அத்தியாயம் – 14
என்ன யாரையுமே கூப்பிடக் கூடாதா
திகைத்து விட்டார் விஜயா.
” சார் நீங்க கேக்குறது உங்களுக்கே நியாயமா இருக்கான்னு பாருங்க? செத்துப் போனது ரொம்ப பெரிய ஆளு… அவர பத்தின தகவல்களை வெளியே தெரிவிக்க கூடாதுன்னு நீங்க கேட்கிறது எங்களோட கடமையை செய்வதற்கு தடை விதிப்பது போல இருக்குது இல்லையா?
அது மட்டும் இல்லாம ஒன்னுக்கு ரெண்டு பேமிலியா வச்சிருக்க லால் எதுக்காக இங்க வந்தாரு? எதனால் தலைமறைவா இருக்காரு? நடந்தது உண்மையிலேயே விபத்தா அல்லது கொலையா? இப்படி பல கேள்விகள் எங்கள் முன்னாடி இருக்கு… இதுக்கான விடைகளை தெரிவிக்க நாங்க கடமைப்பட்டிருக்கிறோம்”
“அதெல்லாம் எனக்கு புரியுது மேடம். நீங்க நினைக்கிற அளவுக்கு அது பெரிய சீக்ரெட் எல்லாம் இல்ல. லால் குடும்பம் கேரளாவில் இருக்கிறதுனால அவங்கள ரகசியமா பாத்துட்டு கொஞ்ச நாள் தங்கியிருந்துட்டு போவான். இங்க வந்துட்டு போற விஷயம் கூட யாருக்கும் தெரியாம ரகசியமா தான் இருக்கு. இப்ப என்னுடைய வண்டியில் போகும் பொழுது அவர் செத்து போயிட்டாருன்னு தெரிஞ்சதுன்னா லாலோட கூட்டாளிகளும் மற்ற ஆளுங்களும் என்னை கட்டம் கட்டுவாங்க”
” உண்மை தானே உங்களுடைய பாதுகாப்பில் இருந்தவரு உங்க வண்டியில் போய் இருக்காரு அப்ப விபத்தில் இருந்து இருக்காரு உங்களை சந்தேகப்படுவது தானே நியாயம் சொல்லப்போனா எங்க சந்தேக லிஸ்டில் நீங்களும் இருக்கீங்க”
“பாருங்க மேடம் ஒன்னு விடாம விஷயத்தை உங்ககிட்ட சொல்றது எதுக்காக… சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலில் விழுகலாம் அப்படின்னுட்டு உங்களை நம்பி எல்லா உண்மையும் சொல்லி இருக்கேன்.
கொலை செய்ற ஆளா இருந்தா முதல் காரியம் என்னுடைய வண்டிய தைரியமாக கொடுத்து அனுப்பி இருந்திருப்பேனா? அது மட்டும் இல்லாம லால் என்ன பாக்க வர்றது இது முதல் முறை அல்ல பல தடவை வந்திருக்காரு அந்த சமயத்துல எங்கேயாவது கூட்டிட்டு போயி போட்டு தள்ளிட்டு பாடிய சத்தம் இல்லாமல் டிஸ்போஸ் பண்ண ட்ரை பண்ணுவேனா… இல்லை நீங்க சீக்கிரமா சுலபமா கண்டுபிடிச்சு வர்ற மாதிரி லூசுல விட்டுட்டு விபத்து மாதிரி ஏற்பாடு செய்வேனா? எது எனக்கு சுலபம் யோசிச்சு பாருங்க ?”
யோசிக்க ஆரம்பித்தார் விஜயா. விக்டர் மாதிரியான குற்றவாளிகளுக்கு எல்லா குற்றங்களும் அதில் இருந்து தப்பித்து வருவதும் சுலபம்தான். லாலின் மரணத்தில் அவர் போலீசை நாடி இருக்கிறார் என்றால் அவர் கூற்றில் உண்மை இருக்கிறது போலீசை விட வேறு யாருக்கோ மிகவும் பயப்படுகிறார் அது என்ன என்று யோசித்தார். அதற்கான விடையும் விக்டரின் வாய் மொழியிலேயே வந்தது
“இன்வெஸ்டிகேட் பண்ற, படிச்சு போலீஸ் ஆகியிருக்கிற உங்களுக்கே என் மேல இவ்வளவு சந்தேகம் இருக்கும்பொழுது, எதுவுமே விவரம் தெரியாம… லால் கையை நீட்டற இடத்துல, அவன் காட்டுற ஆள வெறியோட போட்டு தள்ளுற அவன் கூட்டத்துக்கு எந்த அளவுக்கு யோசிக்கும் திறன் இருக்கும்?
