ஹாய் பிரெண்ட்ஸ்,
நேற்றைய பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பா. பானு யாரைப் பார்க்கப் போறான்னு தெரிஞ்சுக்க நீங்க எல்லாரும் ஆவலா இருப்பிங்க. படிங்க படிச்சுட்டு அவள் தேர்ந்தெடுத்த பாதை பற்றிய உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க
அன்புடன்,
தமிழ் மதுரா
அத்தியாயம் -11
“பெத்த தாய்க்கு மேல உன் மேல நம்பிக்கை வச்சிருந்தேனே. நீ இவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரின்னு தெரியாம போச்சே. என்னை சோதிக்கிறியா… இல்லை எந்த ஜென்மத்திலோ நான் செய்த பாவத்துக்குத் தண்டிக்கிறியா? நான் பொல்லாத பிள்ளையாய் இருந்தா கண்டிக்கலாமே? இவ்வளவு கடுமையா தண்டிக்க நான் பேய்ப்பிள்ளையாகி விட்டேனா? நான் உன் பேரை சொல்லி, உன்னை நினைச்சே இந்த தண்டனையை அனுபவிச்சுடுவேன். ஆனால் ஊரில் என்ன சொல்வாங்க தெரியுமா… உன்னையே நம்பி இருந்த ஒரு பெண்ணுக்கு நீ தந்த சோதனையை சொல்லிச் சொல்லி உன்னைத்தான் திட்டுவாங்க”.
வழக்கம்போல மாயவனின் தங்கை காமாட்சியிடம் கேள்வி கேட்டபடியே தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பானு. அவள் கண்கள் அந்த ஜகத்ஜனனியின் முகத்தை விட்டு விலகவில்லை.
“இப்ப நான் என்ன செய்றது.. சமைக்கிறதையும், குழந்தைகளைப் கவனிக்கிறதயும், எல்லார் மேலயும் அன்பு வைக்கிறதையும் தவிர எனக்கு என்ன தெரியும்? முப்பது வயசுக்கு மேல யார் எனக்கு வேலை தருவா? இனிமே இந்த உலகத்தில் எப்படிப் பிழைக்கப் போறேன்” என்ற அவளது கேள்விக்கு பதிலளிப்பது போல அருகிலிருந்த தூணின் மறுபுறம் ஒரு குரல் கேட்டது.
“என்ன செய்றதுன்னே தெரியல ரேவதி… கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி இருக்கு.” அந்தப் பக்கமிருந்து விசும்பல் வந்தது.
“காதல் அவ்வளவு பெரிய குத்தமா…. ஒரு குழந்தை பிறந்தா ரெண்டு பேர் வீட்டுலையும் சேர்ந்துடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா டெலிவரி பாக்கக் கூட வரலடி. அதைவிடு இவன் பொறந்து மூணுமாசமாகப் போகுது. இவன் முகத்தைப் பாக்கணும்னுகூட இவன் தாத்தா பாட்டிக்கு ஆசையில்லை. இவங்களை கன்வின்ஸ் பண்ணனும்னு அவசரஅவசரமா பிள்ளை பெத்தாச்சு. ரெண்டு பேருக்கும் குழந்தையை வளர்க்கக் கூடத் தெரியல.
ராத்திரி எல்லாம் இவன் அழறான். எதுக்குன்னே தெரியாம நானும் அவரும் தலையைப் பிச்சுக்குறோம். அடுத்தவாரம் நான் வேலைல வேற ஜாயின் பண்ணனும். இவனையாரு பாத்துக்கப் போறா?“
“நம்மை மாதிரி ஆளுங்களுக்காகத்தான் டேகேர் தெருவுக்கு ஒண்ணு கட்டி வச்சிருக்காங்க. பக்கத்தில எங்கயாவது விசாரியேன்” என்றது மற்றொரு குரல்.
