ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல் கண்டு சந்தோஷம். நான் என்ன நினைத்து பேக் கிரௌண்ட் பாடல்கள் மட்டும் படங்கள் தருகிறேனோ அதை அப்படியே சொல்லிடுறிங்க. மும்பை போறான்னு ஒரு வார்த்தை இரண்டு பகுதிகளுக்கு முன் வந்தது. அதை கப்புன்னு பிடிச்சுட்டு இவன் ஏன் பாம்பே போகணும்? அங்க என்ன விஷயம்ன்னு யோசிக்கிறிங்க. கதை எழுதுபவர்களுக்குத் தான் தெரியும் உங்ககிட்ட சஸ்பென்சை காப்பாத்துறது எவ்வளவு கஷ்டம் என்று…
இப்ப கதைக்கான லிங்க்
அன்புடன்,
தமிழ் மதுரா
அத்தியாயம் – 6
தனது முகத்து வியர்வையை அழுத்தமாய், உரிமையுடன் துடைத்த அந்தக் கரங்களைத் தட்டிவிட்டவன் சுற்றிலும் பதட்டமாய் பார்த்தான்.
“அவ்வளவு பயமா? கவலைப்படாதிங்க… உங்க பொண்டாட்டி குளிக்கிறா… குழந்தைங்க நல்லா தூங்குதுங்க“ கிண்டலாய் சொன்னாள் பூர்வஜா.
“உன்னை யாரு வீட்டுக்கு வர சொன்னா” கோவமாய் சீறினான்.
“இது மட்டும்தான் உங்க வீடா? அப்ப நான் உங்க சின்னவீடா?”
“பச்.. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு…. காலங்காத்தால ஏன் இங்க வந்து நிக்குற…”
“ஏன் கேக்க மாட்டிங்க… இது என் கூட நீங்க செலவளிக்கிற நாட்கள். மூணு வருஷமா அப்படித்தானே நடக்குது…இப்ப துணியெல்லாம் பாக் பண்ணிட்டு ரெடியா இருந்தா, வரலன்னு ஒரு மெசேஜ் மட்டும் வருது… அதுதான் ஏன்னு கேட்டுட்டு போக வந்தேன். பாத்தா ‘பானுகுட்டியாம்’. என்ன கொஞ்சல், கெஞ்சல் பிரமிச்சு போயிட்டேன்.வரேன்னு சொன்ன மனுஷன் ஆளைக்காணோம். என்னால் வர முடியாதுன்னு மெசேஜ் மட்டும் வருது, இங்க வந்தாத்தானே தெரியுது, இவ உங்களை கட்டிலோட கட்டி வச்சுட்டது… இந்த மூஞ்சியை வச்சுகிட்டே இத்தனை செய்யுறாளே, கொஞ்சம் வெள்ளையா மட்டும் இருந்திருந்தா “
“வாயை மூடு” ஒற்றை விரலை சுட்டி எச்சரித்தான்.
“இன்னும் ஒரு வார்த்தை பேசின, உன் மரியாதை கெட்டுடும். உனக்கும் எனக்கும்தான் விவாதம் அதில் ஏன் பானுவை இழுக்குற… ஆமாம், பானு என் பொண்டாட்டி. அவளை நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன். அவ கூட நேரம் ஸ்பென்ட் பண்ண உன்கிட்ட நான் பர்மிசன் வாங்கணுமா? நீ யாரு அனுமதி தரதுக்கு… எதுக்காகவும் எப்போதும் நான் உன்னை அணுகினதும் இல்லை உருகினதும் இல்லை”
‘என் காலை சுத்தின பாம்பு இப்ப கடிக்க வேற செய்யுது’ எரிச்சலோடு முணுமுணுத்தான்
“லுக்… உன்னை எங்க வைக்கனுமோ அங்க சரியாவே வச்சிருக்கேன். அதே இடத்திலேயே இருந்தா உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” கடினமான குரலில் சொன்னான்.
