அத்தியாயம் – 3
கோவளத்தின் ஈரப்பதம் கலந்த இதமான குளிர் காற்று விஜயாவின் மேனியை தழுவியது. அந்தப் பாறையின் மீது மழைத்துளிகள் விழுந்ததைப் பார்த்த பொழுது, கரிய மேகத்தை உடலாகக் கொண்ட வானமகன் தனது திராவிட இதழ்களை குவித்து, மழையாகிய முத்தத் தூதினை தனது கடல் காதலிக்கு அனுப்பியது போல அவ்வளவு அழகாக இருந்தது.
விஜயா முகத்தை அண்ணாந்து நாக்கை நீட்டி அந்த மழைத் துளிகளை ருசித்தார்.
“ஐய… மழ தண்ணிய போய் குடிக்கிறீங்களேம்மா… அழுக்கு தண்ணி” என்றான் கதிர்வேல்.
“ஏன்டா நேத்து நேத்து போய் பானி பூரி சாப்பிட்டு வந்தீங்களே… அதுல ஊத்துன தண்ணி எங்கிருந்து புடிச்சதுன்னு உனக்குத் தெரியுமா?மினரல் வாட்டர் ஊத்தியா அதை சமைக்கிறாங்க.
என்னைக்காவது சில கடைகள்ல பாத்திரத்தை கழுவுற தண்ணி, சமைக்கிற தண்ணி எல்லாம் நீ பார்த்து இருக்கியா?
அதை விடு நீ ஆசையா சாப்பிடுவியே காலிஃப்ளவர் பஜ்ஜி அந்த காலிபிளவரை எத்தனை கடையில நல்லா கழுவிட்டு சமைப்பாங்கன்னு நீ பார்த்து இருக்கியா”
“எம்மா விட்ருமா… தெரியாம கேட்டுடேன்மா. உன்னால எனக்கு பானி பூரி சாப்பிடுற ஆசையே போயிருச்சு”
“டேய் உனக்காவது பானி பூரி,எனக்கு கடையில சாப்பிடற ஆசையே போயிருச்சுடா. எம்மா நைட்ல இருந்து நீங்களும் அப்பாவும் சேர்ந்து சமச்சிடுங்க. நாங்க ரெண்டு பேரும் கடையில காய்கறி வாங்கிட்டு வந்து நல்லா கழுவி அரிஞ்சு கொடுக்கிறோம். சரியா”
“ஏண்டி, பசங்களே நான் வெந்தும் வேகாததுமா சமைச்சு போடுறத கஷ்டப்பட்டு சாப்பிடுறாங்க. ஏதோ ஒரு வாரம் நல்ல சாப்பாடு சாப்பிடட்டுமேன்னு பார்த்தா, டூர் வந்த இடத்திலேயே என்னை சமைக்க வப்ப போல இருக்கு”
செல்லமாக மனைவியை கடிந்து கொண்டார் முத்துவேலன்.
“சேச்சா அப்பா சூப்பராவே சமைப்பாருமா. என்ன சோறு அப்பப்ப குழைச்சுவிட்ருவாரு. அது தவிர தயிர் வப்பாரு, அப்பளம் பொரிப்பாரு, முட்டை வேக வச்சுக் கொடுப்பாரு. இப்படி ஏகப்பட்ட வெரைட்டி கைவசம் வச்சிருக்காரு”
“வெற்றி, தோசைய விட்டுட்டியேடா… ஆனா மாவு, கடையில் வாங்கிட்டு வரணும். இல்லாட்டி அவ்வளவுதான் அதுவும் சொதப்பிக்கும்”
“தோசைக்கு என்னடா தொட்டுக்குவிங்க? உங்க அப்பாவுக்கு சாம்பார் சரியா செய்ய வராதே”
“அதுதான் நீ ஒரு கிலோ இட்லி பொடி அரைச்சு வச்சியே… அத வச்சுக்கிட்டு ஆளுக்கு நாலு தோசை சாப்பிடுவோம்”
“இட்லி பொடி தீந்துருச்சும்மா. இந்த தடவ ஊருக்கு போறப்ப அரச்சு கைல கொடுத்துவிட்டுடுமா. கடையில வாங்குனதுக்கெல்லாம் எங்களுக்கு பிடிக்கவே இல்லை வயிறு வலி வருது”
“அரச்சு தரேன் தங்கம்” என்று சொல்லும்போதே கண்களில் ஈரம் துளிர்ப்பதை விஜயாவால் தவிர்க்கவே முடியவில்லை
குழந்தைகள் விளையாட்டு ஆர்வத்தில் அதனை கவனிக்காவிட்டாலும் முத்து கவனித்து விட்டார்
“இப்ப ஏன் நீ கண்ண கசக்குற… எங்களுக்கு கஷ்டமா இருக்கா…”
“இல்லைங்க நான் வீட்டுக்கு வரதுக்கு நேரமே இல்ல. கேஸுங்கெல்லாம் மலை மாதிரி குமிஞ்சு கிடக்கு. வெற்றிக்கு கண்ண மூடி திறக்கறதுக்குள்ள பரிட்சை வந்துரும். நான் கூட இருக்கவே முடியல நான் பக்கத்துல இருந்தா அவனுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும். வளர்ர வயசு பசங்களுக்கு நல்ல ஊட்டமா சாப்பாடு சமச்சுக் கொடுக்கலாம்.
சொந்தக்காரங்க கிட்ட உதவின்னு கேட்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி சம்பாதிப்பீங்க.நாங்க உங்க கடமை எல்லாம் ஏத்துக்கணுமா அப்படின்னு வாய் கூசாம பேசுவாங்க. சொந்தக்காரங்கன்ன எங்கம்மாவையும் உங்கம்மாவையும் சேர்த்து தான் சொல்றேன்.
இதெல்லாம் என் மனச கொத்தி புடுங்குதுங்க. இந்த கஷ்டம் போதாதுன்னு வேலையில வேற வச்சு செய்றாங்க. பேவரிட்டசம் அதிகம். மெண்டல் டார்ச்சர்ன்னா என்னன்னு காமிக்கிறாங்க”
நான்கைந்து மாதங்களாக பேசக்கூட ஆளின்றி மனதுக்குள் புதைத்து வைத்திருந்ததை விஜயா கணவரிடம் கொட்டி தீர்த்து விட்டார்.
“இங்க பாரு விஜயா முடிஞ்ச வரைக்கும் வேலைய பாரு. உடம்பு மனசும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கணும்னு அவசியம் கிடையாது. ரொம்ப தொந்தரவா இருந்த ஒரு கடுதாசி எழுதி கொடுத்துட்டு கிளம்பி வந்துகிட்டே இரு. என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்”
இது இந்த தைரியம் தான் ஒரு ஆண்மகனிடம் பெண் எதிர்பார்ப்பது. ‘விட்டுட்டு வாம்மா… நம்ம எல்லாத்தையும் பாத்துக்கலாம்… நான் உன்னை கவனிச்சுக்கிறேன்…’ என்று சொல்லும் வரம் எத்தனை பெண்களுக்கு கிடைக்கும் விஜயா மனதுக்குள் மகிழ்ந்தார்.
“கடுதாசி குடுத்துட்டு வந்துடலாங்க ஆனா போலீஸ் புத்தி ரத்தத்திலேயே ஊறிப் போய் கிடக்கு. இப்ப கூட பாருங்க அங்கு ஒருத்தன் பர்ஸ் திருடுறதுக்கு சந்தர்ப்பத்தை பார்த்துட்டு இருக்கான்.
அந்த கல்லு மேல நிக்கிறானே இன்னொருத்தன், அவன் பொண்ணுங்க புரோக்கர். இப்படி எங்க போனாலும் என் கண்ணுல அங்க நடக்குற குற்றங்களா தட்டுப்படுது.
என்னால வாழ்க்கையில மத்தவங்கள மாதிரி சந்தோஷமா, சமூகத்தில் நடக்கிற குற்றங்கள் எதுவுமே கண்ணில் படாமல், ‘இக்னரன்ஸ் இஸ் எ ப்லிஸ்’ அப்படின்ற மாதிரி இருப்பேனான்னு தெரியல.
இதெல்லாம் பாக்குறப்ப போலீஸ் துறை எனக்கு ஒரு வேலை இல்லை. என்னோட வாழ்க்கையே அது தான் அப்படின்னு தோணுது மாமா”
” உன் மனசுக்கு பிடிச்சத நீ செய். ஆனா ஒன்னு, உலகத்துல முக்கால்வாசி பேர் தனக்கு மனசுக்கு பிடிக்கிறது செய்றது இல்ல. ஏதோ ஒரு கட்டாயத்துக்காகவோ இல்ல பொருளுக்காகவோ இல்லை புகழுக்காகவோ வேற வழியே இல்லாம இப்ப செஞ்சிட்டு இருக்கிற வேலையை தொடருறாங்க.
அந்த மாதிரி ஆளுங்களுக்கு காதலோடு கடமையை செய்ற உன்னை பார்க்கும் பொழுது கடுப்பாகும். உன்னையும் அவங்க லெவலுக்கு கீழ இறக்கத்தான் பார்ப்பாங்க. அதனால கவனமா இரு”
” இந்த விரிந்து பறந்து உலகம் எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம். நம்ம ஒவ்வொருத்தருக்கும் அடுத்தவங்கள காயப்படுத்தாமல் நம்ம விருப்பப்படி வாழ்வதற்கு எல்லா உரிமையும் இருக்கு”
“உன் மேலதிகாரிகள் எல்லாம் அப்படி நினைக்கிறது இல்லையே”
“அதை அந்த முருகன் கிட்ட விட்டுட்டேன் அவன் பார்த்துப்பான்”
அப்படி சொல்லிவிட்டாரே தவிர அடுத்த சில நிமிடங்களில் அவரை நிலைகுலையச் செய்யும் சம்பவம் நடக்க ஆரம்பித்தது.
“மழை ரொம்ப வர ஆரம்பிக்குது வா ரூமுக்கு போகலாம்” இன்று குடும்பத்தினர் அனைவரையும் விடுதிக்கு அழைத்துச் சென்றார் முத்து.
அரைத்து சென்றதும்தான் தனது மொபைலில் ஐந்தாறு மிஸ்டு கால்கள் ராஜாராமிடமிருந்து வந்திருப்பதை கண்டு திகைத்துப் போனார் விஜயா. ராஜாராமிடமிருந்து மட்டுமல்ல அல்லியிடமிருந்து கூட மிஸ்டு கால்கள் வந்திருந்தன.
முதலில் யாருக்கு அழைப்பது என்று யோசித்தவரை மேலும் யோசிக்க விடாமல் ராஜாராமிடமிருந்து அடுத்த அழைப்பு வந்தது.
“என்ன மேடம் விடுமுறை எல்லாம் எப்படி இருக்கு? உங்க வேலை, உங்க கடமை எதுவுமே தெரியாம ஜாலியா குடும்பத்தோட ஊர் சுத்திட்டு இருக்கீங்க போல இருக்கு.”
” என்ன சத்தத்தையே காணோம். லைன்ல தான் இருக்கீங்களா”
” சொல்லுங்க சார். லைன்ல தான் இருக்கேன்”
“என்ன நடந்ததுன்னு தெரியுமா? நியூஸ் எல்லாம் பாத்துட்டு தான் இருக்கீங்களா?”
“சொல்லுங்க சார். எதுவும் முக்கியமான செய்தியை மிஸ் பண்ணிட்டேனா?”
“உங்களுக்கு ஊர் சுத்துறத தவிர வேற ஏதாவது முக்கியமான செய்தி இருக்க முடியுமா… இந்த பொம்பளைங்களுக்கு ஊர் சுத்துறதுக்கும், சண்டை போட்டுக்கறதுக்கும், மேக்கப் பண்ணிக்கிறதுக்கும் தான் நேரம் சரியா இருக்கு. இவங்க எல்லாம் எதுக்காக போலீஸ் வேலைக்கு வந்துருக்காங்கன்னே தெரியல”
“சார் நீங்க சொன்ன வேலையெல்லாம் ஒழுங்கா முடிச்சு, மூணு வாரத்துக்கு உள்ளார கேஸ் சால்வ் பண்ணிட்டு தானே சார் லீவு எடுத்தேன்”
“என்ன வேலை செஞ்சு கிழிச்சயோ… உங்க ஊர்ல நீ சட்ட ஒழுங்க காப்பாற்றின லட்சணத்தை நியூஸ பார்த்தா தெரியுது. லீவ கேன்சல் பண்ணிட்டு ஒழுங்கா டியூட்டில வந்து சேரு”
என்ன நியூஸ் என்னவென்று புரியாமல் குழம்பிப் போனார் விஜயா.
அவரது குழப்பத்திற்கு விடை அளிக்கும் விதமாக அல்லி ஒரு youtube சேனலின் லிங்கை அனுப்பி இருந்தாள்.
ஒரு சிறு பெண்ணை காதல் என்று சொல்லி ஆசை வார்த்தை காண்பித்தவனிடமிருந்து காப்பாற்றினாளே, அந்த ஆண்மகனின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருந்தது அவனது சேனலின் வன்மம் கக்கும் வார்த்தைகள்
“நாம் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை மருந்து கொலை கொள்ளை அதிகரித்து விட்டது என்று தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி கவலைப்பட்டிருந்தோம். ஆனால் என்ன செய்வது நமது காவல்துறை ஏவல் துறையாக அல்வா செயல்படுகிறது. இவர்களின் சோம்பேறித்தனத்திற்கு பலியாக இன்று கொத்துக்கொத்தாக உயிர்கள் போயிருக்கின்றன.
பல பெண்களும் குழந்தைகளும் ஒரு பக்கம் காணாமல் போயிருக்க, இன்னொரு பக்கம் யாரோ ஒரு சீரியல் கில்லர் ஒவ்வொருவரையாக கொன்று குளத்தில் பிணத்தை எறிந்து விட்டு சென்றுள்ளான்.
நாட்டில் சட்ட ஒழுங்கு என்ன செய்கிறது? காவல்துறைக்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்குவது தான் வேலையா? குற்றங்களை முன்னரே கண்டுபிடிக்காது, சரிவர துப்பு துலக்க துப்பில்லாத தமிழக காவல்துறை”

Leave a Reply