தாமரை குளம் – 13

அத்தியாயம் – 13

சுந்தரம் கலாரூபத்தில் இருக்கும் அனைவரையும் கிட்டத்தட்ட விசாரித்து விட்டான் இருந்தாலும் ஒரு தகவலும் பெயரவில்லை.

இதுவரையும் அழைத்து வந்த கடவுள் அடுத்து எந்தப் பக்கமும் திரும்ப முடியாது அடைத்து வைத்திருக்கிறானே என்று யோசித்தபடி வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் மனம் தளராமல் மறுபடியும் சென்றான்.

“இங்க பாரு இந்த லேடிய இங்க வரப்ப ஒன்னு ரெண்டு பார்த்து தடவ பாத்து இருக்க, அதெல்லாம் சரி… அதுக்கு அப்புறம் ஒரு விஷயமும் உனக்கு தெரியாது என்கிறதையும் ஏத்துக்கிறேன். ஆனால் நல்லா யோசிச்சு பாரு ஏதாவது ஒரு சின்ன க்ளூ… அவங்க வந்த கார் நம்பர், ஸ்கூட்டி நம்பர் இல்ல அதோட நிறம் இது மாதிரி ஏதாவது சின்ன விஷயம் நினைவுபடுத்தி பாரேன்”

“சார், இங்க பார்க்கிங் ஸ்பேஸ் தனியா இருக்குது. தோ அங்க இருக்கிற கட்டடத்தில் தான் பார்க் பண்ணிட்டு கடைக்கு நடந்து வருவாங்க. அதனால அவங்க எந்த வண்டியில வந்தாங்கன்னு நான் கவனிக்கல சார். எனக்குத்  தெரியாது”

“அவங்க கூட யாராவது வந்து இருக்காங்களா? அவங்கள பத்தி எதுவும் தெரியுமா, யோசிச்சு பாரேன்”

சுந்தரம் சொன்னான் என்பதற்காக சில வினாடிகள் யோசித்துப் பார்த்தான். யோசித்துப் பார்த்துவிட்டு

“கூட யாரும் வரல சார், எப்பொழுதும் தனியாக வருவாங்க. சில சமயம் அவங்க தூக்க முடியாத அளவுக்கு நிறைய துணி பார்சல் எடுத்துட்டு போகும்போது கடையில வேலை பாக்குற பையன் ஒருத்தன் பார்சலை கார் வரைக்கும் எடுத்துட்டு போயி உதவி செஞ்சிருக்கான்”

“சூப்பர்யா அந்த பையனை பத்தின டீடெயில்ஸ் சொல்லு”

“அந்தப் பையன் வேலையை விட்டுட்டு நின்னுட்டான் சார்”

“நின்னுட்டானா… அவனோட விலாசம் கிடைக்குமா”

“விலாசம் எல்லாம் இல்ல. இதோ ஆப்போசிட்ல இருக்க பில்டிங்ல தான் வேலைக்கு சேர்ந்து இருக்கான். பேரு ரவி”

விடு ஜூட் என்று ரவியை தேடி ஓடினான் சுந்தரம்.

“கலாரூபம் முதலாளி சரியான கஞ்சன் சார். இப்ப நான் போட்டுருக்க சட்டை இருக்கே அது பிளாட்பார்ம் கடையில 150 ரூபாய்க்கு வாங்குனது. இதே சட்டை அந்தக் கடையில கூசாம 8000, 9000 ன்னு சொல்லுவாங்க. எனக்கு சம்பளம் 4000 தான் சார். இந்த காலத்துல 4000 வச்சு எப்படி காலம் தள்ள முடியும் சொல்லுங்க?

இப்படி லட்சக்கணக்கா வருமானம் பார்க்கிறானுங்க, ஒரு வருஷமா மாச சம்பளத்துல 500 ரூபாய் ஏற்றி தர சொல்லி கெஞ்சிட்டு இருந்தேன். மாட்டேன்னு சொல்லிட்டாங்க சார்… அதான் இந்த கடைக்கு வந்துட்டேன். இங்க வேலை மட்டும் இல்ல, டிப்ஸும் கிடைக்குது. சாப்பாடு கூட ரெண்டு வேளை போடுறாங்க”

தான் கடையை விட்டு வெளியே வந்ததற்கான காரணத்தை சொன்னான் ரவி.

“சரி இந்த லேடியை பாத்திருக்கியா” இன்று புகைப்படத்தை காண்பித்தார் சுந்தரம்

“ஐயோ! இவங்களா சார்… இவங்க தான் என் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த தெய்வம். பாவம் செத்துப் போயிட்டாங்களா சார்” என்று சோகம் ஆனான்

வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த தெய்வமா… மாட்டிக்கிட்டா என்று சுந்தரத்துக்கு பயங்கர மகிழ்ச்சி.

