Skip to content
Advertisements

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 20’

தன்பின் ஐந்தாறு முறை வம்சி வந்துவிட்டான். ஒரு முறை கூட பதிலைக் கேட்கவில்லை. ஆனால் உரிமையாக உணவு வகைகளை வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கி வைப்பான். சில நாட்கள் பாஸ்தா, நூடுல்ஸ் என்று அவள் சமைத்திருக்கும் சுலப உணவுகளை கூட சேர்ந்து உண்பான். இவனுக்கென்ன தலையெழுத்தா இந்த துரித உணவுகளை உண்பதற்கு என்ற எண்ணம் தோன்ற சிலநாட்கள் உணவகத்தில் விதவிதமான உணவு வகைகள் வாங்கிப் பரிமாறினாள்.

 

“காதம்பரி, இந்த மாதிரி உணவுவகைகள் வெளிய கிடைக்காதா… எனக்காக ப்ரதியேகமா எதுவும் வெளிய வாங்கிட்டு வர வேண்டாம். வீட்டில் என்ன இருக்கோ அதுவே போதும். அது பழைய சாதம் பச்சை மிளகாயா இருந்தாலும் உன் கையால் சாப்பிடும்போது எனக்கு அமிர்தம் தான்”

 

அவளை எந்த அளவுக்கு அவனது சொற்கள் பாதித்தது என்பதை மறுநாள் அவன் உண்ண காதம்பரியின் கைகளால் சமைத்த ராகிமுத்துவும் காய்கறி குருமாவும் சொன்னது.

 

“கூகுள் பண்ணிதான் ட்ரை பண்ணேன். எல்லாம் சரியாயிருக்கா” என்றவளுக்கு

கன்னத்தில் அழுத்தமான முத்தத்துடன் “ஆயிரம் சதவிகிதம்” என்று அவனிடம் பதில் வந்தது.

 

உணவுக்குப் பின்னர் இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சோபாவில் நெருக்கமாக அமர்ந்தவாறே சினிமா பார்ப்பார்கள். ஆனால் அதற்கு மேல் வேறெதையும் எதிர் பார்க்காமல் நள்ளிரவு கிளம்பிவிடுவான்.

 

“செர்ரி அன்று ஒரு நாள் உணர்ச்சி வேகத்தில் நடந்த நிகழ்வை உன் சம்மதமில்லாமல் தொடர நினைக்கும் அளவுக்கு கீழ்த்தரமானவன் இல்லை” என்று சொல்லி அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான்.

 

தான் சந்திக்க வர முடியாவிட்டால் செல்லில் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அவனது அண்மைக்கு ஏங்க ஆரம்பித்த மனதை எண்ணிக் கலக்கமாக இருந்தது காதம்பரிக்கு.

 

“காதம்பரி. இன்னைக்கு ராத்திரி என் வீட்டில டின்னர். நீ உன் ப்ளூ மேக்ஸி போட்டுட்டு வா. நம்ம பெங்களூர் ட்ரிப்போட முதல் மாத நிறைவை கொண்டாடும் வகையில் ஒரு சின்ன செலிபரேஷன்னு வச்சுக்கோயேன்.” என்றான்.

 

வம்சியிடம் யோசித்து பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. கண்டிப்பாய் அவளது சம்மதத்தைக் கேட்பான். எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடுவான். அவனை சந்திப்பதை எப்படித் தவிர்க்கலாம் என்ற எண்ணம் அவள் மனதில்.. அதே சமயம் இவன் சொல்றதுக்கெல்லாம்  தலையாட்டணும்னு எதிர்பார்க்குறது அநியாயம் இல்லையா. இந்த வம்சியின் அராஜகத்தைத் தடுக்க  வேண்டுமென்றால் அவன் சொல்வது எதையும் கேட்கக் கூடாது என்பதுதான் காதம்பரிக்கு முதலில் தோன்றிய யோசனை.

