
இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த இடத்தின் பெயர், ‘பாங்கர் ஃபோர்ட்’. இதைப் பற்றி உலவும் கதை சுவாரஸ்யமானது.
பதினெட்டு வயது நிரம்பிய பேரழகி இளவரசி ரத்னாவதியின்மீது சிங்கியாவுக்கு விருப்பம் உண்டாகிறது. அவன் ஒரு தாந்த்ரீகன். அவளைத் திருமணம் செய்யத் தனது தகுதி போதுமானது அல்ல என்று அறிந்த அவன் அவளைக் கவர்வதற்காகத் தன் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்துகிறான்.
இளவரசியின் பணிப்பெண்ணின் உதவியுடன் ரத்னாவதியின் தைலத்திற்கு பதில் வசியம் செய்யப்பட்ட தைலத்தை மாற்றுகிறான். அதன் ஒரு துளி கையில் இளவரசியின் கையில் பட்டாலும் அவள் சிங்கியாவைத் திருமணம் செய்துக் கொள்வாள்.
இதை அறிந்த இளவரசி, தைலத்தை ஒரு பாறையில் ஊற்றுகிறாள். பாறை உருண்டு சென்று சிங்கியாவைக் கொன்றுவிடுகிறது. சாவதற்கு முன் ஒரு சாபம்விடுகிறான் மந்திரவாதி சிங்கியா. ‘கோட்டையில் குடியிருப்பவர்கள் அனைவரும் இறக்க வேண்டும்; கோட்டையில் இருக்கும் கிராமத்தினர், இனி எப்போதும் கூரை இல்லாத குடிசையிலேயே வசிக்க வேண்டும்’ என்பதே அந்தச் சாபம். இப்போதும் கூரை இல்லாத குடிசைகளிலேயே சில கிராமவாசிகள் வசிக்கிறார்கள். கூரை வேய்ந்தாலும், சில நாள்களிலேயே அந்தக் கூரை சரிந்துவிடுகிறதாம்.
இன்றும் கூட இரவில் பெண்கள் அலறும் சத்தமும், வளையல்கள் உடையும் சத்தமும் கேட்கிறது என்று சொல்கிறார்கள் கிராமத்தினர். மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட இவர்கள் தங்களது இளவரசி மறுபிறவி எடுத்து வந்து மாந்த்ரீகனின் கொட்டத்தை அடக்குவார் என்றும் நம்புகின்றனர்.

Leave a Reply