“ஆமா எப்படி ஒளி ஏற்றி வச்சாங்க? அந்தளவு உனக்கு தெரிஞ்சவங்களா? அந்தம்மாவோட டீடைல்ஸ் சொல்லு”

“அந்த அளவுக்கெல்லாம் தெரியாது சார். ஒரு நாளைக்கு அந்த கடையில டிரஸ் வாங்க வந்தப்ப லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு போயி ஹெல்ப் பண்ண சொன்னாங்க.

அந்த அம்மா நேரா இங்க சாப்பிட வந்துச்சு. யாருக்காகவோ வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க போல… அவங்க ஃப்ரெண்ட் வந்த உடனே கார் டிக்கில பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கணும், அதனால ஒரு பத்து நிமிஷம் நில்லுன்னு சொன்னாங்க. காத்திருந்த நேரத்துக்கு ஃபலூடா எல்லாம் வாங்கி தந்தாங்க சார்.

அப்பத்தான் இந்த கடையில வேலைக்கு ஆள் தேடுற விவரம் தெரிஞ்சது. அடுத்த வாரமே இங்க வந்து சேர்ந்துட்டேன். அன்னைக்கு லக்கேஜ் எடுத்து வைக்க மட்டும் இவங்க கூட வரலைன்னா  இந்த வேலை இருக்கிறது எனக்கு தெரிஞ்சிருக்குமா? என்ன பொறுத்த வரைக்கும் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த தெய்வம்  இந்த அம்மா தான்”

” தெய்வத்தோட கார் நம்பரை நோட் பண்ணியா.. “

“நம்பர் எல்லாம் நினைவு இல்ல சார். ரொம்ப நாளாச்சு ஆனா அதை ஓட்டிட்டு வந்த  ஃபிரண்ட் எனக்கு தெரியும்.  அவங்க சில சமயம் இங்கே சாப்பிட வருவாங்க”

“சாப்பிட வருவாங்களா? அப்ப அவங்கள பத்தி உனக்கு விவரங்கள் தெரியறதுக்கு சான்சஸ் இல்லை”

“ஏன் இல்லை சில சமயம் நான் பார்சல் டெலிவரி பண்றதுக்கு கூட போயிருக்கேன். அப்ப ஃப்ரெண்ட் வீட்ல போய் பார்சல் டெலிவர் பண்ணி இருக்கேன் அதனால் எனக்கு நினைவில் இருக்காங்க”

“சூப்பர்டா ரவி அந்த அம்மா வீடு எங்க இருக்குன்னு தெரியுமா கொஞ்சம் கூட்டிட்டு போக முடியுமா?”

சுந்தரம் சென்று ரங்கராஜபுரத்தில் இருக்கும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டில் கதவைத் தட்டிய போது அந்தப் பெண் பார்கவி பாதி தூக்கத்துடன் திறந்தாள்.

காவல்துறையின் ஐடி கார்டை கண்டதும் தூக்கம் கலைந்து அலர்ட் ஆனவள் “சாரி சார் சிங்கப்பூரிலிருந்து மத்தியானம் தான் வந்தேன். ஜெட்லேக் சீக்கிரமா தூக்கம் வந்துருச்சு”

அப்போது அவள் தொலைக்காட்சியை பார்த்து இருக்க வாய்ப்பில்லை தொலைக்காட்சியை பார்த்து இருந்தாலும், நிமிடத்திற்கு ஒரு முக்கிய செய்திகள் வரும் இந்த காலத்தில் அவளால் எத்தனை செய்தியை உன்னிப்பாக கவனித்து இருக்க முடியும்? அதனால் கடந்து செல்லவே வாய்ப்பு இருக்கிறது. என்று எண்ணியபடி சுந்தரம் புகைப்படத்தை காண்பித்தான்.

“இந்தப் பொண்ணோட பாடி கன்னியாகுமரி ஏரியால ஒரு குளம் பக்கத்துல கிடைச்சது . சூசைட் பண்ணி இருக்காங்க. இவங்கள பத்தி உங்களுக்கு தெரிஞ்ச விவரங்களை சொல்ல முடியுமா?”

அந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தாள் பார்கவி. கொஞ்சம் நஞ்சம் கண்களில் ஒட்டியிருந்த தூக்கமும் காணாமல் போனது.

“என்ன… ராஜி… ராஜலட்சுமி செத்துப் போயிட்டாளா…. சூசைடா…?”

***

விஜயாவிற்கு மனது முழுதும் குழப்பம் அதிர்ச்சி. லால் தனது பதின்ம வயதிலேயே குருவியாக வாழ்க்கையை ஆரம்பித்தவன். அதாவது அந்த காலத்தில் கிடைக்கும் வி சி ஆர் வி சி பி போன்ற சிறு சிறு எலக்ட்ரானிக் பொருள்களை சிங்கப்பூரிலிருந்தும் குருவியாக கடத்தி வந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தவன். அவ்வப்போது மாட்டிக்கொண்டு சிறைக்குச் சென்றான். சிறை சகவாசத்தால் தனது பிசினஸை விரிவாக்கி தங்கத்தை கடத்தி வர ஆரம்பித்தான்.

