ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல.
திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது எழுத்துக்களின் வாயிலாக அறிந்தேன். அவள் ஸெல்ப் பிட்டியிலிருந்து வெளிவந்து நடக்கப் போவதை எதிர்கொள்ளத் தயாராகிறாள். இனி கதைக்கு செல்வோமா
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 12
வீழ்ந்ததை நினைத்து முடங்கிப் போனால் வாழ்வது எப்போது?
காலையில்கண்விழித்ததும் இந்த வாசகம்தான் பானுவின் கண்களில் பட்டது. நேத்ராவும்யாசிமும் செய்திருக்க வேண்டும் . இரண்டு நாளாக ரமாவின் குழந்தையைகவனித்துக் கொள்கிறாள். அந்த சின்னஞ்சிறு சிசுவின் புன்னகையில் அவளதுதுன்பமெல்லாம் மாயமாய் மறைந்து விடுகிறது. பாமாவும் ஷ்யாமாவும் ஆவலோடுஅந்தக் குட்டிப் பயல்பப்லுவுடன் விளையாடினர். அவனும் அவர்களை அடையாளம்கண்டு கொள்கிறான்.
தன்னால் முடிந்த வேலை, தனக்குத் தெரிந்த வேலைஎன்பதால் பானு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதைத் தொல்லையாக நினைக்கவில்லை.அவள் டேகேர் ஆரம்பித்திருக்கிறாள் என்பதை செவி வழியாகக் கேள்விப் பட்டஅந்த அப்பார்ட்மென்ட்வாசிகள் முன்பே சொல்லாததுக்கு கோபித்துக்கொண்டார்கள். சிலர் தங்களது குழந்தையையும் பார்த்துக் கொள்ள கேட்டனர்.மேலும் சிலர் பக்கத்திலிருக்கும் பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தையைமாலை அழைத்து வந்து தாங்கள் வேலையிலிருந்து வரும் வரை பார்த்துக் கொள்ள முடியுமாஎன்று தயங்கித் தயங்கிக் கேட்டனர். இதையே விரிவு படுத்தினால் என்ன என்றுதவ்லதிடமும் சாவித்திரியிடமும் யோசனை கேட்டாள் பானு.
“நம்மால அதெல்லாம் முடியுமாடி…” பிரமிப்பாகக் கேட்டார் தவ்லத்.
“ஒருபுள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது எவ்வளவு புகழ் வாய்ந்த ஓவியமும்.பள்ளத்திலிருந்துதான் ஆரம்ப மாகிறது சிறப்பு வாய்ந்த கட்டிடமும் – இதுநாசர் எனக்கு தந்த தன்னம்பிக்கை புஸ்தகத்தில் இருந்து படிச்சேன்” என்றாள் பானுப்ரியா.
“செய்யலாம் தவ்லத்…நம்ம காலைல இவங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு டிவிதானே பாக்குறோம். இனிமேமூணு பேரும் சேர்ந்து குழந்தைகளைப் பாத்துக்கலாம்” என்று ஊக்குவித்தார் சாவித்திரி.
அந்த சம்பாஷணையை நினைத்தபடி என்ன செய்யலாம் என்று யோசித்தாள் பானு. இரண்டு படுக்கை அறையுள்ள இந்த வீட்டில் ஒரு அறையில் குழந்தைகளுக்கு என்று ஒதுக்க வேண்டியதுதான். மாலை பாடம் சொல்லித்தர, விளையாட, கதை சொல்ல நேத்ராவை அழைக்கலாம். மாமியை ஸ்லோகம் சொல்லித்தரச் சொல்லலாம். மூன்று வேலை தவ்லத் அக்காவின் துணையோடு வீட்டிலேயே சமைத்து விடலாம். அவளது நினைவுகள் கணவனை விட்டு விலகி முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்தது. பானு எனும் பயணி தனது வாழ்க்கைப் பயணத்துக்கு பிரகாஷ் எனும் மண் குதிரையை நம்பாமல் தன் கால்களை நம்பி நடக்க ஆரம்பித்தாள்.
பாலைக் காய்ச்சி தனக்காக சூடாய் ஏலக்காய் டீ ஒன்றைப் போட்டுக் கொண்டாள். பிரகாஷுக்கு காப்பி வேண்டும்.குழந்தைகளுக்கு காம்ப்ளான். இவள் ஒருத்திக்காக ஏன் தேநீர் என்றெண்ணிகணவனுக்காகப் போடும் காப்பியையே குடித்துக் கொள்வாள். அவளிடம் டீத்தூள் கேட்டு அலுத்துப் போன தவ்லத் அவரதுவீட்டுக்கு வாங்கும் டீதூளை ஒரு டப்பாவில் போட்டு இவர்கள் வீட்டில்சமயலறையில் வைத்திருந்தார்.
“யம்மா நளாயினி… நீ வேணும்னா உன் வீட்டுக்காரருக்கு பிடிச்சதே குடிச்சுக்கோ. எங்களால முடியாதுப்பா” என்று கிண்டல் வேறு செய்வார்.
