யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20

கனவு – 20

 

நேரம் இரவு பதினொரு மணி. கைத்தொலைபேசி விடாமல் அதிர்ந்து கொண்டிருக்கவும் யாரென்று பார்த்தான் சஞ்சயன். காலையிலிருந்து அன்ன ஆகாரமின்றி வைஷாலியின் டயரிகளிலேயே மூழ்கிப் போயிருந்தான். இந்த சாம நேரத்தில் யார் அழைப்பது என்று சிந்தித்தவாறே தொலைபேசியைக் கையில் எடுத்தான். அழைத்தது வைஷாலி என்றதும் அவன் முகம் மலர்ந்தது.

 

“ஹலோ வைஷூ….”

 

“சஞ்சு… நீ கெதியா வீட்ட வாடா… எனக்குப் பயமாக் கிடக்கு…”

 

குரலில் மிகுந்த பதட்டத்துடனும் அழுகையுடனும் கூறியவளை ஆறுதல் படுத்த முனைந்தான்.

 

“என்னாச்சு வைஷூ…? நீ முதல்ல அழாமல் என்ன நடந்தது என்று சொல்லு. நான் உடனேயே வாறன்…”

 

அவளிடம் பேசிக் கொண்டே வீட்டைப் பூட்டிக் கொண்டு சிறிதும் தாமதிக்காது மோட்டார் சைக்கிளில் அவள் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

 

“சஞ்சு… மனேஜர் வந்து கதவைத் தட்டினான்… நான் நீயென்று நினைச்சுத் திறந்திட்டனடா… அவன் என்னோட தப்பா நடக்க ட்ரை பண்ணினான். நான் ஒரு மாதிரி அவனிட்ட இருந்து தப்பி என்ர அறைக்க வந்து கதவைப் பூட்டிக் கொண்டு உனக்கு ஃபோன் பண்ணுறன்டா. அவன் இன்னும் இங்க தான்டா இருக்கிறான். நீ கெதியா வா…”

 

விக்கியபடி ரகசியக் குரலில் அவள் சொல்லச் சொல்ல சஞ்சயனுக்கு ஆத்திரம் உச்சத்துக்கு வந்தது. என்ன உலகமோ தெரியவில்லை. ‘ஒரு புறம் பெண்கள் விண்வெளிக்குச் செல்ல, இங்கோ தங்கள் மானத்தைக் காக்கக் கூடப் போராட வேண்டிக் கிடக்கிறது. ஒரு பெண்ணைத் தனியாக வாழவே விட மாட்டார்களா?’

 

எரிச்சலோடு சிந்தித்தவன் தனது காவல் துறை நண்பனுக்கு விடயத்தைச் சொல்லி அவனையும் வரச் சொல்லி விட்டு வைஷாலி வீட்டை அடைந்தான். சிறிது தூரத்திலேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தியவன் பூனை நடை நடந்து வைஷாலி வீட்டுக்குச் சென்று தன்னிடமிருந்த திறப்பால் மெதுவாய் கதவைத் திறந்தான்.

 

மனேஜர் வைஷாலி அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்.

 

“வெளிய வாடி… ஏதோ பெரிய பத்தினியாட்டம் நடிக்கிறாய்? எங்க உன்னோட கூடத் திரியிறவன்? எத்தினை நாளாக இந்தச் சந்தர்பத்துக்காகக் காத்திருந்தன் தெரியுமாடி? நீ வெளில வரும் வரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறதில்லை… எவ்வளவு நேரம் தான் அறைக்கேயே அடைஞ்சு கிடக்கப் போறாய்? கெதியா வெளிய வாடி…”

 

போதையின் உச்சியில் கதவை உதைத்துக் கொண்டிருந்தவனை அடித்துக் கொல்லும் வெறி வந்தது சஞ்சயனுக்கு. அவன் வீட்டினுள் செல்லவும் அவன் காவல்துறை நண்பனும் வந்து விட்டிருந்தான். இருவருமாய் ஒரே அமுக்காய் அமுக்கி மனேஜரைப் பின்னிப் பெடலெடுத்தனர்.

 

போதையிலிருந்த அந்தக் கிழவனால் இளைஞர்கள் இருவரது வீராவேசத்தை எவ்வளவு நேரம் தான் தாக்குப் பிடிக்க முடியும். சில நிமிடங்களிலேயே மயங்கிச் சரிந்தான்.

