ஹலோ பிரெண்ட்ஸ்,
எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன்.
வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன்.
நமது கதாநாயகி பானுப்ரியாவை முதல் அத்தியாத்தில் அறிமுகப்படுத்துகிறேன். இந்தப் பகுதியில் பானு, அவளது குடும்பம், தோழிகள் பற்றிப் பார்க்கலாம். படிச்சுட்டு பானுப்ரியா உங்களைக் கவர்ந்தாளா என்று சொல்லுங்க. உங்களது கமெண்ட்ஸ்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். லிங்க் –
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 1
மனிதனின் மனமும் வாழ்க்கையும் எப்போதும் உயர்ந்ததை நோக்கி மட்டும் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக குத்துவிளக்கின் ஐந்து முகங்களிலும் மேல்நோக்கி எரிந்த சுடரைகைகூப்பி வணங்கினாள் பானுப்ரியா.
பூஜை அறையில் தெய்வீக அலைகளை பரப்பி நின்றநெய்தீபத்தின் அமைதி அவளது முகத்திலும் எதிரொலித்தது. அவளது குடிவிளங்க, தாலி நிலைக்க, கொண்டவனின் உடல்நலன், பிள்ளைகள் படிப்பு என்றுபிரார்த்தனைகளை அன்னையின் முன் வைத்தாள்.
சேவித்து எழுந்தவள் முன் வைர கிரீடமும், வைடூரிய மேனியுமாய் தேவிவடிவம். ஆளுயர நிழற்படத்தில் நிஜமாகவே அன்னை அமர்ந்திருப்பதைப் போன்றஉணர்வைத்தந்தது. தினமும் விளக்கேற்றி சுவாமி கும்மிடும் அந்த சிலநிமிடங்கள் அவளுக்கும் கடவுளுக்கும் நடுவே இருக்கும் தனிப்பட்ட நிமிடம்.பானு அதை மிகவும் விரும்பினாள். அந்த நேரத்தில் மனசு விட்டுப் பேசுவாள்.சண்டை போடுவாள். யோசனை கேட்பாள், சில சமயம் யோசனை கூட சொல்லுவாள்.
‘நேத்து உனக்கு கோவில்ல சாத்திருந்த சேலை எனக்குப் பிடிக்கவே இல்லை. இனிமேசிவப்பு, பச்சை, மஞ்சள் மட்டும் கட்டு.. அதுதான் உனக்கு நல்லாயிருக்கு‘ என்பாள் தோழியிடம் பேசுவதைப் போல.
நிழற்படத்தில் காமாட்சித் தாயார் கமலத் திருமுகத்தில் கஸ்தூரித் திலகம் துலங்க அமர்ந்திருந்தார்.
‘பானுப்ரியா, எல்லாருக்கும் வேண்டினியே, உனக்கு எதுவும் வேண்டாமா மகளே‘ கனிவுடன் மனக்கண்ணில் கேட்டாள் அன்னை.
‘எனக்கென்னம்மாவேணும்… தெரியலையே… அவரும் பிள்ளைகளும் நல்லா இருந்தா அது நான் நல்லாஇருந்த மாதிரி… நல்லதெல்லாம் அவங்களுக்குத்தா… அவங்களுக்கு ஏதாவதுகெடுதல் வந்தே ஆகணும்னு விதி இருந்தாஅதை எனக்குத்தா‘
காமாட்சி புன்னகைக்கிறார் போல் பட்டது ‘ அப்ப உனக்கு ஒண்ணுமே வேண்டாமா?’
ஒருவினாடி யோசித்தாள் ‘ம்ம்… நினைவுக்கு வந்துடுச்சு.. என்அசட்டுத்தனத்தைக் கொஞ்சம் குறைக்கிறியா… நானும் எவ்வளவோ முயற்சியோடஎல்லாமே பாத்துப் பாத்து கவனமாத்தான் பண்ணுறேன்… ஆனா அதுல எப்படியாவதுகோளாறு வந்துடுது.. அவர்கிட்டத் திட்டு வாங்காம ஒரு நாள் விடியுறதும்இல்லை ஒரு பொழுது முடியுறதும் இல்லை. என்ன.. அதை மட்டும் எடுத்துடுறியா‘
பெரும்பாலான வீடுகளில் கணவன் கோலோச்சிக் கொண்டிருப்பதே மனைவியின் அசட்டுத்தனத்தால்தான். அதை நீக்கிவிட்டால் கணவர்கள் பாடு…
தங்கஒட்டியாணம் தகதகவென மின்ன, அபிராமி பட்டருக்கு நிலவாய் ஒளிர்ந்த குண்டலம்பளபளவென ஒளிர்விட, கைவளை கலகலவென நகைக்க, கூட சேர்ந்து நகைத்த அன்னை ‘ததாஸ்து‘ என்று மறைந்தார். கனவுலகிலிருந்து நினைவுலகிற்குக் கொஞ்சம்கொஞ்சமாய் திரும்பி வந்தாள் அவள்.
