வச்சாச்சு, அவளும் சம்பாதிக்கறா. குழந்தையும் ஆச்சு. இனி அவாவா தலையெழுத்து. நீ ஏன் மேல இழுத்துப் போட்டுண்டு சாகற? நான் சொல்றேன் கேளு. பேசாம கதவை இழுத்துப் பூட்டிண்டு, யாத்ரா ஸ்பெஷல் டிக்கட் வாங்கிண்டு காசி, நேபாளம்னு போயிட்டு வா. ஒரு சேஞ்ச் இருக்கும்…”

“இல்ல மேடம், எப்படி விட முடியும்? ஒரு பொண்ண இழுத்து அநாவசியமா பிணைச்சிட்டேனே? எனக்கு ‘கில்ட்டி’யா இருக்கு. அந்தப் பொண்ணுக்கு இப்ப என்ன வழி? இவன் உருப்படற வழியே தெரியல. ஆபீஸ் பணத்தை ரெண்டு தரம் எடுத்து, நாங்க காப்பாத்தியாச்சு. எப்ப அவா முழிச்சிண்டு தெருவில துரத்துவாளோ? போகாத இடம், கேக்காத இடம், மதிக்காத இடம் போயிக் கெஞ்சி வேலை வாங்கிக் குடுத்தேன்…”

மருமகள் கட்டு மீறி நிற்பது, குழந்தையுடன் அலுவலகம் செல்வது, பேசுவது எல்லாம் கொட்டி விடுகிறாள்.

“பாழாப் போறவங்க, ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு, குடிக்கிற நாகரிகம், எல்லா மட்டத்திலும் வந்து சீரழிக்கிறது… ஆனா, நீ சொல்றதப்பாத்தா, அந்தப் பொண்ணு அதத் தெரிஞ்சிண்டு அவனைச் சீர்திருத்தும்படி இல்ல போல இருக்கே?”

“அதெப்படி அவமேல குறை சொல்லலாம் மேடம்? இவன், அவளைக் கேவலமாத் தலைகுனிஞ்சு போற அளவுக்கு அவ ஆபீசிலல்லாம் போய் கலாட்டா பண்ணலாமா? எப்பவுமே ஒரு பொண்ணை, இன்னமும் சமூகத்தில அவ புருஷனை வச்சுத்தான மதிக்கிறா? அதோட அவ கண்முன்னே இவன் வேற பொண்ணுகளோட சுத்தறான்னும் தெரியறது. அவ, போடான்னு தாலியக் கழட்டி எறிஞ்சிட்டுப் போயிடுவா போலதா இருக்கு. எனக்கு சாயங்காலம் வரதேன்னு இப்பவே பயம்மா இருக்கு. என்ன ரசாபாசம்?…”

“அபிராமி, நா ஒண்ணு சொல்றேன், உனக்கு என்னடா பத்தாம் பசலித் தனமாப் பேசறாளேன்னு இருக்கலாம். என்னோட அறுபத்தஞ்சு வயசுக்கு, எனக்குச் சம்சாரம் குடும்பம் இல்லேன்னாலும் தம்பி தங்கைன்னு எத்தனை பார்க்கிறேன்?… பொம்மனாட்டி வேலைக்கு போற குடும்பங்கள்ளதா இது போல நிறைய கான்ஃபிளிக்ட் வரது. அவ நான் ஏன் தணியணும்ங்கறா. இவன் ஆண்ங்கற ஈகோவ வச்சிட்டு அவளை அடக்கியாளத்தான் பாக்கறான். நீ வேலை செய்யாத பெண்ணாக் கட்டியிருந்தா, பிரியம் – பொறுப்பு ரெண்டும் பரஸ்பரம் வந்து இருக்கும். அவ மதிக்கல. என்னை விட அவ ஸ்டேட்டஸ் அதிகம்னு அவன் புழுங்கறான்; அதனால குடிக்கிறான்… என் கடைசித் தம்பி இருக்கானே அவன் பெண்சாதி, எம்.ஏ., பி.எச்டி., இன்ஸ்டிட்யூட் அஃப் ஸயின்ஸில ஏழு வருஷம் பண்ணினா. இப்ப ஒண்ணும் பண்னல. பஜன கோஷ்டில பாடிண்டு, வீட்டைக் கவனிச்சிண்டு, பிஸினஸ் பார்ட்டிகளுக்குப் போயிண்டு இருக்கா. எனக்குப் பாத்தா வயிற்றெரிச்சலா இருக்கும். ‘ஏண்டி, இப்படிப் படிச்ச படிப்பு, ஆராய்ச்சியெல்லாம் அம்போன்னு ஏறக்கட்டிட்டு இந்த ஒண்ணரை அம்மாமிகளோட உன்னை இறக்கிண்டுட்டியே’ம்பேன். ‘அக்கா, குடும்ப ஹார்மனி முக்கியம். அவருக்கு நான் அப்படி காரியர்ல போறது இஷ்டமில்ல. உனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக் குடுக்கறேன், சுகமான வாழ்க்கை, உன் பேரில் ஃப்ளாட், ஒரு பெண், ஆண்… குடும்பம், இதை விட என்ன வேணும் என்கிறார். சரிதானே?’ என்பாள். நினைச்சுப்பார்?”

