ஹாய் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க? போன பகுதி பற்றிய உங்களின் கருத்துக்கள் என்னை வந்தடைந்தது. நன்றி.
பானுப்ரியா, சந்திரப்ரகாஷ் அவர்கள் உறவுகள் நட்புகள் இவற்றை போன பகுதியிலிருந்து பார்த்தோம். இந்தப் பகுதி கதையின் முக்கியமான கட்டம். கதைத் தலைப்புக்கான விளக்கம் இதில் உள்ளது. படித்தவுடன் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு வார்த்தை எழுதுங்கள். இனி வரும் அத்யாயங்களில் உங்களது பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 5
பீச்சில் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிவிட்டு, பானு வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த ரவாலாடையும் சமோசாவையும் உண்டனர். பிரகாஷுக்கு மனைவியிடம் பிடித்த மிகச் சில நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. வெளியே உண்ண விடமாட்டாள். உடம்புக்கு வந்துவிடும் என்று ஏதாவது வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்துவிடுவாள். ஆனால் திம்பண்டம் செய்வதிலேயே நேரம் சென்றுவிடுவதால், லேட்டாய் கிளம்பி, அரக்கப் பறக்க ஏதாவது ஒரு சேலையை சுற்றிக் கொண்டு பவுடர் கூட பூசிக் கொள்ளாமல் முகத்தில் எண்ணை வடிய வந்து நிற்பாள். அதைக் கண்டாலே பிரகாஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.
டிநகரில் சேலையும், குழந்தைகளுக்கு உடையும், பானுவின் வற்புறுத்தலால் பிரகாஷுக்கு ஜீன்சும் வாங்கி வந்தனர். உற்சாகமாய் சுற்றிவிட்டு சந்தோஷமான குடும்பம் களைப்பாய் உறங்கியது.
காலையில் சற்று லேட்டாய் எழுந்து பாலைக் காய்ச்சிய பானு வாயில் மணியோசையைக் கேட்டு யாராயிருக்கும் என்ற யோசனையோடு கதவைத் திறந்தாள். வெளியே தெரிந்த முகத்தைக் கண்டதும்
“பூர்வஜாக்கா… நல்லாருக்கிங்களா” என்று முகம் நிறைய மகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும் கதவைத் திறந்தாள்.
மஞ்சளில் மிகச் சிறிய கருப்பு பூக்கள் போட்ட புடவையும், கருப்பு ப்ளவ்சும் பாந்தமாய் அணிந்து பாந்தமாய் நுழைந்தாள் பூர்வஜா.
பூர்வஜா,முப்பத்தெட்டு வயது மங்கை, வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தாய். மேலூரில் பாட்டி வீட்டில் பானுப்ரியா படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு வீடு தள்ளியிருந்த கணபதியின் மனைவி. அவர்களின் திருமணத்தின் போது தொந்தி கணபதிக்கு அப்சரசாய் வந்து வாய்த்த பூர்வஜாவைக் கண்டு ஊரே அதிசியத்தது. அவளது நாசுக்கும், நறுவிசும் பானுவுக்கு என்றுமே பிரமிப்பைத் தருவன.
பூர்வஜாவுக்கு சுப்ரஜா பிறந்தபோது ஆசையாய் குழந்தையுடன் விளையாடுவாள் பானுப்ரியா. பானுவின் திருமணத்துக்குக் கூட தம்பதியினர் குழந்தையுடன் வந்து வாழ்த்தி சென்றனர். அதன் பின் பானு புகுந்த வீடு, கணவன் குழந்தை என்று பிசியாகிவிட்டாள்.
ஒரு நாள் சென்னைரெஸ்டாரன்ட் ஒன்றில் வரவேற்புப் பெண்ணாக பூர்வஜாவைப் பார்த்து அதிர்ந்து விட்டாள் பானு. கணபதிக்கும் பூர்வஜாவுக்கும் எண்ணையும் தண்ணீருமாய் தொடர்ந்த திருமண பந்தம் ஒரு முடிவுக்கு வந்தேவிட்டது. பெண்ணைப் படிக்க வைக்க கணபதி தந்த ஜீவனாம்சம் பத்தாமல் சென்னையில் வேலை பார்க்கும் பூர்வஜாவின் நிலையைக் கண்டு கண்ணீர் துளிர்த்தது பானுவின் கண்களில்.
“ஸார், இந்த வேலை எனக்கு அவ்வளவா பிடித்தமில்லை. நேரங்கெட்ட நேரத்துக்கு வேலைக்கி வரவேண்டியிருக்கு. வேற வழியில்லாம ஓட்டிட்டுருக்கேன். நான் லைப்ரரியனுக்குப் படிச்சிருக்கேன் சார். உங்க கல்லூரில ஏதாவது வேலை இருந்தா….” சிரிக்கக் கூட கூலி கேட்ட பிரகாஷிடம் தயங்கி மென்று விழுங்கினாள் பூர்வஜா.
