அத்தியாயம் – 8
அல்லி சில தடயங்கள் கிடைத்தது என்று சொல்லவும் விஜயாவிற்கு புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. இரவு முழுவதும் தூங்காத கலைப்பெல்லாம் பறந்தோடிப் போயிற்று.
“மேடம் அந்த பொண்ணு பாடியை பார்க்கும் பொழுது என்னை கவர்ந்தது அவ போட்டிருந்த உடை . பார்க்க படு சிம்பிளா இருந்தாலும் அது இப்போதைக்கு லேட்டஸ்ட் வந்திருக்கிற அனார்கலி மாடல் சல்வார். சாதாரணமா இங்கே இருக்கிற திருநெல்வேலி இது மாதிரி டிசைன் கிடைக்கிறது கஷ்டம். சென்னை பெங்களூர் மாதிரியான பெரிய சிட்டிஸ்ல கிடைக்கிறதுக்கு வாய்ப்பு வாய்ப்பிருக்கு”
“எப்படிம்மா சொல்ற அனார்கலி மாடல் தான் இப்ப நம்ம அண்ணாச்சி கடையில கிடைக்குதே”
“அனார்கலி மாடல் சல்வார் கிடைக்கும் மேடம். ஆனால் அந்த சல்வார் மாதிரியே டிசைன்ல இருக்கிற பிரேஸ்லெட், தோடு, வளையல், பென்டன்ட், செயின் எல்லாம் செட்டோட கிடைக்காது. பிளாக் அண்ட் வொயிட் டிசைன் சல்வார் போட்டிருந்தது அந்த பொண்ணு. அது கையில இருக்கிற பிரேஸ்லெட் கூட அந்த சுடிதாரோட டிசைன்லயே இருந்துச்சு. அது மட்டும் இல்லாம காதுல இருக்க தோடும் அதே பேட்டர்ன். அதாவது சுடிதார் துணியை அப்படியே பிரிண்ட் போட்ட மாதிரி அதே டிசைனில் தோடு செயின் வளையல் எல்லாம் இருந்தது. இந்த மாதிரி செட்டோட அண்ணாச்சி கடையில இல்ல. எனக்குத் தெரிஞ்சு நம்ம ஊரு பக்கம் இப்போதைக்கு அவங்க தொடங்கல. நம்ம தகவலை படிச்சிட்டு அண்ணாச்சி தொடங்கினா அது அடுத்த விஷயம்”
“அப்படியா ஏதோ சின்ன வயசு பிள்ளை போல இருக்கு, காது கழுத்தெல்லாம் ஒரே மாதிரி டிசைன் தோடு செயின் மாட்டிகிட்டு இருக்குன்னு நினைச்சேன். அதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா. அப்ப இந்த மாதிரி வேற ஏதாவது கடையில் கிடைக்குமா. அத எப்படி கண்டுபிடிக்க முடியும்?”
“க்ரைம் சைட்ல நம்ம எதையும் கலைக்க முடியாது. அதனால என்னால முழுமையா அதை செக் பண்ண முடியல. இப்ப வந்து எவிடென்ஸ் பார்த்தேன். அதுல நமக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அந்த சுடிதார் பின்னாடி ஒரு பிராண்ட் நேம் இருக்கிற லேபிள் இருக்கு.அது லேபிள் போட்டோ செக் பண்ணி பார்த்ததில மும்பையில் இருக்கிற ஒரு பிராண்டோட நேம் வந்து இருக்கு.
அது அங்கிருக்கும் பணக்கார எலைட் கம்யூனிட்டிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிராண்ட். ஏன்னா ஒரு சிம்பிளான காட்டன் சுடிதாரே தொடக்க விலை பத்தாயிரத்திலிருந்து இருக்கும். இந்த பொண்ணு போட்டு இருக்கிறது பார்க்க சிம்பிளா இருந்தாலும் விலை கூடுதலாவே இருக்கும்.
சோ இந்த பிராண்டு மும்பைல தயாரிக்கப்படுது. இவங்க எந்தெந்த கடைகளில் விக்கிறாங்க அப்படின்னு தெரிஞ்சதுனால் நமக்கு லீட் கிடைக்க சான்சஸ் இருக்கு”
“வாரே வா அதுக்கு தான் இப்டி ஒரு இப்படி ஒரு டூ கே கிட்ஸ் கைடன்ஸ் வேணும்ன்றது”
அடுத்த சில நிமிடங்களில் கலாருபம் என்ற அந்த பொட்டிகை பிடித்து அதன் வாடிக்கையாளர்களை பற்றின விவரத்தை உடனடியாக அனுப்பி விடுமாறு வேண்டுகோள் விடுத்தார் விஜயா.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் விவரங்கள் வந்துவிடும் தங்களது விசாரணை அதிலிருந்து தொடங்கலாம் என்ற நம்பிக்கை வந்தது விஜயாவுக்கு
“எனக்கு இன்னொரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே”
“கேளுங்க மேடம்”
“15, 20 ஆயிரத்துக்கலாம் சுடிதார் இருக்கா? அவ்ளோ விலைக்கு விக்கிற அளவுக்கு அதில் என்ன இருக்கும்”
“மேடம் நம்ம ஊரு நடிகை சர்வ சாதாரணமா ஒரு லட்சத்துக்கெல்லாம் சுடிதார் போட்டுட்டு வராங்க. நீங்க பத்தாயிரத்துக்கே இவ்வளவு மலைச்சுப் போறீங்க”
“அட நீ வேற அல்லி இந்த பேண்ட் சட்டை விட்டா ஒரு காட்டன் சுடிதார் அவ்வளவுதான் சேலை கூட கம்மியா தான் கட்டுறது. கல்யாணத்துக்கு ஒரு அஞ்சாயிரம் ரூபாய்க்கு பட்டுசேலை எடுத்து வச்சிருக்கேன். அதுதான் எனக்கு இருக்கிறதுலையே விலை அதிகமான உடுப்புன்னு வச்சுக்கோயேன். இந்த ஊரு ட்ரெண்ட் இந்த கால ட்ரெண்ட் எதுவும் எனக்கு தெரியாது”
“மேடம் நீங்க கடைக்கு போனீங்கன்னா அங்க களவாணி பையன் எவன் இருக்கான்னு ஆராய்ஞ்சிக்கிட்டு கிடப்பீங்க. ஷாப்பிங் போறதுக்கு தனியான ஒரு மூடு வேணும் மேடம்”
அவர்கள் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு ஊரைவிட்டு தள்ளி இருந்த ஓரிடத்திற்கு வந்து விட்டார்கள். அங்கு விஜயாவிற்காக ஒரு நபர் காத்திருந்தார்.
உழைத்து கருத்த அந்த உடலில் இடுப்பில் ஒரு வேஷ்டி தலையில் ஒரு சும்மாடு அவ்வளவுதான். அவன் அருகில் ஒரு இளைஞன் அவன் கையில் அலைபேசி அவன் தான் அழைத்து இருப்பான் போலும்
“மேடம் இவரு தான் இடும்பன் நான் போன்ல சொன்னேன் இல்லையா இவர் தான் நமக்கு இந்த கேஸ்ல உதவி பண்ண ஒத்துக்கிட்டவர்”
“அம்மா இந்தாங்க நீங்க சந்தேகப்பட்டது சரி அதுக்கு கிடைச்ச ஆதாரங்களை இந்த பொட்டியில் போட்டு வச்சிருக்கோம்” என்றபடி தந்தார் இடும்பன்
*****
ராஜாராம் தன்னை கேள்விகளால் வறுத்தெடுக்கும் அரசியல் தலைவர் யாருக்கோ தொலைபேசியில் பணிவான குரலில் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
“அப்படிலாம் இல்லைங்க சார். மீடியாவில் இது சைக்கோ கொலை, சீரியல் கில்லர் அப்படின்னு தவறா செய்திகளை பரப்பிட்டு இருக்காங்க. எங்களோட இன்வேஸ்டிகேஷன் படி இரண்டு பாடிஸ் மட்டுமே கிடைச்சிருக்கு”
” அந்த மூட்டைகளை பத்தின விவரங்களை விரைவில் சொல்றோம் சார் கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரியே மீடியா பீப்பிள்க்கு பிரஸ் மீட் வச்சே சொல்லிடுறேன்”
“காவல்துறை தன்னுடைய கடமையை சரிவர செஞ்சு கிட்டு இருக்கு. யாரோட இன்ஃப்ளுயன்சும் கிடையாது. இறந்து போனவர்களை பத்தின தகவல்களை நாலா பக்கமும் தேடிக்கிட்டு இருக்கிறோம்”
“என்னத்த தேடி, எப்ப நீங்க கண்டுபிடிச்சு… யோவ் இன்னும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேற வர ஒரு வாரம் ஆகும்னு சொல்ற. எதிர்க்கட்சி பேப்பர்ல அறிக்கை விட்டு எங்களை கிழி கிழின்னு கிழிக்கிறாங்க. போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் பூட்டு போட்டுட்டு கிளம்புங்க அப்படின்னு எங்க மானத்தை வாங்குறாங்க. இந்த கேஸ சரியா முடிக்கலன்னு என்னோட பதவி நீக்கம் வரைக்கும் கொண்டு போய் விட்ரும்.
சீரியஸ்னஸ் புரிஞ்சுகிட்டு சோம்பேறித்தனப் படாம நீயே இன்வெஸ்ட்டிகேட் பண்ணு. நீயே அடிக்கடி பிரஸ்சைக் கூப்பிட்டு, ப்ரொக்ரச காமிச்சு இந்த கேஸ் நடக்குது அப்படின்னு மக்களுக்கு நம்பிக்கை கொடு.
ஆக்சிடென்ட் கேஸ் தற்கொலை கேசுக்கெல்லாம் ராஜினாமா பண்ண சொன்னா ஒரு மணி நேரத்துக்கு ஒரு அமைச்சர அப்பாயிண்ட்மெண்ட் பண்ணனும். எல்லாம் நடக்கிற கதையா?”
ஓ இதுதான் பிரச்சனையா இந்த கேஸ் விஷயமா மீடியா கன்னா பின்னான்னு எழுதுனதுல முதலமைச்சர் இவரை கூப்பிட்டு வாங்குவாங்கன்னு வாங்கி இருக்காரு . அந்த காண்டை நம்ம கிட்ட காமிச்சிட்டு இருக்காரு என்று புரிந்து கொண்டார் ராஜாராம்.
“கவலைப்படாதீங்க சார் இன்னைக்கு சாயந்திரமே பிரஸ்சை கூப்பிட்டு ஒரு ப்ரோக்ரஸ் அப்டேட் கொடுத்துடுறேன். மிக விரைவில் இந்த கேஸ முடிச்சு உங்களுக்கு பிரச்சனை வராத மாதிரி பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு”
என்று மனம் குளிரும்படி பேசினார்
“என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது ஒரு வாரத்துக்குள்ளார இந்த கேசை முடிக்கிற”
அவர் பேசி விட்டு வைத்து விட்டார் ராஜா ராமுக்கு இப்பொழுது பிரச்சனை என்ன செய்வது? அந்த விஜயாவத்தான இந்த கேசில் போட்டு இருக்கோம் மூணு வாரத்துல கேஸ் முடிச்சேன்னு என்கிட்ட எவ்வளவு திமிரா பேசினல்ல… இனி இருக்குது உனக்கு.
அல்லியுடன் ஸ்டேஷனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் விஜயா
“அல்லி அந்த கலாரூபம்னு துணிக்கடையை காண்டாக்ட் பண்ணோமே. செக் பண்ணிட்டு மறுபடியும் நம்மளை கூப்பிடுறோம்னு சொன்னாங்க. அது எந்த அளவுக்கு பயன் தரும் என்று எனக்கு சுத்தமா ஐடியா கிடையாது. துணி எங்க வித்தாங்கன்னு சொன்னாலும் யாருக்கு வித்தாங்கன்னு எப்படி சொல்ல முடியும்? அதற்கு பெரிய ஹோப் வச்சுக்காம வேற வகையிலும் முயற்சி பண்ணி பாக்கணும்”
நேரமானதில் அல்லிக்கும் சற்று நம்பிக்கை குறைந்தே இருந்தது.
“வேற என்ன வகையில காண்டாக்ட் பண்ண முடியும் நானும் செக் பண்ணி பார்க்கிறேன் மேடம்”
“நான் வீட்ல போய் குளிச்சிட்டு வந்துடறேன் கசகசன்னு இருக்குது. ராத்திரி எல்லாம் தூங்காதது கண்ணு வேற எரியுது”
சொல்லி முடிப்பதற்குள் விஜயாவுக்கு ராஜாராமனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்துவிட,
அட்டென்ட் செய்தவர் முகம் இருண்டது.
“சார் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரதுக்கே இன்னும் ஒரு வாரம் ஆகும்னு பாரன்சிக்ல சொல்றாங்க”
“மூணு நாள்ல எப்படி சார் முடிக்க முடியும் “
“சரி சார் பார்க்கிறேன் இன்னைக்கு சாயந்திரம் 4:00 மணிக்கு உங்களை மீட் பண்றேன்”
செல்போனை அணைத்துவிட்டு வைத்தவர் இரண்டு கைகளாலும் நெற்றியைப் பிடித்துக் கொண்டார்
“என்ன மேடம் ஆச்சு?” அல்லி கவலையுடன் கேட்டாள்.
“ராஜாராம் மூணு நாள்ல இந்த கேஸ் எல்லாம் முடிக்கணும்னு சொல்றாரு. தென்னாடனும் முழுமையான பார்ன்சிக் ரிப்போர்ட் வர ஒரு வாரமாகும்னு சொல்லிட்டாரு”
“இதை அவர் கிட்ட எடுத்து சொல்ல முடியாதா மேடம்? ரிப்போர்ட் இல்லாம நம்ம என்ன செய்ய முடியும்”
“சொல்லிப் பார்த்தேன். அவர் காதில் வாங்கினால் தானே… மூன்று வாரத்துக்குள்ளார மண்டையோடு கேஸ் முடிச்ச உனக்கு இதெல்லாம் ஒரு ஜுஜுப்பின்னு கிண்டலா சொல்றாரு”
ஆக இந்த காலக்கெடு விஜயாவிற்கு கொடுக்கப்பட்ட பிரஷர் தான் என்பதை அல்லியும் புரிந்து கொண்டாள்.
“ராஜாராம் கொடுத்த கெடுவோட முதல் நாள் இன்னிக்கு. இன்னும் கேஸ்ல ஒரு படி கூட முன்னேறல. மூணு நாளைக்குள்ளர குற்றவாளிகளை துப்புத் துலக்கி முழுசா ரிப்போர்ட் பண்ணனுமாம்.
அந்தப் பொண்ணோட ரிப்போர்ட் தான் என் கையில் வந்திருக்கு. மற்றது எல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கு.
இதுக்கு நடுவுல மூட்டைகள் வேற கூடுதலாக ஒரு குழப்பம். லீடே இல்லாத இந்த கேசுகளை எப்படி சால்வ் பண்ண முடியும். இப்ப நம்ம என்ன செய்றது?”


Leave a Reply