தாமரை குளம் – 4

அத்தியாயம் – 4

விடாது தூறும் தூறலின் நனைந்து சிகப்பு மற்றும் மஞ்சள் செம்பருத்திகள் தங்களது மேனியை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தன.

நந்தியாவட்டம் தன தனது வாசனையை சுற்றிலும் பரப்பிக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் காப்பாற்றும் கடமை எனக்குத்தான் என்று பனை மரங்கள் கிராமத்து வீடுகளை சுற்றிக் காவல் காத்தன.

அவற்றுக்கு சற்றும் குறையாது பின்னால் இருந்த வாய்க்கால்களின் அருகே தென்னை மரங்கள் அணிவகுத்து நின்றன.

இவைகள் ஒன்றை கூட கண்டு ரசிக்கும் மனநிலையில் விஜயா இல்லை. அவரது மனம் முழுவதும் அடுத்து என்ன, அடுத்து என்ன என்பதிலேயே குழம்பித் தவித்தது.

என்னவாயிற்று… எத்தனை கொலைகள்… எப்படி என் கண்ணிலும் கருத்திலும் படாது போயிற்று என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு ஒரு மன அழுத்தத்துக்குள் மூழ்கிக் கொண்டிருந்தார்.

“நான் பாத்துக்கிறேம்மா நீ தைரியமா போயிட்டு வா” என்று முத்து மனைவிடம் தைரியம் சொல்லிவிட்டு இரண்டு  மகன்களையும் அழைத்துக் கொண்டு காரைக்குடிக்குக் கிளம்பி விட்டிருந்தார்.

விஜயாவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

‘என்ன பொழப்பு இது. ஒரு நாள் சந்தோஷமா இருக்க முடியுதா… நம்ம மாமியார் சொன்ன மாதிரி, ஒரு டீச்சரக் கல்யாணம் பண்ணி இருந்தா மாமா பக்கத்திலேயே இருந்து உடம்பை கவனிச்சிருப்பா… பசங்களுக்கு மூணு வேளை நல்லா பொங்கி போட்டு நல்லபடியா வளத்திருப்பா…

போலீஸ் வேலை,போலீஸ் வேலைன்னு நான் இதக் காதலிக்கிறேன். ஆனா இந்த வேலை பதிலுக்கு என்னை காதலிக்கிற மாதிரி தெரியலையே!

என்ன செஞ்சாலும் சுத்தி சுத்தி என்னையே அடிக்குதே…’

போலீஸ் யூனிஃபார்மை அவசர அவசரமாக எடுத்து அணிந்து கொண்டு வந்திருந்தார். அயர்ன் கூட செய்ய முடியவில்லை. தாமரைக் குளத்திற்கு செல்லும் வழியில் ரோட்டில் யாரோ கை நீட்டி வண்டியை நிறுத்தினார்கள்.

“என்ன கிரேஸ் எங்க நிக்கிற”

பைக் வைத்திருக்கும் ஒரு நபருடன் கைகள் முழுவதும் நாலைந்து பிளாஸ்க் மற்றும் பேப்பர் கப்புகளுடன் நின்று கொண்டு இருந்தார் கிரேஸ்.

“நீ போப்பா தம்பி. ரொம்ப நன்றி நான் மேடம் கூட போய்கிறேன்” என்று பைக் உடன் நின்றிருந்த இளைஞனை அனுப்பி வைத்தார்.

“அங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் டீ வாங்கிட்டு வர வந்தேன் மேடம். இந்தப் பையன் அந்த பக்கம் போனான். பைக்க  நிறுத்தி ஊருக்குள்ள வந்து வாங்கிட்டு போறேன். நீங்க வரதா தகவல் கிடைச்சுது. சரி இந்த பக்கம் தானே நீங்க வரணும் முதல் தகவல் சொல்லிடலாம் அப்படின்னு நீங்க வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

“இந்தாங்க மேடம் முதல்ல ஒரு கப் டீய குடிங்க”

தனக்கு ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு கிரேசுக்கும் இன்னொரு கப்பில் ஊற்றிக் கொடுத்தார் விஜயா.

“சொல்லுங்க கிரேஸ் என்ன ஆச்சு நாலு நாள் வெளியூர்ல போய் நிம்மதியா இருந்துட்டு வர முடியலையே”

“ஆமா மேடம் அதைத்தான் நாங்களும் சொல்லிட்டு இருந்தோம். இப்பதான் கேச முடிச்சுட்டு குடும்பத்தோட ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு  கிளம்புனீங்க. அதுக்குள்ள இந்தா பாருங்க ஒருத்தன் ஏழரை கிளப்பிட்டு போய் இருக்கான்”

“ஏற்கனவே அல்லிட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்லி இருக்கேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்பாட் வந்துரும். அதுக்குள்ளார விவரத்தை கொஞ்சம் சுருக்கமா சொல்ல முடியுமா கிரேஸ்”

“இந்த தாமரைக் குளம் ஏரியா  நம்ம ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் நடுவுல வருது. சோ இது எந்த ஸ்டேஷன் கட்டுப்பாட்டுல வருது அப்படிங்கறதில் எப்பொழுதுமே நமக்கும் அவங்களுக்கும் ஒரு கருத்து வேறுபாடு இருந்துட்டு தான் இருக்கு.

அவங்க இது உங்களோட எல்லைக்குட்பட்டது நீங்க தான் சால்வ் பண்ணனும் நம்ம கிட்ட சொல்றதும், நம்ம இல்ல அவங்களோடது தான்னு அளந்து ப்ரூவ் பண்றதும் காலம் காலமா நடந்துட்டு இருக்கு.

ஆனா நம்ம எல்லாருக்குமே ராஜாராம் சார் தான பாஸ். அவரு உங்களோடதுதான்னு சாதிக்கிறார். அதனால இது நம்ம ஸ்டேஷனோட கேஸ் நம்ப தான் சால்வ் பண்ணனும் அப்படின்னு உறுதியா சொல்லிட்டாரு.

இத முன்னாடியே சொல்லி இருந்தாங்கன்னா கண்டிப்பா நீங்க இந்த பக்கமும் ரோந்து வந்து இருப்பீங்க”

“புரியுது கிரேஸ். இப்ப இது நம்மளோடதுன்னு  தப்பா புரொஜெக்ட் பண்ணுவாங்க. சட்ட ஒழுங்கை சரியா பராமரிக்காமல் குற்றங்கள் பெருகிவிட்டதா என் மேல நடவடிக்கை எடுக்க கூட சான்ஸ் இருக்கு.

இப்ப நடந்த குற்றத்தை பத்தி மேல சொல்லு. எத்தனை பேர் இருந்தாங்க எப்படி இறந்தாங்க”

“நீங்க டைரக்ஷன் கொடுத்து இருக்கீங்க அது தவிர மேல் இடத்தில் இருந்தும் அடிக்கடி காண்டாக்ட் பண்ணிட்டு இருக்காங்க மேடம்.

மீட்பு நடவடிக்கைல எல்லாரும் இருக்காங்க. அதுக்காக கிராமத்திலிருந்து தண்ணீரில் தம் புடிச்சுட்டு நீந்த தெரிஞ்சவங்களக் கூட்டிட்டு வந்து குளத்துக்குள்ள தேடச் சொல்லி இருக்கோம்.

பூரா தாமரை கொடி. காலில் சுத்திக்கும். அதனால நல்ல பழக்கமான ஆட்கள் தேவை. அவங்க எல்லாம் வேலை செஞ்சிட்டு இருக்காங்க இன்னும் உறுதியா எத்தனை எப்படி இது நடந்தது எதையும் சொல்ல முடியல”

“சரி இதை பத்தின தகவல் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது”

“இங்க லாரி டிராபிக் ஜாஸ்தி மேடம்.  போவாங்க அதுல யாரோ ஒரு   லாரி டிரைவருக்கு வயித்த கலக்கி இருக்கு. பக்கத்துல குளம் இருக்குது அப்படின்னு இங்க ஓரமா லாரி நிறுத்தி இருக்கான். அப்பத்தான் பாடிய பார்த்து இருக்கான்.”

“உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லிட்டானா”

“அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க. பாடிய பார்த்ததும் அலறி அடிச்சுட்டு ரோட்டுக்கு ஓடி இருக்கான்.  ரோட்ல வந்த டூவீலர் காரனுங்க கிட்ட சொல்லி இருக்கான் போல .அதுல இருந்த ஒருத்தன்…”

“உள்ளூர் காரனா… அவன் தான் சொன்னானா”

“உள்ளூர் காரன் தான்… அவன் நம்ம கிட்ட சொல்லல மேடம். யூடியூப் சேனல் வச்சு நடத்துறவன் கிட்ட சொல்லி இருக்கான்”

விஜயா அதிர்த்தார்

“என்ன சொல்றீங்க கொலை நடந்தா நம்மகிட்ட தானே முதல்ல தகவல் தெரிவிக்கணும்”

“நம்ம கிட்ட தகவல் தெரிவிச்சான். ஆனா நம்ம கிட்ட சொல்றதுக்கு முன்னாடி ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் அந்த சேனலுக்கு தான் கொடுத்திருக்கான். உடனே அவங்களும் நம்ம ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்னாடி எல்லாத்தையும் கவர் பண்ணி ஆராய ஆரம்பிச்சுட்டாங்க”

எப்படி youtube இல் லைவ் அனைவருக்கும் அவ்வளவு விரைவில் சென்று சேர்ந்தது என்று விஜயாவுக்கு புரிந்து விட்டது.

“ரிடிகுலஸ்… எப்படி பொதுமக்கள் இந்த அளவு சென்ஸ் இல்லாமல் இருக்காங்க. போலீஸ் வருவதற்கு முன்னாடி மத்தவங்க வந்தா எவிடன்ஸ் கலைந்து போகறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கே”

“அதை ஏன் மேடம் கேக்குறீங்க… இப்பல்லாம் சிலர் யூட்யூப்ல கன்டென்ஸ் லைட்ஸ் அண்ட் வியூஸ்காக என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்காங்க. கன்டென்ட்காக  காசு எல்லாம் தராங்க.

இந்த அஞ்சு பத்துக்கு இவ்ளோ பெரிய செயலில் சில பொதுமக்களும் கொஞ்சம் கூட யோசிக்காம இறங்கிடறாங்க”

“ஓகே இன்னைக்கு அவன எதுவும் செய்ய முடியாது ஆனா ஃப்யூ டேஸ் கழிச்சு தனியா ஒரு நாள் அவனை கூட்டிட்டு போயி செமத்தியா கவனிச்சு முதல் தகவல் காவல்துறைக்கு தான் தரணும் அப்படின்னு தெளிவா சொல்லிடு.  இதில் என்னென்ன குழப்பம் நடந்திருக்கோ தெரியலையே கிரேஸ்”

“ஆமா மேடம் நிறைய குழப்பம் நடந்திருக்கு. பல கொலைகள் நடந்திருக்கிற மாதிரி தெரியுது. எங்க ஆரம்பிக்குது எங்க முடியுது அப்படின்னு எங்களால சரியா சொல்ல முடியல. ஃபாரன்சிக்ஸ்லருந்து இன்வேஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்காங்க”

“அவங்க உடனே வந்துட்டாங்களா”

” எஸ் மேடம், கேஸுக்காக தென்னாடன் கோர்ட்டுக்கு வந்திருந்தாரா, அல்லியும் நம்மை ஏட்டும் வேற கேஸுக்காக கோர்ட்டு போயிருந்தாங்க. அங்கிருந்து தென்னாடன கையோடு கிளப்பி கூட்டிட்டு வந்துட்டாங்க.

