ஹாய் பிரெண்ட்ஸ்,
முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
இப்ப கதைக்கு வருவோம்
உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது. இனி பானு என்ன செய்வா? சண்டை பிடிப்பாளா? வீட்டை விட்டு வெளிய போய்டுவாளா? இப்படி பல கேள்விகள்.
அம்மா வீட்டு ஆதரவு இல்லை. படிப்பு மறந்தே போயிடுச்சு. வெளிய அலைஞ்சு வேலை தேடிக்கிற தகுதியோ திறமையோ இல்லை. இந்த தமிழ் மதுரா இப்படி ஒரு கதாநாயகியத் தந்திருக்க வேண்டாம். சரயுவோட சூட்டிகைல பாதியாவது பானுவுக்கு இருந்திருக்கலாம்னு கம்பேர் செய்து என்கிட்டே ஆதங்கப் பட்டிருந்திங்க. சரயு அம்மா அப்பா இல்லாம தானே போராடி ஒவ்வொரு படியா முன்னேறினா. அவள் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை தைரியமாக்கியது.
பானுவோ அம்மா அப்பா என்று பாதுகாப்பான கூட்டில் வளர்ந்து, தகப்பனால் பத்திரமாய் ஒரு நல்ல குடும்பத்தில் ஒப்படைக்கப் பட்டாள். அவளுக்கு பெரும்பாலான பெண்களைப் போல குடும்பமே உலகம். இப்படிப்பட்ட பெண் கணவனின் துரோகத்தை எதிர்கொள்ளும் நிலைமை வந்தால்….
இந்தப் பகுதிக்கு பலம் சேர்ப்பது பத்மா கிரகமின் கவிதைகள். ஒவ்வொரு வரியும் ரசிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கிறது. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ கதையை நான் தொடங்க நினைத்த நேரம், முகநூலில் அவரது கவிதைகள் சிலவற்றைப் படித்து அசந்துவிட்டேன். ஏனென்றால் அவை அப்படியே பானுவின் மனநிலையைப் பிரதிபலித்தது. பத்மா எனக்குக் கவிதைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்ததுடன். புதிதாகவும் சில கவிதைகளையும் உங்களுக்காக எழுதியிருக்கிறார். பத்மா உங்களது கவிதைகளுக்கு மிக்க நன்றி.
இது காதலில் தோல்வியுற்ற பெண் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பதைப் போன்று வரும். இந்தக் கவிதையை தமிழில் பானுவுக்காக வடித்துக் கொடுத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். இந்த ஆங்கிலக் கவிதையை விட அதிகமான தாக்கத்தை பத்மாவின் கவிதை தரும்.
நீங்க படிச்சுட்டு சொல்லப் போகும் கமெண்ட்ஸ் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்யாயம் –9
ஆலம் விழுதுகள் போல்உறவு
ஆயிரம் வந்துமென்ன ..
வேரென நீயிருந்தாய் அதனால்
வீழ்ந்து விடாதிருந்தேன் …
தென்றலாய் தெரிந்த உறவு சூறாவளியாய் மாறி சின்னாபின்னமாக்கியது பானுவின் மனதை. நம்பிக்கை வேர் வெட்டப் பட்ட வலியில் துடித்த பானுவை அணைத்துக் கொண்டார் சாவித்திரி.
விடுதியின் பின்புறம் நடந்து வந்து காரில் அமர்ந்து நடந்ததை ஜீரணிக்க முயன்றனர் அனைவரும். டிரைவரிடம் ஒரு மணிநேரம் கழித்து வர சொல்லி செல்லில் தகவல் தந்தார் சாவித்திரி. அவர்களுக்கு தனிமை தேவைப்பட்டது. எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர ஒரு சிறிய அவகாசம். சிந்திக்க சிறிது நேரம்.
“ஒவ்வொரு பண்டிகைக்கும் பாமாவுக்கும் ஷ்யாமாவுக்கும் துணி எடுக்கும்போது சுப்ரஜாவுக்கும் துணி எடுப்பயே. நீ பூர்வஜாவோட குழந்தைய உன் குழந்தையா நெனச்ச… நாசமாப் போறவ, உனக்குப் போயி இப்படி துரோகம் செஞ்சுட்டாளே” வாயைப் பொத்தியபடி அழுதாள் தவ்லத்.
“அதுதான் அந்தக் கடன்காரியும் உன் புருஷனை அவ புருஷனா நெனச்சுட்டா” பொரிந்தாள் நேத்ரா.
“அவளை என்ன செய்யுறேன் பாரு” காரிலிருந்து வெளியே செல்ல எழும்பிய நேத்ராவை வலுக்கட்டாயமாய் அமர வைத்தார்கள்.
அதிர்ச்சியில் உறைந்து போய் அழக்கூடத் தோன்றாமல் பைத்தியம் போல் அமர்ந்திருக்கும் பானுவை கவனிப்பதா, பிரகாஷையும் பூர்வஜாவையும் கையும் களவுமாய் பிடித்து அவர்கள் முகத்திரையைக் கிழிக்க நினைக்கும் நேத்ராவை அடக்குவதா என்று புரியாமல் விழித்தார்கள் தவ்லத்தும் சாவித்ரியும். வயதில் பெரியவர்களான இருவருக்கும் அனுபவம் தந்த பாடம் அப்போதைக்கு அடங்கிப் போக சொன்னது.
“இப்ப என்னடி செய்யணும்னு சொல்லுற”
“ரெண்டு பேரையும் பிடிச்சு நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்டுட்டு வரலாம்”
“லூசு மாதிரி பேசாதடி…. ஆத்திரத்துல காரியத்தை செய்துட்டு நிதானமா உக்காந்து வருத்தப்பட சொல்லுறியா… “
“அப்ப அவங்களை அப்படியே விட சொல்லுறியா பாட்டி” கிட்டத்தட்டக் கத்தினாள் நேத்ரா.
“தோத்து போயிடுவோம்னு தெரிஞ்சா போரில் பின்வாங்குறது கூடத் தப்பில்லைன்னு சொல்லுவாங்க… .இப்ப முதல்ல என்ன செய்யணும்னு நம்ம யோசிக்கணும். அப்பறம் நிறைவேத்தணும். எல்லாத்துக்கும் முன்னாடி பானுவை கவனிக்கணும். அவளோட அளவுக்கு மீறின நம்பிக்கை நாசமாப் போனதை அவ தாங்கவும் அதிலிருந்து மீளவும் நம்மாலான உதவி செய்யணும். அந்த நம்பிக்கை துரோகிங்க எங்க போயிடப் போகுதுங்க… அதுங்களை பழி வாங்க ஒரு காலம் வராமலா போகப் போகுது” மூத்தவராய் அனைத்தையும் சிந்தத்த சாவித்திரி இளையவர்களுக்கு செய்ய வேண்டியதை சொன்னார்.
“ஏய்.. பானு வீட்டுக்காரனுக்கு இன்னமும் அவ கூட இருக்குற தொடர்பை கொஞ்சம் குற்றமாத்தான் பாக்குறான்” தவ்லத் ஐந்து நிமிட யோசனைக்குப் பின் சொன்னார்.
“உங்க கிட்ட சொன்னாரா” ஆத்திரமாய் கொதித்தாள் நேத்ரா
“அவர் நடந்துக்குற முறையை வச்சு சொல்லறேன். அவ கூட ஒட்டி உரசிட்டு வரல, அவ மேல வந்து விழுந்தாலும் தள்ளி விடுறார். இவதான் அவரை பிடிச்சு முந்தானைல முடிஞ்சுக்க ட்ரை பண்ணுறாப்ல இருக்கு”
“ஆமாம் அருவாள் ஆட்டு கழுத்துல விழல, ஆடு கழுத்துத்தான் அருவாளுக்கு மேல விழுந்துச்சு… பேசுறிங்க பாருங்க. எப்படின்னாலும் சாகப் போறது ஆடுதானே. பானுக்காதானே கஷ்டப்படப் போறா”
“நேத்ரா… தவ்லத் சொல்லுறதைக் காதில் வாங்குடி. இப்ப யாருக்கும் தெரியாதுன்னு ரெண்டு பேரும் ரகசியமா தப்பு செய்றாங்க. நீ அவங்க தொடர்பை வெட்ட வெளிச்சமாக்கினா, அதுவே அவங்களுக்கு தைரியமாயிடாதா…. நாங்க அப்படித்தான்னு வெளிப்படையா வாழ ஆரம்பிச்சுடுவாங்க. இப்ப இந்த மாதிரி முறை தவறின உறவுகளைக் கண்டிக்கக் கூட ஆளில்லை. பூர்வஜாவுக்கு ஆதரவில்லை, சொல்லப் போனா படரத் துடிக்கிற அந்தக் கொடி ஒரு கொம்பைக் கண்டதும் பற்றி வளந்துடுச்சு. அவளைக் கட்டுப்படுத்த யாருமில்லை. தன்னோட தோழிக்கே துரோகம் செய்யுறவ என்ன செய்யத் தயங்கமாட்டா…. நம்ம சட்டத்தால் இவங்களைப் பிரிக்க நினைச்சா பிரகாஷ் அவ கிட்டவே நிரந்தரமா போய்ட சாத்தியமிருக்கு”
இருளில் நடந்த ரகசியத் தொடர்பு வெளிச்சத்துக்கு வரும் வாய்ப்பிருப்பதை சுட்டிக் காட்டினார் சாவித்திரி. உண்மையை மறுக்க வழியில்லாது ஏற்றனர் மற்றவர்கள்.
“நீ ஏன்க்கா இப்படி இருக்க… இப்படியா வீட்டுக்காரரை அடுத்தவகிட்ட பறிகொடுப்ப..
அந்த மேனாமினுக்கி.. உன் மூலமாவே வேலை வாங்கிட்டு, உன்கிட்டயே அண்ணாவைப் பத்தி விசாரிச்சு, உன் வீட்டுகாரரையே வளைச்சு, ச்சே… உங்க வீட்டுக்கே நுழைஞ்சு உன் கழுத்தை அறுத்திருக்கா… கடைசி வரைக்கும் கண்டே பிடிக்க முடியாம இருந்திருக்க. அண்ணன் திட்டுறமாதிரி நீ நிஜமாவே அசடுதான்க்கா… அசடு, அசடு” பானுவைக் கோவமாய் திட்டிவிட்டு பானு மடியில் படுத்து ஓவென அழுதாள் நேத்ரா.
அவள் சொன்னதிலிருக்கும் உண்மை சுட உலகமே உறைந்துவிட்டாற்போல் அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்தாள் பானு.
“நான் அசடு.. அசடு… அவரே உலகம்னு இருந்தேனே… நான் பைத்தியக்காரி… ஏமாந்துட்டேன்டி… தவ்லத் அக்கா… மாமி” என்று கேவினாள்.
காருக்கு வந்த டிரைவர் “கிளம்பலாமாம்மா” என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டார்.
“பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டுருங்க” என்றார் சாவித்திரி அவரிடம்.
கல்யாணத்துக்கு போகணும்னு ஏறினவங்க பேருந்து நிலையத்தில் இறக்கி விடச் சொன்னால்… குழப்பமாய் பார்த்தார். அப்போதுதான் அனைவரின் கண்களும் கலங்கி அழுததால் முகம் சிவந்திருப்பதைக் கண்டார்.
“எதுவும் துக்கமான சம்பவம் நடந்துடுச்சாமா?”
“ஆமாம் என் வீட்டுக்காரர் போய்ட்டார்” கண்களில் நீர் வழிய சொன்னாள் பானு.
வீட்டுக்கு வந்தும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் பானு.ரெண்டு நாளாய் குளிக்காமல் உணவு உண்ணாமல் பித்துப் பிடித்ததைப் போல் அமர்ந்திருந்தாள். தேவையான விஷயம் மட்டுமே தோழிகள் பதமாய் செவ்வந்தியிடம் சொன்னார்கள்.
“இங்க பாருடி… நாப்பது வயசான சில ஆம்பளைங்களுக்கு நாய்க்குணம் வந்துடும். இப்படித்தான் நடந்துப்பாங்க… அவரைக் கொஞ்சம் கொஞ்சமா விடுவிச்சு உன் முந்தானைல முடிஞ்சுக்கப் பாரு… அதைவிட்டுட்டு பிரச்சனையை சிக்கலாகிட்டு உங்கண்ணன் வீட்டுக்கு வந்து உக்காந்துடாதே. நான் இப்ப ஊருக்குப் போயி உன் வீட்டுக்காரனை வசியம் எதுவும் பண்ண முடியுமா, அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுக்கு ஏவல் எதுவும் வைக்க முடியுமான்னு பாத்துட்டு வரேன்” என்றவாறு தான் ஊருக்குக் கிளம்ப எப்போது வேண்டுமானாலும் மூட்டை கட்டலாம் என்று மறைமுகமாய் சொன்னார்.
அவர் சொன்னதைப் புரிந்துக் கொள்ளக் கூடத் தெம்பின்றி தன் நிலையைப் பற்றிய கழிவிரக்கத்தில் உழன்ற பானு ஒரு நாள் முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தாள்.
‘இவர் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். இவருக்கு ஒரு மனைவியா சொத்து, சுகம், குழந்தைகள்ன்னு எல்லாமே தந்தேனே. அப்படி என்ன இல்லைன்னு என்னை விட்டுட்டு அவகிட்ட போனார். அவளை மாதிரி அழகா இல்லாதது குறையா இருக்குமோ..’
கண்ணாடியில் தன்னை ஆராய்ந்தாள். சராசரி உயரம். இரண்டு குழந்தைகள் பிறந்ததால் சற்று சதை போட்டு குட்டையாகத் தெரிந்தாள். சீர் செய்யாத புருவம், பார்த்தவுடன் பராமரிப்பில் அக்கறை செலுத்தாதவள் என்று தெரிவிக்கும் முகம். பூர்வஜாவின் பளீர் நிறமும், உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் தனி கவனம் செலுத்துவதும் தன்னிடம் இல்லாதது அழகின்மைக்குக் காரணமாய் இருக்குமோ?
கண்ணாடியிடம் கேட்டாள்.
உள்ளதை உள்ளபடி காட்டும் உன்னால் ..நான்
உளமகிழ்ந்த காலமொன்றுண்டு
கொடியிடையும் கொலு நடையுமான
பொம்மை பருவமது …
இன்று …
ஓரமாய் உனை சிறிதுடைத்து
என்னைக் கீறினால்
ஏறி விட்ட எனது சதை
கரைந்து உதிருமோ ?
உன்னுள் உறைந்திருக்கும்
பாதரச துளிகளை என் மீது விசிறினால் …
வெண்ணிலவாய் ஒளிர்வேனோ ?
சாத்தியமற்ற சம்பவங்களாய்
இவையிருப்பின் …
எனதருமை கண்ணாடியே
பொய்யொன்றாவது உரைத்து விடு
என் பழைய உருவம் தாங்கி .
—by Padma Graham
தன்னைப் பற்றிய சுய அலசலில் இறங்கினாள்.
‘பளபள தோலு, பாம்பு சடை, கொடியிடை, மோகன சிரிப்பு, கொஞ்சும் பேச்சு இதுதான் ஒரு பொண்டாட்டிக்கு முக்கியமான தகுதியா?’ என்று தன்னிடம் கேள்விக் கேட்டவள் தானே பதிலையும் சொல்லிக் கொண்டாள்
‘ஏண்டி உன்னால முடிஞ்சதெல்லாம் செய்யலாம். ஆனா தோற்றம் உன் தேர்வில்லையே. அழகுதான் அவருக்கு முக்கியம்னா என்ன செய்ய முடியும் சொல்லு. இந்த முகத்தைப் பாத்துத்தானே கல்யாணம் செய்துக்க சம்மதிச்சார். நீ தான் மக்கு… உன் வீட்டுக்காரர் பெரிய படிப்பு படிச்சவர், உலகம் தெரிஞ்சவர். அத்தனை படிச்சவரு இப்படிப் பேச்சு மாறலாமா…
அழகானவளவளப்பான தோல் ஒரு நாள் சுருங்கும்… போதையூட்டும் விழிகளில் பார்வைகுறையும், நீளமான முடி கொட்டி தலையெங்கும் நரை எட்டிப் பார்க்கும். கொவ்வைசெவ்வாய் மறைந்துபற்கள் கொட்டிப் போகும்… அறிவும் ஆற்றலும் மங்கி சிறுபொருளை எங்கு வைத்தோம் என்று கூடத் தெரியாமல் மறதி தட்டும். அப்போது கூடஉன்மேல் நான் வைத்திருக்கும் அன்பும் காதலும் மாறி இருக்காது. நிலையில்லாததைத் தேடிப் போன உன்னால் என் நிலைமாறாத அன்பைப் புரிந்து கொள்ள முடியாதது என்துரதிர்ஷ்டம்தான்.
“எவ்வளவு பெரியதுரோகம்… கணவனுடன்குலவிய படுக்கையைப் பார்க்கவே அருவருப்பாய்இருந்தது. அவ கூட பொழுதைக் கழிச்சுட்டு, அந்தக் குற்ற உணர்ச்சியைமறைக்கஎன்கூட சரசமாடிருக்கார். சொல்லப் போனா தாம்பத்யத்தை பிச்சை போட்டிருக்கார்.எச்சில் சோத்தை ப்ரசாதமா நெனச்சிருக்கேன். பத்து வருஷம் இவரையேநம்பியிருந்த என்னை அவமானப் படுத்திட்டாரே”
சிவன் தலை கங்கை அன்று
தடையற்று பொழிந்தது என் மீது
உன் மூலம் …
கரை கடந்த அன்பு
அமுதமாய் வழிவதாய் எண்ணமெனக்கு …
ஆனால் ,
பளபள விஷ நாகத்துடன்
பின்னி பிணைந்து விட்டு
நீ உள் வாங்கிய விசத்தை
கக்கும் போது வாங்கும்
களவுப்பூ நானல்ல …
நாமிருந்த படுக்கையில் இன்று
நாகங்கள் ஊர்கின்றன …
நாகப்படுக்கை நர்த்தனத்தை
கற்றவளில்லை நான் …
நீ உமிழும் எச்சிலுக்காய் காத்திருக்கவில்லை என் உணர்வுகள் ,
பிச்சையாய் தாம்பத்யம் தருவாயானால் …
தாலியின் தரமறிய
வேண்டும் நான் .
—by Padma Graham
பொருமிக் கொண்டே இருந்தவளைவரவேற்பரையில் ஒலித்த ஷ்யாமாவின் பிடிவாதக் குரலும், அவளைக் கண்டித்த தன் தாய் செவ்வந்தி வின் அதட்டலும் நிதர்சனத்துக்குக் கொண்டு வந்தது. மெதுவே நடந்துசென்றாள்
“ஏய் வெறும்பால்தான் இருக்கு… குடிடி”
“எனக்கு பால் பிடிக்காது காம்ப்ளான் போட்டுத்தா” முறுக்கிக் கொண்டாள் சின்னவள்.
“அதெல்லாம் தரமுடியாது… “
“அப்ப எனக்கு வேணாம்”
“வேணாமா… உடம்பு பூரா திமிருடி உனக்கு. உங்கப்பன் நாளைக்கு அவ கூட சேந்துகிட்டுஉங்க மூணு பேரையும் வீட்டை விட்டுத் தொரத்துவான். அப்ப இந்த வெறும்பாலுக்குக் கூட வழியிருக்காது பாத்துக்கோ” செவ்வந்தி தான் சொன்ன வார்த்தைகளைஉணர்ந்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் பானு நன்றாகவே உணர்ந்தாள்.
“அம்மா…” கோபமாய் ஒலித்த பானுவின் குரலைக் கேட்டு நாக்கை கடித்துக் கொண்ட செவ்வந்தி ஒன்றும் நடக்காதது டம்ளரை எடுத்துக் கொண்டு சமயலறைக்கு நகர்ந்தார்.
“பச்சை பிள்ளைகிட்ட பேசுற பேச்சாம்மா இது. ஏம்மா இப்படித் தப்புத் தப்பா மனசில் பதிய வைக்கிற”
“இப்பஎன்னடி தப்பா சொல்லிட்டேன்னு கத்துற… இந்த அறிவு முன்னாடியேஇருந்திருந்தா உன் புருஷனை இப்படி விட்டுக் கொடுத்திருப்பியா… அங்கனயே அந்தாளுசட்டையப் பிடிச்சு உலுக்காம.. பெருசா என்னை கண்டிக்க வந்துட்டா… “
“ஆமாம்மா அவர் எனக்கு துரோகம் செய்றாரு… நான் அதை தாங்க முடியாம தவிக்கிறப்ப, நீ வேற வாயில வந்தபடி பேசாதம்மா”
” நாளைக்கு நடுத்தெருவில நிக்கப் போறன்னு உண்மையை சொன்னா… வாயில வந்ததைபேசுறதா…. இதுக்கே இப்படி ரோசப்பட்டா, நாளைக்கு உன் அண்ணிக்காரிஇடிசோறு போடும்போது என்ன செய்வ?”
“ஓ… அதுதான்உனக்குப் பிரச்சனையா… உன் பொண்ணு வாழ்க்கை பறிபோனதைவிட உங்ககுடும்பத்துக்கு நாங்க ஒருபாரமா வந்துடக் கூடாது… அதுதானே உன் கவலை…இன்னைக்கு சொல்லுறேன்.. என் ரெண்டு பிள்ளைங்க மேல சத்தியமா அந்த மாதிரி ஒருநிலைமைலஉன் வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன். கவலைப்படாதே…”
“சத்தியத்தை வீணாக்காதே… பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சுட்டு எவனுக்கோ பொறந்த பிள்ளைக்கு அப்பாவா இருக்குறவன் உன்னை வீட்டை விட்டு விரட்ட எவ்வளவு நேரமாகும்?” எப்படியும் அம்மா வீட்டினரின் காலில் தான் விழவேண்டும் என்ற எண்ணத்தில் இளக்காரமாய் சொன்னார் செவ்வந்தி.
கண்களை மூடித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் உறுதியாய் சொன்னாள் பானுப்ரியா “பிரகாஷ்,குணசேகரோட பொண்ணுக்கு சுலபமா துரோகம் செய்ய முடியலாம். தான் பெத்தபொண்ணுங்களை யாரு வீட்டுலையோ சோத்துக்குப் பிச்சை எடுக்க விட முடியாது”
அன்றே ஊருக்குக் கிளம்பி விட்டார் செவ்வந்தி … ட்ராவல்ஸ்ல் டிக்கெட்டை வாங்கிவந்தவர், மாலையில் தான் இரவு பஸ்ஸில் ஊருக்குக் கிளம்புவதாக சொன்னார். பிரகாஷின் துரோகம் எனும் நெஞ்சில் பட்டக் கத்திக் குத்தால் மனம் தளர்ந்திருந்த பானுவுக்கு, இப்போது அன்னையால் மறுபடியும் விழுந்த குத்து மிகப்பெரிய பாதிப்பைத் தரவில்லை. தலையை மட்டும் ஆட்டினாள். அன்பைக் காட்டும் தாய்வீடு ஒரு வரம்.பானு அந்த வரத்தைக் கூட வாங்கி வரவில்லை..
“மருமகளுக்கு நான் இல்லாம சமாளிக்க முடியலையாம். வந்ததிலேருந்து பத்து போன் போட்டுடாங்க. நான் கிளம்புறேன்” என்ற செவ்வந்தியிடம் பதில் சொல்ல வாயெழாமல் திகைத்து நின்றனர் பானுவின் தோழிகள் மூவரும்.
“உங்க மருமகளுக்கு இப்பத்தான் உங்க நினைவு வந்துச்சா… வழக்கமா ஒரு மாசமானாலும் உங்க நினைவே ஊரில் யாருக்கும் வராது. பானுவுக்கு ஒரு பிரச்சனைன்னதும் கரெக்டா கூப்பிட்டு போன் போடுறாங்களே“ குத்தலாய் கேட்டார் சாவித்திரி
“குடும்பம்னா ஏதாவது பிரச்சனை இல்லாம இருக்குமா… அதுக்காக சோறு கண்ட இடமே சொர்க்கம்னு உக்கார முடியுமா சொல்லுங்க. நான் என் வீட்டுலதான் இருக்கணும். பானு இங்கதான் இருக்கணும். என்னைக் கேட்டா இவ இனிமே இந்த வீட்டை விட்டு நகரவே கூடாது. இவ நகர்ந்தா அந்த இடத்தில இவளோட சக்காளத்தி வந்து உக்காந்துடுவா”
“இந்த மாதிரி சமயத்தில் உங்க மருமகனை தட்டிக் கேட்டு பானுவுக்கு ஆதரவா இருப்பிங்கன்னு நினைச்சோம்மா” அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னார் தவ்லத்.
“பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு ரெண்டு பிரசவம் பாத்ததோட தாய்வீட்டுக் கடமை முடிஞ்சது. இவ பைத்தியக்காரத்தனமா பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வச்சுட்டு பத்திகிச்சேன்னு அழுதா அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும். இப்ப சண்டை போட்டு, இவ வீட்டுக்காரன் வெளிய தொரத்திட்டான்னா… ரெண்டு பொம்பளைப் புள்ளையையும் கூட்டிட்டு எங்க போறது?நானே என் மருமகளை அண்டிப் பிழைச்சுட்டு இருக்கேன். இவளையும் அழைச்சுட்டுப் போனா எல்லாரும் நடுத்தெருவுலதான் நிக்கணும்”
இப்படியும் ஒரு தாய் சுயநலமாய் இருக்க முடியும் என்று காட்டினார் செவ்வந்தி .
“விடுங்கக்கா… அவங்க போகட்டும். என்னோட உண்மையான நிலைமை என்னன்னு தெளிவா சொல்லுறாங்க… அதுக்குக் கோவப்பட்டா முடியுமா?” அமைதியாய் சொன்னாள் பானு.
வழக்கமாய் பேரப்பிள்ளைகளை வருந்தி வருந்தி அழைக்கும் செவ்வந்தி பேச்சுக்குக் கூட விடுமுறைக்கு அழைக்கவில்லை. மனைவிக்கு வெளியுலகில் மரியாதை கிடைப்பது கணவன் அவளிடம் நடந்துக் கொள்ளும் முறையில்தான் என்று பாடம் சொல்லிச் சென்ற தாயைப் பார்த்து விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.
பூர்வஜா… எப்படி உடனிருந்தே கொல்லும் விஷமாய் மாறி இருக்கிறாள். என்னோட கழுத்தை சிரிச்சுட்டே அறுத்திருக்குறா. அதுகூட தெரியாம இருந்த நான் மக்குதானே.
“உன் பிரெண்ட் கொஞ்சம் திமிர் பிடிச்சவன்னு நினைக்கிறேன். பத்து வருஷமா வேலை செய்யும் லைப்ரரியன் கிட்டயே ஆர்டர் போடுறாளாம்”
“ரெபரென்ஸ் புக் எடுக்கப் போனா முந்திரிக் கொட்டையாட்டம் ஒரு புஸ்தகத்தை எடுத்துத் தரா… இந்த அதிகப் பிரசங்கித் தனத்தை இத்தோட நிறுத்திக்க சொல்லு. என்னைக்காவது கோவம் வந்தா திட்டிடுவேன்”
“இவ்வளவு டாமினேட்டிங் ஆள் வீட்டுக்காரன் கூட எப்படி வாழ முடியும்”
இப்படி பேசியவனின் வார்த்தைகள்
“லைப்ரரியன் இருக்காரே அவருக்கு வயசாயிடுச்சு. பழைய சிஸ்டத்தையே கட்டிட்டு அழறார். பூர்வஜா மாற்றம் சொன்னா அவளை ஏறுக்குமாறா பேசுறாராம்”
“இந்த டெக்னிகல் ப்ரசென்டேஷன் இந்த மாச ஐட்ரிப்பில்ஈ புக்ஸ்ல வந்தாகணும். இதுக்கு வேண்டிய விஷயங்கள் கிடைக்காம திண்டாடிட்டு இருந்தேன். பூர்வஜா கரக்ட்டா எடுத்துக் கொடுத்தா… சந்தோஷத்தில் தாங்க்ஸ் கூட சொல்லல. நாளைக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் சொல்லணும்”
“பயங்கர அறிவு, நாலு விஷயங்களைத் தெரிஞ்சுக்குறதுல ஆர்வம். இப்படிப் பட்ட புத்திசாலி மனைவியை அவ வீட்டுக்காரனால பொறுத்துக்க முடியாது. இவளும் உன்னை மாதிரி மண்டூகமா தலையாட்டி பொம்மையா இருந்திருந்தா அவனுக்குப் பிடிச்சிருக்கும்”
என்று மாறியதை எப்படி பொருட்படுத்தாமல் போயிட்டேன்.
அழகு படிப்பு ரெண்டும் அவருக்குத் தெரியும். ஆனா அறிவு…. சில விஷயங்களை காதில் வாங்காம இருக்குறதால நான் முட்டாள்ன்னே முடிவு கட்டிட்டாரா… நாலு உலக விஷயமும்… டாலர் மதிப்பு, பங்கு சந்தைன்னு ரெண்டு வார்த்தை பேசினாத்தான் அறிவா? அதைப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பாதவங்க அறிவில்லாதவங்களா… இவங்க வீட்டில் அப்பா அம்மா கூடவே இவரால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல. பத்து வருஷமா ஒரு பிரச்சனையுமில்லாம குடும்பம் நடத்தி இருக்கேனே… இதுவே ஒரு சாதனைன்னு இவருக்குப் படலையா…
நம்பிக்கை துரோகம்… எவ்வளவு பெரிய குற்றம். தெரியாமல் செய்துவிட்டால் தவறு செய்கிறான் என்று மன்னிக்கலாம். தெரிந்தே செய்த தப்பு… இதை மன்னிக்க முடியுமா இல்லை அவர்களைப் பார்த்த இந்த நொடியை சாகும் வரை என்னால் மறக்க முடியுமா?


marcelinemalathi
பாட்டு என்னை என்னவோ செய்யுது. என்னால அப்டேட் படிக்கவே முடியவில்லை.