அத்தியாயம் – 5
முதலில் எதை தொடங்குவது என்று விஜயா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கிரேஸ் பிள்ளையார் சுழி போட்டார்.
“மேடம் முதல்ல வேலை கம்மியா இருக்குற இடத்துக்கு போகலாம்”
“எந்த இடம் கிரேஸ்”
“ஆக்சிடென்ட் கேஸ் மேடம். நல்ல மழைல ரெண்டு நாளா … அதுல ஒரு காரு ஸ்கிடாயி இந்த குளத்துக்குள்ள விழுந்துடுச்சு. டிராவல் பண்ண ஆள் குளத்தில் மூழ்கி அப்படியே அவுட்டு”
“மழை நேரத்துல பார்த்து ஓட்டாம, தண்ணிய போட்டுகிட்டு வந்து, ஆக்சிடென்ட் ஆக்கி, நம்ம உயிரையும் சேர்த்து எடுக்குறாங்க மேடம்”
“பாடி… “
“எடுத்தாச்சு மேடம். நல்லா தண்ணில ஊறி போய் சத சதன்னு இருந்தது. அதனால இங்கேயே அட்டாப்சி பண்ணிடலாமா என்று டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு”
“கார் ஆக்சிடென்ட்ன்னு சொன்னிங்களே… கார ரெக்கவர் பண்ணியாச்சா? நம்பர் பிளேட் ட்ரேஸ் பண்ணி அட்ரஸ் கண்டு பிடிச்சாச்சா?”
“நம்பர் பிளேட் ஷேர் பண்ணியாச்சு அட்ரஸ் டீடைல்ஸ் காக வெயிட்டிங். ஆள் அம்பது வயசுக்கு மேல இருக்கும் புள்ள குட்டிகள்ளாம் என்ன கஷ்டப்படுதுன்னு தெரியல”
“ரெக்கவர் பண்ண கார் எங்க”
“அதோ அங்க இருக்கு மேடம்”
நான் கொஞ்சம் ரகர்ட் பாயாக்கும் என்ற லுக் தரும் டாட்டா பஞ்ச் அங்கே பதவிசாக நின்றிருந்தது.
வழுக்கிவிட்டத்தில் கண்டிப்பாக இரண்டு மூன்று குட்டிக்கரணம் ஆவது அடித்திருக்கும். டிரைவர் சீட்டில் இருந்த ஏர்பேக் ஓபன் ஆகி இருந்தது. அதைத்தவிர காருக்கு மிகப்பெரிய சேதாரம் என்று எதுவும் சொல்ல முடியவில்லை விஜயவால்.
சொல்லப்போனால் இந்த காரில் பட்டி டிங்கரிங் பார்த்து செகண்ட் ஹாண்ட் சேலில் போட்டால் மக்கள் ஆசை ஆசையாக வாங்கிச் செல்வார்கள்
“காருக்கு ரொம்ப சேதாரமான மாதிரி இல்லையே… ஏர்பேக் எல்லாம் ஓப்பன் ஆகியிருக்கு அப்ப ஆளு பொழச்சு இருக்கணுமே”
“இல்ல மேடம்… காரு தண்ணிக்குள்ளார விழுந்த உடனே, அந்த ஆளு பதட்டத்துல என்ன செஞ்சாருன்னு தெரியல கார் நல்லா ஆழத்தில் போய் சொருகிருச்சு.
இவரு தப்பிக்க முயற்சி பண்ணி இருக்காரு போல, கார் கதவைத் திறந்து மூடி ட்ரை பண்ணி பார்த்திருக்காரு… அந்த பக்கம் வேற கொடிகள் ஜாஸ்தியா அதுல சிக்கிட்டு மேல வர முடியாம மூச்சு திணறி உள்ளேயே இறந்துட்டாரு”
“கார் நல்லா ஆழத்துல சிக்கி இருக்கு போல. இப்படி ஒரு ஆக்சிடென்ட் ஆனத எப்படி கண்டுபிடிச்சீங்க”
“அந்தப் பொண்ணோட பாடிய இன்வேஸ்டிகேஷன் பண்ணும் போது வண்டி ஏதோ ஸ்கிட் ஆகி செடிகள் புல்லு எல்லாம் அழுத்தப்பட்டு குளத்துக்குள்ளார போன தடம் தெரிஞ்சது. எனக்கு சந்தேகம் வரவும் ஆளுங்கள கூப்பிட்டு குளத்துக்குள்ள முங்கிப் பார்க்க சொன்னேன்.