நான் தான் ஆதரவு கொடுத்தேன். இங்கதான் லால் செத்துப் போனான் என்று தெரிந்தது என்றால் முதலில் என்னை வெட்டிட்டு அதுக்கு அப்புறம் தான் யோசிப்பாங்க. இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா என் உயிருக்கு என்ன ஆகுமோ அப்படிங்கிற பயத்திலேயே எனக்கு பிரஷர் அதிகமாகி பெட்ல படுத்துருக்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டேன்.
புரிஞ்சுக்கோங்க மேடம்… இது வெளியில் தெரிஞ்சதுன்னா அவனுக்கு உதவி செஞ்ச பாவத்துக்காக என் உயிரும் போயிடும்.
அதனால… செத்தது லால் அப்படிங்கற விஷயம் நான் சொல்லித்தானே உங்களுக்கு தெரியுது. அப்படியே தெரியாத மாதிரி அடையாளம் தெரியாத ஒரு பிணம் னு சொல்லி மூடி மறைச்சிடுங்க”
“நீங்கதான் சார் என்னோட நிலைமையை புரியாம பேசிட்டு இருக்கீங்க. ஏற்கனவே மீடியால கண்டபடி பேசிகிட்டு இருக்காங்க. இப்ப இவ்வளவு பெரிய ஒரு ஆள் இறந்ததையே மறைக்க சொல்றது முழு பூசணிக்காய் சோத்துல மறைக்கிற மாதிரி. எப்படியும் வெளிய தெரியும். அப்ப உயர் அதிகாரிகள் கேக்குற கேள்விக்கு யார் பதில் சொல்ல முடியும்? நீங்களே சொல்லுங்க”
உயிர் பயத்தில் அழும் நிலைக்கு வந்து விட்டார் விக்டர்”இது என்னோட உயிர் போகிற பிரச்சனைமா… உங்களை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிச்சுடுறேன். தயவு செய்து இதிலிருந்து என்னை காப்பாத்துங்க”
“இப்ப நீங்க கேட்டீங்க பாருங்க அதுதான் சரியான அப்ரோச். நீங்க சொல்ற மாதிரி நாங்க உங்களை காப்பாத்துறதுக்காக என்ன அளவுக்கு வேணாலும் காவல்துறை முயற்சிக்கும். மேலதிகாரிகள் கிட்ட கலந்து பேசி உங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க செய்கிறேன். ஆனால் உண்மையை மறைக்க முடியாது”
உறுதியாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே செல்லும் விஜயாவின் முதுகையே வெறித்துப் பார்த்தார் விக்டர்.
அங்கு மருத்துவர்களிடம் எந்த விஷயம் என்றாலும் தனக்கு உடனே தகவல் தெரிவிக்கும்படி சொன்னார் விஜயா. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும்படி காவலை பலப்படுத்திவிட்டு கிளம்பினார்
வழக்கு புரியாத புதிராகவே இருக்க அடுத்து என்ன செய்வது இந்த நாளை லால் கேசை எந்த திசையில் கொண்டு போவது என்று எண்ணியவாறு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அவர் வீட்டுக்கு வந்த பொழுது அவருக்காக அங்கே தென்னாடன் காத்துக் கொண்டிருந்தான். கூடவே அல்லியும்
“நல்லவேளை மேடம் நீங்க வந்தீங்க இல்லாட்டி இவ என்கிட்ட கேள்வி கேட்டே கொன்னுருப்பா”
“கொல்ற அளவுக்கு அப்படி என்ன கேள்வி கேட்ட”
“ரகசியமா என்னமோ துப்பு கிடைச்சிருக்கே அது என்னதுன்னு கேக்குறா” அல்லி காட்டிக்கொடுத்துறதே என்று கண் ஜாடை காட்டியதையும் கைகளால் அமைதியாக இருக்கும் படி சொல்லியதையும் கூட பொருட்படுத்தாமல் விஜயாவிடம் சொன்னான் தென்னாடன்.
“அவசர குடுக்கை… நேரம் வரும்போது கண்டிப்பா சொல்லுவோம்” என்று செல்லமாக அல்லியை கடிந்து கொண்டபடி முகம் கழுவி விட்டு உடைமாற்றி வரச் சென்றார் விஜயா.