எப்பொழுது கடத்தல் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல குற்றச் செயல்களும் அதிகமாகும். இப்படி அவனது அக்கவுண்டில் க்ரைம் ரேட் எண்ணிக்கை கூடியது.

மும்பையில் சென்று யாரோ ஒரு தாதா கேங்கில் இணைந்தான், படிப்படியாக வளர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு டானாக உருவெடுத்தான். கடத்தலிலிருந்து கொலையும் அவனது குற்ற செயல்களில் இணைந்து கொண்டது.  குருவி காக்காவாகி மெல்ல மெல்ல வல்லூறாக மாறியது இப்படித்தான்.

ஒரு 50 குற்றங்களிலாவது அவனது பெயர் போலீஸ் ரெக்கார்டில் இருக்கிறது. தேடப்படும் கைதி என்று சொல்லப்பட்டாலும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பான். கொஞ்ச நாளாக அவனது பெயர் எங்கும் அடிப்படாமல் அமைதியாக இருக்கிறது. ஒருவேளை ரிட்டயர்ட் ஆகி விட்டானோ என்று போலீஸ் நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில், மும்பையில் இருந்து இங்கு தாமரை குளத்தில் உயிரை விட்டு இருக்கிறான். எதனால்? எப்படி? இதைத்தான் இப்போது விஜயா கண்டுபிடிக்க வேண்டும்.

‘டேய் லால்… நீ சாதாரணமான ஆளா இருந்தா பரவாயில்ல.  விபத்தாக இருக்குமோன்னு நினைக்க சான்சஸ் இருக்கு. எப்ப உன் பேரை  கேள்விப்பட்டேனோ, சத்தியமா சொல்றேன், இது விபத்தே கிடையாது. ப்ளான் பண்ணி உன்னைய போட்டுத் தள்ளி இருக்கிறானுங்க’

“உங்களுக்கு எப்படி லாலத் தெரியும்? அதுவும் இங்க வந்து ரகசியமா தங்குற அளவுக்கு அப்படி என்ன குற்றத்தில் ஈடுபட்டிருந்தான்?”

” மேடம் உங்களுக்கு தெரியாதது இல்ல. நாங்க எல்லாம் புலி வாலைப் புடிச்ச மாதிரி அல்லாடிகிட்டு இருக்கவங்க. எங்க பிசினஸ்க்காக சில குற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.  எங்களால போலீசை டைரக்டா அணுக முடியாது. அந்த மாதிரி சமயத்துல லாலை உபயோகப்படுத்தி இருக்கோம்.

அப்படித்தான் லால் எனக்கும் பழக்கம். ஆனால் சில சமயம் ரகசியமா ஒளியனும் என்ற நிலைமை இருக்கும் பொழுது என்கிட்ட உதவி கேட்பான். அவன் எங்க இருக்கான்னு யாருக்கும் சொல்ல மாட்டோம்.

இந்த தொழிலில் எப்ப வேணும்னாலும் நம்மள போட்டு தள்ளிட்டு நம்ம இடத்துக்கு வரதுக்கு ஆட்கள் ரெடியா இருப்பாங்க. இது மாதிரி லாலுக்கு எதிரிகள் ரொம்ப ஜாஸ்தி.இங்கே தூத்துக்குடி வந்து அப்படியே கேரளாவுக்கு போயிடுவான். அப்ப நான் வண்டி அரேஞ்ச் பண்ணி தருவேன் இது பல வருடமா நடந்துட்டு இருக்கிறது தான்”

பல வருட பழக்கம் என்றால் நான் இங்கு வரது வேற யாருக்கு தெரியும்

“எனக்குத் தெரிஞ்சு மும்பையில இருக்கிற அவன் பொண்டாட்டி கிட்ட கூட சொல்லி இருக்க மாட்டான்”

“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?”

“அவனுக்கு திருவனந்தபுரம் பக்கத்துல இருக்குற கிராமத்துல இன்னொரு குடும்பம் இருக்குது . புள்ள குட்டிங்க மனைவி எல்லாரும் இருக்காங்க. அது வெளியில யாருக்கும் தெரியாம ரகசியமா மெயின்டைன் பண்ணிட்டு இருக்கான். அதனால தான் அவ்வளவு உறுதியா சொல்றேன், மும்பையில் இருக்கிற அவன் ஃபேமிலிக்கு தெரியவே தெரியாது”

இப்ப பாடி ஐடென்டிஃபிகேஷனுக்கு யாரை அழைப்பது என்ற குழப்பத்தில் விஜயா… திருவனந்தபுரம் குடும்பமா? அல்லது மும்பை குடும்பமா?

“தயவுசெய்து யாரையும் கூப்பிடாதீங்க மேடம். என்னை இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது காப்பாத்துங்க… உங்களுக்கு என்ன வேணும்னாலும் பதிலுக்கு செய்றேன்” என்று கை கூப்பி வேண்டிக் கேட்டார் விக்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page