Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் எவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதை

எவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதை

 

கொல்லி மலையின் அடிவாரம். அது வளம் நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும் அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழிநடைக் களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய , பகற்பொழுதை அங்கே கழித்தாக வேண்டும். 

கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம். அதனால், வேட்டுவர்கள் பலர் எப்போதும் வில்லும் கையுமாகத் திரிந்து கொண்டிருப்பதைக் காணலாம். அவ்வாறு பல வேட்டைக் காரர்கள் வேட்டையாடுவதை வன்பரணரும் அவரைச் சேர்ந்தவர்களும் பொழுது போக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடம் மேடாக இருக்கும் பகுதியிலுள்ள ஒரு மலைக்குகையாகையினால் அங்கே மிருகங்களால் தொல்லை நேர வழியில்லை. 

சரியாக உச்சிப்போது வந்தது. வேட்டைக்காரர்கள் எல்லோரும் போய்விட்டனர். அப்போது புது வேட்டைக்காரன் – ஒருவன் பெரிய யானை ஒன்றை அம்பு எய்து துரத்திக்கொண்டு அங்கே வந்தான். கம்பீரமான உருவத்தையுடைய அந்த வேடன் மார்பில் விலை மதிக்க முடியாத மணியாரங்களை அணிந்து கொண்டிருந்தான். மார்பு நிறையச் சந்தனம் பூசிக் கொண்டிருந்தான். பரந்த மார்பின் அழகை அது எடுத்துக் காட்டியது. அவனைப் பார்த்தால் யாரோ ஒரு சிற்றரசன் என்றோ, செல்வச் சீமான் என்றோ மதிக்கலாமே தவிர, கேவலம் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவன் என்று சொல்ல முடியாது. வன்பரணர் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். சற்றேனும் பயமின்றி யானையைப் பின்பற்றி விரட்டிக் கொண்டிருந்தான் அவன். 

ஆனால் அடுத்த நொடியில் வேறு ஒரு பயங்கரமும் அவனெதிரே வந்து வாய்த்தது. அவனால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த யானைக்கு முன் ஒரு பெரிய வேங்கைப் புலி மகா கோரமாக உறுமிக் கொண்டே பாய்ந்தது. அந்த வீரன் வில்லை வளைத்தான். கூரிய எஃகு அம்பு ஒன்று அவன் வில்லிலிருந்து கிர்ரென்று பாய்ந்தது. என்ன வேடிக்கை? அந்த அம்பு யானையை ஊடுருவிப் புலியையும் ஊடுருவி இரண்டையும் கீழே வீழ்த்திவிட்டுப் புதரில் பதுங்கியிருந்த ஒரு புள்ளி மானைக் கீழே உருட்டித் தள்ளி அருகே மயிரைச் சிலிர்த்துக் கொண்டு நின்ற ஒரு முள்ளம் பன்றியைக் கிழித்துவிட்டு மரத்தடியில் புற்றின் மேல் கிடந்த உடும்பின் மேல் போய்த் தைத்தது

என்ன வினோதம்? ஒரே ஓர் அம்பு! ஐந்து உடல்களை ஊடுருவி விட்டதே! வில் பயிற்சியிலேயே இது ஒரு சாமர்த்தியமான அம்சம். இதற்குத்தான் வல்வில் என்று பெயர் சொல்லுகிறார்கள் போலும்! வன்பரணர் ஆச்சரியத்தோடு சிந்தித்தார்

அப்படியே அவனருகில் போய் அவனைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. அங்கிருந்த பாணர் களையும் விறலியர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார். அவன் வேட்டையாடி வீழ்த்திய மிருகங்களைப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான். ஒரே அம்பினால் ஊடுருவிக் கொல்லப்பட்ட யானை, புலி, மான், பன்றி, உடும்பு எல்லாம் அடுத்து அடுத்து வரிசையாக இரத்தம் ஒழுகிட வீழ்ந்து கிடந்தன

வன்பரணர் அவனருகில் போய் நின்று வணங்கினார். அவன் பதிலுக்கு வணங்கினான். அவர் தாம் புலவரென்றும் தம்மோடு இருப்பவர்கள் இசைவாணர்கள் என்றும் கூறி அவனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்

பாணர் யாழ் வாசித்தார். விறலி மத்தளம் கொட்டினாள். மற்றொருவர் புல்லாங்குழலில் இசையைப் பெருக்கினார். வன்பரணர் அந்த இனிய வாத்தியங்களின் ஓசையோடு இயையும் படி அவனைப் பாராட்டி ஒரு பாடல் பாடினார். 