 

கல்பனா வேறு “கேட் விளம்பர கம்பனிகள் விழா ஒண்ணு இன்னைக்கு சாயந்தரம் நடக்குதாம். ஜான் சொன்னான். போயிட்டு வரலாமா. பிஸினெஸ்க்கு உதவியா இருக்கும்.” என்று சொன்னது அவளுக்கு நல்ல வாய்ப்பாய் பட்டது.

 

அதன்படி கல்பனா சென்றவுடன் வம்சியை அழைத்து தான் இன்று வரமுடியாது என்று சொன்னாள்.

 

“உடம்பு சரியில்லையா… வீட்டுக்கு வரேன்” என்றவனை

 

“இல்லை நான் வேற ஒரு முக்கியமான இடத்துக்குப் போறேன்” என்று சொன்னாள்.

 

“எங்க… “

 

“இது ஆட் ஏஜென்ஸி சம்மந்தமான பங்ஷன்”

 

“சரி”.

 

அவ்வளவுதானா….

 

“காதம்பரி… “

 

“சொல்லுங்க வம்சி”

 

“நேத்து ஒரு ஷார்ட் பிலிம் பார்த்தோமே நினைவிருக்கா…. “

 

அறுபது வருடங்கள் மணவாழ்க்கையை வாழ்ந்த ஒரு தம்பதியினர். தினமும் காலை அலாரம் கடிகாரத்தைப் பிரித்து ரிப்பேர் செய்ய ஆரம்பித்துவிடுவார் தலைவர். தலைவி வீட்டைக் கூட்டிப் பெருக்கி, துணி துவைத்து, சமைத்து எத்தனை வேலை செய்தாலும் அவரது கருத்தைக் கவராது. இருவரும் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் கணவனின் கருத்தை எவ்வளவு கவர முயன்றாலும் ஆண்மகனுக்கோ கடிகாரத்தை சரி செய்வதுதான் மிகப் பெரிய வேலை. பெருமூச்சுவிட்டபடி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இரவு வருவார் பெண்மணி. சரி செய்த கடிகாரத்தை மனைவியிடம் கொடுப்பார் கணவர். தூக்கக் கலக்கத்தில் அதனை டேபிளில் வைத்துவிட்டு படுக்கையில் சுருண்டு தூங்க ஆரம்பித்து விடுவார் மனைவி. கொட்டக் கொட்ட விழித்திருப்பார் கணவர். பனிரெண்டு மணிக்கு அலாரம் அடித்து மேசையிலிருந்து கீழே விழுந்து உடையும் அந்த சத்தத்தில் விழிக்கும் மனைவி தன்னையும் அறியாமல் கணவரின் புறம் திரும்பி அவர் மார்பில் தலை சாய்த்து உறங்க ஆரம்பிப்பார். தன் மனைவி மார்பில் சாய்ந்ததும் வெற்றிப் புன்னகை சிந்தியபடி மகிழ்ச்சியாக உறங்க ஆரம்பிப்பார் கணவர்.

 

“அதில் மனைவி காதலை ஒரு விதமாக வெளிப்படுத்தி இருப்பாங்க. கணவர் இன்னொரு விதமா. அதே மாதிரிதான் நானும் என் அன்பை எனக்குத் தெரிஞ்ச விதத்தில் உன்னிடம் வெளிப்படுத்துறேன். இவ்வளவு புத்திசாலி காதம்பரியால் என் லவ்வைக் கண்டிப்பா புரிஞ்சுக்க முடியும்”

 

ரிசீவரை வைத்ததும் அதனைப் பார்த்து “புரிஞ்சுக்க முடியுது. ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறேன். ஆனால் அதை ஏத்துக்குறதுக்கான  குடுப்பினை எனக்கிருக்கான்னுதான் தெரியல. சாரி வம்சி உங்களை ரொம்ப காக்க வைக்கிறேன். தெரிஞ்சே ஹர்ட் பண்றேன். எல்லாம் என் நிறுவனத்துக்காக. அப்பாவின் உயிர் கேட் ஆட் நிறுவனம். அதோட பேருக்கு எந்த பாதகமும் வராம பார்த்துக்கும் பெரிய பொறுப்பு எனக்கிருக்கு. அதற்காக சிலவற்றை தியாகம் செய்ய வேண்டியிருக்கு” என்றாள்.