அவளுக்கு நல்லகாலம் பிறந்ததின் அடையாளமாய் பிரகாஷின் கல்லூரி நூலகத்தில் ஒரு வேலை காலியாக, பூர்வஜா மறுமாதமே அங்கு வேலைக்கு சேர்ந்துவிட்டாள். ஊரைவிட்டுத் தள்ளியிருந்த அந்த கல்லூரிக்கு சற்று அருகிலிருந்த கிராமத்தில் குறைந்த வாடகைக்கு சிறிய வீடும் பிடித்துத் தங்கிக் கொண்டாள். விடுமுறை கிடைத்தால் மகளைப் பார்க்கக் கிளம்பி விடுவாள். எப்படியோ அவளுக்கு ஒரு வழி கிடைத்ததில் பானுவுக்கு சந்தோஷம்.
வீட்டினுள் நுழைந்து செருப்பினைக் கழற்றிப் போட்ட பூர்வஜா, பானுப்ரியாவின் கேள்விக்கு பதிலாக
“நல்லாருக்கேன்… நீயும் குழந்தைகளும் நல்லாருக்கிங்களா” என்று மெலிதாய் பூர்வஜா சிரித்தபோது பற்கள் வெண்ணிறத்தில் டாலடித்தது. அந்தப் பால்வண்ண நெற்றியில் சிறிய மெரூன் வண்ண வட்டப்பொட்டு அவளது நிலா முகத்துக்குக் மேலும் அழகு சேர்த்தது.
“எல்லாரும் நல்லாருக்கோம்.. சுப்ரஜா எப்படியிருக்கா…. இந்த வருஷம் சென்னைக்கு கூட்டிட்டு வந்துடுவிங்களா…”
“சீட்டுக்கு சொல்லிருக்கேன் பானு. இங்க கேக்குற டொனேஷனைப் பாத்தாலே பயம்மா இருக்கு. என் பாடே உன் வீட்டுக்காரர் வாங்கித் தந்த வேலை புண்ணியத்தில் ஓடிட்டு இருக்கு. இதில் எங்க டொனேஷன் தர” அலுத்துக் கொண்டாள்.
பானுவின் கைகளில் ஒரு பேப்பர் கட்டிங்கைத் தந்தாள் பூர்வஜா. “இந்த வேலையைப் பாரு… இந்த ஏரியா ஸ்கூல்ல மாத்ஸ் டீச்சர் கேட்டிருக்காங்க. அப்ளை பண்ணேன். சம்பளம் ஆரம்பத்தில் ரொம்ப குறைச்சலாத்தான் இருக்கும். ஆனா டியூஷன் அது இதுன்னு வீட்டு செலவுக்குத் தேத்திடலாம். மொத்தத்தில் நீ வீட்டு செலவை இந்தப் பணத்தை வச்சே சமாளிச்சுடலாம்”
வீடு வாங்கியதில் சற்று பணமுடை என்று புரிந்துக் கொண்டு வேலைக்குப் போக ஆலோசனை சொல்லும் பூர்வஜவிடம் புன்னகைத்தாள் பானு.
“குழந்தைங்க சின்னதுக்கா. இன்னும் கொஞ்சநாள் போகட்டும்”
“இப்படியே மூணு வருஷமா சொல்லிட்டிருக்க, உன் வீட்டுக்காரர் ஒரே ஆளா சம்பாதிச்சு உங்க எல்லாரையும் பார்த்துட்டு, அவங்க அம்மா அப்பாவுக்கும் பணம் அனுப்பிட்டு இருக்கார். இதில் தம்பி தங்கை பிரச்சனைகள் வேற. உனக்கு பொறுப்பு பத்தாது பானு. நீ வேலைக்கு போய் வீட்டை கவனிச்சுக்குற அளவுக்கு சம்பாதிக்கணும். அதுதான் எதிர்காலத்தில் உனக்குக் கை கொடுக்கும்” கண்டிப்பான குரலில் சொன்னாள்.
கல்லூரியில் வேலை செய்வதை வைத்து பிரகாஷை எடை போடும் பூர்வஜாவை நினைத்து சிரிப்பாய் வந்தது பானுவுக்கு. வீட்டில் ஒரு காரியம் செய்ய மாட்டான். மூன்று வேளையும் வகையாய் சமைக்க வேண்டும். கண்ணாடி போல் வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கடைகளுக்குப் போய் வர வேண்டும். சொந்தக்காரர்கள் வீட்டு விஷேஷங்களுக்கு அவன் சார்பில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி அனுமார் வாலாய் வளர்ந்த வீட்டுக் காரியங்களுக்கு மத்தியில் வேலைக்கு போகும் யோசனை கூட பானுவுக்கு வந்ததில்லை. பூர்வஜா அக்காவுக்கு திருமணவாழ்க்கை சரியாக அமையாததால் எல்லா பெண்களையும் சுதாரிப்பாக இருக்கச் சொல்கிறார் போலும் என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.
காப்பியை கலந்து பூர்வஜாவிடம் தந்துவிட்டு, சமைக்க ஆரம்பித்தாள் பானு. “நீங்க வீட்டுக்கு வரேன்னு ஒரு போன் பண்ணிருந்தா சீக்கிரமா எந்திருச்சு டிபன் செய்திருப்பேனே. நிமிஷத்தில் சமைச்சுடுறேன்”
“பேசாதே… நேத்து உன் வீட்டுக்கு போன் பண்ணி என் விரலே தேஞ்சுடுச்சு”
“ஐயோ வெளில போய்ட்டோம்க்கா. வீட்டுக்கு வந்ததும் நான் போனைப் பாக்கவேயில்லை… சாரிக்கா… எதுவும் முக்கியமான விஷயமா”
“உன் வீட்டுக்காரர் லைப்ரரில சில ரெபரன்ஸ் புக்ஸ் எடுத்துட்டு போனார். ரிடர்ன் பண்ணல. அதே புக்ஸ் இன்னொரு ஸ்டாபும் கேட்டிருக்கார். திங்கட்கிழமை தரேன்னு சொல்லிருக்கேன். அதுதான் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்”. பூர்வஜாவால் இது ஒரு ஆதாயம் பிரகாஷுக்கு அவனுக்கு ஆய்வுக்கு வேண்டிய புத்தகங்களை கவனமாய் தனியே எடுத்து தந்து உதவுவாள் பூர்வஜா.
“அதுக்காக இவ்வளவு தூரம் வந்திங்களாக்கா.. போன் பண்ணிருக்கலாமே நாளைக்கு காலேஜ் வரப்ப எடுத்துட்டு வந்திருப்பாரே”
ஆச்சிரியமாய் பார்த்தாள் பூர்வஜா “சார் நாளைக்கு காலேஜுக்கு வராரா… நேத்தே பாம்பே போயிருக்கணுமே… “
“போகல…” வெட்கமாய் சிரித்தாள் பானு.
“இதென்னடி அதிசயத்திலும் அதிசயம்…. தாட்பூட்டுன்னு லீவ் வாங்கினாரு. லைப்ரரில வந்து பாம்பேக்கு ஃபேக்ஸ் வேற பண்ணாரு. சொன்ன சொல்லை தவற மாட்டாரே..” நெற்றியில் கை வைத்தபடி யோசிப்பதாய் பாவனை செய்தாள்.
“அவரு மனசு வந்து லீவ் போட்டாலும் உங்களை மாதிரி ஆளுங்க உசுப்பேத்தி விடுங்க” பானு பேசிக் கொண்டிருக்கும்போதே
“பானுகுட்டி ஒரு காபி” என்று பிரகாஷின் குரல் தூக்கக் கலக்கமாய் படுக்கை அறையிலிருந்து வந்தது.
“வந்துட்டேன்” என்று பதில் குரல் கொடுத்தபடி பானு கணவனுக்குக் காப்பி கலக்க ஆரம்பித்தாள். பூர்வஜாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு வெட்கம்.
“இப்ப புரியுது.. எதுக்கு லீவுன்னு. புத்தகத்தை எடுத்துக் கொடுத்தா நான் பூஜை வேளைல கரடியா நிக்காம கிளம்பிடுவேன்” கிண்டலாய் சொன்னாள் பூர்வஜா.
பானு காப்பியை கொண்டு செல்வதற்குள் படுக்கை அறையை விட்டு வெளியே வந்த பிரகாஷ், எதிர்பாராமல் அங்கு பூர்வஜாவைக் கண்டதும் திகைத்து, மறுபடியும் அறைக்குள் சென்றுவிட்டான்.
படுக்கை அறைக்கு காப்பியுடன் சென்ற பானுவை முறைத்தான். “கெஸ்ட் வந்திருக்கிறதை முன்னாடியே சொல்ல மாட்டியா… “. சட்டை போடாமல், கலைந்த தலையுடன் நின்ற பிரகாஷை சமாதனப்படுத்தும் விதமாக
“இப்பத்தான் வந்தாங்க. நீங்க பாம்பே போயிட்டிங்கன்னு நெனச்சு ஏழரை மணிக்கே வந்து நிக்கிறாங்க. இப்ப வீட்டில் இருக்குறது தெரிஞ்சதும் கிளம்புறேன்னு சொல்லிட்டாங்க… டிபன் சாப்பிட வச்சு அனுப்பட்டுமா” அனுமதி வேண்டினாள்.
எரிச்சலாய் அவளைப் பார்த்தான் பிரகாஷ் “லஞ்ச், டின்னர் எல்லாம் தந்து வீட்டிலேயே வச்சுக்கலாமா… அறிவு இருக்காடி உனக்கு…. உனக்காக எல்லா ப்ரோகிராமும் கான்சல் செய்துட்டு உட்காந்திருக்கேன் பாரு என்னை சொல்லணும்.. “ மெல்லிய குரலில் சீறினான்.
“புக் என்னமோ வேணும்னு சொன்னாங்க.. அதை வாங்கத்தான் வந்தாங்களாம்”
முறைத்தபடி அலமாரியிலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்துத் தந்தான்.
“இந்த புக் தானா… சரியா தெரியுமா” அட்டையைக் கூட அவன் சரியாய் பார்த்ததைப் போல் பானுவுக்குத் தோன்றவில்லை. தப்பான புத்தகமாயிருந்தால் பூர்வஜா இவ்வளவு தூரம் அலைந்தது வீணாகிவிடுமே என்று ஆதங்கமாயிருந்தது.
“படிக்கிற எனக்குத் தெரியுமா இல்லை உனக்குத் தெரியுமா.. இதைப் போய் கொடு” பற்களைக் கடித்தபடி சொன்னான்.
முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பூர்வஜாவிடம் புத்தகத்தைத் தந்தாள் பானு. வாங்கிப் பையில் போட்டுக் கொண்டவள் “சரி கிளம்பட்டுமா” என்றாள்.
“தோசை சாப்பிட்டுட்டு போகலாமேக்கா” பிரகாஷுக்குப் பிடிக்காது இருந்தாலும் கேட்டுவிட்டோமே என்று மறுபடியும் கேட்டாள்
“சரி தோசை ஊத்து. நானும் ஹெல்ப் பண்ணுறேன்” என்று கூடவே பேசியபடி சமையலறையில் அமர்ந்த பூர்வஜாவை தடுக்க முடியாமல் படுக்கையறைக்கு சென்று பிரகாஷிடம் மறுபடியும் ரகசியமாய் திட்டு வாங்கி வந்தாள்.
“கிழங்கு பழசுதான்க்கா… சட்னி அரைச்சுடுறேன்”
“பழசா இருந்தா என்ன பிரிட்ஜ்லதானே வச்சிருந்த… எனக்குக் கிழங்கு மசாலா ரொம்பப் பிடிக்கும் பழசா இருந்தாலும் சாப்பிடுவேன்” என்றாள் பூர்வஜா சிரித்தபடி.
குளிர்பதனப்பெட்டியிலிருந்து பூரிக்கு செய்த கிழங்கை தோசைக்கு நடுவில் வைத்து மசாலாதோசையாக்கி பூர்வஜாவுக்குப் பரிமாறினாள்.
“இட்லிபொடி கூட பாட்டில்ல இருக்கு” என்றபடி அடுத்த தோசையை ஊற்றினாள்.
“உனக்கு” தோசையை விண்டபடியே பானுவை வினவினாள் பூர்வஜா.
“தப்பா எடுத்துக்காதிங்கக்கா, லீவ் நாள்ல அவருக்குப் பரிமாறிட்டுதான் சாப்பிடுவேன்”
“சரி, நீ போய் குளிச்சுட்டு வா. நானே தோசை ஊத்திக்கிறேன். குழந்தைகள் எந்திருச்சா பாலாத்தித் தந்துடுறேன்”
மேலும் வற்புறுத்தியவளை மறுக்க முடியாது மாற்றுடைகளை எடுத்துக் குளிக்கச் சென்றாள் பானு.
பானு குளிக்கச் சென்று ஐந்து நிமிடங்களாகிவிட்டன. நள்ளிரவு வரை தந்தையுடன் விளையாடிவிட்டுப் படுத்த குழந்தைகள் நல்ல உறக்கத்தில். படுக்கை அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடியாவாறேபின் பறம் சாய்ந்திருந்தான் பிரகாஷ்.
“அச்சச்சோ அய்யாவுக்கு இந்த ஏஸிலயும் வேர்க்குதே”கரிசனையுடன் தந்ததினால் செய்த கரம் ஒன்று அவனது வியர்வையைப் புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்தது.


பொன்ஸ்
ஹாய் தமிழ்,
ஐயோ ..கொடுமையா .இருக்கே…..
சொந்த வீட்டிலேயேவா ……….?too bad.
அவனை மன்னிக்க முடியாது…….அதுவும் இவனுக்கு அடிமை போல் உழைக்கும் ….துரோகிகள்.