“உன் மனசில இருக்குறதை எடை போடத் தெரியாம உன்னைக் கூப்பிட்டு உக்கார வச்சு சாப்பாடு போடுறாளே.. அவளை சொல்லணும். இப்ப என் வீட்டை விட்டு நடையைக் கட்டு” வார்த்தைகள் வெளிவர, திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள் பூர்வஜா. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
பூர்வஜாவின் தந்தை நாகையாவின் பூர்வீகம் மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கம். அதன் மிச்சமாய் வெளுத்த நிறமும், கருத்த கண்களும் கொண்ட செப்புச் சிலையாய் மனைவியும் பிள்ளைகளும் அமையப் பெற்றவர். நாகையாவின் தொழில் காய்கறி வியாபாரம் இல்லை இல்லை எம்எல்எம் பிசினெஸ் பண்ணுறார்ன்னு நினைக்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர்கிட்ட ரியல் எஸ்டேட்ன்னு சொல்லிருக்கார் அதனால் அதுவா இருக்கலாம். கொஞ்ச நாள் கல்யாணத்தரகரா இருந்தார் தெரியும். சைட் பிசினெஸா வட்டிக்கு விடுவார். தேர்தல் சமயத்தில் ஏதாவது ஒரு கட்சிக்கு பணி செய்வார்.அவர் என்ன பண்ணுறார்னு யாராவது கேட்டா அப்பப்ப என்ன செய்றாரோ அதை சொல்வார்.அவர் என்ன வேலை செய்யுறார்ன்னு அவருக்கே தெரியாதப்ப எனக்கு எப்படித் தெரியும்.
நாகையா-சந்திரகலா தம்பதியினரின் பெண் பூர்வஜா ஏராளமான கனவுகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள். ஊரில் பூர்வஜாவின் அழகை ஆராதிக்க ஒரு இளைஞர் கூட்டமே அவள் பின்னால் அலைந்தது. ஆனால் அவள் எண்ணமே வேறு. ஆறடி உயரம், அழகிய உருவத்துடன் கிரேக்கச் சிலையாக ஒரு பணக்கார வாலிபன்தான் கனவுகளில் வந்து போவான். உலகெங்கும் பறந்து பறந்து வியாபாரம் செய்யும் தொழிலதிபன் அவன். ஆனால் அந்த கம்பீரமான ஆண்மகன் அவளது அழகிலும், மென்மையான பெண்மையிலும் மயங்கித் தயங்கி அவள் பின்னாலேயே நாய்க்குட்டி போல் சுற்றுவான். புது தொழிற்சாலையை உருவாக்கி நாகையாவை முதலாளியாக்குவான். அவன் மனம் கவர்ந்தவளுக்காக மாளிகை ஒன்றைக் கட்டி அவளது குடும்பத்தையே குடியேற்றுவான். இப்படிப் படிப் படியாய் அவள் மனதில் இடம் பிடிப்பான். அவளது கடைக்கண் பார்வைக்காக அந்தக் கனவுநாயகன் வானத்தை வில்லாக வளைப்பான். கடல் நீரைக் கண்ணாடிக் குடுவையில் அடைப்பான். போனால் போகிறது என்று அவன் காதலை ஏற்றுக் கொண்டு அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொள்வாள். தங்கத்தில் கால் கொலுசும், பிளாட்டினத்தில் வைரங்கள் பதித்த நகைகளும் உடைக்குப் பொருத்தமாக அணிந்து வேளைக்கொரு காரில் சென்று லேடிஸ் க்ளப்பில் சமூக சேவை செய்வாள்.
பெற்றவர்களின் பெருமையும், சிநேகிதிகளின் தூபமும் அந்தக் கனவை பெரிய விருட்சமாக்கின. நிஜத்தில் அவள் பின்னே சுற்றிய பணக்கார வாலிபர்கள் யாரும் அவளைத் திருமணம் செய்துக்கொள்ளத் தயாராக இல்லை. திருமணத்துக்குப் பெண்ணின் அழகு ஆண்களுக்கு ஒரு ப்ளஸ் பாய்ன்ட்டாகத்தான் இருந்ததே தவிர நல்ல குடும்பம், கௌரவமாக வெளியே சொல்லிக் கொள்ளும்படியான புகுந்த வீட்டு சொந்தங்கள். படித்த அன்பான பெண் இவர்கள்தான் ஆண்களின் சாய்ஸாக இருந்தது. அவனவனுக்கு அவன் சம்பாத்தியமே பெரும்பாடாய் இருக்கையில்… ஏதோ பேருக்கு ஒரு டிகிரி படிக்கும் பூர்வஜா, அவளது உதவாக்கரை அப்பா, வம்புக்கார அம்மா, ஊர்சுற்றித் தம்பிகள் என்று அவளை வாலாய் தொடர்ந்த தொல்லைகள் வேறு. இப்போது பூர்வஜாவின் அழகில் மயங்கி, பின் அவள் குடும்பத்துக்கே ஒரு அடிமையாய் சேவை செய்ய நம்மால் முடியாது என்ற தெளிவோடு இருந்தனர். கற்பனை வேறு நிஜம்வேறு என்று சிறிது சிறிதாய் அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. தன் கனவை முழுதுமாக மறக்க முடியாத பூர்வஜா சற்று எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டாள்.