பானுப்ரியா… நம் கதாநாயகி. இவளை எப்படி வர்ணிக்க? எனக்குத் தெரியலையே.. இந்தப் பேரை கேட்டவுடனே மாநிறத்திலும் களையான முகம், மனம் நிறைந்த புன்னகை, மென்மையான பேச்சு, பூப் போன்ற மனம், பயந்த சுபாவம், கணவனுக்கு அடங்கிய குணம், பிள்ளைகளே வாழ்க்கை போன்ற குணாதிசயங்களுடன்கூடிய முப்பத்தி இரண்டு வயது பெண் யாராவது உங்கள் நினைவுக்கு வருகிறாளா..அப்ப அவள்தான் பானுப்ரியா.
அப்படி யாரையும் எனக்கு நினைவுக்கு வரலையே என்பவர்கள் காலையில் அரக்கபரக்க எழுந்து இட்டிலி ஊற்றி, உங்களுக்கு மட்டும் சின்ன வட்ட தோசையை சக்கரையைத் தொட்டு, நீங்க இரவு செய்ய மறந்த ஹோம்வொர்க் செய்யும்போது ஊட்டிவிட்டு, டைம்டேபிள் பார்த்து உங்க பாடப் புத்தகத்தை எடுத்துவைத்து, மதியம் உங்களுக்கு பிடித்த உணவை டிபன்பாக்ஸில் அடைத்து, வியர்க்க விறுவிறுக்க பஸ்ஸ்டாப் வரை உங்கள் புத்தக மூட்டையை சுமந்து, ஒரு முத்தமிட்டு பள்ளிப் பேருந்தில் ஏற்றி விடுவாறே அவரை நினைத்துக் கொள்ளுங்கள்.
நம் பானுப்ரியா இளங்கலை முடித்த கையோடு தாய்தந்தை ஏற்பாடு செய்தபடி சந்திரப்பிரகாஷுக்குக் கழுத்தை நீட்டி, அவனது இரண்டு பெண்களுக்குத்தாயானாள். அந்த வகையில் அவள் பெற்றோருக்குத் தொல்லை தராத பெண்.
தலையில்கொட்டிக் கையில் மிட்டாய் தந்தால் கொட்டியதை மறந்து, மிட்டாய்க்கு நன்றிசொல்லும் அசடு. மாமனார் மாமியாரை அனுசரித்துப் போகும் மருமகள்.
நாத்தனார்கொழுந்தனார் மனம் நிறைய கணவனிடம் தூது சென்று அவர்களுக்கு வேண்டியதைவிரும்பும்வண்ணம் செய்யும் அண்ணி.
தொலைக்காட்சிப் பெட்டியையே உலகத்தைஅறியும் கருவியாக உபயோகப் படுத்தும் சராசரி குடும்பத் தலைவி.
கம்ப்யூட்டர், செல்போன் என்றால் “எனக்கு அதெதுக்கு அனாவசியமா… அந்த காசுக்கு பவுனைவாங்கி வைக்கலாம். பிற்காலத்துல உதவும்” என்பாள்.
“இன்னைக்கு சக்கரை பொங்கல் நெய்வேத்தியமாச்சு. அடுத்த வெள்ளி வெண்பொங்கல் இல்லைன்னா உளுந்த வடை..” பேசிக் கொண்டே எழுந்தாள்.
“ஏங்க்கா.. சாமிக்கு இந்த பிசிபேளாபாத், உருளைக் கிழங்குபோண்டா இப்படி ஏதாவது வச்சுக் கும்பிட்டேன்னாஎனக்கு வசதியா இருக்குமில்ல”கேட்டபடி வீட்டினுள் நுழைந்தாள் நேத்ரா.