அவர் வந்தது கொஞ்சம் தெம்பா இருக்கு அவங்க டீம் உடனே வந்துருச்சு டாக்டர் வந்திருக்காங்க”

அதற்குள் சம்பவம் நடந்த இடம் வந்து விட, மழையின் நடுவே கீழே இறங்கினார் விஜயா

‘ஏற்கனவே தண்ணீர் அருகே  உடல், இதில் மழை வேறு பெய்கிறது. எவிடன்ஸ் எல்லாமே சொதப்புமே’ என்று கவலையுடன் ஸ்பாட்டுக்கு சென்றார் விஜயா.

அவரை மேலும் முன்னேற விடாதவாறு மூக்கருகே மைக்கை நீட்டி

“மேடம் இத்தனை கொலைகள் நடந்திருக்கு, நீங்க எல்லாம் என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? படுத்து தூங்கிட்டு இருக்கீங்களா?

போலீஸ் என்பது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தானே? எங்க உயிருக்கு இப்ப உத்தரவாதம் இல்லாமல் போயிருச்சே…

ஒரு சைக்கோ கொலைகாரன் தொடர்ந்து கொலைகள் செய்துவிட்டு வந்திருக்கிறான். இதப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் நீங்க ஊர் சுத்திட்டு வந்து இருக்கீங்க. இந்த பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது”

என்று லைவில் போட்டுவிட்டு கேள்வி மேல் கேட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் அந்த நிருபன்.

“இங்க பாருங்க சார், இப்பதான் நான் ஸ்பாட்டுக்கு வந்து இருக்கேன். இனிமேதான் என்ன நடந்ததுன்னு பார்க்கணும்.

நீங்க பாட்டுக்கு ஒரு யூகத்தில் இது சைக்கோ கொலை, இதுபோல பல கொலைகள் அப்படின்னு சொல்லி வதந்தி எதையும் பரப்பாதீங்க. மக்களுக்கு மனசுல திகிலையும் பயத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று மீடியா பீப்பிளை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விசாரணைக்கு பிறகு நாங்களே பொதுமக்களுக்கு விவரங்களை சொல்வோம். அதுவரைக்கும் எங்களது கடமையை செய்ய விடுங்க”

அருகில் இருந்த போலீசாரை அழைத்தவர்,

” என்ன இப்படி இருக்கீங்க. பப்ளிக் எல்லாரையும் தள்ளி நிக்க சொல்லுங்க. யாரா இருந்தாலும் அதான் அந்த ரோட்டுக்கு அந்தாண்ட தான் நிக்கணும்”

கூட்டத்தில் ஒருவன் “அந்தம்மா பொட்டி வாங்கி இருக்கும்” என்று என்று கத்த

“போலீசார் தங்களது கடமை என்ற பேரில் அடக்கு முறையை கையாள ஆரம்பித்து விட்டனர். இதுவரைக்கும் டிரான்ஸ்பரண்டாக இருந்த இந்த இன்வெஸ்டிகேஷன் இப்பொழுது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த வண்ணம் மறைக்கப்படுகிறது.

அதுவும் இந்த விஜயா இருக்கிறாரே யாரோ ஒரு முதலாளிக்கு விசுவாசமாக வேலை செய்ததன் காரணத்தினால் இங்கே மாற்றப்பட்டவர் அவர்தான் இந்த கேசுக்கு இன்சார்ஜாம். இனிமேல்  இதில் உண்மை தன்மை இருக்குமா தெரியவில்லை” என்று நிரூபன் தனது லைவைத் தொடர்ந்தான்

தனது பொறுமையை கையில் பிடித்தவாறு பாடி கிடந்த இடத்திற்கு சென்றார் விஜயா.

நடந்தது அனைத்தையும் பார்வையிட்டவாறு  தாமரை குளத்தின் கரையின் அருகே இருந்த உயர்ந்த மரத்திலிருந்து தொங்கிய கயிற்றை கழுத்தில் சுருக்கிட்டவாறே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது அந்தப் பெண்ணின் பிணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page