Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’

ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புல்தரையில் அங்கும் இங்குமாய் கூட்டம் நிறைந்திருந்தது. காதம்பரி கல்பனாவுடன் நுழைந்த பொழுது அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது உரையாடலை நிறுத்திவிட்டு காதம்பரியையே வெறித்துப் பார்த்தனர். அவர்கள் பார்வையிலிருந்து எதையுமே அவளால் ஊகிக்க முடியவில்லை. அங்கிருந்த சிலர் உடனிருந்தவர்களிடம் காதம்பரியைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னார்கள்.

 

“கல்பனா… ஏதாவது தப்பா செஞ்சுட்டேனா… எல்லாரும் ஏன் என்னையே இப்படிப் பாக்குறாங்க?”

 

“அதானே… எனக்கும் ஒண்ணும் புரியலையே…”

 

“கேட் தொழில் ரகசியம் அம்பலமாச்சு” என்று நடுவிலிருந்து  ஒரு குரல் ஒலித்தது. உடனே அங்கே சிரிப்பு பரவியது.

 

எங்கிருந்தோ கூட்டத்தின் இடையே புகுந்து காதம்பரியிடம் ஓடி வந்தான் ஜான். அவனிடத்தில் புன்னகை மிஸ்ஸிங். அதற்கு பதில் பரபரப்பும், எரிச்சலும் மண்டிக் கிடந்தன.

 

“கேட், உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். கிளம்பு”

 

“அதுக்கு இதுவா சமயம். யார்கிட்டயும் ஒரு ஹலோ கூட சொல்லல. விழா முடிஞ்சதுக்கு அப்பறம் பார்க்கலாம்”

 

“நோ…. “ பிடிவாதமாய் தலையசைத்து மறுத்தான். அவனது பிடிவாதம் ஏதோ முக்கியமான விஷயம் என்று உள்மனம் சொன்னதால் மறுபேச்சு பேசாமல் அவனுடன் கிளம்பினாள்.

 

“நம்ம விருந்தில் கலந்துக்கப் போறதில்லை. அதுக்கு பதில் வேற ஒரு முக்கியமான இடத்துக்கு என்கூட வர” என்று இழுத்துச் சென்றான்.

 

காரில் அமர்ந்து கிளப்பினான் ஜான். மும்பையின் நெரிசல் மிகுந்த வீதிகளைக் கடந்து நகரை விட்டு விலகிப் பறந்தது அந்த வண்டி.

 

“நீங்க வந்த கார் நாளைக்கு வீட்டுக்கு வந்துடும்”

 

“ஜான் இப்ப எங்களை எங்க கடத்திட்டுப் போற?” – கல்பனா

 

இரு பெண்களின் குழப்பம் நிறைந்த முகத்தைப் பார்த்தவன் ஒரு பலத்த பெருமூச்சு விட்டான்.

 

“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி எங்க எல்லாருக்கும் வாட்ஸ் அப்பில் வந்த படங்கள். நீயும் வம்சியும் இருக்கும் போட்டோஸ்” என்று அவனது மொபைலை  நகர்த்தினான். பதட்டமாய் படங்களைப் பார்த்தாள் காதம்பரி.

 

அவற்றில் இருவரும் பெங்களூரில் டீயை கப் அண்ட் சாசரில் பகிர்ந்து கொண்டது, பெஞ்சில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தது, மழை பெய்யும்போது அவளது தோளில் கைகளைப் போட்டு ஒரே குடையில் சென்றது என்று இருவரும் அன்னியோன்யமாய் இருப்பதைப் போல அந்த புகைப்படங்கள் எடுக்கப் பட்டிருந்தது. இதனை வேண்டுமென்றே யாரோ செய்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது காதம்பரிக்கு.

 

இறுதியாக இருந்த போட்டோவில் காதம்பரியும் வம்சியும் மனம் நிறைந்த புன்னகையோடு ஒரே கப்பில் இருந்த ஃபலூடா ஐஸ்க்ரீமை இருவரும் ருசிப்பதைப் படமாகப் போட்டு, அதன் கீழே கமெண்ட்ஸாக

 

‘மிஸ்.கேட், ரூபி நெட்வொர்க் காண்ட்ராக்ட் கிடைக்க வம்சியுடன் ஃபலூடா ஐஸ்க்ரீமை மட்டும்தான் பகிர்ந்து கொண்டீர்களா? இப்படித்தான் உங்களது அட்வர்டைசிங் கம்பனிக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறீர்களா? இதுதான் உங்கள் தந்தை உங்களுக்குக் கற்றுத் தந்த தொழில் ரகசியமா? உங்கள் தந்தை ஒரு மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டதின் காரணம் இப்பொழுது தெரிகிறது. உங்கள் தாய் செய்த வேலையை இப்பொழுது நீங்கள் செய்கிறீர்களா? தொடரட்டும் உங்கள் சேவை’

 

என்று தனது வக்கிரத்தைக் கொட்டி எழுதியிருந்தான் அந்த அயோக்கியன்.

 

“ஜான்… ஜான்… இது என் அம்மா, அப்பாவைப் பத்தியெல்லாம்… “ பேச முடியாமல் தொண்டையை அடைத்தது காதம்பரிக்கு.

 

“உங்க அம்மா பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும். நீயும் எந்த அளவுக்கு கடுமையான உழைப்பாளின்னும்  எங்களுக்குத் தெரியும். உன் மேல பொறாமைல யாரோ ஒரு வக்கிரம் பிடிச்சவன் எழுதிருக்கான்.”

 

மும்பையை விட்டுத் தள்ளியிருந்த அந்தப் பண்ணை வீட்டின் முன் கார் நின்றது. வாசிலிலேயே நின்று வீட்டின் சொந்தக்காரன் வரவேற்றான்.