நேத்ரா அப்பார்ட்மென்ட்டில்இரண்டாவது தளத்தில் குடியிருக்கும் பானுவின் தோழி. படபட தடதடவெனபாப்கார்னாய் பொரியும்கல்லூரி மாணவி. அம்மா அப்பா இருவரும் வெளிநாட்டில்பணம் சம்பாதிக்க, இவளை வளர்த்தது எல்லாம் தாத்தா சதாசிவமும் பாட்டி சாவித்ரியும்தான். அந்தஅப்பார்ட்மெண்ட் கட்டிய புதிதில் வீடு வாங்கி குடி வந்துவிட்டார்கள்நேத்ராவின் தாத்தா பாட்டி.
சென்னைக்கு வந்த புதிதில் நேத்ரா வீட்டிக்கு எதிர் வீட்டில் மூன்றுவருடமாய் வாடகைக்குக் குடியிருந்த பானுப்ரியாவும் சந்திரப்பிரகாஷும் இரு வருடங்களுக்கு முன்தான் இந்த ப்ளாட்டை வாங்கிக் குடியேறினர்.ஊர் பழக்கம் புரியாமல் திணறிய பானு இவர்கள் துணை இல்லையென்றால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாள். ராப்பகலாய் படிப்பு வேலை என்றிருக்கும் பிரகாஷ் அதனாலேயே அவர்கள் பிளாட் அவனது பட்ஜெட்டுக்கு சற்று அதிகமான விலை என்றபோதிலும் சற்று தம் கட்டி வாங்கினான். வீட்டை வாங்க முன்பணம் கட்ட சேமிப்பு பத்தாததால் பானுவின் நகைகள் அடமானமாய் வங்கிக்குச் சென்றன. மஞ்சள் கயிறும், மிக மெல்லிய சங்கிலியும், இரண்டு ஜோடி வளையல்களும் சில தோடுகளும் மட்டுமே மிச்சமிருக்கின்றன.
“எப்படிடி வீட்டுக்குள்ள வந்த?” ஆச்சிரியமாய் கேட்டாள் பானு.
“இப்படி காலால நடந்துதான் வந்தேன். வேணும்னா இப்ப நடந்து போய் அந்த நெய்வேத்யத்தை எடுத்துக் காமிக்கட்டுமா?”
“ஏய் அதைக் கேக்கலடி… எப்படி பூட்டின கதவைத் திறந்த?”
“பூட்டினயா.. இல்லையே… யாரு வேணும்னாலும் வாங்கன்னு வரவேற்குற மாதிரி திறந்திருந்ததே.. சோ வீட்டுல நுழைஞ்சுட்டேன்” திறந்த வீட்டில் நுழைந்ததை ஹாஸ்யமாய் சொன்னாள்.
கவலையாக டைனிங் டேபிளில் அமர்ந்துவிட்டாள் பானுப்ரியா.இவளிடம் கேட்டுப் ப்ரோஜனமில்லை என்றுணர்ந்து பூஜை அறையிலிருந்த பொங்கலைவேறு ஒரு சிறிய தட்டில் இடம்மாற்றி, ஸ்பூனால் ருசித்தாள் நேத்ரா…
“பானு சூப்பர்… உன் கைபக்குவமே கைப்பக்குவம்… அண்ணன் குடுத்துவச்சவர்”
நேத்ரா சொன்னது கூட காதில் விழாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“வொய் சாட் பானு? வழக்கம்போல காலைல ப்ரபசர்கொஞ்சினாரா.. இதெல்லாம் இந்த பத்து வருஷத்தில் உனக்கு பழகிருக்கணுமே”
“நேத்து ராத்திரி, உங்கண்ணன் வர்ற நேரத்தில சின்னது கதவைத்திறந்து போட்டுட்டு தவ்லத் அக்கா வீட்டுக்கு ஓடிடுச்சு. ஷ்யாமா போகவும், பாமாவும் அவளை வெரட்டிட்டே போயிட்டா. உங்கண்ணா வந்தப்ப வீட்டுக் கதவுபப்பரப்பான்னு திறந்திருக்கு. நான் கிச்சன்ல அடைக்குமாவரைச்சுட்டிருந்தேன். மிக்ஸி ஓடுற சத்தத்துல கதவைத் திறந்த சத்தமேகேக்கல. ஹால்ல டிவி ஓடிட்டு இருக்கு”
“மீதியை நான் சொல்லுறேன். ‘ஏய் பானு, பொறுப்பில்லாமவீட்டைத் திறந்து போட்டுட்டு அங்க என்னடி செய்யுற? டிவி பார்த்தா உனக்குஉலகமே மறந்துடுமே.. ‘ன்னு சிங்கம் உருமியிருக்கும். உடனே நீ போட்டதுபோட்டபடி ஓடி வந்திருப்ப. அப்பத்தான் உனக்கு கதவு திறந்திருந்த விஷயமேதெரிஞ்சிருக்கும்”
தலையாட்டினாள் பானு.