“குட் ஜாப் கிரேஸ்”
ஒரு பத்து நிமிடங்கள் அந்த காரை சுத்தி சுற்றிப் பார்த்தார்
“எனக்கெனமோ ஆக்சிடென்ட் ஆன ஆளு தமிழ் ஆள் இல்லைன்னு தோணுது. வேற மாநிலத்தை சேர்ந்தவனா இருக்க நல்ல சான்ஸ் இருக்கு. முக்கியமா வடமாநிலம்”
“எப்படி மேடம் அவ்ளோ உறுதியாக சொல்றீங்க”
“இந்தக் காரை பாரேன். ரெண்டு இடத்துல ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு அந்த ரெண்டு ஸ்டிக்கரும் தமிழோ தென்னாட்டு மொழியோ கிடையாது”
விஜயா சுட்டி காட்டிய ஸ்கிரிப்ட் பார்த்தவர் “இது ஹிந்தி மாதிரி இருக்குது இல்ல’.
“யாராவது ஹிந்தி தெரிஞ்சவங்கள தான் கூப்பிட்டு கன்ஃபார்ம் பண்ண சொல்லணும்”
” ஓகே யாருக்காவது ஹிந்தி தெரிஞ்சா அல்லிய அள்ளிக்கிட்டு வர சொல்லலாம். அப்படியே அடுத்த பாடியும் பார்த்துறலாமா”
“அந்த பொண்ணு பாடிதானே… வா பாத்துரலாம்”
வெள்ளையில் சிறிய டைமண்டுகள் பிரிண்ட் செய்யப்பட்ட கருப்பு சுடிதார். எங்காவது கிழிந்து இருக்கிறதா என்று பார்த்தார். பெரிதாக ஒன்றும் கண்ணில் படவில்லை ஒருவேளை மழையில் துணி எல்லாம் ஒட்டி இருக்கிறதே நன்றாக பிரித்து பார்த்தால் ஏதாவது தெரியும்..
மழையிலும் வெயிலிலும் நனைந்து பின் காய்ந்து இருந்ததால் தோல் கருத்து, சுருங்கி போயிருந்தது. பறவைகள் கொத்திய தடம் சில இடங்களில். மூச்சுக் காற்று என்று ஒன்று இருந்த வரைக்கும் நம்மை கண்டால் அஞ்சி ஓடிய உயிரினங்கள் எல்லாம் இப்போது மேலேயே அப்பிருந்தன. எறும்பு ஈ எதையும் ஓட்ட முடியாது விரைந்து போய் கிடந்தது அந்தப் பெண்ணின் உடல்
பவுடரும் லிப்ஸ்டிக்கும் போட்டு அழகாக்கிய முகம் இன்று கோரமாய் சிதைந்து இருந்தாலும், கை கால்கள் தோற்றம் இவற்றை வைத்து கண்டிப்பாக சிறுவயது பெண்ணாக தான் இருக்க முடியும் என்று கணித்தார் விஜயா.
யாரு பெத்த பிள்ளையோ இப்படி ஒரு கஷ்டமான முடிவு என்று அவரது மனதில் எழுந்த வேதனையை தவிர்க்க முடியவில்லை இருந்தாலும் கடமையை செய்ய வேண்டுமே
“என்னம்மா எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கலயா?”
“ஆரம்பிச்சோம் மேடம். அதுக்கப்புறம் நீங்க லீவ கேன்சல் பண்ணிட்டு வரதா தகவல் கிடைத்தது. நீங்க வந்த உடனே நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ்ல டிஸ்கஸ் பண்ணலாம் அப்படின்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்”
“இதெல்லாம் ஒரு ரீசனா? ஆல்ரெடி நம்ம வேகம் பத்தல ஸ்லோ அப்படின்னு எல்லா இடத்திலும் விட்டு வெளாசிட்டு இருக்காங்க.
இதுல உப்பு சப்பு இல்லாத காரணத்துக்காக இன்வேஸ்டிகேஷன ஸ்டாப் பண்ணி வச்சீங்கன்னா, குற்றவாளிகள் நெருங்குறதுக்கு தாமதப்படுத்துறீங்க அப்படின்னு அர்த்தமாகுது இல்லையா”
“மேடம் இந்த பொண்ணு செத்து ரெண்டு நாள் இருக்கும் போல இருக்கு. தற்கொலையா கொலையா என்று வேற தெரியல.
