அத்தியாயம் – 22
விஜயா அல்லியிடம் “ராஜி வீட்லேருந்து கைப்பற்றிய பணம், அப்பறம் என்னமோ துண்டு சீட்டு கிடைச்சதுன்னு சொன்னியே அதெல்லாம் பாத்தியா அல்லி”
“பாத்தேன் மேடம். நமக்கு ஒரு நல்ல நேரம் என்னென்னா அந்த நோட்டு கட்டை பாத்தா பேங்கில இருந்து எடுத்த மாதிரி தோணுது. தூத்துக்குடி கிளம்புறதுக்கு முன்னாடி ராஜி எடுத்திருக்கலாம் இல்லை அவளுக்கு வேற யாராவது ட்ராப் பண்ணி தந்திருக்கலாம். அது பத்தின தகவல்களை சீக்கிரம் சொல்லுங்கன்னு கேட்டிருக்கோம்”
“அந்தத் துண்டு காகிதம்”
“அது ஏதோ விலாசம் போலிருக்கு. ஜெயா ஸ்டோர்ஸ் அப்படின்னு ஆரம்பிக்குது அதுக்கப்பறம் அப்படியே நஞ்சு கிழிஞ்சு போயிருக்கு. சென்னைல எத்தனையோ ஜெயா ஸ்டோர்ஸ். எங்கிருந்து கண்டுபிடிக்கிறது?”
“உண்மைதான்”
அதற்குள் தகவல்கள் வந்ததற்கு அடையாளமாய் பீப் ஓசை வர, தென்னாடன் கணினியை நோக்கி ஓடினான். விஜயாவும், அல்லியும் ஆவலாய் அவனை பின் தொடர்ந்தார்கள்.
“மேடம்… ராஜியோட அந்த பட்டன் போனிலிருந்து ரொம்ப குறைவாத்தான் மெசேஜ் போயிருக்கு. ஆப் பண்ணிருவா போலருக்கு. ஆனால் கடந்த மூணு வருஷத்தில் பத்து பதினஞ்சு தடவை எண்ணூர் பக்கத்து சிக்கனலில் சிக்கிருக்கு”
“வெரி குட். அவளோட இன்னொரு போன் அந்த சமயத்தில் எங்க இருந்தது?லொகேஷனை பாருங்க”
அவளது ரெகுலர் போனை கால்ஸ் தகவல்களை சிரத்தையாக நோண்டினார்கள்
“சரியான கிரிமினல். தினமும் வீட்டிலிருந்து கிளம்பின கொஞ்ச நேரத்தில் அவளோட போனை ஆப் பண்ணிருக்கா. அப்பறம் மறுபடியும் வீட்டுக்கு வரும்போதுதான் ஆன் பண்ணிருக்கா”
“இதுக்கு புருசன்கிட்ட ஏதாவது விளக்கம் தந்திருப்பாளே”
“ஆமாம் மேடம். ஆபிஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டாம் மொபைலை ஆப் பண்ணிட்டு லாக்கரில் வச்சுரணுமாம். எதுவும் முக்கியம்னா மெயில் பண்ணுங்கன்னு சொன்னாளாம். அந்தக் கோட்டி இவ என்ன சொன்னாலும் நம்பிருக்கான். ”
“வீட்டையே அவளுக்கு ஏத்த மாதிரி தயார் பண்ணிருக்கா…” என்றான் தென்னாடன்.
இதுவரை அவளை பற்றி ஒரு கருத்து கூட சொன்னதில்லை அவன். இப்போது சொல்கிறான் என்றால் எதோ ஒன்றினை பற்றி நன்றாக அறிந்திருக்கிறான் என்று பொருள்.
தேடிக்கொண்டே இருந்தவன் கடைசியாக கண்டு பிடித்துவிட்டான் “இது க்ளூ கிடைச்சிருச்சே… பட்டன் போன் ஆன் ஆனா பதினஞ்சு எண்ணூர் லொகேஷனில் இவளோட ரெகுலர் போன் எங்கிருக்குன்னு தேடினேன். ரெண்டு மூணு தடவை ஆப் பண்ண மறந்துட்டா போலருக்கு. ரெண்டும் ஒரே லொகேஷனை காமிக்குது”
“ஆக.. எல்லாரும் சாப்ட்வெர் கம்பெனின்னா ஓஎம்ஆர், ஈசிஆர்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப, இவை எண்ணூர் பக்கம் போயிருக்கா… ரெகுலரா போயிருக்கான்னா அங்க ஏதாவது ஒரு லொகேஷனுக்கு தினமும் போனான்னு அர்த்தம். பேசாம அந்த இடத்துக்கு கிளம்பலாம்”
“மணி எட்டரை கூட ஆகல. போயி பாத்துரலாம் மேடம்”
கதவை யாரோ தட்ட, திறந்தால் சோலைமலை நின்றிருந்தார்.
“நீங்க டூட்டி முடிச்சுட்டு போயிட்டிங்கன்னு நினைச்சேன் சோலைமலை”
“நைட் டூட்டி மேடம். இந்த வாரம் முழுக்க உங்க டீமோடதான். நாளான்னைக்கு உங்க ஆதாரம் கோர்ட்டிலிருந்து உங்க கைக்கு கிடைச்சுரும்னு நினைக்கிறேன். உங்களை ஊருக்கு அனுப்பிட்டுத்தான் ரெகுலர் டூட்டி”
“நீங்க வந்ததும் நல்லதா போச்சு. நாங்க இப்ப ராஜி கேஸ் விஷயமா எண்ணூருக்கு கிளம்பிட்டு இருக்கோம். எங்களுக்கு இந்த ஏரியா புதுசு. உங்க ஹெல்ப் இருந்தா சீக்கிரம் இடத்தை நெருங்கிறலாம்”
“தாராளமா.. வாங்க மேடம்”
“தென்னாடன் என்னமோ க்ளூ கிடைச்சிருக்குன்னு சொன்னிங்களே… “
“அது மனுசப்பயலோட சைக்காலஜிதான். ஆனால் இப்ப நமக்கு ஒரு சாலிட் க்ளூ கிடைச்சிருக்கு. முதலில் எண்ணூருக்கு போயி என்ன கிடைக்குதுன்னு பாக்கலாம் மேடம். அதுக்கப்பறம் இந்தக் கதை எங்க ஆரம்பிச்சு எப்படி முடியுதுன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டுறலாம்”
“அதுவும் சரிதான்”
கூகிள் மேப்பின் உதவியால் ராயபுரம் ஏரியா தாண்டி எண்ணூர் நோக்கி விரைந்தது அந்த கார். எண்ணூர் அனல் மின் நிலையத்தின் ராட்சத புகைபோக்கிகள் தூரத்தில் தெரிய ஆரம்பித்தபோது, நகரின் சத்தம் குறைந்து கடல் காற்றின் உவர்ப்பு மணம் வீசத் தொடங்கியது. துல்லியமான விலாசம் இல்லாததால், மொபைல் சிக்னல் காட்டிய இடத்தை வைத்து, புதர்கள் மண்டிய ஒதுக்குப்புறமான பகுதிக்குள் காரைச் செலுத்தினார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருட்டில் தனித்தனி வீடுகள் நின்று இதில் ஒன்றில் உங்களுக்கு வேண்டிய தகவல் இருக்கிறது என்றது.
“சரியான ஏரியா… இதில் கம்பெனி இருக்குறதுக்கான அடையாளமே இல்லையே”
பேசிய வண்ணம் அங்குமிங்குமாக காரில் அலைந்தனர்.
“காரை நிறுத்துங்க… “ அல்லியின் அவசரமான குரலில் கார் உடனே நிறுத்தப்பட்டது.
“அந்த பாருங்க” என்று அவள் காட்டிய இடத்தில் மங்கலான வெளிச்சத்தில் மின்னியது ஜெயா ஸ்டோர்ஸ் என்ற பெயர் பலகை.
“அந்த காகிதத்தில் கிடைச்ச ஜெயா ஸ்டோர்ஸ் இதுவா இருக்குமோ” என்று அல்லி சொல்ல
“கண்டிப்பா இருக்குறத்துக்கான எல்லா லட்சணமும் இருக்கு. இந்த அத்துவான காட்டில் எதுக்கு பேன்ஸி ஸ்டோர்ஸ். அதுவும் கலர் கலரா ரிப்பன அடுக்கி வச்சிருக்கான்”
“நான் போயி விசாரிக்கிறேன்” என்று அல்லி இறங்கினாள்.
“நில்லு நானும் வரேன்” என்றபடி இணைந்து கொண்டான் தென்னாடன்.
அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்கள் போல சென்று விவரங்கள் கேட்க, அங்கிருந்த ஒரு தாடிக்காரன் அவர்களை துரத்திவிடுவது போலவே பதிலளித்தான்.
தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர் விஜயாவும் சோலைமலையும்.
“அந்த கடைக்காரன் சரியில்லையே”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். கண்டிப்பா என்னவோ மறைக்கிறான். வாங்க மேடம் நாமளும் போயி பாக்கலாம்”
கடைக்கு வந்த போலீஸ் சீருடையை பார்த்து குரலை தணித்தான் கடைக்காரன்.
“பேரு என்னடா”
“போஸ்”
“ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் பேன்சி ஸ்டோர். ஒரு நாள் உங்களை வெளுக்குறேன். இப்ப மேடம் கேட்ட தகவலை சொல்றியா இல்லை ஸ்டேஷனுக்கு வர்றியா”
“சொல்றேன் சார்”
ரித்திக் தந்திருந்த ராஜியின் புகைப்படத்தை காட்டினார். “இந்தம்மாவை பத்தி தகவல் வேணுமே”
“தெரியாது” என்று அழுத்தமாய் சொன்னவனை ஒரு வினாடி பார்த்தார் சோலை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று பெண் போலீஸ் இருவருக்கும் அந்த போலீஸ் மொழி புரிந்தது.
சோலை செவுளில் ஓங்கி ஒன்று விட்டார். போஸின் ஒரு பக்க காதில் ஏதோ கொய் என்று சத்தம் போட்டது. கழுத்து சுளுக்கி விட்டது மாதிரி தெரிந்தது, அத்துடன் மூக்கில் ஈரமாய் ரத்தம் எட்டி என்ன நடக்கிறது என்று பார்த்தது.
“உன் கடைல இந்தம்மா ரெகுலர் கஸ்டமர்னு வரைக்கும் எங்களுக்கு விவரம் தெரியும். இப்ப சொல்லு”
சும்மா போட்டுத்தான் வாங்கினார்.
“ரெகுலர் கஸ்டமர் எல்லாம் இல்லை சார். அப்பப்ப பொருட்களை வாங்கி இங்க வைப்போம் டெலிவரி எடுத்துக்குவாங்க. அவ்வளவுதான்”
என்ன பொருள் வாங்குவா? என்ன டெலிவரி? போதை மருந்து எதுவும் இருக்குமோ என்ற சந்தேகம் அல்லிக்கு சில வாரங்களுக்கு முன்னால் நடந்த கேஸிலிருந்து அவள் இன்னும் முழுவதுமாக வெளிவந்திருக்கவில்லை. இருந்தாலும் என்ன பொருள் என்றே தெரியாமல் மேல் அதிகாரிகள் எப்படி விசாரிக்கிறார்கள் என்று ஆர்வமாய் கவனித்தாள்.
“ஓஹோ… பொருட்களை கொடுக்க வாங்க இருந்திருக்கிங்க. சரி டெலிவரி எல்லாம் எப்படி”
“கேஷ் தான் சார்” எதிர் பார்த்ததுதான்.
“எப்படி அவங்களே எடுத்துட்டு போயிருவாங்களா?”
“லைட் வெயிட்டா இருந்தால் அவங்களே எடுத்துட்டு போயிருவாங்க. ஒரு தடவை சர்வர மட்டும் நா எடுத்துட்டு போயி செட் பண்ண ஹெல்ப் பண்ணேன்”
ஓ… ஓ… ஓ… ரகசிய பொருட்களை விற்பனை செய்யும் கடையா இது.
சோலைமலையின் காலில் விழுந்து, போஸின் கையைப் பிடித்துக் கொண்டு ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா’ என்று பாடாத குறைதான் அல்லிக்கும் தென்னாடனுக்கும்.
“சரி நீ இப்ப கடையை மூடிட்டு, எங்க கூட வந்து அந்த வீட்டில் சர்வரை காமிக்கிற… “
“இவ்வளவு திருட்டுத்தனம் பண்ற உங்களுக்கு திருட்டு சாவிக்கொத்தும் இருக்குமே அதையும் அப்படியே எடுத்துட்டு வந்துடு போஸ்”
வீட்டை தெரியாது என்று சொல்லாமல் நேக்காக வேலை வாங்கி அப்படியே போஸை கிளப்பிக் கொண்டு மூன்றாவது தெருவில் அமைதியாக உறங்கும் அந்த சிறிய வீட்டினை அடைந்தார்கள்.
மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் காணாது மழையிலும் வெயிலிலும் கறை படிந்த வெளிப்புற சுவர்கள். வீட்டை சுற்றிலும் புதர் மண்டியிருந்தது.
“ராஜியை மாதிரியே இந்த வீடும் மர்மம் நிறைஞ்சதா இருக்கில்ல” என்று பேசியபடி, ஒன்றிரண்டு இடங்களில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர் அனைவரும்.