“நீ, கதவு திறந்ததே தெரியாதுன்னு சொல்லிட்டு பெக்க பெக்கன்னு முழிச்சிருப்ப… நம்ம வாத்தியார், குழந்தைகதவைத் திறந்துட்டு வெளிய போறது கூடத் தெரியாம இருந்திருக்கியேன்னுபிரம்பால அடிக்காத குறையா திட்டித் தீர்த்திருப்பார்….”
“ஆமாண்டி.. எப்படி பக்கத்துல நின்னு பாத்தா மாதிரி சொல்லுற…” வியந்தாள் பானு.
“இதென்னபிரமாதமான விஷயமா… நானும் அஞ்சு வருஷமா பாத்துப் பாத்து மனசில்கல்வெட்டா பதிஞ்சிருச்சு…. நீ ஏன் அவர் வர்ற நேரத்துக்கு அடுப்படிலநிக்குற.. முன்னேயே மாவை அரைச்சு வைக்கலாம்ல”
“சீக்கிரம் மாவு அரைச்சு வச்சா இவர் வர்ற நேரத்துக்குநல்லாயிருக்க மாட்டிங்குது போன தடவை அடை நல்லால்லைன்னு எல்லாத்தையும்தூக்கிக் குப்பைத் தொட்டில கொட்டிட்டார் தெரியுமா?”
“எனக்குத் தெரியாதே.. எப்ப நடந்தது”
“நீ உங்கம்மா அப்பாவைப் பாக்க தோஹா போயிருந்தேல்ல அப்ப நடந்தது”
“குப்பை தொட்டில போட்டாரா.. இதெல்லாம் ரொம்ப ஓவர்தான். அன்னைக்கு எல்லாரும் பட்டினியா”
“பிள்ளைங்களுக்கு முன்னாடியே சாப்பாடு தந்துட்டேன்”
“அப்பறம் தம்பதியினர் என்னசாப்பிட்டிங்க “
” தவ்லத் அக்கா வீட்டுல மாவு வாங்கி அவருக்கு தோசை ஊத்தித் தந்தேன்”
“நீ சாப்பிட்டுருக்க மாட்டியே”
“பசியே போயிடுச்சுடி”
“க்கும்…துர்வாசரோட திட்டுலேயே உன் வயிறு நிறைஞ்சுடுச்சாக்கும். உன்னையெல்லாம் என்னசெய்யுறது… பிடிக்கலைன்னா அவரோட தோசையைக் குப்பை தொட்டில கொட்ட வேண்டியதுதானே…உன்னோடதை ஏன் கொட்டுறார். எனக்கு வர்ற கோவத்துக்கு… நீ ஏங்க்கா இப்படிஇருக்க? “
“பானு…சாமி கும்முட்டாச்சா”என்றபடி வீட்டினுள் நுழைந்தார்தவ்லத்.
அவரும் அதே பில்டிங்கில் கீழ்தளத்தில் இருக்கிறார். தவ்லத்தின் கணவர் இப்ராஹிம் உடம்பு சரியில்லாதவர். மாடிஏறி இறங்க முடியாது. அதனால் தரைத்தளம். இரண்டு ஆண் பிள்ளைகளின் அன்னை.தந்தையின் உடல் நலனில் கோளாறு என்றவுடன் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, கையில் இருந்த ரொக்கத்தில் ப்ளாட்டை வாங்கியமூத்தவன் நாசர், சித்தப்பாக்களின் ஜவுளிக்கடையில் மேற்ப்பார்வையாளனாய் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். பலாப்பழம் போல் வெளித்தோற்றம் கடுமையாகவும் மனது இனிப்பாகவும் நிறம் காட்டுபவன். அவனது கண்டிப்புப் பிடிக்காமல் கடுவன்பூனை என்று அப்பார்ட்மென்ட் குரங்குக்கும்பல் பெயர் வைத்திருந்தது. இரண்டாவது மகன் யாஸிம் ப்ளஸ்டூபடித்துக் கொண்டிருக்கிறான். அம்மாவின் செல்லம். நேத்ரா வெளியே செல்லும்போது துணையாய் செல்லும் பாடிகார்ட். முறைப்புடன் கிளம்பி சென்று சண்டை போட்டுத் திரும்பி வருவார்கள். நாசர், யாசிமின் தாய் தவ்லத் பானுவின் மற்றொரு தோழி.
“ஆச்சுக்கா.. பொங்கல் கொண்டு வரேன்” எழுந்தவளை அமர வைத்தவள்
“குக்கர்லதான இருக்கு? நானே எடுத்துக்குறேன்.. நீ காலைல இருந்து சாப்பிட்டிருக்கமாட்டியே… வீட்டுல ஆப்பம் தேங்காப்பால் செஞ்சேன்கொண்டுவரவா”
“இல்லக்கா இன்னைக்கு ஒரு பொழுது. காலைல சாப்பிடமாட்டேன். டிபன் செய்யும்போதேமத்தியான சாப்பாட்டுக்கு பருப்பு வேக வச்சு எடுத்து வச்சிருக்கேன். குக்கர்ல சாதம் மட்டும் வச்சாபோதும்.. “
“தவ்லத் ஆன்ட்டி, நான் ஒருத்தி இங்ககுத்துக்கல்லாட்டம் நிக்குறது உங்க கண்ணுல படல.. அந்த ஆப்பம் தேங்காப்பாலஎனக்குத் தந்தா ஆகாதா?”
“நீதானா நான்கூட குத்துக்கல்லோன்னு நெனச்சுட்டேன்”
தவ்லத் தோளில் ஒரு இடி இடித்தாள் நேத்ரா. நிற்க முடியாமல் சோபாவில் அமர்ந்தவர் “யப்பா என்ன இடி… ஏண்டி என்னைத் தள்ளிவிட்ட”
“குத்துகல்லு இடிச்சா எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரிய வேண்டாம். அதுதான்”
“நீ காலேஜ் போகல… “
“லீவ்”
“இன்னைக்கு எதுக்கு லீவு” வினவினாள் பானு.
“இன்னைக்கு வெள்ளிக்கிழமை பாரேன், வீக் எண்ட் மூட் வந்துடுச்சு.காலைல எட்டரைக்குத்தான்எந்திருச்சேன். எப்படியும்மத்யானம்காலேஜ் கட் அடிக்கலாம்னு ப்ளான். பத்துடு பன்னெண்டுதான் இன்னைக்கு காலேஜுக்கு என்னோட அப்பாயிண்ட்மென்ட் தந்திருந்தேன்.அப்பறம் குளிக்கிறப்பதான் யோசிச்சுப் பார்த்தேன்.நம்ம நாட்டோட பொருளாதாரநிலைமைல ரெண்டு மணி நேரத்துக்கு பெட்ரோல் வேஸ்ட் பண்ணுறது மிகப் பெரியதேசத்துரோகமா பட்டது… அதனால கான்சல் பண்ணிட்டேன்”
“உருப்படாம சுத்த ஆயிரம் காரணம் கண்டுபிடி” பேசியபடியே தவ்லத் எழுந்து சென்று கிச்சனிலிருந்த குக்கரிலிருந்து ஒரு சிறு கிண்ணத்தில் பொங்கலை வைத்து ஸ்பூன் போட்டு பானுவுக்கும் அவருக்கும் எடுத்து வந்தார்.
“ஓல்டி இங்க அந்த கிண்ணத்தைத் தா… பானு இன்னைக்கு மத்யானம்தான் பிரசாதமும் சாப்பாடும் சாப்பிடுவா” என்றபடி தவ்லத் கையிலிருந்த கிண்ணத்தை கபளீகரம் செய்தாள் நேத்ரா.