“ஒரு பேங்க் மேனஜேர், எஞ்சினியர், டாக்டர் இப்படிப் பாத்தாக் கூடப் போதும். ஆனால் மாப்பிள்ளை நல்ல பெர்சனாலிட்டியா இருக்கணும். நானும் அவரும் சேர்த்து நடந்து போனா பொருத்தமான ஜோடின்னு எல்லாரும் சொல்லணும்”என்று இறங்கி வந்தாள்.
ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல அவளுக்கு வரதட்சணை கொடுத்து மணந்து கொள்ளத் தயாராய் இருந்தது கணபதி மட்டுமே. வேறுவழியின்றி திருமணம் நடந்தது. வெறுப்போடு ஆரம்பித்த கணபதி-பூர்வஜா திருமண வாழ்வு நாளொரு சண்டையும் பொழுதொரு போராட்டமுமாய் தொடர்ந்தது. அவர்களுக்குப் பிறந்த சுப்ரஜாவோ பூர்வஜாவின் அழகு துளியுமின்றி தந்தையைக் கொண்டிருந்தாள். அதுவே பூர்வஜாவுக்குப் பேரிடி. கணபதி சற்று அழகாயிருந்தால் சுப்ரஜாவும் அழகாய் பிறந்திருப்பாள் என்ற ஆதங்கம் அவளைப் பிடித்தாட்டியது.
இதனிடையே ஒரு நாள், அவர்கள் தெருவில் வசித்த விசாலாட்சி பாட்டியின் பேத்தி பானுப்ரியாவின் திருமணத்துக்கு செல்ல வேண்டியதிருந்தது. கணபதி-பூர்வஜாவின் சண்டையின் போது பாதி நாட்கள் சுப்ரஜாவை, பானுப்ரியா அழைத்துச் சென்று விடுவாள். அக்கா அக்கா என்று அன்பைப் பொழியும் குழந்தையை பானுவுக்கு மிகவும் பிடிக்கும். கணபதிக்கும் பானுப்ரியா ஒரு தங்கையைப் போல. அதனால் குடும்பத்துடன் அவளது கல்யாணத்துக்குக் கிளம்பினார்கள்.
திருமணத்தின் போது பானுப்ரியாவின் அருகில் மணமகனாய் அமர்ந்திருந்த சந்திரப்பிரகாஷைக் கண்டு திகைத்து நின்றுவிட்டாள் பூர்வஜா. சிறுவயது கனவுகளில் வந்த ஆதர்ச நாயகன் என்று சொல்ல முடியாவிட்டாலும், சற்று விவரம் தெரிந்தவுடன் ஆசைப்பட்ட ஆண்மகனின் அனைத்து அம்சங்களும் சந்திரப்பிரகாஷிடம் இருந்தன. தன்னைவிட எல்லாவிதத்திலும் மட்டான பானுவுக்கு அவள் தந்தையின் பணத்தாலும் செல்வாக்காலுமே இப்படிப்பட்டக் கணவன் கிடைத்தான் என்று உறுதியாய் நம்ப ஆரம்பித்தாள். அச்சடிக்கப்பட்ட காகிதம், தனக்குப் பிடிக்காதவனுக்கு மனைவியாக்கி, ஒரு ஆயுள் கைதியாய் திருமணச் சிறையில் தள்ளிவிட்டதே என்று எண்ணி எண்ணிப் புழுங்கினாள்.
திருமணபந்தம் என்னும் பயணத்தில் பூட்டப்பட்ட ஆணும் பெண்ணும் ஒரே திசையில் செல்ல வேண்டும். அப்போதுதான் சேருமிடத்தை அடைய முடியும். வடக்கும் தெற்குமாய் பயணித்த கணபதி-பூர்வஜா தம்பதியினர் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வர, திருமணவிலக்கு பெற்று இருவரும் விலகினர்.