 

“சஞ்சு….! இவன் நல்ல அரசியல் செல்வாக்குள்ள பசையான இடம். பொலிஸ் கொம்ப்ளைண்ட் குடுத்து வேலையில்லை… இவனுக்கு நாங்க தான் ஏதாவது நல்ல பாடம் புகட்ட வேணும்…”

 

காவல்துறை நண்பன் சொல்லவும் சற்றே சிந்தித்த சஞ்சயன் தரதரவென அவனை இழுத்துச் சென்று வீட்டின் முன்னே போட்டவன் தனது மோட்டார் சைக்கிளை இயக்கி வேகமாய் கொண்டு வந்து மனேஜரின் இடுப்புக்குக் கீழே ஏற்றினான். மயக்கத்தில் இருந்தவன் வாய் திறந்து கத்தும் முன்னே வேலை முடிந்திருக்க மறுபடி மயங்கிச் சாய்ந்தான் அந்த காம வெறி பிடித்த கிழடன்.

 

அவனது காரிலேயே அவனை ஏற்றிச் சென்று ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் காரை நிறுத்தி விட்டு அவனை வெளியே வீதியில் இழுத்துப் போட்டு விட்டு வந்த தடயம் இன்றி அந்த இடத்தை விட்டகன்றார்கள்.

 

அதன்பிறகே சஞ்சயன் வைஷாலி வீட்டுக்குச் சென்று அவள் அறைக் கதவைத் திறக்கச் சொன்னான். மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவள் இவனைக் கண்டதும், “சஞ்சு…” என்று அலறிக் கொண்டு ஓடி வந்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாது அவளை அணைத்து ஆசுவாசப்படுத்தினான் சஞ்சயன்.

 

முட்டாள் தனமாகக் கதவைத் திறந்ததற்காக வைஷாலி மீது உள்ளே கோபத்தில் கணன்று கொண்டிருந்தது அவன் மனம். அவளே பயந்து போயிருக்கும் போது கோபத்தைக் காட்டுவதற்கு இதுவல்ல தருணம் என்று புரிந்தவனாய் அமைதி காத்தான்.

 

அன்றிரவு இருவருக்கும் தூக்கமின்றியே கழிந்தது. வரவேற்பறையில் சஞ்சயன் தோளில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாலும் வைஷாலி தூங்கவில்லை. ஸோபாவில் பின்னே தலை சாய்த்து அமர்ந்திருந்த சஞ்சயனும் எண்ணங்களின் குவியலுக்குள் ஆழ்ந்து போயிருந்தான். சில நேரங்களில் மௌனமே பேசும் மொழி ஆகி விடுகிறது. இருவரது எண்ண அலைகளும் ஒன்றாய் வைஷாலி, முரளிதரன் பிரிந்த நாளில் சென்று நின்றன.

 

‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்று சொல்லி வைத்தது போல நாட்கள் செல்லச் செல்ல முரளிதரனுக்கும் இவள் மேல் ஒரு சலிப்புத் தட்ட ஆரம்பித்தது. தாம்பத்யம் என்பது எப்போது இருவரும் இணைந்து கூடிக் கலவி தூய இன்பத்தை அனுபவிக்கிறார்களோ, அப்போது தான் இருவருக்குள்ளும் மேன்மேலும் ஈர்ப்பை உண்டாக்குகிறது. தொடர்ந்து அந்தப் பந்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

 

இங்கே வைஷாலியின் பிடித்தமின்மையும் முரளியின் வேட்கையின் தேடல் தீர்ந்ததும் இருவருக்குள்ளும் நன்றாகவே விலகலை ஏற்படுத்தியது. அது கொஞ்சம் கொஞ்சமாக நாளாந்த வாழ்க்கையிலும் வெளிப்பட ஆரம்பித்தது.

 

திருமணம் முடித்ததும் வைஷாலிக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டிருந்த வீட்டில் இருவரும் தனிக் குடித்தனம் தான் நடத்திக் கொண்டிருந்தனர். அதனால் எல்லா வேலைகளையும் இவர்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.