“ஏண்டி பானுவோட எனக்கு பத்தே வயசுதான் ஜாஸ்தி. அவ உனக்கு அக்கா, நான் உனக்கு ஆன்ட்டி, ஓல்டியா?” கண்களில் கனல் தெறிக்கக் கேட்டார் தவ்லத்.
“பானுவோட மூத்த பொண்ணு சத்யபாமாக்கே எட்டு வயசுதான் ஆச்சு. ஆனா உங்க மகன் அந்த கடுவன் பூனைக்கு என்னை விட நாலு வயசு அதிகம். நீங்க எனக்கு அக்கான்னா அந்த கேபிக்கு நான் ஆன்ட்டில்ல… இதை என்னால ஒத்துக்கவே முடியாது யுவர் ஆர்னர்”
“இவளை மாதிரி நானெங்கே டிகிரி வாங்கினேன்.எனக்கும் ஆர்வமிருந்திருந்தா படிக்க வச்சிருப்பாங்க. எங்க வாப்பா கூட என்னைப் பத்தாவதாவது முடிக்கச் சொல்லி தலைப்பாடா அடிச்சுகிட்டார். எனக்குத்தான் படிக்கவே பிடிக்கல. பரிட்சைல பெயிலாயிட்டேன். எனக்குத் தோதா எங்க மாமியார் பொண்ணு கேட்டு வரவும் கல்யாணம் பண்ணித் தந்துட்டாங்க.
நானும் படிச்சிருக்கலாம்… இப்ப வருத்தப்பட்டு என்ன பிரோஜனம்…. என்னை மாதிரி ஆளுங்களைப் பாத்து படிப்பைக் கோட்டை விட்டுராதடி… நாலெழுத்து படிச்சா உலகத்தில எங்க வேணும்னாலும் பொழைச்சுக்கலாம்” பெரிய மனுஷியாய் புத்தி சொன்னார் தவ்லத்.
“அக்கா…டிகிரி வாங்கின நானும்,பத்தாவது கூட தாண்டாத நீயும் இப்ப ஒரே வேலையைத்தான் செய்யுறோம். நான் படிச்ச பாடமெல்லாம் மறந்தே போயிருச்சு. பாமாவோட பாடத்தை எல்லாம் பாக்குறப்ப எப்படித்தான் சொல்லித் தரப்போறோமோன்னு பயம்மா இருக்கு”
“ஏன்க்கா, அண்ணன் என்ஜினியரிங் மாஸ்டர்ஸ் டிகிரி முடிச்சுட்டு இப்ப பிஹச்டி வேற படிச்சுட்டு இருக்கார். அவரோட அறிவைப் பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லித் தரவாவது பயன் படுத்தலாமில்ல. வாயைத் திட்டுறதுக்கு மட்டும்தான் தொறப்பாரா?”
“நல்லா கதையைக் கெடுத்த போ…. பாமா அப்படியே என்னை மாதிரி. நாலைஞ்சு தரம் சொல்லித் தந்தாத்தான் புரியும். அவருக்கு முதல் தடவை சொன்னதும் கற்பூர புத்தியா பிடிச்சுக்கணும். புரியலைன்னா பல்லைக் கடிச்சுட்டு ரெண்டாவதுதரம் சொல்லித்தந்துட்டு கேள்வி கேப்பார். அவ தப்பா பதில் சொல்லிட்டான்னா அவ்வளவுதான் அவளுக்கும் எனக்கும் சேர்த்துத் திட்டுவிழும். ‘நான் அசடு, என் அசட்டுத் தனத்தையும், முட்டாள்தனத்தையும் சேர்த்து சத்யபாமாவா பெத்திருக்கேன்எங்க வீட்டில் யாரும் படிக்கல. அதனாலத்தான் இப்படி முட்டாள் குடும்பமா நிக்கிறோம். அவர் வாழ்க்கைல செஞ்ச ஒரே தப்பு எங்க கல்யாணம்தான். இப்படித்தான் முடியும்’ அப்பப்பா இதைக் கேட்டுக் கேட்டு என் காதே வலிக்குது”
“அண்ணா எவ்வளவு கேவலமா திட்டுறார். உனக்கு வருத்தமாவே இல்லையாக்கா… “