அவன் சிரித்துக் கொண்டே கழுத்திலிருந்த அழகான மணி மாலையையும் பொன் மாலையையும் கழற்றி அவரிடம் அளித்தான். 

“புலவர் பெருமானே! இதை என் அன்புப் பரிசிலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இதோ இந்த மான் இறைச்சியை நெருப்பில் வாட்டி உங்களுக்கு விருந்திடுவேன். என் விருந்தையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” 

வன்பரணர் பரிசிலை வாங்கிக் கொண்டார். அவன் நெருப்பு மூட்டி வாட்டிக் கொடுத்த மான் இறைச்சியையும் தனியே அளித்த மலைத் தேனையும் மறுக்க மனமின்றி உண்டு மகிழ்ந்தார்கள் . அவர்கள். 

“அப்பா, உன்னைப் பார்த்தால் சாதாரண வேட்டுவனாகத் . தெரியவில்லையே? நீ யார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமோ?” வன்பரணர் நன்றிப் பெருக்கோடு அவனை நோக்கிக் கேட்டார். 

” அவன் பதில் கூறாமல் அவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தான். புன்னகையா அது? மனிதப் பண்பின் ஒரு மின்னலாகத் தோன்றியது வன்பரணருக்கு. 

“நீ யார் என்பதைச் சொல்லமாட்டாயா?” “எவனோ ஒரு வேடன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்” 

இல்லை! நீ வெறும் வேடனில்லை. வேடன்என்பதிலும் பெரிய தகுதி ஒன்று உனக்குள் அடங்கிக் கிடக்கிறது. நீ அதை என்னிடம் மறைக்கிறாய்.” 

‘புலவரே! அன்பும் ஆதரவும் நல்குவதற்குத் தகுதியா முக்கியம். நல்ல மனம் ஒன்று போதாதா? அது என்னிடம் உண்டு.’ 

“பரவாயில்லை சொல்லிவிடு. நீ யார்?” 

‘புலவரே! என்னை வல்வில் ஓரி ‘ என்பார்கள். இந்த மலைக்குத் தலைவன். வணக்கம். நான் வருகிறேன்” சொல்லிக் கொண்டே நகர்ந்தான் அவன். வியப்போடு நடந்து செல்லும் அவன் உருவத்தைப் பார்த்தார் அவர். ‘அவனா எவனோ ஒரு வேடன்? மனிதப் பண்பின் வீரசிகர மல்லவா அவன்? புலவர் தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதைஅவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதை

  அவன் ஒரு பயிர்த்தொழிலாளி. வேளாண்மகன். அப்போது ஊரிலுள்ள வயல்களில் வரகுப் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. அங்கங்கே வயல்களிலிருந்து கருநிற வரகின் தாள்களை அரிந்து களத்துக்குக் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். இந்த அறுவடை வேலையில் ஈடுபட்டுக் கூலி பெறுவதற்காகப்

பசுமை நினைவுகள் – புறநானூற்றுச் சிறுகதைபசுமை நினைவுகள் – புறநானூற்றுச் சிறுகதை

  பளிங்கு போலத் தெளிந்த நீரின் வெண்பட்டு மடிப்பு போன்ற சின்னஞ்சிறு அலைகள் அந்தப் பொய்கைக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தன. இடையிடையே அல்லி, குவளை, தாமரை, முதலிய மலர்களும், அவற்றின் நீலம் கலந்த பசுமை நிற இலைகளுமாக அந்த எழிலை

புலவர் தூது – புறநானூற்றுச் சிறுகதைபுலவர் தூது – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானிடமிருந்து தூதராக வந்திருந்த ஒளவையாரைத் தனது படைக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான் தொண்டைமான் இளந்திரையன்.  கம்பீரமான தோற்றத்தோடு விளங்கிய அந்த ஆயுதசாலை முழுதும் ‘பளபள வென்று மின்னும் புத்தம் புதிய ஆயுதங்கள் நிறைக்கப்பட்டுக் கிடந்தன.  நீள நீளமான வேல்கள் ஒருபுறம்