 

முரளிதரன் ஒரு துரும்பும் எடுத்துப் போட மாட்டான். காலையில் எழுந்ததிலிருந்து அனைத்து வேலைகளையும் பம்பரமாகச் சுழன்று செய்து முடித்து விட்டு, மத்தியானச் சாப்பாட்டையும் கட்டிக் கொண்டு வேலைக்கும் போய் வீட்டுக்குத் திரும்பினால் இரவுச் சாப்பாடு, மற்றைய வேலைகள் என்று வாழ்க்கை என்னவோ வைஷாலிக்கு இயந்திரகதியில் தான் ஓடிக் கொண்டிருந்தது.

 

முரளிதரன் பல்கலைக்கழகம் முடித்ததும் இருபத்தைந்து வயதிலேயே மணம் முடித்து விட்டார்கள். ஒரு வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்குரிய அனுபவம் இருவருக்கும் வர இன்னும் காலம் தேவையோ என்னவோ? அவன் வேறு அப்போது தான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த புதிது. வேலையிடத்துப் பிரச்சினைகளில் காட்ட முடியாத கோபம் எல்லாம் வீட்டிற்கு வந்ததும் வைஷாலி மீது காட்டத் தொடங்கினான்.

 

அவள் எது செய்தாலும், ‘பிடிக்காத மாமியார் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்’ நிலையாகி விட்டது. எதற்கெடுத்தாலும், ‘உன்னைக் கலியாணம் கட்டித்தான்டி எனக்கு இப்போ இந்த நிலைமை’ என்று வைய ஆரம்பித்தான்.

 

வைஷாலிக்கோ இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. ஆரம்பத்தில் அவனுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தவள், அது சண்டையைப் பெரிதாக்குவதை உணர்ந்து பின்னர் முரளிதரன் எது சொன்னாலும் வாயே திறக்காது அமைதியாக இருக்க ஆரம்பித்தாள்.

 

சில மாதங்கள் செல்ல முரளிதரன் மதுவிற்கும் அடிமையாகி, வீட்டிற்குத் தினமும் குடித்து விட்டு வர ஆரம்பித்தான். வைஷாலிக்கோ இது எதையும் தனது வீட்டிலோ, வேறு யாருக்குமே சொல்ல முடியாத நிலை. முரளி தான் வேண்டும்  என்று ஒற்றைக் காலில் தவமிருக்காத குறையாக அவனைத் திருமணம் புரிந்தவளாயிற்றே. அவ்வாறிருக்க எப்படி அவனைப் பற்றி இவளால் குறை சொல்ல முடியும்?

 

தன் குடும்பத்தினர் முன்னும் மற்றவர்கள் முன்னும் நன்றாக வாழ்வதாக நடித்தே இவளுக்கு மூச்சு முட்டிப் போயிற்று. கல்யாணமான அடுத்த மாதத்தில் இருந்தே சொந்த பந்தங்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டன. ‘விசேசம் ஒண்டுமில்லையா?’ என.

 

திருமணத்தின் முன்பே முரளிதரனும் வைஷாலியும் ஒரு வருடத்துக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கமைய வைஷாலி கருத்தடை மாத்திரை உண்டு கொண்டிருந்தாள்.

 

சரி. ஒரு பிள்ளை பிறந்தாலாவது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வராதா? முரளிதரன் மாற மாட்டானா? தன் பிள்ளையின் அம்மா என்றாவது தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டானா? என்ற ஒரு எதிர்பார்ப்பில் கருத் தரிப்பது எனும் பெரும் முடிவை எடுத்தாள் வைஷாலி. அதுவே அவர்கள் பிரிவுக்கும் வழி சமைத்தது.

 

வைஷாலி கருத் தரித்து முதல் மாதம் நாள் பிந்திய போதே பரீட்சித்துப் பார்த்து குழந்தை தான் என்று உறுதி செய்து கொண்டாள். உண்மையில் அத்தனை நாட்களாய் முரளிதரன் மீதிருந்த ஆதங்கம், கோபம் எல்லாம் நீங்கி மிகச் சந்தோசமான ஒரு மனனிலையில் தான் இந்தச் செய்தியை அவனுக்குத் தெரிவிப்பதற்காகக் காத்திருந்தாள்.

 

தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களையுமே பூரிக்க வைக்கும் விசயம் தானே. இவள் மட்டுமென்ன விதிவிலக்கா?

 

முரளிதரன் அன்றும் வழக்கம்போல குடித்து விட்டுத்தான் வந்திருந்தான். இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் அவனுக்குச் சாப்பாட்டை எடுத்து வைத்தவள் அவன் சாப்பிட்டு முடித்து கைத் தொலைபேசியில் மூழ்கிய நேரம் அவன் அருகே போய் அமர்ந்தாள்.

 

“முரளி…”

 

“ம்…”

 

“உங்களிட்ட ஒரு சந்தோசமான விசயம் சொல்ல வேணும்…’

 

“ம்…”

 

“அந்தப் போனை வைச்சிட்டு என்னை ஒருக்கால் பாருங்கோவனப்பா…”

 

“என்னத்துக்கு இப்ப நொய்… நொய்… என்றுறாய்…? கெதியா சொல்லித் துலையன்…”

 

“முரளி… ! நீங்க அப்பாவாகப் போறீங்க…”

 

எவ்வளவோ சந்தோசமாக சொல்ல வேண்டிய விஷயத்தை மனதின் எதிர்பார்ப்பை முழுங்கிக் கொண்டு மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள் வைஷாலி. ஒரு நொடி அவளையே பார்த்தவன் பின்னர் வாய் விட்டுச் சிரித்தான்.

 

“எத்தினை நாள் இப்போ?”

 

“நாற்பது நாள்…”

 

“நினைச்சன்… நினைச்சன்… என்னடா இது கலியாணம் கட்டி ஒரு வருசமாகப் போகுதே… இன்னும் ஒண்டையும் காணமே என்று… இப்ப ஒன்றரை மாசம் முதல் தான் அவன் ஊருக்கு வந்து போனான். நாள் கணக்கெல்லாம் சரியா வருது பார்…”

 

“என்ன முரளி சொல்லுறீங்க? எனக்கு ஒண்டுமே விளங்கேல்ல…”

 

“அதுசரி… உனக்கு எப்பிடியடி விளங்கும்? நான் உனக்குக் கிட்ட வந்து இப்ப எத்தினை நாளாச்சு…?”

 

“அது ஒரு ஒரு மாசத்துக்குக் கூட வரும்…”

 

“அதே தான்டி நானும் சொல்லுறன்… தினமும் உன்னோட இருந்த போது உருவாகாத குழந்தை இப்ப எப்பிடித் திடீரென்று உருவாகிச்சுது?”

 

“அது நான் பமிலி பிளானிங் டபிளெட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தன். அதுதான் பிரக்னன்ட் ஆகல முரளி… கல்யாணத்துக்கு முதலே அது விசயமாக நாங்கள் ஒருக்கால் கதைச்சிருந்தம் தானே….கொஞ்ச நாளைக்குப் பிள்ளை வேணாம் என்று…”

 

“யாருட்ட என்ன கதை விடுறாய்…? அவனிட்ட சத்தியம் கூட வாங்கினான். இனி உன்னைப் பாக்கவே கூடாது, இந்த ஊர்ப்பக்கமே வரக் கூடாது என்று. அப்பிடியிருக்க ஊருக்கு வந்து போயிருக்கிறான். அன்றைக்கு நீ வேற காய்ச்சல் என்று லீவு போட்டாய். அப்ப கூட நான் உன்னைச் சந்தேகப்படல… ஆனால் இப்ப எல்லாம் எனக்குக் கிளியராகப் புரியுதுடி… யாரிட பிள்ளைக்கு யார் அப்பா…?

 

“நீங்க என்ன சொல்றீங்க முரளி? ஏனப்பா இப்பிடியெல்லாம் தப்புத் தப்பாகக் கதைக்கிறியள்?”

 

“சும்மா இந்த அழுது சீன் போடுறதை நிப்பாட்டுடி முதல்ல. எல்லாம் என்னைச் சொல்ல வேணும். ஊரில உலகத்தில ஏதோ வேற பொம்பிளையே கிடைக்காத போல உன்னைப் போய் லவ் பண்ணிக் கட்டினன் பாரு… ஏதோ சின்ன வயசில இருந்தே என்னில ஆசை வைச்சிருக்கிற பிள்ளை என்று பார்த்தன்.

 

என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள், நான் திட்டிப் போட்டன் என்றதும் என்னைக் கணக்கெடுக்காமல் அவனோட கொஞ்சிக் குலாவேக்கயே நான் சுதாரிச்சிருக்க வேணும். ஏதோ அந்த நேரம் சின்ன வயசில பக்குவம் இல்லாமல் நானும் லவ் பண்ணுறன் என்று சொல்லித் துலைச்சு இப்ப அனுபவிக்கிறன்…”

 

“ப்ளீஸ்… முரளி… இப்பிடியெல்லாம் கதைக்காதையுங்கோ… நான் எந்தத் தப்பும் பண்ணாதவள் என்று உங்களுக்கே வடிவாத் தெரியும்… இது எங்கட பிள்ளை முரளி…”

 

“நோ… இனியும் இதை நம்ப நான் முட்டாளில்லை… இது அவன்ர பிள்ளைதான். உனக்கு எப்பவுமே என்னை விட அவனைத்தானே பிடிக்கும்… என்னைக் காதலிச்சன் என்று சொல்லுறியே எப்பவாச்சும் அவனோட சிரிச்சுக் கதைச்சது போல என்னோட பழகியிருப்பியா?”

 

“நீங்க யாரைச் சொல்லுறீங்க முரளி? சஞ்சுவையா?”

 

“ஆஹா… இந்த உலகமகா நடிப்புக்கொன்றும் குறைவில்லை. அந்த நாயையே தான் சொல்லுறன்…”

 

“சஞ்சுவை நான் ஏஎல் சோதினைக்குப் பிறகு இன்றைக்கு வரை பார்க்கவே இல்லை முரளி… சத்தியமா சந்திக்கவே இல்லை. அவன் ஊருக்கு வந்து போன எதுவுமே எனக்குத் தெரியாது.”

 

“ஓ… அவ்வளவு ஃபெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ஆச்சே நீங்க. எப்பிடி உங்களால இப்பிடி சந்திக்காமல்  இருக்க முடியுது? உன்ர கதையை எவனாவது இளிச்சவாயன் என்று நெத்தில எழுதி ஒட்டியிருப்பான். அவனிட்டப் போய் சொல்லு. இதை நம்ப நான் இனியும் முட்டாளில்லை…”

 

முரளி பேசப் பேச வைஷாலிக்கு அதிர்ச்சியில் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. முரளியை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு அடுத்த அறையில் சென்று படுக்கையில் அமர்ந்தாள். இரவு முழுவதும் தூக்கமின்றி யோசித்தவள் அடுத்த நாள் அலுவலகத்தில் இடமாற்றத்துக்கு விண்ணப்பித்தாள்.

 

அடுத்ததாக ஒரு வழக்கறிஞரிடம் சென்று விவாகரத்துக்குரிய வேலைகளைச் செய்தாள். வைத்தியசாலைக்குச் சென்று தனது காரணகாரியங்களை எடுத்துக் கூறி அவர்களைச் சம்மதிக்க வைத்து கருவைக் கலைத்தாள்.

 

அவள் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ இரு வாரங்களிலேயே தலவாக்கலைக்கு வேலை மாற்றம் வந்து விட அங்கு செல்வதற்கு முதல் நாள் பெற்றோரிடம் சென்று தெரிவித்தாள்.

 

“என் விருப்பங்களுக்குத்தான் எப்பவும் முதலிடம் தந்து என்னை ஒரு நல்ல அப்பா, அம்மாவாக இருந்து வளர்த்தீங்க. ஆனால் என்னால உங்களுக்கு நல்ல மகளாக இருக்க முடியலை. முரளிக்கும் எனக்கும் ஒத்து வரேல்ல. நான் டிவோஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கிறேன். எனக்குத் தலவாக்கலைக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்கு. நான் நாளைக்கே போறன். நான் உயிரோட இருக்க வேணும் என்றால் என்னைத் தேடி யாரும் வர வேணாம்…”

 

கூறி விட்டுச் செல்பவளைத் திகைப்புடன் பார்த்திருந்தனர் பெற்றோர். அடுத்தநாள் காலை முரளிதரனிடம் வந்தவள்,

 