கணபதியின் பணம் சுப்ரஜாவின் வளர்ப்புக்கும் படிப்புக்கும் போதுமானதாய் இருந்தது. ஆனால் மகளைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்த கணபதியைக் கண்டாலே வெறுப்பு பொங்கியது பூர்வஜாவுக்கு. தாய் வீட்டில் மகளைத் தங்க வைத்துவிட்டு வேலைதேடி தலைநகருக்குப் பயணமானாள். அழகாலும், தேனொழுகும் பேச்சாலும் ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட்டாக சேர்ந்தவள் கண்களில் எதர்ச்சையாக ஒருநாள் சந்திரப்பிரகாஷும் பானுப்ரியாவும் பட்டனர். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனது கல்லூரியில் தனது வேலைக்கு விண்ணப்பம் போட்டாள். அவளது அதிர்ஷ்டம் சில மாதங்களிலியே அங்கு வேலை கிடைத்தது.
எப்போதும் கணவன் மனைவியின் அதிருப்தி அப்போதே பேசித் தீர்த்துக் கொள்ளப் படவேண்டும். மற்றவர்கள் முன்பு துணையிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். தாம்பத்தியத்தில் யாருக்கோ அதிருப்தி என்று மூன்றாம் நபருக்கு, அதுவும் உங்கள் பிரிவை வேண்டும் ஒருவருக்கு, சிறு அறிகுறி கிடைத்தால் கூடப் போதும் அன்றே உங்கள் பிரிவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின்றன. பிரகாஷுக்கு பானுவிடம் தோன்றிய அதிருப்தி கோவத்தில் வார்த்தைகளாய் விழ, பற்றிக் கொள்ள தனக்கு விருப்பமான கொழுக் கொம்பை நாடி வந்த பூர்வஜாவுக்கு பிடி கிடைத்தது. பூர்வஜா எனும் கொடி பிரகாஷ் என்ற கொழுக்கொம்பைப் பற்றி வாழ்க்கையை ஸ்திரமாக்க முயன்றது. பானுவிடம் அடிக்கடி பேசி பிரகாஷுக்குப் பிடித்தது பிடிக்காதது பற்றிய பட்டியலைத் தயார் செய்தவள், அவனுக்குப் பிடித்த விதமாய் ஒவ்வொரு நொடியும் நடந்தாள்
பிரகாஷ் தனது ஆராய்ச்சிப் படிப்புக்காக நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியதிருந்தது. கல்லூரி நேரம் முடிந்தவுடன் நீண்ட நேரம் லாபில் வேலை செய்வான். அவர்களது கல்லூரியில் படிக்கும் விடுதி மாணவர்களுக்கு வசதியாய் இரவு எட்டு மணிவரை லைப்ரரி திறந்திருக்கும். பக்கத்திலேயே கம்ப்யூட்டர் லாப்பும் இருந்தது. பெரும்பாலும் பிரகாஷ் அங்குதான் தனது ஆராய்ச்சியை அமைதியாய் தொடர்வான். வெகுசிலரே நூலகத்துக்கு வரும் அந்த இரவு நேரத்தை விரும்பினாள் பூர்வஜா. வலியச் சென்று பிரகாஷுக்கு உதவினாள். சிரமேற்க்கொண்டு அவனது ஆராய்ச்சியைப் பற்றிய அடிப்படை விவரங்களைக் கற்றுக் கொண்டு புத்தகங்களைத் தேடித் தருவாள். டைப் செய்துத்தருவாள். சில மாதங்களில் பிரகாஷின் கவனம் அவளிடம் திரும்பியது.உடல் நிலை சரியில்லாமலிருந்த பூர்வஜாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். இதுதான் சமயம் என்று மெதுவே தனது திட்டத்தின் முதல் படியை ஆரம்பித்தாள்.
“என்னோட கணவர் உடம்பு சரியில்லைன்னா கூட என்னைக் கண்டுக்கவே மாட்டார் சார். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போலைன்னா கூட பரவால்ல.. நானே போயிட்டு வந்தாக் கூட ஏண்டி ஆம்பளை டாக்டர் கிட்ட போன… உன் கண்ணில் பொம்பளைங்களே பட மாட்டாங்களான்னு சிகிரெட்ல சூடு போடுவார்…”
வலது கணுக்காலைக் காண்பித்தாள். வட்ட வட்டமாய் சுட்டத் தழும்புகள் அவளது மஞ்சள் நிறக் காலில் தெரிந்தது. பிரகாஷின் மனதில் இரக்கம் தோன்றியது.