அல்லி அலைபேசியை எடுத்து “அண்ணே அஞ்சு இட்லி, நாலு முட்டை பரோட்டா, அப்புறம் பிளாஸ்க்ல ஸ்ட்ராங் டீ பையன் கிட்ட கொடுத்து அனுப்புங்க என்று சொல்லிவிட்டு வைத்தாள்
“ஏய் மேடம் கிட்ட சொல்லாம நீயே ஆர்டர் பண்ற” என்று தென்னாடன் கேட்க
“எல்லாம் எங்களுக்கு தெரியும். ஆபீஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு ராத்திரி நேரத்துக்கு வந்து இருக்க… மேடம் வேற கவலையோடு வந்திருக்காங்க… இன்னைக்கு கேசை நல்லா துவைச்சு பிழிஞ்சு காயப்பட போறீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிற அளவுக்கு எங்களுக்கு அறிவு இருக்கு”
“கிரேஸ் வந்துரட்டும் நம்ம சாப்டுட்டு வேலையை தொடங்கலாம்” என்றார் விஜயா இலகுவான ஒரு பருத்தி சுடிதார் அணிந்து முகத்தை கைத்தறி தூண்டினால் துடைத்தவாறு.
“கிரேஸ், காய்ச்சல் எல்லாம் எப்படி இருக்கு? நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கணும்னா எடுத்துக்கோ” என்றுதான் கிரேஸ் வீட்டினில் நுழைந்ததும் விஜயா முதலில் சொன்னார்.
“காய்ச்ச பாட்டுக்கு கிடைக்குது மேடம். ஒரு மாத்திரையை போட்டுட்டு நம்ம கேஸை கவனிக்கலாம். அதுவும் நம்ம ஸ்ட்ரீட் ஆபிசர் ராஜாராம் வேற மூணு நாள் தான் டைம் கொடுத்து இருக்காரு. அதுல ஒரு நாள் ஓட்டமா ஓடிப்போச்சு. தென்னாடன் வேற ரிசல்ட் வர ஒரு வாரம் ஆகும்னு சொல்றாரு. இதுல எப்படி மேற்கொண்டு கேச கொண்டு போறதுன்னு நான் மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்”
பரோட்டாவை அன்று விஜயா எடுத்துக்கொள்ள ‘எனக்கு காய்ச்ச இட்லியை கொடுத்துடுங்க’ என்று கிரேஸ் இட்லியை பிடுங்கிக் கொண்டார்.
நால்வரும் சாப்பிட்டதும் ஆளுக்கு அரை டம்ளர் டீயை பிளாஸ்டிலிருந்து ஊற்றி எடுத்து வந்தாள் அல்லி.
“கொலையானது யாரு தெரியுமா? லால்… மும்பை லால்…”
விஜயா சொன்னதைக் கேட்டு மூவருக்கும் புரையேறியது.
“மேடம் நெசமாலுமா”
“இன்னைக்கு நான் போய் பாத்துட்டு வந்த விக்டர் லாலோட பிரண்டு தான். இந்த கேஸ்ல லால்தான் தாமரைக் குளம் ஆக்சிடென்ட்ல செத்து போனதுன்னு தெரிஞ்சதுன்னா அப்படியே நம்ம தோல உரிச்சு தொங்க விட்டுருவாங்க.
இப்ப எல்லா டிவிலயும் பிரேக்கிங் நியூஸ்ல இருக்கிற, குளத்துல மருத்துவமனை கழிவுகள் கொட்டின கேஸ் விட லால் கேஸ் தீயா பரவ ஆரம்பிக்கும். இப்ப மாநில அளவில் இருக்கும் சென்சேஷன் மறைஞ்சு போயி இந்திய அளவு சக்தி வாய்ந்த கேசா இது மாறும்.
நிஜமா சொல்லப்போனா இக்கட்டான நிலையில் இருக்கோம். நாளைக்கு உண்மை வெளியில் தெரிந்ததும் கேஸ் எப்படி போகப்போகுதுன்னு எனக்கு தெரியல”
அன்று இரவும் தூங்கா இரவாக அவர்களுக்கு இருந்தது. விஜயா கண்டுபிடித்த தடயத்தைக் கேட்டு கிரேசுக்கும் அல்லிக்கும் மயக்கம் வராத குறை
“மேடம் சத்தியமா இது கொலைதான். தென்னாடனோட ரிசல்ட்டுக்காக காத்திருக்காம நம்ம கேச அந்த ஆங்கிள்லயே ப்ரசீட் பண்ணலாம்” என்றனர் கோரசாக.