“முன்னாடி கோவம் வரும்… அம்மாகிட்ட சொல்லுவேன். ஆம்பிளைங்க எல்லாரும் இப்படித்தான் பேசுவாங்கன்னு அவங்க அரைமணி நேரத்துக்கு அறிவுரை சொல்லுவாங்க. சரி வருத்தப்பட்டுக் கோவப்பட்டு என்ன பிரோஜனம்நம்ம மனசும் உடம்பும்தான் பாழாகும்னு சொல்லி மனசை சமாதனப்படுத்திக்கிட்டேன்.. இப்பல்லாம் திட்டு வாங்கி வாங்கிப் பழகிடுச்சுடி…ஒருநாள் திட்டலைன்னா என்னமோ மிஸ்ஸான மாதிரி இருக்கு”
“எனக்கும் நாசர்கிட்டத் திட்டு வாங்கலைன்னா உப்பில்லாத சாப்பாடு மாதிரி அந்த நாளே சப்புன்னு இருக்குடி. இந்த நேத்ரா கழுதை வேற அவன் திட்டும்போது டாம் அண்ட் ஜெர்ரி பூனை கோவப்படுறதைக் கற்பனை பண்ணிக்க சொல்லிருக்காளா… அவன் திட்ட ஆரம்பிச்சாலே எனக்கு சிரிப்பு வருது. காலைல லூசாயிட்டியாம்மான்னு கத்திட்டு போயிருக்கான்.”
பானுப்ரியாவை ஆமோதித்தபடியேதவ்லத் டீ போட்டுக் கொண்டு வந்தார். “சாப்பாடுதான் சாப்பிடலை டீயாவது குடி” என்று அவள் கையில் தந்தார்.
நேத்ரா தனக்கும் ஒரு டம்ளரை எடுக்கப் போகும் சமயம் அவளது கப்பை ஸ்வாஹா செய்தது ஒரு கை.
“ஏண்டி உன்னை எதுக்கு இங்க அனுப்பினேன்?” நேத்ராவை முறைத்தார் சாவித்திரி.
தலையில் கை வைத்துக் கொண்டவள் “சாரி பியூட்டி, மறந்தே போயிட்டேன். பானுக்கா இன்னைக்கு கோவில்ல உமையாள் சொற்பொழிவு இருக்காம். நீ தான் அவங்க பேன், ஏஸி எக்ஸட்டிரா எக்ஸட்டிராவாச்சே சாயந்தரம் போயிட்டு வரலாம்னு பாட்டி சொல்ல சொன்னாங்க. இப்ப சொல்லிட்டேன் பாட்டி”
“இன்னைக்கு சாயந்தரமா… “ இழுத்தாள் பானு.
“பிள்ளைங்களுக்கு நாளைக்கு லீவுதானே”
“மண்டே பரிட்சை இருக்கு மாமி. பாமாக்கு சொல்லிதரணும். சின்னது படிக்கும்போது நான் கூட உக்காரலைன்னா ஏமாத்திடும்”
“ஒரு மணி நேரம் போயிட்டு வரதுல ஒண்ணும் குறைஞ்சிடாது. ரெண்டும் பெரிய காலேஜ் படிப்பா படிக்குதுங்க… யாஸிம் கூட உக்காந்து படிக்கட்டும்” தவ்லத் தைரியம் தந்தார்.
“அக்கா யாஸிம் ப்ளஸ்டூ பரிட்சை எழுதணும். இதுங்க அவனை படிக்க விடாதுங்க. நேத்து கூட உங்க வீட்டுக்கு ஓடி வந்துருச்சுங்க”
“அடப்போடி படிக்க வேண்டியதுதான். அதுக்காக பொழுதன்னைக்கும் புஸ்தகத்தையே பாக்கணும்னு அவசியமில்லை. நேத்தி மூணும் சேந்து நாசர் பொறந்தநாளைக்கு கார்ட் ரெடி பண்ணுச்சுங்க பாரேன்… ”. தோழிகள் நால்வரின் பேச்சுக் கச்சேரி களைகட்டியது.
கடைசியில் பானு கோவிலுக்கு சென்று வருவது என்றும், பாமாவும் ஷ்யாமாவும் தவ்லத் வீட்டில் படிப்பது என்றும் முடிவு செய்தார்கள்.


shameena
hi , i am first, ”BEST WISHES ”