அபிராமி வாயடைத்து நிற்கிறாள்.

“வேலை செய்யும் பெண் வேண்டும் என்று கேட்கும் பிள்ளைகள், குடும்பத்துப் பொறுப்பு என்ற உணர்வைக் காற்றில் விட்டு விடுகிறார்கள். ‘அவ சம்பாதிக்கிறா, பார்த்துப்பா! கவலை இல்லப்பா!’ என்று தான்தோன்றியா நடக்க அது வாய்ப்பா இருக்கு. புருஷன் தேடித் தருவான் என்ற மதிப்புத்தான் பெண்ணை அவன் மீது அன்பு பாராட்ட வைக்கிறது. அவனுக்கும் அவள் மதிப்புத்தான் அன்பைப் பெருக்குகிறது. நீ யோசனை பண்ணிப்பார்! நம்ம பெரியவா தெரியாம எல்லாம் செஞ்சிருக்கல!”

‘ஓ, இதுவும் உண்மைதானோ?…’

அபிராமி சில நிமிடங்கள் தடுமாறிப் போகிறாள். ஆனால் இனிமேல், சுஜாவை வேலையை விடு என்று சொல்வதா? இது எத்தனை மடத்தனம்?

அவளுக்குப் பொருளாதார சுதந்தரமும் சுயமதிப்பும் – கல்வியும் இருக்கும்போதே இவன் ஏமாற்றுகிறான். ஒரு மதிப்பும் இல்லையெனில், அவனைத் தட்டிக்கேட்க முடியாமலாகிவிடும்… இது தவறான பிற்போக்கான வாதம் என்று அபிராமி தெளிகிறாள்.

“இப்ப அதைப் பத்திப் பேசிப் பிரயோசனமில்ல மேடம். நான் உங்ககிட்ட யோசனை கேக்க வந்தது இதுதான்… அவன் சொல்றான், சவுதி போவதாக. அங்க வேலைக்கு சான்ஸ் இருக்காம். பாஸ்போர்ட் வாங்கிட்டு, பாஸேஜுக்கு அய்யாயிரம் குடு, போயிடறேன்றான். இங்கே இருந்துகிட்டு கருங்குருங்குன்னு பொழுது போய்ப் பொழுது வந்தா சண்டை போட்டுக்கிட்டு ரசாபாசம் மிஞ்சிப் போறது. கொஞ்ச நாள் பிரிஞ்சு, வேலைன்னு போயிட்டா வேற சூழல்ல திருந்தலாம். சம்பாத்தியமும் வரும்… அவளுக்கும் அப்ப தப்புக் கண்டுபிடிக்க ஒண்ணும் இருக்காது… முஸ்லிம் நாட்டில் இவனுக்குக் கெட்டுப் போகக் கூட வழி இருக்காதுன்னு தோணுது…”

“அங்க வேலை இருக்காமா?”

“இல்லேன்னா சொல்லமாட்டான். இப்ப அவனாகச் சொல்றான். இது தவிர வேற வழி இல்லேனு தோணுது மேடம்…”

“அவன் உங்கிட்ட பணம் கறக்க இப்படி ஒரு ஐடியாவை எடுத்து விடலன்னு என்ன நிச்சயம்?”

“மேடம், நாம எதையும் நம்பலன்னா வழியே இல்ல. பாலாமணி டீச்சர் பிள்ளை இளங்கோ, வெறும் டென்த் பண்ணிட்டு ஐடிஐ லெதர் டிப்ளமா எடுத்திட்டுப் போயிருக்கிறான். நல்ல சம்பாத்தியம். இவன் தொழிலில் கெட்டிக்காரன். தலைச் சுழி, இப்படி ஆட்டுதே ஒழிய… நீங்க… முன்ன ஏதோ குறைச்ச வட்டில கடன் எடுக்க ஏதோ சொசைட்டில வச்சு ஹெல்ப் பண்றதாச் சொன்னீங்க. அத்த உருப்படிய வச்சு…”

“எம்பேரில வய்க்கச் சொல்றியா?”

“எப்படியோ, அஞ்சாயிரம் தரணும் மேடம்…”

அபிராமி வீடு திரும்பி வருகையில், சீனி பூட்டிய வாசலின் முன் நின்று கொண்டு இருக்கிறான். அவள் பேசாமல் வீட்டுக் கதவைத் திறக்கிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28

28 அந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 03யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 03

கனவு – 03   அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் சிறிது நேரத்தோடே எழுந்து நீராடி விட்டுக் கோயிலுக்குச் செல்லத் தயாராகினாள் வைஷாலி. காலையில் விரதம் என்பதால் வெறும் தேநீரை அருந்தி விட்டு, அவள் வீட்டின் அருகிலிருந்த ஸ்ரீ கதிரேசன் கோயிலை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 43ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 43

43 – மனதை மாற்றிவிட்டாய் அது முடியுமா? கோபம்னாலும் ஆதியோட முடிவுல இருந்த அழுத்தம், உறுதி கண்டிப்பா அவரு மாத்திக்கமாட்டாரு. அர்ஜுன் அண்ணாகிட்ட இத பத்தி பேசலாமா? அவரு ஊர்ல இருக்காருன்னு தானே விட்டோம். ஆனா இப்போ வேற வழியில்லை. சரி