ஒருவேளை கொலையா இருந்ததுன்னா… மழை வேற, இதுல எத்தனை தடயங்கள் அழிந்து இருக்கும்னு தெரியல…
குற்றவாளி இந்நேரம் என்ன பக்கத்திலேயே வா இருக்க போறான். அவன் நினைச்சிருந்தா அமெரிக்காவுக்கு கூட தப்பிச்சு ஓடி இருந்திருக்கலாம்”
“அல்லி, ஆரம்பிக்கும் பொழுதே ஒரு நெகட்டிவிட்டியோட ஏன் ஆரம்பிக்கணும்… ஒருவேளை இது தற்கொலையாவே இருந்து, அந்த புள்ள நமக்கு வேலை இல்லாமல் வச்சிருச்சுன்னு நினைச்சுக்கலாம்” என்றார் கிரேஸ்
“கிரேஸ் நமக்கு வேலை இல்லாம இருக்கணும் அப்படின்றதுக்காக இந்த மாதிரியெல்லாம் நினைக்க கூடாது”
“வேற என்ன மேடம் நினைக்கிறது… ரெண்டு நாளா எனக்கு ஜுரம். இன்னைக்கு தான் ஸ்டேஷனுக்கு வந்தேன். இப்படி மழையில அலைய விட்டா என் உடம்பு என்னத்துக்கு ஆகிறது”
“அப்படியெல்லாம் லேசுல விட்ற முடியாது. நல்லா யோசிங்க, தற்கொலை பண்ணிக்கறதுக்கு எவ்வளவோ வழி இருக்கும்பொழுது இந்த பொண்ணு ஏன் ஆள் நடமாட்டமே இல்லாத இந்த குளத்துக்கு பக்கம் இருக்கிற மரத்துக்கு வந்து தூக்கு மாட்டிகிட்டு தொங்குது? லாஜிக் இடிக்கல”
“ஆமா மேடம் கண்டிப்பா இடிக்குது. தூக்க மாத்திரை, பாலிடால், பூச்சி மருந்து, ஃபேன் , ட்ரெயின் இப்படி ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கே”
அல்லி குறுக்கிட்டாள். “பொண்ணு அவ்வளவு உயரம் கிடையாது. இந்த மரம் கொஞ்சம் உயரமாகவே இருக்கு. அவ்வளவு கஷ்டப்பட்டு மரத்திலேயே ஏறி தூக்கு போட்டுக்கணுமா? கண்டிப்பா லாஜிக் இடிக்குது…”
“கரெக்ட் அல்லி… இந்த பொண்ணு உயரத்துக்கு தூக்கு மாட்டிக்கனும்னா கீழ ஸ்டூல் எதுவும் வேணும். எதுவுமே இங்க இல்ல. நீங்க வந்தப்ப எதையும் பாத்தீங்களா?”
“இல்ல மேடம். ஏறி நிக்கிற மாதிரி சேரோ ஸ்டூலோ எதையுமே நாங்க கண்ணுல பாக்கல”
“அப்போ ஒரே சாத்தியம் மரத்து மேல ஏறி, அதுவும் கையில கயிறோட ஏறி, அங்கிருந்து தூக்கு மாட்டி குதிச்சு இருக்கணும்”
“அப்ப மரத்தில ஏறின தடம் இருக்கான்னு பாக்கணும்”
மூவரும் கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொண்டு அங்கிருந்த எவிடன்ஸ் எதையும் களைத்து விடாமல் ஜாக்கிரதையாக அந்த மரத்தை சுற்றி ஆராய ஆரம்பித்தனர். இன்ச் பை இன்ச் ஆக ஆராய்ந்தவர்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.
“தென்னாடனக் கூப்பிடுங்க”
விஜயா மனதில் நினைத்திருந்ததை அப்படியே தென்னாடன் உறுதி செய்தான்
“ஆமா மேடம் நீங்க சொன்னது சரிதான். இந்த பொண்ணு உயரத்துக்கு ஏதாவது ஸ்டூலோ சேரோ மேலே ஏறிதான் தூக்கு மாட்டி இருக்க முடியும்”
“உங்க கணிப்பு என்ன தென்னாடன். நான் நினைக்கிறது தான் நீங்களும் நினைக்கிறீங்களா?”
“ஆமா மேடம். ஒன்னு மேல ஏறி குதித்து இருக்கணும் இல்லாட்டி யாராவது கழுத்துல சுருக்கு போட்டு இந்த மரத்தில தொங்க விட்டுட்டு போயிருக்கணும். இரண்டாவது தான் வாய்ப்பு ஜாஸ்தி”
“நம்மளுடைய யூகம் கோர்ட்டுக்கு பத்தாதே, சாட்சில கேப்பாங்க. அட்டாப்சி ஒன்னு பண்ணிட்டு ரிப்போர்ட்டத் தாங்க பாக்கலாம். டாக்டர்ஸ் எல்லாம் வந்துட்டாங்களா”
“எப்பயோ வந்துட்டாங்க மேடம்”
“அப்புறம் ஏன் வெயிட் பண்றீங்க ஆரம்பித்து இருக்கலாமே”
“இந்த ரெண்டு பாடி மட்டும் இருந்தா பரவால்ல மேடம்… அங்க பாருங்க” என்று காண்பித்த இடத்தில் மூட்டைகள் சில வைத்திருந்தார்கள். குறைந்தது 10 மூட்டையாவது இருக்கும்.
“என்னது இது?”
“அதைத்தான் மேடம் ஆராய்ஞ்சுட்டு இருக்கோம்”
ஓ இந்த மூட்டை எல்லாம் பார்த்து தான் தோண்ட தோண்ட பிணம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்களா
இது என்ன புது தலைவலி என்பது போல் கடுப்பாக இருந்தது விஜயாவுக்கு

Leave a Reply