“நடந்ததை மறந்துடுங்க பூர்வஜா… இப்ப நீங்களும் உங்க பொண்ணும் நிம்மதியா வாழ முயற்சி பண்ணுங்க…”
அமைதியாய் இருந்தவள் கண்களில் நீர் வழிந்தது. “உங்ககிட்ட காட்டின காயம் கம்மிதான். உடம்பில் இன்னும் நிறைய காயம் இருக்கு. ஆனா மனசில் அதைவிட ரணம் அதிகம். நான் என்ன தப்பு பண்ணேன்…. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை… ஒரு வேளை பானு மாதிரி நல்ல வசதியான அப்பா எனக்கிருந்திருந்தா நல்ல படிக்கிற பையனா பார்த்து, அவனுக்குப் படிக்க உதவி செய்யுற மாதிரி அவங்க குடும்பத்தையே வளைச்சு, அவனை நகரவிடாம கிடுக்கிப் பிடி போட்டு கல்யாணம் பண்ணி வச்சிருப்பார்”
விஷவிருட்சத்தின் விதையை சரியான பருவத்தில் ஊன்றி விட்டாள். அப்போதுதான் அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் பிரகாஷுக்குத் தோன்றியது.
நியாயமாகப் பார்த்தால் அவன் கடுமையாகவே பேசியிருக்க வேண்டும்.
“நீங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிங்க. வீட்டுக்கு கிளம்பிப் போங்க மாத்திரை சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க” தன்மையாகவே சொன்னான்.
தைரியம் வரப்பெற்ற பூர்வஜா “இல்லை நான் போகல…. காலைலேயே எனக்கு எழுந்திருக்க முடியாத அளவுக்குக் காய்ச்சல். இருந்தும் மாத்திரையைப் போட்டுட்டு சமாளிச்சுட்டு ஏன் வந்தேன்னு நினைக்கிறிங்க. நாளைக்கு நீங்க லீவ்ல போறிங்க. மறுபடியும் உங்களைப் பாக்க மூணு வாரமாகும். அதனாலதான் வந்தேன்”
அவளிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காததால் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் பிரகாஷ். பேசிக் கொண்டே சென்றாள் பூர்வஜா
“நீங்க ஏன் என் கல்யாணத்துக்கு முன்ன கண்ணில் படல. நீங்க எப்படி என் கணவரா இல்லாம போனிங்க” விக்கி விக்கி அழுதாள்.
அவளது பேச்சைத் தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் பிரகாஷ். இருந்தும் அவனால் அவளை முழுவதுமாக விலக்க முடியவில்லை. அவன் நினைத்திருந்தால் பானுவிடம் பேசி பூர்வஜாவின் முரட்டுத்தனமான அன்பை விட்டு வெகுதூரம் விலகியிருக்க முடியும். உள்ளூர அந்த அழகிய பெண்மணியை ரசிக்க ஆரம்பித்துவிட்டதால் அவனும் பூர்வஜாவின் தப்பான நோக்கத்தைப் பற்றி வெளியே மூச்சு விடவில்லை. பூர்வஜாவும் நாய்க்குட்டி போல் அவன் காலை சுற்றுவதை விடவில்லை.
ஆட்டோகரக்க்ஷன் பற்றி ஆராய்ச்சி செய்பவனுக்கு தன் மனம் செல்லும் திசையைக் கணித்தாலும் கடிவாளம் போட இயலவில்லை. எந்த நொடியில் நடந்தது என்று வரையறுத்து சொல்ல முடியாதவண்ணம் ஒருநாள் இருவரும் எல்லை மீறி விட்டனர். பிரகாஷுக்கு, ஆழ்மனதின் ஏக்கங்கள்…. ஒரு அழகிய பெண், அதுவும் தான் விரும்பிய எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றவள், தானே வலிய வந்து விருப்பத்தை சொல்லும்போது கர்வம் தலைகாட்ட அந்த உறவை ஏற்றான்.
பூர்வஜாவுக்குத் தான் கனவு கண்டவாறே ஒருவன் இவ்வளவு நாள் தவத்திற்குப் பிறகு கிடைத்திருக்கிறான். அவன் மனைவியோ அசடு. கணவனைக் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளும் வித்தையும் தெரியவில்லை, அதற்கான ஆயுதங்களும் அந்த முட்டாளிடம் இல்லை. காப்பாற்ற வக்கில்லாதவளுக்கு எதற்கு பிரகாஷை மாதிரி ஒருவன். எத்தனையோ மாதங்கள் கழித்து இப்போதுதான் மூன்று வருடங்களாக வெளியூர் அழைத்துச் செல்கிறான். இப்போதைக்குப் பொறுத்துப் போவோம். தன் மனம் கவர்ந்தவனை தன் பால் கவர்ந்து இழுத்ததைப் போல, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் வாழ்க்கையில் இணைய வேண்டும். பிரகாஷைத் தவறவிட்டால் இவளை விட முட்டாள் வேறு யார்?
