தாமரை குளம் – 18

அத்தியாயம் – 18

டிவியில் ராஜாராம் “முத்துராமன்… குடிபோதையில் விபத்து… ராஜலக்ஷ்மி குழந்தை இல்லாததால் தற்கொலை…” என்று சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டு சில நொடிகள் அசையாமல் நின்றார்  விஜயா. கையில் இருந்த பேனா தரையில் விழுந்தது.
“இது தான் ‘கேஸ் அப்டேட்’ஆ?”என்று மனது கசந்தது.

விஜயா அடுத்த  முப்பது  நிமிஷத்துக்குள், அலுவலகத்துக்குப் போய் நேரே ராஜாராமின்  அறைக்குள் நுழைந்தார். காலையில் இன்னும் பலர் வராத நேரம். காபி கோப்பை, பத்திரங்கள், டிவியில் மியூட் செய்தி எல்லாம் வழக்கம்போல இருந்தது. ஆனால் வழக்கமில்லாத வழக்கமாக ராஜாராமின் முகத்தில் அமைதி. விஜயாவின் வரவை எதிர்பார்த்திருப்பார் போல

“வா விஜயா,” என்றார் அவர் சிரித்தபடி. “ந்யூஸ் பார்த்தியா?”

விஜயா நாற்காலியில் உட்காராமல் நேராக நின்றுதான் பேசத் தொடங்கினாள்.
“சார், மூணு நாள் கெடு கொடுத்தது நீங்க. இரண்டாவது நாள் தான் இன்று. நாங்க எவ்வளவு பாடுபட்டு வேல பண்ணி இருக்கோம் தெரியுமா? லால் அவரை விபத்தால் மரணம் என்பது போல செட்டப்  பண்ணி கொலை செய்திருக்காங்கன்னு வரைக்கும் நாங்க கண்டு பிடிச்சிருக்கோம். 

அதுக்கு மேல ராஜலக்ஷ்மிக்கிட்டே ஏதோ சீக்ரெட் இருக்கு, அதுகிட்டே நெருங்கிடுவோம்னு நிலைக்கு  வந்துட்டோம். இந்த வாரத்துல குற்றவாளியைப் பிடிக்கலாம் என்று நம்பிக்கையோட இருக்கோம். இப்படியிருக்க, இப்போ நீங்க டிவியில தந்த இந்தப் பொய்யான அறிக்கை. இது தேவையா, சார்?”

ராஜாராம் குரல் சீராக பதிலை ஏற்கனவே தயாரித்து வைத்ததைப் போல வந்தது.
“விஜயா, விக்டர் கண்டிப்பா கொலை செய்யலை.”


“அது எனக்கும் தெரியும், சார். ஆனா உண்மையான கொலையாளி தப்பிச்சிருக்கான் அதை நீங்க மறுப்பீங்களா? இன்னும் ரெண்டு நாள்ல ஏதாவது ஒரு கேஸையாவது நெருங்கிடுவோம். அவனை கைதுசெய்து உங்க முன்னாடியே நிறுத்துறேன். அதுக்குள்ள இதுபோல மடை மாற்றும் அறிவிப்பு எதுக்கு?”


“இந்த கேஸ் உங்க சரகத்திலேயே இல்லை, விஜயா. பக்கத்து ஸ்டேஷன் எல்லை. ஹெட் க்வார்ட்டர் லெவல்ல ஜூரிஸ்டிக்ஷன் மாறிட்டது. அதனால நீங்க இதுவரை சேகரிச்சதை, செஞ்ச வெட்டி வேலை எல்லாம் ப்ராப்பரா ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு, உங்க மற்ற வேலையை கவனிங்க.”

ஒரு கணம் அறை மவுனம். விஜயாவின் கன்னத்தில் சூடு ஏறியது. ஏன்யா இந்தக் கருமத்தை முன்னாடியே செஞ்சிருந்தால் நாங்களாவது பெண்டிங் கேஸை கவனிச்சிருப்போமே.
“சார், ராஜலக்ஷ்மி வீட்ல கைபற்றிய போனும் லேப்டாபும் நான் ரெக்கமென்ட் பண்ணி சீல் வைத்து பாதுகாப்புல வைக்க சொல்லிருக்கேன். வடபழனி ஸ்டேஷன்ல சோலைமலை சீன்-ஆஃப்-கஸ்டடி படிவம் தயாரிச்சாச்சு. அவை பாதிக்கப்படக்கூடாது.”

“அவையெல்லாம் ப்ரொசீஜர் படி ட்ரான்ஸ்ஃபர் ஆகும். பேசாம எவிடென்ஸை செக் பண்ணிட்டு நீங்க எடுத்துட்டு வந்து இங்க ஹாண்ட் ஓவர் பண்ணிருங்களேன்.. ” என்றார் ராஜாராம், 

முகத்தில் மாற்றமின்றி. “ஹாண்ட் ஓவர் மட்டும்தான். மத்தபடி குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் சட்டத்து முன்னாடி நிறுத்துறேன்னு நீங்க டென்ஷன் எடுத்துக்க வேண்டாம். தட்ஸ் இட்”

பெல்லை அடித்து “வெளிய சின்ராசு வெயிட் பண்ணுறாரு, அந்த சிவப்பு சட்டைதான். பஸ் கம்பெனி வச்சுருக்காரே அவரேதான். அவரை வர சொல்லுப்பா” என்றார் ராஜாராம். 

கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று சொல்லும் அந்த இடத்தில் நிற்பது கூட வீண்தான். 

ஏற்கனவே மனக்கொதிப்பில் இருந்தவர் வெளியே வந்தபோது நன்றாக விடிந்து மண்டையில் வெயில் சூடு போட்டது. காவல் நிலயத்திற்கு செல்ல மனம் இல்லை. விஜயாவின் கொதிப்பு அடங்க நேரம் தேவைப்பட்டது. அதனால் நேராக வீட்டிற்கு சென்றுவிட்டார். 

வேக்காடு அடங்க தலையில் நீரை ஊற்றிக் கொண்டு நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு வந்ததும் தான் பசி தெரிந்தது. டீ கடைக்கு போன் பண்ணி ரெண்டு பஜ்ஜியும், நெய் பிஸ்கட்  நான்கும் ஒரு டீயும் கொண்டு வர சொன்னார். 

தலையைத் துவட்டிக் கொண்டே ஜன்னல் வழியாக மதிய சமையலுக்கு மீன் வாங்க மார்கெட்டுக்கு செல்லும் பெண்களைப் பார்க்கும்போது சற்று பொறாமையாக இருந்தது. 

காரைக்குடியில் வீட்டில் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. இப்படி ராப்பகலாக விழித்து வேலை செய்து ரெண்டு தோசை ஊற்றி சாப்பிடுவது கூட பெரிய சாதனையாக இருக்கிறது. 

பிஸ்கெட்டும் வடையும் டீயும் சாப்பிட்டு, தூக்கம் விழித்து பணியாற்றும் போதெல்லாம் யூடியூப் டாக்டர் பால் வேறு நினைவில் வந்து ஏழு மணிக்கு மேல சாப்பிடக்கூடாது, சிர்கார்டியம் ரிதம் அஃபெக்ட் ஆகும், ரத்தம் கொதிக்கும் அதுவும் சக்கரையோட சேர்ந்து கொதிக்கும், அப்படியே இதய நோய் வாம்மா மின்னல் அப்டின்னு வெல்கம் பண்ணும் என்று நினைவூட்டுகிறார். 

என்னைக்காவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சா “டாக்டர் பால் எங்களை மாதிரி நைட் ஷிஃப்ட் ஆந்தைகளுக்கும் ஏதாவது அட்வைஸ் பண்ணுங்கன்னு கேக்கணும். நாங்க தூக்கம் முழிக்கலைன்னா உங்க பேஷண்ட்ஸ் எல்லாம் எப்படி நிம்மதியா எழுமணிக்கே சாப்பிட்டுட்டு ராத்திரி தூங்குறது?”.  

மெதுவாக அலைப்பேசியை எடுத்தார். கணவனின் எண்ணை அழுத்த, அதற்காகவே காத்திருந்தாற்போல மறுமுனையில் எடுக்கப்பட்டது. 

“மாமா…” என்று அவர் மெதுவாகக் கூப்பிட்டார்.

“விஜி எப்டி இருக்கம்மா?”