விளம்பர நிறுவனங்களுக்கென்று பிரத்யேகமாய்  நடக்கும் விருந்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் காதம்பரி.

 

அவளுடன் செல்வதற்காக அழகான பார்ட்டி சேலை அணிந்து காதம்பரி வீட்டில் அவள் வரவிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் கல்பனா. இருவரும் விருந்துக்கு செல்வதாக ஏற்பாடு.

 

“கேட் என்னோட மொபைல் ஸ்ட்ரைக் பண்ணுது. சுத்தமா வேலை செய்றதை நிறுத்திடுச்சு”

 

“என்னோட ஸ்பேர் ஒண்ணு இருக்கு அதை உபயோகிச்சுக்கோ” என்றபடி கிளம்பி வந்தாள் காதம்பரி.
ஆலிவேரா கிரீன் நெட் சாரி, அதே நிறத்தில் உடலெங்கும் நூல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இருமருங்கிலும் பார்டராக கருநீலமும், கடலின் நீல வண்ணமும் பின்னி ரோஜாவாகப் பூத்திருந்தது. அதே வண்ணப் பச்சையில் நீலங்கள் கலந்து எம்பிராய்டரி  செய்யப்பட்ட  ஜாக்கெட். அனைத்தும் பச்சையாக இருப்பதை சமன் செய்ய கடல் நீலக் கற்களால்  வடிவமைக்கப்பட்ட காதணிகளும் கழுத்தணிகளும். இந்த அலங்காரங்கள் சாமனியர்களுக்கே அழகூட்டும். காதம்பரி இவற்றை அணிந்தவுடன் தேவதையாய்த் தெரிந்தாள்.

“சூப்பரா இருக்க கேட்….. இன்னைக்கு அவன் மயங்கித்தான் விழப் போறான் பாரு” என்றாள்  கல்பனா.

 

“அவன் ஏன்  இங்க வர்றான்? அதெல்லாம் வரமாட்டான்” என்றாள் காதம்பரி அசிரத்தையாக.

 

“என்ன சொல்ற இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியை அவனால எப்படி அவாய்ட்  பண்ண முடியும்?”

 

“யாராவது அழைக்கணுமே  கல்பனா.நான் கண்டிப்பா அழைக்க மாட்டேன். மத்த பெரிய விளம்பர நிறுவனங்கள் எல்லாம் நமக்கு ப்ராஜெக்ட் தந்ததால் அவன் மேல வருத்தத்தோட இருக்காங்க. சோ வருவது கஷ்டம்தான்”

 

பேசுவதை நிறுத்திவிட்டு காதம்பரியையே  உற்று நோக்கினாள் கல்பனா.

 

“என்ன என்னையே பார்க்குற”

 

“நான் ஜானைப் பத்திப் பேசிட்டு இருக்கேன். நீ வேற யாரையோ சொல்ற போலிருக்கே” என்றதும்தான் அவளது தவறு புரிந்தது. ச்சே இந்த வம்சியைப் பற்றியே என் நினைவு சுழல்கிறதே. இது நல்லதே கிடையாது.

 

“நீ சொல்றதைப் பார்த்தா வம்சியை குறிப்பிடுற மாதிரித் தெரியுதே. நீ அவனை  லவ் பண்றியா கேட்” திடுதிப்பென கல்பனா முகத்துக்கு நேராகவே கேட்கவும்  கேட்கவும் பதில் பேச முடியாமல் தடுமாறினாள் காதம்பரி.