சடுதியில் மனதைத் தேற்றிக் கொண்டாள். பிரகாஷின் நம்பிக்கை இப்பொழுது மிகவும் முக்கியம்
“தப்புத்தான்… அதிக உரிமை எடுத்துகிட்டது தப்புத்தான்.. மன்னிச்சுடுங்க. சின்ன வயசில் இருந்து எனக்கு வீட்டுக்காரர் எப்படி வரணும்னு கனவு இருந்தது. ஆனால் எனக்கு வாய்ச்சவன் அதுக்கு நேரெதிர். மனசைத் தேத்திட்டு குடும்பம் நடத்தும்போதுதான் என் மனசில் நான் நினைச்ச மாதிரியே கம்பீரத்தோடையும் படிப்போடையும் ஒருத்தரைப் பார்த்தேன். ஆனால் பானுவோட கணவரா, உங்க திருமணத்தன்னைக்கு. இவளைவிட நான் எதில் குறைஞ்சு போயிட்டேன். எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை. பணம் இருக்குறதால நான் ஆசைப்பட்ட மாதிரியான ஆளை அவளுக்கு அவங்க அப்பா வாங்கித் தந்திருக்கார். அதில்லாததால நான் பிடிக்காத கணவனை சகிச்சுக்க வேண்டிருக்குன்னு அன்னைக்கு முழுசும் அழுதுட்டிருந்தேன்.
எப்ப உங்களை பானு பக்கத்தில பார்த்தேனோ… அப்போதிலிருந்து பானு மேல எனக்குப் பொறமை. என் திருமண வாழ்க்கை முறிஞ்சு மறுபடியும் உங்களைப் பார்த்தப்ப என் தொலைஞ்சு போன வாழ்க்கையே திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு சந்தோஷம். உங்க கூட வேலை செய்ய ஆரம்பிச்சபோது தினமும் என் கனவுகளும் வளர்ந்தது.
உங்க ஆராய்ச்சிக்கு புத்தகம் வாங்கி வைக்கிறது, எழுதித் தரதுன்னு உதவி செஞ்சேன். ரெண்டு பேரும் நெருக்கமானோம். ஒரு நாள், உங்க திருமண வாழ்க்கையும் நீங்க எதிர்பார்த்த மாதிரி இல்லைன்னு உங்க மூலமே உணர்ந்த அந்தநாள், நான் மனசால உங்ககூட ஸ்ட்ராங்கா இணைஞ்சுட்டேன். என் ஆசைகள் நிறைவேற ஆரம்பிச்சது. நம்ம கொஞ்ச கொஞ்சமா நெருங்கிட்டோம்.
உங்களுக்காக.. உங்க மேல இருக்குற காதலுக்காக, என் ஒரே ஆதரவான மகளைக் கூட அம்மா வீட்டில் படிக்க வச்சுட்டிருக்கேன். நீங்களும் அதே அளவுக்கு என் மேல ஈடுபாடோட இருப்பிங்கன்னு நினைச்சேன். இப்பத்தான் தெரியுது நீங்க என்னை வச்சிருக்குற இடம்….” விம்மினாள்.
பானு வரும் நேரமாகிவிட்டது. இவள் வேறு.. டென்ஷனாய் நகம் கடித்தவன், “ஏதோ கோவத்தில் சொல்லிட்டேன். முகத்தைக் கழுவிட்டு வா. பானு வந்தா பிரச்சனையாயிரும்”
தோசையை உண்ணாமல் குப்பைக் கூடையில் கொட்டினாள். சமையலறையின் சின்க்கில் முகத்தைக் கழுவினாள். பொன்னிற முகம் அப்போதும் சரியாகாமல் சிவந்து வீங்கியிருந்தது.
‘எதுக்கெடுத்தாலும் அழுறது இந்த பொம்பளைங்களுக்கு ஒரு பழக்கமாவே போயிருச்சு’ மனதுக்குள் அலுத்துக் கொண்டான்.
“அழுதது தெரியுது. பானு வந்து ஆயிரம் கேள்வி கேப்பா, நீ கிளம்பு நான் அவகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்” என்றவாறு பூஜாவை அங்கிருந்து கிளப்பிவிட்டான்.


anuja12397
Tamil
Romba nallaa irukku.
Banu so nice..
konjam busy paa, athaan comment poda mudiyalai….sorry, innum konjam busy thaan,