 “ராஜாராம் டிவியில சொன்னதை பாத்தீங்களா? இறந்த நபர் முத்துராமன்’ ‘குடிபோதையில் விழுந்து மரணம்’ அப்பறம் ராஜலக்ஷ்மி குழந்தை இல்லாததால் தற்கொலை’. நாங்க  எல்லாரும் ராப்பகலா உழைச்சு கண்டுபிடிச்சதை எல்லாம்  ஒரு நிமிஷத்துல கதைனு மாத்திட்டாங்க.”

“நானும் பாத்தேன். இப்படி இடையூறு உனக்கு புதிசில்லை இருந்தாலும் இந்த தடவை அடி பலம். அதுதான் வேலைக்கு போவாம வீட்டில் இருக்கியோ. நான் வேணும்னா ஊருக்கு வந்து உன்னை பாக்கட்டுமா”

பதில் இல்லை  உடனே அவள் என்ன கேட்பாள் என்று புரிந்து கொண்டு “எங்கம்மாவ ரெண்டு நாள் பசங்களை பாத்துக்க சொல்லிட்டு வரேன்”

பெருமூச்சு விட்டார் விஜயா “வேணாம் மாமா. நான் சமாளிச்குக்குவேன்”

“இந்த கேசில் நிறைய துப்பு கிடைச்சிருக்கோ?”

தோண்டி துருவி கேட்கும் வழக்கம் முத்துவுக்கு அறவே இல்லை. விஜயாவும் கோடிட்டு காட்டுவாறே தவிர முழுமையான துப்புக்களை சொல்ல மாட்டார். 

“ஆமாம் மாமா… குற்றவாளி ஜாலியா தப்பிச்சு இந்த உலகில் உலவிட்டு இருக்கான்” சுருக்கமாக ராஜாராமன் சொன்னதை சொன்னார். 

“சரி உன் மேலதிகாரி சொன்னதுக்கு அப்பறம் நம்ம என்னம்மா செய்ய முடியும்.ஆதாரங்களை இப்ப அப்பாயிண்ட் பண்ணிருக்குற அதிகாரி கையில் ஒப்படைச்சுட்டு,  தாமரை குளம் கேசுக்கு முழுக்கு போட்டுட்டு பெண்டிங்க் கேசுகளை கவனிக்க ஆரம்பி”

“பச்… அதை நினைச்சாலே கடுப்பாகுது. கிரேஸ் காய்ச்சலோட வேலை பாத்திருக்கா. அல்லி பீரியட்ஸ், வாந்தி வராப்ல இருந்தும் அடக்கிட்டு எப்படி வந்துச்சு தெரியுமா? தென்னாடன் அவ்வளவு ஹெல்ப் பண்ணிருக்காப்ல… இப்படி ஒரு ஹார்ட் வொர்கிங் கேப்பபில் டீம் இருந்தும் எதுக்கு இவ்வளவு தடைகள்?”

“உனக்கு தெரியாதது இல்லை. உலகத்தில் ஒரு நல்லது நடக்குனும்னா அதுக்கு முன்னாடி ஆயிரம் தடைகளை கடக்கணும்”

“இப்ப என்ன செய்றதுன்னு தெரியல மாமா. அதுதான் உங்க கிட்ட போன் பண்ணி என் ஆதங்கத்தை இறக்கி வச்சேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு பேசுறீங்களா? அதுக்குள்ள என் டைரெக்ஷன தெளிவா யோசிச்சு உங்க கிட்ட சொல்லிடுறேன்”

சரியாக அரைமணி நேரம் கழித்து முத்து அழைத்தபோது விஜயாவின் குரலில் நூறு சதவீத உறுதி 

“இந்த வழக்கை அப்படியே விடப்போறதில்லைங்க. ஜூரிஸ்டிக்ஷன்,ஹாண்ட் ஓவர், ப்ரொசீஜர் எல்லாம் போகட்டும். எனது தனிப்பட்ட முயற்சில  கண்டு பிடிப்பேன். லாலையும், ராஜலக்ஷ்மியையும் யார் பயன்படுத்தினாங்கனு, அதன் வேரை கண்டுபிடிக்காம ஓயமாட்டேன்”

You cannot copy content of this page