 

“நான் உன்னை கவனிச்சுட்டேதான் வர்றேன். சில நாட்களா நீ சரியில்லை. வீக்எண்டு கூட ஆபிஸே கதின்னு இருப்ப. இப்பெல்லாம் வரதில்லை. அடிக்கடி புதிய உடைகள், நகைகள்  கிப்டா வருது. உன் கண்களில் ஒரு மயக்கம் தெரியுது. காதல் என்ற நோய்க்கான அறிகுறிகள் இதுதான்”

 

 

“கல்பனா….”

 

“அதுமட்டுமில்லை, அன்னைக்கு உன்கிட்ட அவசரமா ஒரு விவரம் கேட்க வேண்டியிருந்தது. உன் வீட்டுக்கு வந்தேன். நான் லிப்ட்டில் வந்து உன் வீட்டு காரிடாரில் திரும்ப, அதே சமயத்தில் வம்சி வீட்டுக்குள் நுழைஞ்சதைப் பார்த்தேன்”

 

“வந்து… ‘

 

“சும்மா ஆபிஸ் விஷயமா வந்தான்னு சாக்கு சொல்லாதே…. கையில் புதுசா பால் டப்பா, காய்கறி வாங்கிய கேரி பேகோட வர்றவன் அந்த வீட்டின் குடும்பத்தலைவனா இருக்கணும் இல்லைனா அந்த வீட்டில் அந்த அளவுக்கு உரிமையோட வளைய வரவனா இருக்கணும். உண்மையை உன் வாயால் கேட்க விரும்பித்தான் இன்னைக்கு ஜானைப் பத்தின பேச்சை எடுத்தேன்.”

 

காதம்பரியின் செல் அழைத்தது. அதில் வம்சியின் எண் ஒளிர்ந்தது. கட் பண்ணினாள். அவனும் விடாமல் அழைக்க, செல்லை  அணைத்தாள்.

 

“அந்தக் கோலத்தில் வம்சியைப் பார்த்ததும் முழுசுமா அவனைப் பத்தின விசாரணையில் இறங்கினேன். பல பெண்கள் அவனுக்கு வலை வீசிருக்காங்க. ஆனால் யார்ட்டயும் மாட்டல. மூணு பொண்ணுங்க அவனை அடைய முழு மூச்சோட இறங்கினாங்க”

 

“மாடல் லில்லி, நடிகை ரிஷிதா, தொழிலதிபர் ஷர்மி”

 

“எக்ஸாட்லி… நடிகை ரிஷிதா பிலிம் இண்டஸ்டிரிலேருந்து ரிடையர் ஆனதும் இவனைக் கல்யாணம் செய்துக்க பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கா. இருவருக்கும் கல்யாணம் நடந்ததுன்னு புரளி கிளப்பி விட்டிருக்கா.. ஆனால் கடைசி வரை இவனை அசைக்க முடியல.

 

ஷர்மி பினாமி பேரில் சில டுபாக்கூர் கம்பனிகள் வச்சு நடத்திட்டு இருந்தா…. ஆட்ஸ் எல்லாம் தூள் பறக்கும். ஆனால் கடைசியில் பணத்தை சுருட்டிட்டு கம்பனி லாஸ்ன்னு சொல்லிட்டு பினாமியை மாட்டிவிட்டுட்டுக் கம்பி நீட்டிடுவா… அவளோட நிறுவனம் ஒண்ணை வம்சியோட கசின் கிருபாகர் வாங்கினான். அதில் சில தில்லுமுல்லு செய்திருப்பா போலிருக்கு. அந்தப் பழி கசின் மேல. உடனே வம்சியே தலையிட்டுட்டான். அவ குட்டெல்லாம் ஆதாரத்தோட நிரூபிச்சவுடன் எல்லாத்தையும் வித்துட்டு காசை எடுத்துட்டுக் கமுக்கமா செட்டிலாயிட்டா….