“இதுவரைக்கும்பத்து இடத்தில் பார்த்துட்டு வந்துட்டேன். யாரு மேலையும் நம்பிக்கை வரமாட்டிங்குது. குழந்தை வேற பூஞ்சை உடம்பு. இவ்வளவு கவனிச்சுமே அடிக்கடி உடம்புக்கு வந்துடுது. அரசாங்க வேலையா இல்லைன்னா கால் கடுதாசு கொடுத்துட்டு வந்துருப்பேன். எனக்கு இந்த காமாட்சிதான் நல்ல ஆளைக் கண்டு பிடிச்சுத்தரணும்”
“நீ குழந்தையைப் பாத்துக்க இன்னொரு அம்மாவைத் தேடுற… எப்படிக் கிடைக்கும். காசுக்கு வேலை செய்யுற ஒரு ஆயாவைத் தேடு .ஈஸியா சிக்குவாங்க”
இருவரும் பேசியது பானுவின் காதில் விழுந்தது. மனுஷனா பொறந்தா கஷ்டத்துக்கா பஞ்சம் என்றபடி சுவாரசியமின்றி அமர்ந்திருந்தவளுக்கு கடைசியாய் பெசியவளின் வார்த்தைகள் தூக்கிவாரி விழித்துக் கொள்ள வைத்தது. அந்தப் பெண்களின் முகத்தைப் பார்க்க எழுந்து வந்தவளுக்கு ஏமாற்றமே. அவ்விடத்தில் அவர்கள் இல்லை.
வீட்டுக்குசெல்ல வேண்டியதுதான் என்றபடி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை வீலென்று ஒரு குழந்தையின் அழுகுரல் திரும்பச் செய்தது. கைக்குழந்தையை சுமந்த ஒரு இளம்பெண் பக்கத்திலிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து பால் புட்டியினால் பால்புகட்ட முயல, அந்தக் குழந்தையோ பசியாறாமல் அழுதது.
“என்னடா செய்யுது… ஏன் அழற” என்று சமாதனப் படுத்த முயல, குழந்தையின் அழுகை மேலும் அதிகமானது.
முகம் சிவக்க அழுத அந்தக் குழந்தையின் வேதனைக் குரல் பொறுக்காமல் அந்தப் பெண்ணின் அருகே சென்றவள்,
“ஏதாவது கடிச்சதா… இல்ல உறுத்துதான்னு பாருங்க” என்றாள் பானு.
சோதித்துவிட்டு இல்லை என்று உதட்டைப் பிதுக்கினாள் அந்த இளம்தாய்.
கையில் குழந்தையை வாங்கி உடலைத் தடவிப் பார்த்தாள் பானு.
“வயிறு கல்லு மாதிரி இருக்கே… வயிறு வலியா?”
“தெரியலைங்க.. வயிறு வலின்னா கல்லு மாதிரி ஆயிடுமா” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
இவளிடம் கேட்டுப் ப்ரோஜனமில்லை என்று முடிவு செய்தவள், தானே குழந்தையின் வயிற்றை அமுக்கி உப்புசம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.
“கோலிக் மருந்து தந்தா போதும்ன்னு நினைக்கிறேன்…. இங்க பக்கத்தில் டாக்டர் ஒருத்தங்க இருக்காங்க.. அவங்க கிட்ட கேட்டுட்டு தாங்க” என்றவாறு அவளையும், தோழியையும் அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.அவரும் அதையே உறுதி செய்து நர்சிடம் மருந்தைத் தருமாறு உத்தரவிட்டார். மருந்து தந்துஅரைமணியில் குழந்தை சிரித்து விளையாட ஆரம்பித்தான்.
“ரொம்ப நன்றிக்கா… உங்க பேர் என்ன? என்ன செய்றிங்க?” கேள்வி மேல் கேள்வி கேட்டாள் ரேவதி.
“என் பேர் பானுப்ரியா. “அன்னை”ன்னு டேகேர் ஒண்ணு வச்சிருக்கேன்” என்றாள்.
“நான் ரமா. என் குழந்தையைப் பாத்துக்க ஆள் தேடிட்டு இருக்கேன் இவனை உங்க டேகேர்ல சேத்துக்க முடியுமாக்கா. ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதிங்க. மாசம் நாலாயிரம் வரைக்கும் தரேன்” என்றாள்.
“ரமா நாளைக்கு இந்த அட்ரெஸ்க்கு வந்துடுங்க. ஒரு வாரம் இவனை கவனிச்சுக்குறேன். உங்களுக்குப் பிடிச்சிருந்தா தொடரலாம். சரியா” என்றபடி ரமாவின் தொலைப்பேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.


vijivenkat
so banu parka ponathu kamatchiyai…..ippo baby sitting seiya mudivu eduthachu….ithuku fully qualified person namma banu…romba porumayana thiramayana avana…..ippo aduthu avaloda kanavanai eppadi ethir kolla poranga….eagerly expecting…