“முரளி… உங்கட வாழ்க்கையில நான் நுழைஞ்சு உங்களை ரொம்பவே டிஸ்அப்போயின்ட் பண்ணிட்டன். இவ்வளவு நாளும் ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கலை என்று நினைச்சு வருத்தப்படுவன்… ஏன் என்னை அடிக்கிறீங்கள் என்று கோபப்படுவன்… ஏன் இப்பிடிக் கண்டவனோடயும் சேர்த்து வைச்சுக் கதைச்சுச் சந்தேகப்படுறியள் என்று நினைப்பன்… ஆனால் என்றைக்குமே உங்களை வெறுத்தது கிடையாது. ஆனால் எப்ப எங்கட பிள்ளையையே உங்கட இல்லை என்று என்னைச் சஞ்சுவோட சேர்த்து வைச்சு அசிங்கப்படுத்தினிங்களோ அப்பவே உங்களை முழுசாக வெறுத்திட்டன் முரளி… இந்தச் சந்தேகம் உங்களுக்கு வந்த பிறகு இனி நாங்கள் சேர்ந்து வாழுறதில எந்த அர்த்தமும் இல்லை.

 

டிவோஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கிறன். ரெண்டு பேரும் மனமொத்துத்தான் டிவோஸ் எடுக்கிறம் என்று சொல்லி இருக்கிறன். இத்தனை வருசங்களாக நான் நேசிச்ச ஒருத்தரை கோட் கூண்டில ஏத்தி, என்னை அடிச்சான் உதைச்சான் என்று அசிங்கப்படுத்த எனக்கு விருப்பமில்லை. அதனால மியூசுவல் அன்டர்ஸ்டாண்டிங்குக்கு ஒத்துக் கொண்டு கையெழுத்து போடுவியள் என்று நம்பிறன். சேர்ந்து வாழத்தான் மியூசுவல் அன்டர்ஸ்டாண்டிங் இல்லாமல் போச்சு. பிரியிறதுக்காகவாவது இருக்கட்டுமே… உங்களை இவ்வளவு நாளாக மனவேதனைப் படுத்தினதுக்கு மன்னிச்சிடுங்கோ… குட் ஃபாய் முரளி…”

 

கூறியவள் தனது பயணப் பையோடு வீட்டை விட்டுச் சென்று விட்டாள்.

 

நடந்தவற்றை எல்லாம் டயரிகள் மூலம் வாசித்து அறிந்த சஞ்சயன் இப்போது அவற்றை மீளவும் எண்ணிப் பார்த்து இறுகிப் போய் அமர்ந்திருந்தான். தானும் தனது நண்பியின் வாழ்க்கை பிரியக் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

 

எதிர்காலம் அவனை முதல் முறையாகப் பயமுறுத்தியது. வைஷாலி வாழ்க்கையில் இனி எப்படி விளக்கேற்றப் போகிறேனோ தெரியவில்லையே என்று ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.

 

நட்பே காதலுக்கு எதிரியான கதை தெரிந்த நண்பன் எடுக்கப் போகும் முடிவென்னவோ?




1 thought on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20”

  1. முரளியின் வடிவில் ஒரு சிறு பிள்ளை வந்து அவன் முகத்தில் அறைந்திருந்தால் வைஷுவின் மனதில் ஒரு சிறு நிம்மதி கிடைத்திருக்கும்! You missed that chance Vishu! and ours too!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 11ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 11

11 – மனதை மாற்றிவிட்டாய் அன்று மாலையில் அர்ஜுன் ஆதியின் வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தான். அந்த நேரம் திவியும் வந்தாள். அபி, அரவிந்த், நந்து, அனு, திவி அனைவரிடமும் பொதுவாக பேசிவிட்டு நண்பர்கள் இருவரும் தந்தையுடன் பிசினஸ் பற்றி பேச ஆரம்பித்தனர்.

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10

இதயம் தழுவும் உறவே – 10   அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் சமயங்களில் தேர்தல் மையத்தில் பணி புரிவார்கள். பொதுவாக அவர்கள் தற்சமயம் பணியில் இருக்கும் தாலுக்காவை விடுத்து, அதே மாவட்டத்தின் கீழ் இருக்கும் வேறு ஒரு தாலுக்காவில் தான்

கபாடபுரம் – 27கபாடபுரம் – 27

27. பெரியபாண்டியரின் சோதனை   கண்ணுக்கினியாளின் நெய்தற்பண்ணைப் பற்றிச் சாரகுமாரன் வியந்து கூறியதைக் கேட்டுச் சிகண்டியாசிரியரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய விருப்பத்தைச் சாரகுமாரனால் மறுக்க இயலவில்லை. மறுநாள் வைகறையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அவன். ஆனால்