 

“வம்சிகிருஷ்ணா” கல்பனாவின் குரல் ஆச்சிரியத்துடன் ஒலித்தது.

 

அனைவரும் இறங்கியும் அதிர்ச்சி மறையாத காதம்பரி எழ மறுத்துப் பிடிவாதமாய் அமர்ந்திருந்தாள்.

 

“காதம்பரி இறங்கு” பல்லைக் கடித்தவாறு கூறினான் வம்சி.

 

“இப்ப இறங்கலைன்னா உன்னைத் தூக்கிட்டு போக எனக்குத் தெரியும். அது புதுசில்லன்னு உனக்கும் தெரியும்” என்ற அவனது கடுமையான குரல் அப்படியே செய்வான் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

 

“கல்பனா உங்க மேடமை உள்ள கூட்டிட்டு போய் உட்கார வை” எதுவும் பேச வழியின்றி சக்தியெல்லாம் வடிந்து ஓய்ந்து போய் நடந்து சென்றாள் காதம்பரி.

 

மும்பையின் ஓட்டல் அறை ஒன்றில் தன் முன்னிருந்த மதுவை ராவாக உள்ளே தள்ளினான் அமர். பெங்களூரிலிருந்து காதம்பரி கிளம்பிய நிமிடத்திலிருந்து அவளைக் கண்காணிக்க ஆளை ஏற்பாடு செய்திருந்தான். அந்த உளவாளியின் மூலமாக வம்சி காதம்பரி வீட்டுக்கே செல்ல ஆரம்பித்துவிட்டான் என்ற தகவல் கிடைத்ததும்தான் இந்தக் காரியத்தை செய்யும் முடிவுக்கே வந்தான்.

 

“முட்டாள் இப்படியா போட்டோஸ் எல்லாத்தையும் பார்வார்ட் செய்வ… “

 

“வேற என்ன செய்ய சொல்ற… என் கண் முன்னாடியே அவளை கூட்டிட்டு போறான். நீயாவது அவங்களைப் பிரிப்பன்னு பார்த்தா… பாம்பு கதை சொல்லற… என் ஆத்திரத்தை எப்படித்  தீர்த்துக்குறது”

 

“இடியட்.. வம்சி மாதிரி தொழிலதிபர்களுக்கு பிக் அப் டிராப் எல்லாம் புதுசா என்ன, இதையெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க”

 

“ஆனா கேட் அப்படி இல்ல…. கூனிக் குறுகிடுவா…. அதுதான் அவ குடும்பத்தையே இழுத்தேன்… “ வில்லத்தனமாக சிரித்தவன் பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் கொண்டான்.

 

“இதனால நமக்கு பைசா பிரயோஜனம் உண்டா… என்னோட செல்லில் எடுத்த படங்களை உன்னை மாதிரி முட்டாளுக்கு பார்வார்ட் செய்த எனக்கு இது தேவைதான்.  இடியட், உன் கூட கூட்டு சேர்ந்தேன் பாரு என்னை சொல்லணும்”

 

“என்னடி பிரயோஜனம் இல்ல…. இப்ப வம்சி கேட் ரிலேஷன்ஷிப் பிரேக் ஆகல… நமக்கு இன்னொரு சான்ஸ் இருக்குல்ல… ” என்றான்.

 

“போலிஸ் உன் போட்டோஸ் ட்ரேஸ் பண்ணிட்டு இங்கேயே வந்து உன் கைல விலங்கு போடப் போறாங்க பாரு”

 

“நல்லதா போச்சு. அப்படி யாராவது வந்தா எனக்கும் காதம்பரிக்கும் கல்யாணமாயிடுச்சு. இந்த வம்சி என் பொண்டாட்டியைப் பிரிக்கப் பாக்குறான்னு கண்ணீர் மல்க ஒரு பேட்டி. அதை நம்பி இரக்கப்பட்டு எனக்கு சப்போர்ட்டா ஒரு கும்பலே நிக்கும். போலியா மேரேஜ் செர்ட்டிபிகேட், ஆல்பம் எல்லாம் ரெடி பண்ண என்கிட்டே ஆள் இருக்கு. பேசாம நீயும் இதே வழியை பாலோ பண்ணு”

 

கதவை யாரோ தட்ட… “யாரது”

 

“ரூம் சர்விஸ், சாப்பாடு ஆர்டர் பண்ணிருந்திங்களே”

 

கதவை திறந்த அமரை முந்திக் கொண்டு திபு திபுவென போலிஸ் புகுந்தது.

 

“ரூமை செர்ச் பண்ணுங்க”

 

“எதுக்காக ரூமை செர்ச் பண்றிங்க”

 

“ட்ரக்ஸ் விக்கிறதா தகவல் வந்திருக்கு… “

 

“நாங்க யாருன்னு தெரியாம விளையாடாதிங்க. இவங்க இன்டர்நேஷனல் மாடல் தெரியுமில்ல…. “

 

செல்லை எடுத்தவர் “ஸார் நம்ம லோக்கல்ன்னு நினைச்சோம். இவங்க இன்டர்னஷனல் லெவெல்ல காண்டாக்ட் வச்சிருப்பாங்க போலிருக்கு… வண்டியில் அள்ளிட்டு வந்துடுறேன்… மீடியாவுக்கு ஏற்கனவே தகவல் தந்தாச்சு. ஹோட்டல் வாசலில் குவிஞ்சுட்டாங்க”

 

“ஹே யாருகிட்ட விளையாடுறிங்க” என்று இருவரும் கத்த கத்த இழுத்து சென்றார்கள். போட்டோ ப்ளாஷ் பளிச் பளிச் என மின்ன முகத்தை மறைத்தபடி இருவரும் போலிஸ் ஜீப்பில் ஏறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: