அத்தியாயம் – 20
இரவு நேரத்தில் வடபழனி குமார் மெஸ்ஸில் கேங் ஒன்று கூடியிருந்தது.
பிரியாணி, கோலா உருண்டை, கறி தோசை, நண்டு ஆம்ளேட் என்று சர்வர் ஆர்டர் எடுத்து செல்ல,
“மேடம்… நீங்க இட்லியை விட்டா தோசை தவிர என்னைக்காச்சும் ப்ரோட்டா சாப்பிட்டு பாத்திருக்கோம். பிரியாணி, கறிதோசை எல்லாம் சாப்பிடுவிங்களா” அல்லி ஆச்சிரியமாக கேட்க.
“உன் வயசில் ஒவ்வொரு வேளையும் முட்டையாவது சாப்பாட்ல வேணும். மதுரைல டூட்டி பாத்துட்டு இருந்தப்ப கோனார் மெஸ், அம்சவல்லி, சந்திரன் மெஸ் மாசத்துக்கு ரெண்டு தரம் இதில் எங்கயாவது போயிருவோம்”
சோலைமலை இணைந்து கொண்டார். “எங்கப்பா அழகர் கோவில் கானகத்துறைலதான் வேலை பாத்துக்கிட்டிருந்தார். மஞ்சம்பட்டிலதான் வீடு. எதுனா திருநாள் வந்தா மருதைக்கு போலாம் வாங்கடான்னு பஸ்ஸில் ஏறி கிளம்பிருவார். பத்தாப்பு பண்டெண்டாப்புல நல்லா மார்க் வாங்கினா எங்க எல்லாருக்கும் கோனார் கடைல கறிதோசை. அப்பல்லாம் சின்ன கடை. கூட்டம் அள்ளும். காத்திருந்து சாப்பிடணும். ரோட்டுல நின்னு ஸ்கூட்டர் மேல சைக்கிள் மேல உக்காந்து எல்லாரும் சாப்பிடுவாங்க”
“அதெல்லாம் ஒரு காலம். கறிதோசையோட கண்டுபிடிப்பாளர்களே அவங்கதானே. ஆனாலும் எங்க வீட்ல முட்டை தோசைதான் வாங்கி தருவாங்க. அதுதான் கட்டுப்படியாகும்”
மலரும் நினைவுகளில் மூழ்கினார் சோலைமலை. “இப்பயும் எங்கய்யா நினைவு வந்தா மதுரைக்கு பஸ் ஏறிருவேன். நேரா கோனார் கடைக்கு போயி ஒரு கறிதோசை ஒரு முட்டை தோசை. சாப்பிடும்போது எங்கய்யாவே கூட இருந்து ஊட்டி விடுறமாதிரி ஒரு நெனப்பு”
“இப்ப சம்பாரிக்கிறோம். நினைச்சதை வாங்கித் தின்ன முடியும். ஆனாலும் அந்த காலத்தில் என்னைக்காவது ஒரு நாள் சாப்பிட்டதுதான் நினைவில் இருக்கு”
“இப்ப சர்ப்ளஸ். இந்த காலத்தில் உணவு, உடை இதெல்லாம் தேவைக்கு அதிகமா இருக்கும்போது நிறைவு தராம ஒரு வெற்றிடத்தை தருது”
விஜயாவும், சோலைமலையும் மதுரைவாசி நெருக்கத்தில் பழங்கதைகள் பேச, ஊடே இப்போது தலைமுறையான தென்னாடனும் அல்லியும் கேள்விகள் கேட்க, அனைவரும் பேசியபடியே நெருக்கமாகிவிட்டிருந்தனர்.
“போங்க சார். இவ்வளவு பாடு பட்டும் எங்க கேஸை முடிச்சுவிட்டுடாக. ஆதாரங்களை எல்லாம் சீல் வச்சுத் தருவீகளாமே. இதில் என்னத்த துப்புத் துலக்க” அங்கலாய்த்துக் கொண்டாள் அல்லி.
சோலைமலை சிரித்தார் “அல்லி, நாங்க சீஸ் பண்ணி சீல் பண்ணதெல்லாம் வெறும் கருவிதான்”
“அப்படின்னா”
“மொபைல் போனில் இருக்குற எல்லா தகவலும் கிடைக்காம இருக்கலாம். ஆனால் போன, வந்த கால்ஸ், லொகேஷன் இதெல்லாம் சீல் பண்ணி வைக்க முடியாதே…”
“அப்ப… “
“தகவல்களை எல்லாம் உங்க மேடத்துக்கு அனுப்பிட்டேன்”
“தென்னாடன் அதை தேட சில மணி நேரங்கள் கேட்டிருக்கார். நாளைக்கு நாங்க எல்லாரும் ராஜியோட வீட்டுக்கு சர்ச் பண்ணி வேற ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்னு இருக்கோம்”
“நானும் வரேன். அந்த ரித்திக் எனக்கு பழக்கம்தான். அதனால நான் கூட வரும்போது ஒரு நம்பிக்கை வரும். கோ ஆபரேட் பண்ணுவாங்க”
“ரொம்ப தாங்க்ஸ் சோலைமலை”
மறுநாள் ராஜலக்ஷ்மியின் வீடு. இன்னமும் துக்கத்தின் பிடியில் இருந்தது. அதற்கு மேல் இந்த புதிரான மரணம் இறந்தவளின் நம்பகத்தன்மை இதெல்லாம் குடும்பத்தையே குழப்பி அடித்திருந்தன. அவர்களுக்கு பெரிதாக வரவேற்பும் இல்லை எதிர்ப்பும் இல்லை.
அலுமினியம் சிக்கன் மெஷ் போட்ட ஜன்னலை பார்த்துவிட்டு, “தென்னாடா.. கோழிகளுக்கு இந்த உலகம் எப்படி தெரியும்னு இந்த ஜன்னல் வழியா பாத்தாத்தான் புரியுது”
அவளது மண்டையில் லேசாக தட்டியவன் “முதலில் என்ன கிடைக்குதுன்னு பாரு.. இன்னும் 2 மணி நேரத்துக்குள்ள ஏதாவது கிடைக்கணும்”
“எல்லாம் பாத்தாச்சு”
“என்ன பாத்தேன்னு சொல்லு”
“சமையல் ரூமில் உப்பு மஞ்சள் வத்தப்பொடி அரிசி பருப்பு அஞ்சரைப்பெட்டில அவ மாமியார் சேர்த்து வச்சிருக்கிற சிறுவாட்டுக் காசு தவிர வேற இல்ல.
ஹாலில் மூலைல தினமலர் பேப்பரை அடுக்கி வச்சிருக்காங்க. ஒரு வெங்கடாசலபதி படம், ராஜி ரித்திக் கல்யாண படம், பூச்சாடி, சோபா, ஈஸி சேர் இவ்வளவுதான்.
மூணு ரூமில் ஒன்னு மாமியார் மாமனார் இருக்காங்க. அலமாரி பூரா மருந்து மாத்திரை, ஜோசிய புஸ்தகம், பில்க்ரிமேஜ் போகணும்னு ஆசை போலருக்கு எல்லா டிராவல் ஏஜென்ஸிலயும் அது பத்தின பாம்ப்ளெட்ஸ் எடுத்துட்டு வந்து அடுக்கி வச்சிருக்காங்க.
ரெண்டாவது கெஸ்ட் வந்தா போனா தங்கன்னு சொல்றாங்க இருந்தாலும் ஒரு அமைப்பே இல்லாம எல்லா பொருட்களும் இருக்கு. பீரோவை அங்கதான் வச்சிருக்காங்க. நம்ம ரித்திக் துணிமணி கூட இருக்கு. பாத்தா அவன் அங்கதான் பாதி நேரம் தங்குவான் போலருக்கு.
இதோ இந்த மூணாவது ரூம். இருக்குறதுலேயே பெருசு. உள்ள நுழைஞ்சதும் எங்கேயோ பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமுக்கு வந்த மாதிரி இருக்கு. என்ன ஒரு பாஷ். லைட்டை பாரேன். இந்தப்பக்கம் சுத்தினா டிம் ஆகுது, அந்தப்பக்கம் சுத்தினா பிரைட் ஆகுது. பால்ஸ் சீலிங், 2 டன் ஏஸி. ஒவ்வொரு படமும் பாரேன்”
அல்லி சுட்டிக்காட்டிய பெயிண்டிங்கை பார்த்தான். கலர் கலர் கோடுகளாக ஓடின.
“உனக்கு ஓண்ணும் புரியல இல்ல… மார்டர்ன் பெயின்டிங்… எனக்கும் ஒன்னும் புரியல குத்து மதிப்பா எதோ ஒரு பொண்ணு மூஞ்சி போலருக்குன்னு நம்மளே கெஸ் பண்ண வேண்டியிருக்கு “
“உனக்கும் புரியலையா… இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. எங்கேடா நம்ம மூளை மழுங்கிருச்சோன்னு பயந்துட்டேன். புரியாத இந்தப் படத்தயா பத்து நிமிசமா பாத்துட்டு நின்ன?”
“அது எதுக்குன்னா.. இந்த படமெல்லாம் சாதாரணமா இருந்தா கூட லட்சம் விலை சொல்லலாம். ராஜி வச்சிருக்கிற பொருள், உடை எல்லாமே இப்படித்தான் இருக்கு. விலை ரொம்ப அதிகம் ஆனால் சாதாரணமானவங்களுக்கு அதன் உண்மை மதிப்பு தெரியாது. வீட்டு மத்த ரூமும் இந்த ரூமும் எவ்வளவு வித்யாசம் பாரேன். மத்த அறைகள் எல்லாம் ஒரு சாதாரண குடும்பம் மாதிரி இருக்கு. ஆனால் உண்மையான மதிப்பு தெரிஞ்ச நமக்கு இந்த அறை பணத்தாலேயே குளிப்பாட்டிய மாதிரி இருக்கு”
அவள் சொன்னதை அப்போதுதான் உணர்ந்தான் தென்னாடன். மொபைல் ஆப்பை எடுத்து அவளது அறையில் இருந்த பொருட்கள் மாதிரி எவ்வளவு விலை இருக்கும் என்று தோராயமாக கணக்கிட்டான். தேக்கு மரத்தில் செய்த கட்டில், மேஜை நாற்காலி, சாதாரணமானது தோன்றும் இத்தாலியன் டூ சீட்டர் சோபா.
“அல்லி நிஜம்தான் ரூமில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் பார்த்தா 50 லட்சம் வரை செலவு செஞ்சிருப்பா போலிருக்கு. 2,3 வருஷம் மட்டுமே சென்னைல ஐடில வேலைபாக்குற ஒரு சாதாரண பெண்ணுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்? சைபர் க்ரைம்ல இவளோட விவரங்களை பார்த்து இன்னும் முழுசா தோண்டனும்”
குடும்பத்தினரிடம் விசாரணையை முடித்துவிட்டு விஜயா அவர்கள் இருக்கும் ராஜியின் அறைக்கு வந்தார்.
“இந்த வீட்டை பாத்ததிலேயே வீட்டினரோட தன்மையை கணிச்சுரலாம். மிகவும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து இந்த மேல்தட்டு அப்பார்டுமெண்ட்டுக்கு குடி வந்த குடும்பம். இவங்க எல்லாருக்கும் மத்த குடும்பங்களிடம் பழக தயங்கம் இருக்கு. ரித்திக் பொண்டாட்டியோட பணத்தை செமையா அனுபவிச்சாலும் அவ நிறையா பணம் சம்பாரிக்கிறவன்னு ஒரு மனநிலையிலேயே இருந்திருக்கான். பொண்டாட்டி அப்படின்னு உரிமை எடுத்துக்கிறதை விட ஒரு பாசமான வேலைக்காரன் மாதிரி வாழ்ந்திருக்கிறான். ஏகப்பட்ட எஜமான சாரி பொண்டாட்டி விசுவாசம். அவ என்ன சொன்னாலும் நம்பிருக்கான்.
நல்லா சல்லடை போட்டு தேடு அல்லி யாரும் எதிர்பார்க்காத இடத்தில்தான் தடயம் இருக்கும்” என்று குரல் கொடுத்தபடி விஜயாவும் அவர்களுடன் இணைந்து கொள்ள, இன்ச் பை இன்ச்சாக ஆராயத் தொடங்கினர். அப்போதுதான் அல்லவாத்துண்டு போல ஒரு க்ளூ மாட்டியது.