அவர்விளையாட்டுக்கு சொன்னது, பிரகாஷ் நிஜமாகவே அவளை நளாயினியாக்கி விட்டான்.இவன் ஆசைநாயகியோடு ஊர் சுற்றுவதற்காக மாங்கு மாங்கென்று உழைத்து பெட்டியைஎடுத்து வைத்திருக்கிறேன். கண்களில் துளிர்த்த நீரை பிடிவாதமாய் அணைகட்டிவிழாமல் தடுத்தாள்.
நான் நம்பிக்கை வைத்தது தப்பில்லை. நம்பிக்கை செலுத்திய நபர்தான் தப்பாகிப் போனார்.
கைகள் இணைக்கப்பட்ட நாள் முதல்
நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்தானேன்
சந்தர்ப்ப சாடல்களும் ரணமான அவயங்களும்
வாழ்வானது
தர்ம தேவன் கருணை
சாபமானது உனக்கு
சூரியனை நிறுத்தி வைத்து
உனதுயிர் காக்கும்
உத்தேசமில்லை எனக்கு
மனைவியை மண்புழுவாக்கும்
மனம் மரித்த மட்டிகளுக்காய்
ஆயிரம் கோடி பிரகாசத்துடன்
விடியட்டும் கிழக்கு
(நன்றி – கவிஞர் பத்மா க்ரஹம்)
பானுவின்நம்பிக்கையைப் போல கிழக்கு ஜெக ஜோதியாய் விடிந்தது. கதவை தட்டிவிட்டு “உள்ளே வரலாமா மேடம்” என்று ஒப்புக்குக் கேட்டு உள்ளே நுழைந்தான் யாஸிம்.
“என்னடா பெருசா பில்ட் அப் தர?” என்று நேத்ரா வினவினாள்.
“அக்காதொழிலதிபராயிட்டாங்க…. அன்னை டேகேருக்கு மவுசு கூடுது போ. பானுக்காஎனக்கு பார்ட்டைம் வேலை இருந்தா தாங்க ப்ளீஸ். நேந்தரங்கா பொழுதுபோக்கத்தான்காலேஜ் போகுது. அதுக்கு புல் டைம் வேலை போட்டுத் தந்துடுங்க”என்றான்.
“போடா அரட்டை” என்று நேத்ரா திட்ட
“நிஜம்மா நேத்ராக்கா… நேத்து நீயும் நானும் ஜாலியாஅன்னை டேகேர்ஆட் எழுதுனோமே அதைராவோட ராவா, நாசரன்ணன் தெரிஞ்ச பிரிண்டிங் பிரஸ்லஅச்சடிச்சுட்டு வந்துடுச்சு. காலைல நானும், உன் தாத்தாவும் பேப்பர்போடுறவங்ககிட்ட காசு கொடுத்து வீடு வீடா போட சொல்லிட்டோம். இன்னைக்கு நிறையபோன் வரும். எல்லாருக்கும் ஒழுங்கா பதில் சொல்லுங்க” என்றான்.
சாவித்திரிவீட்டினுள் நுழைந்தாள் “நம்ம பாட்டுக்கு பயங்கர பாஸ்டா எல்லா வேலையும் செஞ்சாச்சு.பிரகாஷ் டேகேரை வேண்டாம்னு சொல்லிட்டா என்னபண்ணப் போறோம்ன்னு பயம்மாஇருக்கு” என்றார் .
“பிரகாஷ்சொல்லிடுவாரோன்னு நினைச்சு பயப்படுறதுக்கு பதிலா அவர் மறுக்க முடியாதஅளவுக்கு எப்படி சொல்றதுன்னு நம்ம யோசிக்கலாம்” என்ற பானுவை ஆச்சிரியமாய்பார்த்தனர்.
“என்னடி பானு, புதுசா வீட்டுக்காரன் பேரையெல்லாம் சொல்லிக் கூப்பிடுற…. வைஜயந்திஐபிஎஸ் மாதிரி அவனை அடி பின்னப் போறியா” – சாவித்திரி.
“என்வீட்டுக்காரர்ன்னு நெனச்சா அவர் செஞ்ச துரோகம் என் கண்முன்னே வருது மாமி.அந்தாளோட முகத்தில் மறுபடியும் முழிக்கணுமான்னு வெறுப்பா இருக்கு.பிரகாஷ்ன்னு ஒரு ஆள். நானும் அந்த ஆளும் ஒரு வீட்டை சேர்ந்துவாங்கிருக்கோம். ரெண்டு குழந்தைகள் எங்களை நம்பிப் பிறந்திருக்காங்க அவங்களை வளக்கணும். அதுக்காகவாவது அவர் கூட இருக்கணும். அவ்வளவுதான்….”
குரல் தளுதளுக்க “வார்த்தை தவறிட்டாரே மாமி. என் கூடவே வருவேன்னு சத்தியம் பண்ணாரே இப்ப வேற ஒருத்தி அதுவும் என் தோழியா அறிமுகமானவ கூட…”
“உன் வீட்டுக்காரரை மட்டும் தப்பு சொல்லாதே…. இத்தனை பொம்பளைங்க இருக்கோம். எங்களை நிமிந்தாவது பாத்திருப்பாரா… அதுவும் நம்ம பிளாட்லையே சில பொண்ணுங்க அரைகுறையா எதிரே வந்தாக் கூட ஏறெடுத்துப் பாக்க மாட்டார். இவ என்னமோ செஞ்சிருக்காடி. உன் வீட்டுக்காரரை கலைச்சுட்டா” தவ்லத் நல்லதை எடுத்து சொல்லி தோழியின் மனதை சமாதனப் படுத்த முயன்றார்.
“அப்படித்தான் கலைப்பாங்கக்கா…. இதே ஊர்ல வேலைக்குப் போற மத்த பொம்பளைங்க இல்லை. ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் பஸ்லயும் ஷேர் ஆட்டோலயும் மாங்கு மாங்குன்னு ஓடிப் போயி பொழைக்கிற பெண்கள் இல்ல… அவங்களை நிம்மதியா வேலை பாக்க விடாம தொந்தரவு பண்ணுற ஆம்பளைங்க எத்தனை பேர் இருக்காங்க… அந்தப் பெண்கள் எல்லாரும் மனசு கலைஞ்சு யார் மேலையாவது மையலாயிட்டாங்களா…. இவருக்கு ஏன் சலனம். இப்படி வீக் மைன்ட் இருக்குறவங்க கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது.
இவராவது ஆம்பளை, நல்ல போஸ்ட்ல இருக்கார். இவர் மனசு வைச்சிருந்தா அவளை சுத்தமா அவாய்ட் பண்ணிருக்கலாம். உண்மையிலேயே அவளை விலக்கணும்னு நினைச்சிருந்தா என்கிட்டே முதல்லயே அவளைப் பத்தி சொல்லிருப்பார். அந்த பூர்வஜா இவரை ஒரு நாள் காணலைன்னா ஏதாவது சாக்கு வச்சு எங்க வீட்டுக்கு ஓடி வருவா… இவரும் அதை உள்ளூர ரசிச்சிருக்கார். இவங்க காதல் நாடகம் என் முன்னாடியே நடந்திருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மடச்சியாக்கிட்டாங்க…” அழுத்தம் திருத்தமாய் பேசிய பானுப்ரியாவை வியப்போடு பார்த்தார்கள்.
“இவ்வளவு பேசுவியாடி நீ… சரி நீ பாட்டுக்கு டேகேர்ன்னு சொல்லுறியே.. உனக்கு இதை பிடிச்சுத்தானே செய்ற… என்ன நமக்குப் பிடிச்சதில்தான் முழு ஈடுபாடோட முன்னேற முடியும்”
“அக்கா எது பிடிக்கும்னு ஆசைப்பட்டு செய்றது எல்லாம் இருவத்தஞ்சு வயசக்குள்ளதான். நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து படிச்சு அதிலேயே வேலைக்குப் போக, நம்ம ரசனைப்படி நம்ம எதிர்காலத்தை அமைச்சுக்க அதுதான் சமயம். இப்ப அந்தக் கதவுகள் மூடப்பட்டாச்சு. என்னால எது முடியுமோ, எனக்கு எது நல்லா வருமோ அதில் முழு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்டாக்கிக்க வேண்டியதுதான்” சீரியஸாய் சொன்னாள்.
“நேத்ரா முறைப்படி டேகேர் ஆரம்பிக்க என்ன விதிமுறைகள்ன்னு விசாரிக்கணும். நான் ஏதாவது ஏதாவது பயிற்சி எடுத்துக்க வேண்டியிருக்குமா?” முழு வேகத்துடன் கிளம்பினாள் பானுப்ரியா.
அதன்பின் நேத்ராவின் கணினியை வைத்துக் கொண்டு இருவரும் திட்டங்களை வகுக்க, நடுநடுவே அன்னை டேகேர் பற்றி வந்த தொலைப்பேசி அழைப்புகளுக்கு சதாசிவம் பதிலளித்தார். அவர் என்னென்ன சொல்கிறார் என்பதை கவனித்து மனனம் செய்த பானு அடுத்த ஒரு மணி நேரத்தில் தானே அழைப்புக்களுக்கு பதிலளிக்க ஆரம்பித்தாள். அவர்கள் குடியிருப்பிலேயே நான்கு பள்ளிக் குழந்தைகளைக் மாலையில் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கு ஒத்துக் கொண்டாள். முழு ஆண்டு விடுமுறை சமயமாதலால் அழைப்புக்கள் நிறையாவே வந்தது.
பப்லு தவிர மேலும் இரண்டு குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் தானாக வந்தது.
“குழந்தைகளை கவனிச்சுக்க வீட்டை சைல்ட் ப்ரூப் பண்ணனும். அவங்க கைக்கு எட்டுற மாதிரி இருக்குற பிளக் பாய்ன்ட்டுகளை கவர் பண்ணனும். கூர்மையான முனைகள் இருக்கக் கூடாது. அவங்க விளையாட தரமான பொம்மைகள் வேணும். அவங்களுக்கு சரியான உணவைத் தரணும்” நேத்ரா சொன்னதை கவனமாகக் கேட்டாள்.


பொன்ஸ்
Muthal