 

லில்லி இன்டர்நேஷனல் மாடலாகணும்னு வம்சி பின்னாடி சுத்திருக்கா… வம்சியும் சில ஏஜென்சிட்ட அறிமுகப் படுத்திருக்கான். ஆனால் வெளிநாட்டு மார்கெட்டுக்கு அவளோட உடற்கட்டும் முகவாகும் ஒத்து வரல. அங்க பெயிலாயிட்டு இங்க வந்தப்ப புதுப் புது ஆட்கள் வந்திருந்தாங்க, இவளுக்கு வாய்ப்பு கிடைக்கல. செட்டிலாக அவள் போட்ட பிளான்தான் வம்சியைக் கல்யாணம் பண்ணிக்கிறது. நேர்வழி குறுக்கு வழின்னு எல்லாத்திலும் முயற்சி செய்தும் தோல்விதான். ஆனாலும் இன்னமும் தன்னாலான முயற்சியை செய்துட்டுத்தான் இருக்கா. உன்னைப் பத்தி இன்னும் கேள்விப்படலன்னு நினைக்கிறேன். தெரிஞ்சா நேரில் வந்திருப்பா”

 

“யாரு தெரியாதுன்னு சொன்னது? நேரில் வந்து பாம்பு கதையெல்லாம் சொன்னா.. ஆனால் அப்ப கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் நான் அவளை நம்பல”

 

“அவளை நம்பல ஆனால் வம்சியை நம்பறேன்னு சொல்றதே அவனை நீ காதலிக்கிறேன்னு ப்ரூவ் பண்ணுது. உன்னை தங்கையா நினைச்சு சொல்றேன். வம்சி அந்த அளவுக்கு இம்சி இல்லை. அவனை நீ தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். காதல் ஒரு வாசனையான மலர். மலரை நீ மறைச்சு வச்சாலும் அதோட மணம் சுத்திலும் பரவுறதைத் தடுக்க முடியாது”

 

பதில் பேசாமல் காரில் ஏறினாள் காதம்பரி. டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினாள் கல்பனா.

 

“வம்சியை காதலிக்கிறியான்னு கேட்டதுக்கு நீ இன்னும் தெளிவான பதிலே சொல்லல”

 

“எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல ஆனால் ஒண்ணு மட்டும் நல்ல புரியுது

 

காதல் நெருப்பின் நடனம், உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம், புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

 

“புதிர் போடாம நேரடியா சொல்றியா”

 

“என்னைப் பொறுத்தவரை காதல், கமிட்மென்ட் எல்லாம் நெருப்பில் நடனம் ஆடுறதை போல, எந்த நிமிஷமும் என் உயிரையே உருக்கலாம். கடலில் உறங்கும் புயல் போல எந்த நேரத்திலும் என் தொழிலையும் வாழ்க்கையையும் புரட்டிப் போடலாம். நான் பாத்துப் பாத்து செதுக்கிட்டு இருக்கும் என் பிஸினஸ் கோட்டை அடியோட சரியலாம்”

 

“கேட் உன் வாழ்க்கை வேற பிஸினெஸ் வேறன்னு பிரிச்சுப் பாரு அப்பத்தான் உனக்குத் தெளிவு பிறக்கும்”

 

“ப்ளீஸ் இதைப் பத்திப் பேசாதேயேன்”

 

“சரி நான் பேசல… ஆனால் வம்சியைக் காதலிச்சா உடனே கல்யாணம் பண்ணிக்கோ. இல்லைன்னா இந்த உறவு உன்னைப்  பெரிய சிக்கலில் மாட்டிவிட்டுரும்”

 

கல்பனா சொன்ன சொல் உடனடியாகப் பலித்தது. அதன் விளைவு காதம்பரியின் வாழ்க்கையையே ஆட்டம் காண வைத்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: