அத்தியாயம் – 6
மூட்டைகளை விரித்து பார்த்தபடி விஜயா ,
“ஓகே இந்த மூட்டைகளை பத்தின இன்வேஸ்டிகேஷன நம்ம சைடுல பாக்க ஆரம்பிச்சிடலாம். ஆனா டாக்டர்சை போஸ்ட்மார்ட்டம் ஸ்டார்ட் பண்ண சொல்லிடுங்க தென்னாடன்”
கைகளில் கிளவ்சை அணிந்து கொண்டு, ஜாக்கிரதையாக எதையும் கலைத்து விடாதபடி அந்த மூட்டைகளில் ஒன்றினை எடுத்து பிரித்தார் விஜயா.
நல்ல மொத்தமான பாலித்தீன் கவரால் கிட்டத்தட்ட உர மூட்டைகள் எல்லாம் பார்த்திருப்பீர்களே அதைப் போன்று நன்கு உறுதியான பாலித்தினால் செய்யப்பட்ட வெள்ளை மூட்டை அதை போன்ற மூட்டைகள்.
அவற்றின் மேல் தண்ணீர் பட்டு வடிந்து இருந்தது. சிலவற்றில் மேலே இறுக்கி சுத்தியிருந்தார்கள் சில திறந்து கிடந்தன. அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.
சிறிதும் பெரிதுமான ஏகப்பட்ட மூட்டைகள். கொலை செய்பவன் இத்தனை கொலையும் செய்து மூட்டை மூட்டையாகவா கட்டி வைப்பான்? இதனைப் பார்த்தால் மீடியாவில் சொல்வதைப்போல கொலை செய்து தூக்கி எறிந்ததைப் போல் தெரியவில்லை. ஆனாலும் இந்த மூட்டைகள் ஆராயப்பட வேண்டிய விஷயமே…
தூரத்தில் இருந்து வந்த வெளிச்சம் மூட்டையை ஆராய பத்தவே இல்லை. நிழல்கள் உள்ளே என்ன இருந்தது என்பதை தெளிவாக காட்டாமல் மறைத்தன. எந்த விஷயமும் தவறி விடக்கூடாது என்பதில் விஜயா உறுதியாக இருந்தார். அதனால் வேறு ஏதாவது போர்ட்டபிள் லைட் எடுத்து வரச் சொன்னார்.
“எல்லாமே பாரன்சிக் டீம்ல எடுத்துட்டு போய் இருக்காங்க மேடம். வேணும்னா ஊருக்குள்ள போயி எங்கேயாவது எடுத்துட்டு வர சொல்லட்டுமா”
“ராத்திரி மணி ஒண்ணாச்சு.இனி எங்கிருந்து லைட் எடுத்துட்டு வந்து நம்ம பாக்குறது… விடுங்க, காலையில வெளிச்சம் வந்ததும் பாத்துக்கலாம்”
சுற்றிலும் கூடியிருந்த மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் கையில் கேமராவை வைத்துக் கொண்டு ஏதாவது சிறிய செய்தி கிடைத்தாலும் அதில் உப்பு காரம் மிளகாய் பொடி தூவி மசாலாவை சேர்த்து தரத் தயாராக ஒரு குரூப் கேமராவுடன் சுற்றிக் கொண்டிருந்தது.
“அல்லி ஒரு டீ குடிச்சிட்டு நம்ம மத்ததெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிடலாம். இந்த மூட்டை விஷயம் இந்த கேமரா காரங்களுக்கு தெரியாம பாத்துக்கணும்”
“கேமரா இல்லை மேடம் மீடியா”
“மீடியா அப்படின்னு சொன்னா அதுக்கு என்ன சில எத்திக்ஸ் எல்லாம் இருக்குது. அதெல்லாம் இல்லாம வாய் சொன்னதெல்லாம் நியூஸா சொல்றது, நல்லா பரபரப்பா ஒரு டைட்டில் வைத்து மோசமா டேக் லைன் போட்டு, பொதுமக்களை ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்தா கூட போதும் அப்படின்னு சொல்றவங்க எல்லாம் மீடியா இல்ல.
இது மக்களுக்கும் நல்லா தெரியும். சொல்லப்போனால் உண்மையான மீடியாஸ் போலீஸ் இன்வேஸ்டிகேஷன் நடந்துட்டு இருக்கப்ப தலையிடவே மாட்டாங்க. இந்த மாதிரி க்ரைம் சீன்ல குழப்படி பண்ணி எவிடன்ஸை கலைக்கிறது அவங்களுடைய எத்திக்ஸ் கிடையாது”
“ஓகே மேடம் அவங்க எல்லாம் இந்த பக்கம் வர விடாம நாங்க பாதுகாப்பா நின்னுக்குறோம்”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏட்டு டீயுடன் கேட்டு வந்து விட்டார். அந்த மழை தூறலில் நிற்க இடமில்லாத வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தவர்கள் கையில் பேப்பர் கப்பில் டீயை கொடுத்தார்.
“என்ன கிரேசு காய்ச்ச இப்ப தான வந்துச்சு. பேசாம அந்த டென்ட்டுக்கு உள்ளே போய் நின்றுக்கலாமே”
“அங்கதான் க்ரைம் சீன்ல போஸ்ட்மார்ட்டம் நடந்துட்டு இருக்கு”
” டீ கொடுத்துப்புட்டு நீங்க ஸ்டேஷன் போயிடுங்க. எங்களுக்கு இன்னைக்கும் நாளைக்கும் இந்த ஏரியால தான் ஓடும். அங்க வர வரைக்கும் இது முக்கியமான தகவல் இருந்தா எங்க கிட்ட குடுங்க காண்டாக்ட் பண்ணுங்க”
“சரிங்க மேடம். பன்னு எதும் வாங்கிட்டு வர சொல்லட்டுமா ? ராத்திரி நேரமாச்சு யாருமே சாப்பிடாம வேற நிக்கிறீங்க”
” ஏதாவது வாய்க்குள்ளார போச்சு போன வேகத்துல வெளிய வந்துரும். நானே எப்படா இந்த சீன விட்டு போவேன்னு பாத்துட்டு இருக்கேன்” அலுத்துக் கொண்டாள் அல்லி.
ஏட்டுக்கு அவளது அலுப்பு சிரிப்பை தான் தந்தது
“அல்லி என்ன இங்க நின்னுட்டு இருக்க. நிஜத்துக்கும் பார்த்தா நீ வேலைக்கு சேர்ந்ததுல இருந்து இதுதான் உனக்கு முதல் கொலை கேஸ். இவ்வளவு நாள் ஏற்கனவே நடந்த கொலையோட பேப்பர் ஒர்க்கை மட்டும் பார்த்து ஆராய்ஞ்சுகிட்டு கிடந்த.
‘ஏட்டையா அது எப்படி பொணம் வலது காலை மடக்கி, இடது காலை நீட்டிட்டு ஒருக்களிச்சு கிடக்கும்? நான் அப்படி படுத்து பார்த்தேன் அந்த மாதிரி சான்ஸ் இருக்கிற மாதிரி தெரியலையே’
‘ முனியாண்டி விலாஸ் ல போய் கடைசியா பரோட்டா சாப்பிட்டு இருக்கான் அப்படின்னு உறுதியா எப்படி எழுதி இருக்கீங்க? வேற எங்கேயாவது சாப்பிட்டு இருக்க முடியாதா’ இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு எங்களக் கொல்லுவியே….
இப்ப என்னத்துக்கு இங்க நிக்கிற? உள்ள போயி போஸ்ட்மார்ட்டம் எப்படி பண்றாங்கன்னு பாரு”
” ஐயோ ஏட்டையா நாத்தம் குடலை புரட்டுது … வாந்தி வராப்புல இருக்கு.. எனக்கு டீ காபி எதுவும் வேணாம் பா. தண்ணி கூட குடிக்க முடியல”
“மாஸ்க் போட்டுட்டு தானே போன”
“மேடம் இந்த மாஸ்க் எல்லாம் தாங்குமா… அப்படி ஒரு நாத்தம்… ஒரு கிலோமீட்டர் தாண்டி அடிக்கும் போல இருக்கு”
“கிரேஸ் விக்ஸ எடுத்துக் குடு “
கிரேஸ் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய விக்ஸ் டப்பா ஒன்றைத் தந்தார்.
“இங்க பாரு இப்படித்தான் குடலப் புரட்டும். நாங்க விக்ஸ் எடுத்து மூக்குக்கு கீழ லேசா தடவிக்குவோம். விக்ஸ் வாசத்துல இந்த நாத்தம் கொஞ்சம் குறையும்”
“சரியான ஐடியா அக்கா. எங்க இருந்து புடிச்சீங்க “
“ஒரு ட்ரெயினிங் டாக்டர் சொன்னது. முதல் தடவை பாடிய பார்த்தப்ப குடம் குடமா வாந்தி எடுத்து ஆளுங்க தானே நிறைய பேரு”
விக்ஸைத் தடவிக் கொண்டு புதிதாக மாஸ்கை போட்டுக் கொண்டவள் ஆர்வமாக டென்டுக்குள் நுழைந்தாள்.
தென்னாடனும் பரபரப்பாக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தான்
“யேய் நீ என்ன இங்க நிக்கிற உனக்கு தான் வாந்தி வருமே”
“மூக்குல விக்ஸ் தடவி இருக்கேன். நீ வாசமா எதுவும் தடவி இருக்கியா”
அவளைக் கனிவாக பார்த்தான் தென்னாடன். கல்லூரியில் புது மாணவர்களை வரவேற்க ‘ப்ரஷ்சர்ஸ் டே’ வைத்திருந்த போது ஒவ்வொருவரும் அவர்களது கனவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
அல்லியும் கூட சீனியர்ஸ் இவர்களிடம் தனது கனவை சொன்னாள்.
தினமும் ஒரு காட்டன் புடவையை கட்டிக்கொண்டு டீச்சர் வேலை கனவு கண்டு கொண்டிருந்த பெண் இப்போது பிணத்துக்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறது. காலக்கொடுமை…
“எனக்கு இது பழகிடுச்சு அல்லி”
“எனக்கும் சீக்கிரம் பழகிரும்” அவனிடம் சொன்னாளா அல்லது அவளுக்கே சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டாளா?
அந்த டென்ட்டுக்குள் பல பொருட்கள் புதிதாக முளைத்திருந்தன. சுற்றிலும் போர்ட்டபிள் ஷெல்ப் அதில் விதவிதமான வண்ணமயமான ரசாயனங்கள். கத்தி கத்திரிக்கோல் போன்ற உபகரணங்கள்.
“போஸ்ட் மார்டம் முடிஞ்சிருச்சா”
“கிட்டத்தட்ட… பாடி அழுக ஆரம்பிச்சிடுச்சு. அதனால இங்கேயே மோஸ்ட்லி முடிச்சிட்டோம்”
“அப்ப ரிப்போர்ட்”
“அதுவும் சீக்கிரம் ரெடி ஆயிடும். அந்த பொண்ணோட பாடி கூட இங்கேயே போஸ்ட்மார்ட்டம் பண்ணிடலாமா அப்படின்னு யோசிக்கிறாங்க. ரெண்டும் முடிச்சுட்டு கூட சேர்த்து ரிப்போர்ட் தருவோம்”
“எனக்கு ஒரு சந்தேகம்”
“சொல்லு”
‘சாதாரணமா ஒரு கொலை நடந்துச்சுன்னா பாடியோட டெம்பரேச்சர வச்சு எவ்வளவு தூரம் குளிர்ந்திருக்கோ அதைக் கணிச்சு, அது மூலமா செத்து இத்தனை மணி நேரம் இருக்கும் அப்படின்னு ரிப்போர்ட் தருவீங்க”
“ஆமா அதுவும் ஒரு மெத்தட். இறந்த உடனே படிப்படியா உடம்பு சூடு குறைய ஆரம்பிக்கும், வெரைச்சு போக ஆரம்பிக்கும். இதைத் தவிர ரத்த ஓட்டம் ரத்தம் ஓடாததனால புவியீர்ப்பு எங்கு அதிகமா இருக்கோ அந்த இடத்துல தேங்கத் தொடங்கும்.
அதைத் தவிர சாப்பாடு. வயிற்றில் இருக்கிற சாப்பாடு எவ்வளவு தூரம் ஜீரணம் ஆயிருக்கு அப்படின்னு பார்த்து ஒரு யூகமா நேரத்தை சொல்ல முடியும். இப்படி பல விஷயங்கள். இதையெல்லாம் வச்சு தான் இத்தனை மணி நேரம் இருக்கும் அப்படின்னு சொல்லுவோம்”
“இந்த மாதிரி அழுகிப்போன உடல்களை பாரேன்.இதில் உடல் சூடு தெரியாது அதை வச்சு கணிக்கவும் முடியாது. தண்ணில விழுந்து எப்ப வெரச்சு போச்சு… அதுவும் நமக்கு தெரியாது ரத்தம் பத்தியும் சொல்ல முடியாது.. ரத்தம் பூரா இழந்திருந்தாங்கன்னா…
இந்த மாதிரியான டிரிக்கியான கேஸ்ல எப்படி இறந்து இத்தனை நாள் இருக்கும் அப்படின்னு சொல்றீங்க”
“எல்லாம் இயற்கையை வச்சுத்தான்”
“இயற்கையை வச்சா… புரியலையே”
“ஒரு மனுஷன் இயந்த இறந்த உடனே பூச்சி எல்லாம் அவன கடிக்க வருவதை பார்த்திருப்ப. இப்ப தூக்குல தூங்கிட்டு இருந்த பொண்ணு கூட அப்படித்தானே…
இதே மாதிரி நம்ம அவ்வளவா நோட்டீஸ் கூட பண்ணாத சின்ன சின்ன பூச்சிகள் இந்த மாதிரி இறந்த உடலின் ஸ்மெல்ல வச்சு வந்துரும்.
உடல்னா அது மனுஷனா இருக்கணும்னு அவசியம் இல்ல நாய் பூனையா கூட இருக்கலாம்.
இப்படி வர்ற அந்த பூச்சிகள் அந்த இறந்த உடல் மேல மூட்டை போட்டுட்டு போயிடும். அந்த முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். அந்த புழுக்கள் இறந்த உடலை சாப்பிட ஆரம்பிக்கும்.
சில நாட்களில் அந்த புழுக்கள் வளர்ந்து முழுமையான பூச்சியா மாறி வெளியே போயிடும். நாங்க இந்த மாதிரி புழுக்களோட லைஃப் ஸ்டேஜ கால்குலேட் பண்ணுவோம். இத்தனை நாளில் இவ்வளவு வளர்ச்சி இருக்கும் அப்படின்னு ஒரு கணிப்பு இருக்கு. அதை வச்சு இந்த உடலில் இருந்து இத்தனை நாள் ஆகி இருக்கலாம் என்று சொல்லுவோம்”
அல்லியின் சந்தேகம் தீர்ந்து விட்டது. ஆனாலும் ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்த டீயெல்லாம் கரித்துக் கொண்டு லைட்டாக வாந்தி வருவது போல இருந்தது.
அதற்குள் தென்னாடனை அழைத்து டீமில் இருந்த டாக்டர் ஏதோ சொல்ல
“நிஜமாத்தான் சொல்றீங்களா டாக்டர். எங்கேயும் தப்பாயிடலையே. எதுக்கும் செகண்ட் டைம் டெஸ்ட் பண்ணி பார்த்திறலாமா” என்று கேட்ட அவனது குரலில் ஏகப்பட்ட அதிர்ச்சி.


Leave a Reply